SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேஷ ராசி முதலாளி

2019-08-07@ 15:27:28

என்னோட ராசி நல்ல ராசி-5

மேஷ ராசியில் பிறந்தவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பதுண்டு. மக்கள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்கள் முதலாளிகளாக இருந்தால் என்னென்ன பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதை இனி காண்போம். மேஷ ராசி நெருப்பு ராசி. அதன் அதிபதி ரத்த சிவப்பு நிறமும் வெப்பமும் கொண்ட செவ்வாய். ஆங்கிலத்தில் MARS. இதை MARS FOR MARTIAL ARTS என்றும் புரிந்துகொள்ளலாம். வீர தீர செயல்களில் ஈடுபடும் ஆர்வம் உள்ள மேஷ ராசிக்காரர்கள் பணம் எண்ணும் வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் புதுமை படைக்கும் தொழில்களைச் செய்வதில் ஆர்வமுடையவராக இருப்பார்கள். இவர்கள் உற்சாகத்தின் ஊற்று. சட்ட திட்டங்களின் இருப்பிடம். இந்த மேஷ ராசி முதலாளி பண்புகள் யாருக்குப் பொருந்தும் என்பதையும் இங்கே சொல்லிவிடலாம்.

* மார்ச் 21 முதல் ஏப்ரல் 22 வரை பிறந்தவர்கள் [மேனாட்டார் கணிப்பு]

* சூரியன் மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் [ஏறத்தாழ ஏப்ரல் 14 முதல் மே 15 வரை] பிறந்தவர்கள்

* ஜாதகத்தில் மேஷ ராசிக்காரர்கள் [அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாதம்]

* லக்னாதிபதி வலுவாக இருந்தால் மேஷ லக்னத்தில் பிறந்தோர் இவர்களில் 90% முதலாளிகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ‘மேஷ ராசி முதலாளியின் இயல்புகளைக்’ கொண்டிருப்பார்கள் மேஷ ராசி என்பது சூரியன் உச்சத்தில் இருக்கும் ராசியாகும். அதாவது சித்திரை மாதம் ஆகும். கேரளாவில் இந்த மாதத்தை மேட [மேஷம்] மாதம் என்பர். நாம் அந்த மாதத்தில் பௌர்ணமி வரும் சித்திரை நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதத்தை அழைக்கிறோம். ஆடி, தை மாதங்களில் சூரியன் முறையே தெற்கு, வடக்கு மூலையில் இருந்து உதிக்கும். ஆனால் சித்திரையில் சூரியன் நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கில் மறையும். வெப்பம் உக்கிரமாக இருக்கும்.

மேஷ ராசி என்பது அக்னி ராசி ஆகும். அதுவே முதல் ராசியும் ஆகும். எனவே மேஷ ராசியினரைக் குழந்தை என்பது மரபு. குழந்தைக்குரிய அன்புத் தேடல், பிடிவாதம், கொஞ்சல், குலாவல் எல்லாமே இந்த ராசிக்காரருக்கும் இருக்கும். இவர்கள் முதலாளிகளாக இருந்தாலும் தொழிலாளிகளாக இருந்தாலும் தலைவர் அல்லது தொண்டர்களாக இருந்தாலும் குழந்தைத் தன்மையுடன் இருப்பது இயற்கை. மேஷ ராசிக்காரர் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதால் துணிச்சல் மிக்கவராக இருப்பார்கள். முன்கோபம் மிக்கவர்கள். அசட்டு தைரியம் கொண்டவர்கள்.

எதையும் கண நேரத்தில் தூக்கி வீசி எறிந்து விடுவார்கள். பொன் பொருளைக் காட்டி இவர்களை மயக்க முடியாது. உலகில் பெரியது என மதிக்கும் எந்த ஆசையையும் இவர்கள் துச்சமாக கருதுவார்கள். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்பவற்றைக் காட்டி மேஷ ராசி முதலாளிகளை மயக்கிவிட முடியாது. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, பாசம், பக்தி, ஒழுக்கம், இவர்களுக்கு இம்முதலாளிகள் அதிக முக்கியத்துவம் தருவார்கள். இவர்களுக்கு தொழிலில் லாபம் முக்கியம் இல்லை. செயல் திறன் முக்கியம்.

வேலை ஃபர்ஸ்ட் மற்றது நெக்ஸ்ட்

மேஷ ராசி முதலாளிக்கு சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்ப்பவரைப் பிடிக்காது. பணியாட்கள் வேலை செய்யும் நிர்வாகத்தில் ஓனர்ஷிப் அதாவது உரிமை எடுத்துக்கொண்டு தனது சொந்த நிறுவனம் போலக் கருதி முழு மனதோடு வேலை பார்க்க வேண்டும். மணியை பார்த்துக்கொண்டே வேலை பார்க்கக்கூடாது. வேலையில் கணக்குப் பார்க்க கூடாது. அவர் கொடுத்த பொறுப்பை எப்பாடுபட்டாவது சொன்ன நேரத்தில் சிறப்பாக முடிக்க வேண்டும். வேலை இருக்கும்போது சொந்த வேலைகளைக் காரணம் காட்டி இந்த வேலையை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு போகக் கூடாது.

பணியாட்கள் தமது குடும்பத்தினரின் மரணம், விபத்து என்று எந்த காரணமாக இருந்தாலும் வேலையை பாதியில் விட்டுவிட்டு போவதை அவரால் சகித்துக்கொள்ளவே முடியாது. வேலையை முடித்துவிட்டால் அவரை தனது காரில் அல்லது வாடகைக் கார் அமர்த்திக் கூட தனது பணியாளை போக வேண்டிய விசேஷத்துக்கு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் அனுப்பி வைத்து விடுவார். அவர் அந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை இவரே போய் செய்வார். மேஷ ராசி முதலாளிக்கு தொழிலாளி முதலாளி என்ற பேதம் கிடையாது.

ஒரு வேலையை இன்று முடித்துவிட வேண்டும் என்ற சூழ்நிலையில் கல்யாணம் சீமந்தம் என்றால் கூட போவதை விரும்ப மாட்டார். மற்ற நாட்களில் பணியாட்கள் நேரம் கழித்து வந்தாலும் மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு போனாலும் கண்டுகொள்ள மாட்டார். பணியாட்களோடு சேர்ந்து அமர்ந்து கதை பேசுவார். அதே சமயம் முதலாளி என்ற உயர்வை ‘கெத்தை’ விட மாட்டார். இவர்கட்கு மரியாதை உயிர் போன்றது. மேஷ ராசி முதலாளியை மரியாதை இல்லாமல் யார் பேசினாலும் விளையாட்டாகக் கேலி செய்தாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது.

உடனே அந்த பணியாளால் தனது நிறுவனத்துக்கு கோடி ருபாய் லாபம் கிடைக்கும் என்றாலும் அவரை வேலையை விட்டு அனுப்பி விடுவார். மேஷ ராசி முதலாளி பொருளையும் ஆளையும் தூக்கி எறிவதில் மன்னர். இவரைப் பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் - அதில் திறமை தான் நமது செல்வம் என்று நினைப்பவர் மேஷ ராசி முதலாளி. சட்டென்று புதிய தொழில் தொடங்குவார். தொழில் செய்யும் இடத்தை மாற்றுவார். இடமாற்றம் தொழில் மாற்றம் என்பதெல்லாம் இவர் வாழ்வில் அடிக்கடி நிகழும். ஆனால் ஆட்களை மிகவும் நேசிப்பார். பணியாட்களிடம் வெகு பிரியமாக இருப்பார்.

வன்மம் கிடையாது

மேஷ ராசி முதலாளி, தன் பணியாளருக்கு போனஸ் சம்பளம் தருவதில் தாராளமாக இருப்பார். மற்ற நிறுவனங்களைப் பார்த்து அது போல நானும் குறைவாக தந்தால் போதும் என்று நினைக்க மாட்டார். நல்ல தொழில் திறமை உள்ளவரை தன் உடன் பிறப்பு போல நடத்துவார். சலுகைகளும் அளிப்பார். தவறு செய்தால் கோபம் வந்து கண் மண் தெரியாமல் திட்டுவார். அது வேலை கெட்டுவிட்டதே என்ற கோபம் தானே ஒழிய இந்த பணியாள் மீதான கோபம் அல்ல. அவர் வேலைக்கு “வாழ்க்கைப்பட்டவர்’’ என்பதால் வேலைகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே திட்டுவார்.

அடுத்த நிமிடம் சாதாரணமாக இருப்பார். மனதில் எந்த வஞ்சமும் வைத்துக்கொள்ள மாட்டார். சம்பள உயர்வு ,போனஸ் போன்றவற்றில் ‘கை’ வைக்க மாட்டார். மேஷ ராசி முதலாளி கருத்தியல் காரணமாகக் கோபம் கொள்வாரே தவிர தனி மனிதர் சார்ந்ததாக அவரது கோபம் இருக்காது. அதாவது நேரத்தை வீணடித்தல் கூடாது; சோம்பேறித்தனம் கூடாது; திறமையை வீணடிக்கக் கூடாது என்ற கருத்தியல் காரணமாகக் கோபப்படுவாரே தவிர இத்தவறுகளைச் செய்யும் தனி மனிதர் மீது அவருக்கு கோபம் இருக்காது. ஆனால் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடும் பணியாட்களை இவர் தன்னிடம் வைத்து கொள்ள மாட்டார். கடமையுணர்ச்சியும் உண்மையும் இவரது இரு விழிகள்.

பொய், புரட்டு, பித்தலாட்டங்களுக்கு இவரிடம் இடம் இல்லை. மேஷ ராசி முதலாளி சூழ்நிலைக்கேற்ப எதையும் செய்வார். அவரால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் தன்னுடைய சுய லாபத்துக்காக தனது பணியாட்களை எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடுத்த மாட்டார். தனது பணியாட்கள் தர்மம் நியாயம் போன்ற பாதைகளில் இருந்து விலகிச் சென்று வேறு எந்தத் தவறான செயல்களையும் செய்ய அனுமதிக்க மாட்டார். தான் நல்லவன் என்ற முகமூடியுடன் உலவிக் கொண்டு தனது பணியாட்களைத் தவறான செயல்களில் ஈடுபட வைத்து அவர்கள் மாட்டி கொண்டால் ஓடிப் போய் உதவாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம் இவருக்குக் கிடையாது.

தொழிலில் முதலிடம்

மேஷ ராசிக்காரர் தன் தொழிலை மேம்படுத்த ஆலோசனை சொல்லும் பணியாட்களை மிகவும் நேசிப்பார்; மதிப்பார். அவர்கள் தம் நிறுவனத்தை முதலிடத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று பாடுபடுவார். சில சந்தர்ப்பங்களில் தொழில் முடங்கிவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கூட கலங்க மாட்டார். கடைசி வரை போராடி அதை மீட்டெடுத்து மறு வாழ்வு கொடுத்துவிடுவார். மேஷ ராசிக்காரரின் போர்க்குணம் இவர்களை எதிலும் தோற்க விடாது. வெற்றி என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதால் இறுதி வரை சாம பேத தான தண்டம் என அனைத்து முறைகளிலும் போராடி நிறுவனத்தை மூழ்க விடாமல் காப்பாற்றிவிடுவர்.

அதனால் இவர் நிறுவனத்தில் தைரியமாக வேலை செய்யலாம். இவர் தம் நிறுவனத்துக்கு நற்பெயர் சம்பாதித்து வைப்பதில் நிபுணர். மேஷ ராசிக்காரர் புதிய புதிய தொழில்களை ஆர்வமாக செய்வார். முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்திப்பார். புதிய சிந்தனை உதித்தவுடன் மின்னல் வேகத்தில் அதை செயல்படுத்துவார். சரியான ஆட்களின் துணையுடன் வேகமாக முன்னேற்றப் படிகளில் ஏறி வெற்றி நடை போடுவார். மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை எல்லோரையும் சமமாக நடத்துவார். அனைவரிடமும் ஆலோசனை கேட்டு அவர்களின் சொற்களுக்கு மதிப்பு கொடுப்பார்.

நேர்மையான உழைப்பு

மேஷ ராசி முதலாளி தன்னிடம் பணி செய்பவரின் குடும்பத்தோடு உறவாடி அனைவருக்கும் நல்லவராக இருப்பார். இவருக்கும் பணியாளருக்குமான உறவு தொழிலகத்துடன் முடிந்துவிடாது. பணியாளரின் பிள்ளைகளைப் படிக்க வைப்பார். வேலை வாங்கிக் கொடுப்பார் அல்லது தன் நிறுவனத்தில் வேலை கொடுப்பார். இதற்கெல்லாம் இவர் எதிர்பார்ப்பது இவர் நிறுவனத்தை தன் நிறுவனமாக் கருதி பணியாட்கள் விசுவாசத்துடன் உழைக்க வேண்டும் என்பதே ஆகும்.

நோ ஜால்ரா, நோ காக்கா பிடித்தல்

மேஷ ராசி முதலாளி தன் நிறுவனத்துக்கு நல்ல ஆலோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அவர் கடைநிலை ஊழியராக இருந்தாலும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அவருக்கு தக்க பரிசு அளிப்பார். மற்றவர் முன்னிலையில் அவரைப் பாராட்டுவார். அவரது ஆலோசனையை அங்கீகரிப்பார். அதுபோல நிறுவனத்தின் மேன்மைக்கு தான் சொல்லும் ஆலோசனைகளை உத்திகளை மற்றவர் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். காரியத்துக்காக காலை பிடிப்பவர்கள்; கூழை கும்பிடு போடுபவர்கள்; காக்கா பிடிப்பவர்கள்; ஜால்ரா அடிப்பவர்கள் போன்றோரை இவர் அறவே வெறுப்பார். தான் இருக்கும் ஏரியா பக்கமே இவர்களை வரவிட மாட்டார். உண்மையான பாராட்டை மட்டுமே இவர் மதிப்பார். எனவே இவரிடம் உண்மையாகவும் உறுத்தோடும் (அக்கறையோடும்) வேலை செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே பிழைக்க முடியும்.

புதுமை விரும்பி

மேஷ ராசி முதலாளி புதிதாக ப்ராஜெக்ட்கள் எடுத்துச் செய்வதில் ஆர்வம் காட்டுவார். பழைய வேலைகளையே செய்துகொண்டிருப்பதை விட புதிதாக சவாலான வேலைகள் எடுத்துச் செய்வது இவருக்கு மிகவும் விருப்பம். என்வே இத்தகைய புது வேலைகளில் இவருக்கு உறு துணையாக இருக்கும் பணியாட்கள் இவருக்கு அதிக உற்சாகம் அளிக்கின்றனர். அவர்களை மிகவும் நேசிக்கின்றார். ஊக்கமும் நல்ல சம்பளமும் அளிக்கின்றார். நேர்மை மற்றும் புதுமை விரும்பிகள் மேஷ ராசி முதலாளியிடம் மகிழ்ச்சியாக வேலை பார்க்கலாம்.

துறைகள்

பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் அடிமை வேலை அதாவது சம்பளத்துக்கு வேலை பார்க்க விரும்புவதில்லை. செவ்வாய் ஆதிக்கம் மிகுந்திருந்தால் இவர்களில் பலர் மருத்துவம், ராணுவம், காவல் துறையில் பணி புரிவர். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் முதலாளிகளாக, துறைத் தலைவர்களாக அல்லது மேலாளர்களாக அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பதையே விரும்புவர். தெரு கூட்டும் வேலை பார்ப்பவரிடம் கூட மேஷ ராசிக்காரரை தனியாகக் கண்டுபிடித்துவிடலாம். பத்து பேரில் இவர் மட்டுமே வேலையை சுத்தமாக செய்வார். மற்றவர்களும் அவ்வாறு செய்கிறார்களா என்று அடிக்கடி கவனிப்பார்.

மற்றவர்களை அதட்டி வேலை வாங்குவார். அங்கங்கு கதை பேசிகொண்டிருப்பவர்களை சத்தம் போட்டு வேலை நேரத்தில் வெட்டி அரட்டை கூடாது என்று சத்தம் போடுவார். இவர் அவர்களை சக பணியாளர்கள் என்று கருதாமல் ஏதோ தனக்குக் கீழ் வேலை செய்பவர்கள் போல கருதி வேலை வாங்குவார். மேஷ ராசிக்காரர்கள் முதல் போட்டு தொழில் நடத்த வேண்டும் என்பது கிடையாது. எங்கு வேலை செய்தாலும் அவர்கள் முதலாளிகள் போல அதிகாரத்தை தனது கையில் எடுத்துக்கொள்வார்கள். எந்த வேலை செய்தாலும் இவர்கள் முதலாளிகள் தான்; அதிகாரம் படைத்தவர்கள் தான்.

மேஷ ராசிக்காரர்களுக்கு தலைமை பொறுப்பு என்பது இயற்கையாகவே அமைந்திருக்கும். ஆனால் ‘மொட்டை மணியம்’ ‘மொட்டை அதிகாரம்’ எனப்படும் வெட்டி அதிகாரம் செய்ய மாட்டார்கள். நிறுவனத்தின் மேன்மைக்காக மட்டுமே கடுமையாக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். மற்றவர்களையும் அவ்வாறு வேலை வாங்குவார்கள். இவர்கள் நிறுவனத்தில் சொந்த லாபம் கருதி எந்த வேலையும் நடப்பதில்லை. பொது நலமே இவர்களின் கொள்கை. மேஷ ராசி முதலாளிகள் சுயநலமற்ற பொதுநலவாதிகள்.

(தொடரும்)
முனைவர் செ. ராஜேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்