SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறம் வளர்த்த அன்னையே காமாட்சி!

2019-08-06@ 17:34:12

* * அருணகிரி உலா 78

காஞ்சியின் பேரரசியாகக் காமாட்சி விளங்குவதால் ஊரின் எந்தக் கோயிலிலும் அம்பிகைக்குத் தனிச்சந்நதியோ கோயிலோ கிடையாது. ஏகாம்பரேசுவரர் கோயிலிலும் மாவடிக் கந்தன் சந்நதிக்கு அருகில் ஏலவார் குழலியின் சிறு சந்நதி உள்ளது. கோயிலைச் சுற்றி பல சிறிய சிவன் சந்நதிகள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டவையாக இருக்கலாம். பல்லவ கோபுரத்தருகில் இரு சந்நதிகள் உள்ளன.

1. தம்பட்டை விநாயகர் 2. திருமால் சிவனை வணங்கிய விஷ்ணுவேசுவரம். சிவகங்கைத் தீர்த்தக் கரையில் உள்ளது ரிஷபேசுவரம். நந்தியை அடுத்துள்ள தனிச்சந்நதி வாலீச்வரம். குரங்கரசனாக வலிமை பெற்று விளங்க ஏகாம்ரேசுவரரை லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான் வாலி. பேராசை காரணமாகத்தன் இருப்பிடத்திற்கு லிங்கத்தை எடுத்துச் செல்வதற்காக அதை வாலில் கட்டி இழுத்தபோது வெகு தூரம் சென்று தெறித்து விழுந்தான்.

‘‘இத்தலத்தின் மீது மிகுந்த காதல் உடையோம்;
இங்கேயே எம்மை வழிபடுவாயாக; உன் வாலின்
சுவடு பூண்டு வாலீச்வரர் என்ற பெயருடன்
இங்கே வீற்றிருப்போம்’’

என்ற சிவனாரின் அசரீரி வாக்கைக் கேட்டு அவரை வணங்கிச் சென்றான் வாலி.கச்சி ஏகம்பரைப் பற்றிய சுவையான ஒரு குறிப்பைத் தன் பாடலில் வைத்துள்ளார் அப்பர்

‘‘இலங்கை வேந்தன் ராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க, விரல் ஊன்றலும்
கலங்கிக் கச்சி ஏகம்பவோ என்றலும்
நலங்கொள் செலவு அளித்தான் எங்கள்
நாதனே’’!

‘‘இலங்கை வேந்தனாம் ராவணன் மிகுந்த அகந்தையுடன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்தான். அவர் தனது திருவடி விரல் ஒன்றினால் சிறிது ஊன்றிய உடனே அவன் மனம் கலங்கி ‘கச்சி ஏகம்பனே’ என்று அபயக் குரலிட்டு கூவிக் கதறினான். அவ்வளவில் ‘நீ நலமாகச் செல்க’ என்று அவனுக்கு விடைகொடுத்து அனுப்பியருளினான் எங்கள் தலைவனாகிய திரு ஏகம்பப் பெருமான்’’ என்று கூறுகிறார். (செலவு= போய் வருக எனும் விடை)

‘‘கல்லாப் பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே’’

என்று இறைவனை வேண்டியபடி கோயிலை விட்டு வெளியே வருகிறோம். இறைவனைத் தரிசித்த திருப்தியுடன் காஞ்சி காமாட்சியைக் கண்டு வரக் கிளம்புகிறோம். காமாட்சி என்ற பெயர் கொண்ட அம்பிகையின் திருக்கோயில்கள் நாடெங்கிலுமிருந்த போதிலும், நம் மனதிற்கு மிக நெருங்கியவள் அன்னை காஞ்சி காமாட்சியே. ‘‘காஞ்சியில் தவம் செய்ய விரும்பிய அன்னை, முதலிய காப்பீசப் பெருமானை நிறுவி வழிபடும் காப்பணிந்து, பின் கடகேசப் பெருமானை வணங்கி கடகமும் அணிந்து கொண்டு உலகிற்கு முதற்காரணமாகிய பஞ்ச பூதங்களால் உண்டாக்கப் பட்டமையால் பஞ்ச தீர்த்தம் என்றும், உலகாணி தீர்த்தம் என்றும் கூறப்படும் தீர்த்தக் கரையில் ‘பதுமன்’ எனும் நாகம் வசிக்கும் பிலத்தின் பக்கத்தில் பீடமும், தவச்சாலை, தருமசாலைகளும் அமைத்து அறங்களை வளர்த்து தவமும் புரிந்தாள். அவ்விடமே ‘காமக்கோட்டம்’ எனப்படுகிறது’’ என்று குறிப்பிடுகிறார் மகாவித்துவான் சி. அருணை வடிவேலு.

பராசக்தியாகிய காமாட்சி வலக்கண்ணால் பிரம்மாவையும், இடக்கண்ணால் திருமாலையும் கடாசஷத்தருளினாள், பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமியையும் தன் கண்களிலிருந்து கிடைக்கும்படிச் செய்ததால் [கா= ஸரஸ்வதி; மா= லட்சுமி]’ காமாட்சி’ என்று பெயர் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அன்பும் பக்தியும் நிறைந்த மனதுடன் கிழக்கு ராஜகோபுரம் வழியாகக் காஞ்சி காமாட்சி கோயிலுள் நுழைகிறோம். வாயிலின் இடது புறம் ஹயக்ரீவரும் வலப்புறம் அகத்தியரும் உள்ளனர். இவர்களது சந்நதிகள் தரைமட்டத்திலிருந்து பத்து அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

காமாட்சி தேவியின் முதன்மை உபாஸகரான ஹயக்ரீவர் தேவி உபாஸ மார்க்கத்தைத் தன் சிஷ்யர்களுக்குப் போதித்தார். அகஸ்தியர் அவருடைய சிஷ்யர்களுள் ஒருவர். கோபுரத்தினுள் நுழைந்ததும் இடப்பக்கம் பலிபீடம், கொடி மரம், சிம்மவாகனம் ஆகியவை தென்படும். இடப்புறம்  மஹிஷாசுர மர்த்தனியையும், வலப்புறம் பைரவரையும் தரிசிக்கலாம். நுழைவு வாயில் நேர் எதிரில் சிந்தூர கணபதி அமர்ந்திருக்கிறார்.

கோயிலுள் நுழையும் போது முதலில் வருவது சுக்ரவார மண்டபம், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை இங்கு எழுந்தருளுகிறாள். தூணில் அனுமான் காட்சி அளிக்கிறான். அடுத்த மண்டபத்தில் நாக சுப்ரமண்யரைத் தரிசிக்கிறோம். இரண்டாம் பிராகாரத்தின் நுழைவு வாயிலில் உள்ளது ஜயஸ்தம்பம், பந்தகாசுரனை அழித்து அப்படியே நிலத்தடியில் அவனைப் புதைத்த அம்பிகை அங்கு ஜயஸ்தம்பம் - வெற்றிக் கொடி நாட்ட வைத்தாள். ஒரு பெண் கையில் அசுரன் தலை இருப்பது கண்டு தேவர்கள் பயந்தனர்; தேவி ஒரு பிலம் வழியாக தற்போதுள்ள கருவறையில் நுழைந்து விட்டாள்.

மறுநாள் அனைவருக்கும் பாலாதிரிபுர சுந்தரியாகக் காட்சி அளித்தாள். தேவி கூறியருளியபடி காயத்ரியின் வர்ணங்களையே இருபத்து நான்கு தூண்களாக நாட்டி காயத்ரி மண்டபம் என்று பெயரிடப்பட்டது. நான்கு வேதங்களைக் குறிப்பதாக நான்கு சுவர்களும் கட்டப்பட்டன. ஐப்பசி பூரத்தில் உள்ளே உள்ள பிலத்திற்கு பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.

 ஜயஸ்தம்பத்திற்கு எதிரேயுள்ள வாயில் வழியே செல்லும் போது வரசித்தி விநாயகர், பிரசன்ன கணபதி, விக்ன நிவாரண கணபதி ஆகியோரைத் தரிசிக்கலாம். இடப்புறம் திரும்பி 9 படிகள் ஏறியதும் காமாட்சிக்கு அன்னைக்குச் செய்யப்படும் பூஜா முறைகளை வகுத்தளித்த துர்வாஸ முனிவரைக் காணலாம். அவர் இயற்றிய சௌபாக்ய சிந்தாமணி எனும் நூலைப் பின் பற்றியே அன்னையின் ஆலயத்தின் வழிபாடு முறைகள் அமைந்துள்ளன. துர்வாஸரை வணங்கி வரும்போது இஷ்ட சித்தி விநாயகர் காட்சி தருகிறார். உற்சவ காமாட்சி எழுந்தருளியிருக்கும் தியான மண்டபத்தை அடைகிறோம். லட்சுமி- சரஸ்வதியுடன் அன்னை காட்சி தருகிறாள். அங்கு நின்றபடியே கீழே கருவறையிலுள்ள அன்னையையும் தரிசித்து ஒரு திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம். இருபுறமுள்ள விநாயகரையும் முருகனையும் மனமார வணங்குகிறோம்.

‘‘தலைவலையத்துத் தரம் பெறும் பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயம் சுயம் குற வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும் ப்ரபந்தம் விளம்புகாளப்
புலவனெனத் தத்துவந்தரந் தெரி
தலைவனெனத் தக்கறஞ் செயுங் குண    
புருஷனென பொற்பதந் தருஞ் ஜனனம் பெறாதோ
பொறையனெனப் பொய் ப்ரபஞ்சமஞ்சிய
துறவனெனத் திக்கியம்புகின்றது
புதுமையலச் சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ’’

பாடலின் இப் பகுதியில், ‘‘முதன்மை நிலையில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் புகழ்ந்து போற்ற உன் மயிலையும், வேலையும், வெட்சி மலர் அணிந்த தோள்களையும், தேவயானை வள்ளியம்மை ஆகிய இருவரையும், பொன் மணிகள் பதிக்கப்பட்ட சதங்கைகள் கிண்கிணி சூழ்ந்துள்ள சிவந்த தாமரை போன்ற திருவடிகளையும் அமைத்து, இவன் கவி காளமேகத்தை ஒத்த புலவன், உண்மை ஞானத்தை அறிந்த தலைவன் மற்றும் நூல்களில் விதிக்கப்பட்ட தர்மங்களைச் செய்து முடிக்கும் சற்புருஷன்’ என்று அனைவரும் போற்றும்படியான பிறப்பை நான் அடைய மாட்டேனோ?’’ என்று முருகனிடம் தன் ஏக்கத்தை பிரதிபலிக்கிறார். ‘‘உலகிலுள்ள பெரியோர்கள் என்னைக் கண்டு, இவன் பொறுமை உடையவன், சிறந்த துறவி என்று புகழ்வதில் அதிசயம் ஒன்று மில்லை; ஞானத்திற்கும் அப்பாற்பட்ட மேல் நிலையைப் பொருந்தும் பெரும் ேபற்றை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயா’’ என்று வினவுகிறார்.

‘‘குலசயிலத்துப் பிறந்து பெண்கொடி
உலகடையப் பெற்ற உந்தி அந்தணி
குறைவர முப்பத்திரண்டறம் புரிகின்ற பேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்னப் புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரம் சுடும் சின வஞ்சி நீலி
கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி
கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவிழிக் கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி
கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை
சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகி
கவுரி திருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே’’
 என்று பாடலின் பிற்பகுதியில் அம்பிகையையும் அவள் குமரனையும் போற்றுகிறார்.
சிறந்த இமயமலையில் அவதரித்த கொடி போன்றவள்,
உலகனைத்தையும் ஈன்ற வயிறுடையவள்,
குறைவின்றி முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தவள்,
மங்கள குணங்கள் நிறைந்தவள்
 சக்கரத்தில் வீரத்துடன் விளங்கும் சங்கரி,
படக்கூட்டங்கள் மிகுந்த, ரத்னங்களை உடைய
பாம்பைக் கைகளில் அணிந்தவள்,
மேருமலையை வளைத்து திரிபுரத்தை எரித்தவள்,
[மேருமலையை வில்லாகப் பிடித்த சிவனாரின் இடதுகை அன்னைக்குரியது என்பதால்
இவ்வாறு கூறுகிறார்]
கோபங்கொண்ட (எதிரிகளிடம்) வஞ்சிக் கொடி போன்றவள், நீல நிறமுடையவள்,
அழகிய தோகையுடைய விசித்ர மயில் போன்றவள்,
அழகி, கடுமையான ஆலகால விஷத்தைக் கழுத்தில் அடக்கி வைத்தவள்,
கருணை மிகுந்த கண்களை உடையவள்,
கற்பக விருக்ஷம் போன்றவள்,
 திருக்குகளையே ஆடையாகக் கொண்டவள்,
எங்கள் தாய், தன்னை தியானிக்கும்
அடியவருக்கு இரங்குபவள்,
வேதங்கள் போற்றுகின்ற முக்கண்ணி,
ஆகிய காமாட்சி தேவியின் காம கோட்டத்தில்
விளங்கும் தலைவனே, இந்திரன்
வணங்கும் தம்பிரானே!

என்று காமாட்சியின் பெருமைகளைப் பலவாறாகப் போற்றி, அத்தகு தாயின் குமரனான முருகப் பெருமானையும் வணங்குகிறார். அண்டங்கள் தோறும் ஒவ்வோர் இந்திரன் ஆட்சி புரிவதனால் இந்திரர் எனப் பன்மையில் கூறுகிறார். ‘‘இந்திரர் எண்ணிலர்’’- கந்தபுராணம். இப்பாடலில் அன்னை முப்பத்திரண்டு அறங்கள் புரிந்தது பற்றிய குறிப்பை அருணகிரியார் வைத்துள்ளார். உமையம்மை தனது கண்களை விளையாட்டாகப் பொத்தி பிரபஞ்சத்தையே இருளடையச் செயததற்குப் பரிகாரமாக, ஐயன் இரு நாழி நெல்லை அவருக்கு அளித்து, முப்பத்திரண்டறங்கள் செய்யும்படி ஆணையிட்டார். [‘‘ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி....’’ - அபிராமி அந்தாதி]  [காமாட்சி கோயிலில் முதல் பிராகாரத்தில் காயத்ரி மண்டபத்திற்குப் போகும் வழியில் அன்ன பூரணி சந்நதி உள்ளது]

 எக்குலம் குடிலோடுலகி யாவையும்
 இற்பதிந்திரு நாழி நெல்லால் அறம்
 எப்போதும் பகிர்வாள் குமரா என
உருகேனோ’’

-    திருப்புகழ்.
அன்னை செய்த முப்பத்திரண்டறங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:- [ஆதாரம் = காஞ்சிபுராணம் (கச்சியப்பமுநிவர்]
1. ஆவுரிஞ்சுதறி அமைத்தல் :- மாடுகள் இதன் மீது உராய்ந்து தங்கள் தினவை(அரிப்பு) தீர்த்துக் கொள்ளும்.
2. பசுவிற்கு வாயுறை :- பசுவிற்குப் பசும்புல்லை அரிந்த உணவாகக் கொடுத்தல்.
3. துறந்தோர்க்கு உணவு :- உண்மைத்துறவிகளுக்கு உணவளித்தல்.
4. மக வளர்த்தல் :- அநாதைக் குழந்தைகளை தாய் போல் வளர்த்தல்
5. வேதம் முதலான ஓது வித்தல் :- ஆர்வம் உள்ளவர்களுக்கு வேதம், ஆகமம், இயலிசை நாடகத் தமிழ் ஓது வித்தல்.
6. மகப்பால் கொடுத்தல் :- பிறந்த போதே தாயைப்பறி கொடுத்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் சுரக்காத தாயின் குழந்தைக்கும் பால் கொடுத்தல்.
7. அறுசமயத்தார்க்கும் உணவு அளித்தல்:- காணாபத்யம், சௌமாரம், சைவம், சாக்தம், வைணவம். சௌரம் ஆகிய அறுவகை சமயங்களைப் பின்பற்றுவோர்க்கு உணவளித்தல்.
8. கருவாய்த்த மகளிரைக் காத்தல் :- கருவுற்ற மகளிரைப் பேணி அன்பு காட்டுதல்.
9. ஒப்புரவு செய்தல் :- படைகளுடன் வரும் அரசர்களைக் கௌரவித்தல்.
10. மருந்து கொடுத்தல் :- நோயாளிகளுக்கு இன்சொல் கூறி மருந்தும் உணவு அளித்தல்.
11. சோலை அமைத்தல் :- மரக்கன்றுகளைக் காப்பாற்றி மரமாக வளர்த்து அவற்றில் வந்தமரும் பறவைகளுக்கு உணவும் நீரும் அளித்தல்.
12. நீர் நிலை அமைத்தல் :- குளங்கள் அமைத்து அதில் மீனினங்களை வாழச் செய்து உணவிடுதல்.
13. விலங்கிற்குணவு :- விலங்குகளுக்கு உணவளித்தல்.
14. அறவுரை கேட்பித்தல் :- கல்விச் சாலைகளை நிறுவுதல், ஒப்பற்ற இறைவனின் கதைகளை, உயிர்களின் அக இருள் நீங்குமாறு கேட்பித்தல்.
15. தீட்சை கொடுத்தல் :- குரு மூலமாக ஐந்தெழுத்தை உபதேசித்தல்.
16. அறவோர் இருக்கை :- துறவர்களுக்கும் முதிர்ந்த பக்தியினருக்கும் உயர்ந்த மடங்கள் அமைத்து அவர்களைக் காத்தல்.
17. ஆதுலர்க்குச் சாலை :- சத்துள்ள உணவை ஆதரவற்றோர்க்கு அளிக்க அன்னசாலைகளை நிறுவுதல்.
18. மகட் கொடை :- தேவையான ஆடை ஆபரணங்களைக் கொடுத்து மகள்களைக் கன்னிகாதானம் செய்வித்தல்.
19. தீராக்கடன் தீர்த்தல் :- தீராக்கடன்களால் துன்புறுவோரின் கடன்களைத் தீர்க்க உதவுதல்.
20. தூர்த்தற்கு உதவுதல் :- காமுகனையும் மாற்ற உதவுதல்.
21. படுக்கை அளித்தல்.
22. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்.
23. சிறுவர்களுக்கு உணவளித்தல்.
24. பிச்சை கேட்பவருக்கு கருணையுடன் உணவளித்தல்.
25. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளுபவர்க்கு உணவளித்தல்.
26. தின்பண்டம் வழங்கல்.
27. முன்னோர் அறங்கள் காத்தல் - முன்னோர்கள் செய்து வந்த அறங்களைத் தொடர்ந்து செய்தல்.
28. உடுக்க உடை- அவசியம் உள்ளவர்களுக்கு உடுக்க ஆடை அளித்தல்.
29. அறவைப் பிணம் அடக்கம் செய்தல்:- உறவினர் அற்ற பிணங்கள். வறுமையில் வாடியோர் பிணங்கள், அநாதைப் பிணங்கள் ஆகியவற்றை சடங்குகள் செய்து அடக்கம் செய்தல்.
30. உயிரினங்கள் கட்டி வைக்கப்பட்டாலோ, துன்புறுத்தப் பட்டாலோ அவற்றைக் காத்து விடுவித்தல்.
31. ஆடை துவைத்து வெளுத்துக் கொடுத்தல்.
32. மயிர் கழிப்பித்தல் - நீண்டு வளர்ந்து கிடக்கும் அழுக்கு முடி வைத்திருப்பவர்களை நாவிதர்களிடம் அழைத்துச் சென்று முடி திருத்துதல்.

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்