SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

2019-08-06@ 17:24:30

*அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்  43

ஆசை என்பது பெற்று மகிழ்வது, அன்பு என்பது தந்து மகிழ்வது. நினைக்க முக்தி அருணை, பிறக்க முக்தி ஆரூர், என்ற வழக்கு சொல்லின் ஆழத்தையே இந்தப் பாடல் வரி நமக்கு விளக்கிச் சொல்கிறது. உமையம்மையானவள் திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மை என்கின்ற பெயரோடு திகழ்கின்றாள். இந்த பெயரின் விளக்கம் - யார்? திருவண்ணாமலையில் வந்து தன்னை தொழுகிறார்களே அவர்களுக்கு முக்தியை பரிசாக வழங்குகிறாள். அவளைத் தொழுது அருள் பெற்ற ஆன்மாக்கள், தன் உடலை விட்டவுடன் மீண்டும் அடுத்த உடலில் புகுந்து பிறவி எடுப்பர்.

இது உலகின் இயற்கை. இந்த இயற்கை நெறியை மாற்றி உடலை விட்ட பிறகு தன் அருளால் அடுத்த உடல் புகாமல் தடுத்து மேல் நோக்கிச் செலுத்தி அந்த ஆன்மா பிறவா வண்ணம் தன் திருவடியிலே இறவா வண்ணம் வைத்தருள்வாள். இந்தச் செயலால் அந்த ஆன்மாவைப் பொறுத்தவரை அன்னை என்கின்ற உறவை அடைவதுமில்லை. ஈன்றெடுக்கப்படவுமில்லை, இதையே ‘‘ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை’’ என்கிறார்.

தான் இறைவியின் அருளைப் பெற்றுவிட்டதாக கருதும் அபிராமி பட்டர் அந்த அருளின் விளைவையே ‘‘ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை’’ என்கிறார். சாத்திரங்களின் மீது தெளிவும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு செயல்பட்டதில் அளவற்ற அனுபவமும், பெற்ற பட்டர், சாத்திர பயனாக கூறப்படும் மோட்ஷம் என்பது அறிந்து, அதைப் பின்பற்றுபவர்களுக்கு அது அந்த பயனைத் தரும் என்று கூறியிருப்பதால் அது சாத்தியமான வேதத்தாலும், ஆகமத்தாலும், அங்கீகரிக்கப்படுவதால், மோட்ஷத்தையே ‘‘ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை’’ என்ற வாக்கினால் பிறவாமையை குறிப்பிடுகிறார்.

இதையே வேதம், ஆகமம், பூசனை, அதன் வழி ஏற்படும் பக்தி அந்த பக்தியினால் இறைவியினிடத்து ஏற்படும் தொடர்பு, தொடர்பினால் ஏற்படும் விளைவு, இவை ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும், ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும், இறுதி இலக்காயும் உள்ளது. இதையே,

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித்திகழும்பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.  (பாடல் எண் - 29)

- என்ற பாடல் வரிகள் அபிராமி பட்டர் உமையம்மை அருள் விளைவை வரையறுத்து பிறவாமையை அளிப்பது என்று கூறுவதிலிருந்து மேலும் உறுதி செய்து கொள்ளலாம். உமையம்மையை வழிபாடு செய்கிற பக்தர்கள் கிடைத்தற்கரிய அந்த வாய்ப்பைப் பெற்றும், தவறான வழியில் அந்த அருளை பயன்படுத்தி பிற நலன்களை பெற்று மீண்டும் பிறவிச் சுழலுள் சிக்காமல் இருக்கவும் தனக்கு பின்வரும் உபாசகர்களுக்கு இதை மறைமுகமாக வலியுறுத்துகிறார் பட்டர்.

உபாசனை நெறியில் உமையம்மை அருளால் சில சித்துக்கள் கிடைப்பினும், அதை பயன்படுத்தியதால் மோட்சத்தை இழந்தவர்கள் அதிகம் பேர் என்பதனாலேயே ‘‘ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை’’ என்று மோட்சத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறார். தான் அடைந்த அனுபவத்தையே பிறருக்கு இறையருளால் அறிவிக்க முயல்கின்றார். அந்த வகையில் தாழ்வானதைப் பெறாமல், உயர்ந்த முக்தியையே பெற வேண்டும். அதையே கேட்டுப் பெற வற்புறுத்துகிறார் என்பதை,

‘‘இடறும் தவிர்த்து இமைப்போதிருப்பார்’’ (பாடல் எண் - 48)
இறைவழிபாட்டை செய்து அதன் பயனாய்
பின்னும் எய்துவரோ (பாடல் எண் - 48) என்று மோட்ஷத்தின் உயர்வையும் பிறவாமையின் உயர்வையும்,
‘‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’’  (பாடல் எண் - 48)

1. ‘‘உமையம்மையானவள் பிரம்மச்சாரினியாக (திருமணம் ஆகாதபோது) இருக்கும்போது அறத்தையும், ‘‘அழியாத கன்னிகை-8
2. திருமணமாகி கணவனுடன் இருக்கும்போது பொருளையும் துணைவருடன் - (பாடல் எண் -28)
3. கணவன் மற்றும் புதல்வனுடன் இருக்கும்போது இன்பத்தையும்,
‘‘தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்று எனத்
தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ?
வல்லி நீ செய்த வல்லபமே.’’  (பாடல் எண் - 65)

4. உமையம்மையின் திருமணக் கோலத்தைக் கண்டதால் (வீடு பேற்றையும்) தான் பிறப்பறுக்கப் போவது உறுதி என்று தானே முடிவு செய்து
‘‘ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை’’  என்று இவ்வாறு கூறுகிறார்.

‘‘அமையும், அமையுறு தோழியர் மேல் வைத்த ஆசையுமே’’ ஆசை என்பது பெற்று மகிழ்வது, அன்பு என்பது தந்து மகிழ்வது. அந்த வகையில் மானுடர்கள் அனைவரும் இறைவியிடத்து தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவே வழிபாட்டைச் செய்கின்றார்கள். அந்த தேவதைகள் பலவாறாக இருப்பதால் அதை நிறைவு செய்யும் வழிபாட்டு முறையும், பலவாறாக உள்ளது.

அந்த வகையில் துறவியர்கள் திருமணமாகாமலேயே இறையருட்பாதையில் தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். அவர்கள் பிற ஆசைகளைத் துறந்தாலும், பெண்ணாசையானது  இயல்பாக உடலோடு தொடர்புடையதால் அந்த ஆசையை முழுவதுமாக விலக்கி, நான் உடல் அல்ல, நான் உயிர் என்று ஆத்ம ஞானத்தைப் (உயிரைப்பற்றிய அறிவை) பெற முயல்கிறார்கள்.

உயிரைப்பற்றிய அறிவை உபநீஷத்து போன்ற வேதப் பகுதிகள் தெளிவாக விளக்கியிருந்தாலும், அனுபவத்தில் வாசனா மலம் என்ற எண்ணப்பதிவு புலன்களோடு கொண்ட தொடர்பு, உடலின் இயற்கை இவை காரணமாக உடலானது ஆசையின் வசப்பட்டு பெண்ணாசையைத் தூண்டும். அத்தகைய சூழ்நிலையில் அந்த ஆசையை அடியோடு அகற்ற உமையம்மையை அர்த்தநாரீஸ்வரராகத் தொழுவார்கள். பாதி ஆண் வடிவம், பாதி பெண் வடிவம் இத்தோற்றமானது, பெண்ணாசையை மேல் ஓங்கச் செய்யாது. தடுத்து மனதை அமைதியுறச் செய்யும், அதையே இப்பாடலின் வரியினால் ‘‘அமையும் அமையுறு தோழியர் மேல் வைத்த  ஆசையுமே’’  (பாடல் எண் - 31)  என்ற வரிகளால் வலியுறுத்துகிறார்.

துறவியர்கள் போற்றும் பண்டார சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றில் ‘‘எங்கு எத்தெய்வம் கண்டீர் அங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவார்’’ என்ற வரியானது நமக்கு இதை மேலும் உறுதிபடுத்துகிறது. இயல்பாகவே மானுட எண்ணமானது தவறான புலன்களின் வழி செல்லும் இயல்புடையது. இந்த இயல்பை மாற்றி இறைவியின் திருவடியில் மனதை செலுத்த முயல்வது என்பது வழிபாடு. அதில் ஐந்து வழியை ஆகமங்கள் பரிந்துரை செய்கிறது.

1) ஜபம், 2) தியானம், 3) பூஜை, 4) ஞானம், 5) அப்பியாசம் (பயிற்சி) ஜபம் - என்பது இறைவியின் மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது,  தியானம் - என்பது இறைவியின் திருஉருவத்தை மனதிலே நிலை நிறுத்துவது. பூஜை - என்பது மனம் வாக்கு காயம் இம்மூன்றினாலும் ஆகமங்களில் கூறப்பட்ட இறைதிரு மேனியைக் குறித்து கவனத்தை ஒருமித்து செய்யப்படும் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட செயல் முறைகளாகும்.

ஞானம் - என்பது ஒவ்வொரு இறைவியைப்பற்றியும் இறைவியுடன் ஆன்மாக்களுக்குண்டான தொடர்பு பற்றியும், தொடர்பினால் ஏற்படும் நன்மை பற்றியும், விளக்கமாக வரையறுத்தலை குறிக்கும். இது பெரும்பாலும் வடமொழி செய்யுள்களாக அமையும். இதன் வழி அதை படிப்பவருக்கு அது சார்ந்த ஒரு எண்ணப்பதிவு தோன்றும். அப்பியாசம் (பயிற்சி) மேற்கண்ட ஜபம், பூஜை, தியானம், ஞானம் இவற்றோடு இடையீடு இல்லாத தொடர்ந்த தொடர்பின் வழி தோன்றும் அனுபவமாகும்.

அந்த அனுபவத்தை ஏற்படுத்த முயல்வதே ஆலயமாகும். ஒன்றும் அறியாத மாணவப்பருவத்தில் இருப்பவனுக்கு ஜபம், பூஜை, தியானம், ஞானம், அப்பியாசம் இவைகளை அருள்வது உமையொரு பாகராவார். பாடசாலையில் சமயக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புலன்களை ஒடுக்கி கல்வியில் கவனம் செலுத்த துணை நிற்கும். மனதில் பெண்ணாசை நீக்கி புணர்ச்சியற்று இருத்தலாகிய பிரம்மச்சரிய விரதம் இருப்பதால் அவர்கள் பேராற்றலை அடைவர்.

அந்த பிரம்மச்சரியம் வழுவாமல் இருப்பதற்காக உமையொருபாகரை வழிபாடு செய்வார்கள். ‘‘இதையே அமையும் அமையுறு தோழியர் மேல் வைத்த ஆசையுமே’’ என்கிறார். துறவியல்லாத மாணவப் பருவத்தில் உள்ளவர்கள் உமையொருபாகரை வணங்குவதால் எதையும் விரைவில் கற்கும் ஆற்றல், குரு உபதேசிக்காமலேயே உமையொரு பாகரின் உபாசனை மூலமாக அனைத்து துறைகளைப்பற்றிய தகவலை அறிவிக்காமலேயே அறியும் ஆற்றல், அதிகமான பாடப்பகுதிகளை மனதில் பதிவு செய்துகொள்ளும் ஆற்றல், தேவையானபோது தேவையான பகுதியை எடுத்து பயன்படுத்தும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பெறுவர்.

உடல் நீத்தோர் (பித்ருக்கள்), தேவதைகள் இவர்களை நேரிடையாகக் காணும் ஆற்றலை அடைவதற்காக பிரம்மச்சரிய விரதம் காப்பர். இதையே ‘‘அமையும் அமையுறு தோழியர் மேல் வைத்த ஆசையுமே’’ என்கிறார். ஆசைக்கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதமெனும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே (பாடல் எண் - 32)

மனிதர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை, தேவைகளை ஆலய வழிபாட்டினால் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள். அப்படி முயன்று திருவருளை  பெறுவதற்குரிய மந்திரம், குரு, தன்முயற்சி இவையாவற்றையும் கொண்டு தேவதைகளின் அருளைப் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த வாய்ப்பை பெற்றபோதும் கூட ஆசையின் வசப்பட்டு இறையருள் தந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், பேரருளை சிறு விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

இறையருளால் வேண்டியது நிறைவேறிய உடன், பிறகு வேறு ஒன்றைப்பற்றி யோசிக்க ஆரம்பிக்கின்றார்கள். வேறு ஒரு ஆசை தொடர்கிறது, இந்த ஆசை நோய் தீர்ந்த பாடில்லை, இதனை வித்யா உபாசகர்கள் உபாசனை சறுக்கல் என்று குறிப்பிடுவர். உதாரணமாக இரண்யகசிபு, ராவணன் இவர்கள் உபாசனையினால் வரம் பெற்றவராயினும் பின் அதை இழந்தார்கள் என்பதனால் அறியலாம். இத்தகைய சூழலை ஊக்குவிக்காமல் உமையம்மையின் அருளை உரிய நேரத்தில் சரியாக பயன்படுத்துகின்ற பண்பை நமக்கு மறைமுகமாக எடுத்துரைக்கின்றார் அபிராமி பட்டர்.

ஆசையை கடல் என்றும், அதில் அகப்பட்டவர்கள் நீந்தவும் முடியாமல், வெகுநேரம் நீந்தி மிதக்கவும் முடியாமல், கடலை கடந்து கரை சேரவும் முடியாமல், மூழ்கி அழிந்து விடுவர் என்று நம்மை அச்சுறுத்துகிறார். அந்த சூழலில் உமையம்மையின் வாசக்கமலமாகிய தேனி மட்டுமே நம்மை கடக்க வைக்கும். ‘‘சுதர சிதர சே நம் ’’ என்று வேதமும் குறிப்பிடுகிறது. நாமும் ஆசைக்கடலுள் அகப்படாமல் தோனியாகிற உமையம்மையைப் பற்றி நம்மை காத்துக்கொள்ள இப்பாடலை பயில்வோம், முயல்வோம், இனி பாடலுக்குள் நுழைவோம்.

‘‘ஆசைக்கடலில் அகப்பட்டு’’ ஆசை என்ற சொல்லானது பத்திற்கும் மேற்பட்ட பொருளைத் தருகிறது. அத்தகைய பத்து பொருள்களிலும் அபிராமிபட்டர் அச்சொல்லை பயன்படுத்துகிறார். அதை ஒவ்வொன்றாய் பார்ப்பதன் மூலமாக தான் அது கடல் என்றும், அதன் பரப்பு மிக அதிகம் என்றும், அதை கடத்தல் அறிது என்றும் நமக்கு இறைமுகமாக வலியுறுத்துகின்றார். அவற்றை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

மிகுந்த அன்பை ஆசை என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். உலகில் தாயின் மீதும், தந்தை மீதும், வைக்கப்படுவது அன்பு, தாய் தன் குழந்தைகளின் மீது சொல்லப்படுகிற அன்பு மிகுதியாக பயன்படுத்தப் படுகிறது ஒருவர் மீது அன்பு செலுத்த அவர் நம் புலன்களுக்கு புலப் படுபவதாக இருக்க வேண்டும், அப்போது தான் மனம் அதன் மீது அன்பு செலுத்த முடியும். ‘‘ஆனால்’’ மொழிக்கும் நினைவிற்கும் ‘‘எட்டாத’’- (பாடல் எண் - 87)

தன்மையுடைய உமையம்மையின் மீது அன்பு செலுத்துவது சாமானியமானவர்களுக்கு இயலாததாகிறது.உமையம்மையின் மீது அன்பு செலுத்துவது அவள் அருளன்றி இயலாது. அதனால் தான் ‘‘அன்பு செய்ய வைத்தாய்’’ என்கிறார். அவ்வாறு அல்லாமல் உலகில் உள்ளோரிடத்தில் அன்பு செலுத்தி அதை இழத்தலே துன்பத்தை தரும் அப்படிப்பட்ட துன்பத்திற்கு காரணமான மிகுந்த அன்பையே ஆசை என்கிறார்.

தசரதன் தன் மகன் மீது அன்பு கொண்டு அம்மகன் பிரிந்த போது அவன் உயிர் பிரிந்தது, அப்படி துன்பத்திற்கு மட்டுமே காரணமான அன்பையே ஆசை என்ற சொல்லால்
குறிப்பிடுகின்றார்.    யாக்கையானது பதினெட்டு குற்றங்களை உடையது ‘‘குடரும் கொழவும் குருதியும் தோயும் குரம்பையிலே’’ (பாடல் எண் - 48)

புலன்களின் வழியாய் மனதில் பதிந்த எண்ணங்களின் மிகுதியை முறைப்படுத்தி வௌிப் படுத்தும். மனதின் தன்மையை ஆசை என்பர். இந்த ஆசையானது வளருமேயன்றி இளைக்காது, அப்படி வளர்ந்தால் துன்பத்தை தரும், அதனாலேயே ‘‘பதித்தலால் கொழுத்தல்’’ தன்மையையுடைய ஆசை வளர்ந்து கொண்டே செல்வது கருதி ‘‘ஆசை கடல் ’’ என்றார். ‘‘கொழுவும்’’ - பாடல் எண்: 48 என்ற சொல்லை இப்பாடலில் பதித்தல், கொழுத்தல் என்ற இரண்டு பொருளிலும் பயன்படுத்துகின்றார். ஆசை என்பது மனதின் தீய குணங்களில் ஒன்றாகும். அதன் மிகுதியையே ‘‘ஆசைக் கடலுள் ’’ என்றார்.

இந்த ஆசையின் மிகுதியினால் வரும் துன்பத்தையே ‘‘இழவுற்று நின்ற நெஞ்சே இவங்கேல் உனக்கென் குறையே ’’ - (பாடல் எண்: 71)

 என்பதனால் நன்கு அறியலாம். உடலானது தொடர்ந்து மாரிக்கொண்டே இருக்கும்.[ பச்சிளம் , குழந்தை, பாலகன், இளைஞன், முதியவர்] ஒரே நிலையில் இருக்காது அத்தகைய மாறுகிற தன்மையை (மாயையை) ஆசை என்ற வார்த்தையால் குறிப்பிடுவர். இந்த தன்மையானது ஆன்மாவிற்கு பிறவி நோயை வரவழைக்கும், தீமையை செய்வதால் அதையும் தீங்கு என்கிறார். உமையம்மையை வணங்குவதால் ‘‘ஒரு தீங்கில்லையே ’’ - (பாடல் எண்:101) என்பதனாலும் ஆசை என்கின்ற சொல் உடலையும் குறிக்கும். அந்த உடல் ஆன்மா தங்கி செல்லும் இடமாகும். அப்படி தங்கி செல்லுகிற இடத்திற்கு ஊறு செய்கிற பண்பு ஆசை.

‘‘குரம்பை அடுத்து குடி புக்க’’ - (பாடல் எண்:49)

இதையே அபிராமி பட்டர் பயன்படுத்துகிறார். ஆசை என்ற சொல்லிற்கு விருப்பம் என்று பொருள் அதை உமையம்மையின் மீது கொள்வதாக கூறுகிறார். விரும்பி தொழும் அடியார் ’’  (பாடல் எண்:94)
ஒவ்வொரு மனிதனும் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஆலயம் சென்று வழிபடுகிறார்கள். அ்ந்த ஆசை எந்த கடவுளால் நிறைவேறுகிறதோ அதை குறித்து பயணிக்கிறார்கள். அவ்வாறு ஆசையினால் வழிபடுபவன் தான் அல்ல என்பதை ‘‘அவர் போன வழியும் செல்வேன்’’ - (பாடல் எண்:92) என்கிறார்.

(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர  சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • doublee_engineflightt1

  உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

 • chennai_rebbb

  சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

 • 11kudiyrasu12

  விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்