SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகரின் முதலாம் படைவீடு திருவண்ணாமலையில் அருள்தரும் செல்வ கணபதி

2019-08-06@ 16:46:13

இந்துமத வழிபாடுகளில் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியை தொழுதால் காரியம் கைக்கூடும் என்பது அருளாளர்கள் வாக்கு. எனவேதான், ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் காணும் திசையெங்கும் நமக்கு காட்சியளிக்கிறார் விநாயக பெருமான். எக்காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூலமுதல்வன், முழுமுதற் கடவுள். பக்தர்களின் உள்ளம் விரும்பும் வகையிலான வடிவங்களில், எழில்கோலத்தில் எழுந்தருளி அருள்தருவது விநாயகரின் தனிச்சிறப்பு.

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என அடியார்கள் கைதொழும் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் அருள்தரும் திருவருணை திருக்கோயிலில், கோபுர கணபதி, வன்னிமர விநாயகர், கஜசம்கார விநாயகர், கணேசர், யானை திரைகொண்ட விநாயகர், சிவகங்கை விநாயகர், ஸ்தல விநாயகர், சம்மந்த விநாயகர், விஜயராகவ கணபதி, செந்தூர விநாயகர் என பல்வேறு திருநாமங்களில் அருள்தருகிறார். அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து விஷேசங்களும், கொடிமரத்துக்கு வலது திசையில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் இருந்தே தொடங்குவது மரபாகும்.

இத்திருக்கோயிலை தரிசிக்கும் பக்தர்களும், சம்மந்த விநாயகரை தரிசித்த பிறகே, கருவறை தரிசனம் செய்வது சிறப்பு. கிளி கோபுரத்தின் வலதுபுறம் அருள்தருகிறார் ஆனை திரை கொண்ட வினாயகர். பலமுறை போரிட்டும் தோல்வியை தழுவிய மன்னன் ஒருவன், போரில் வென்றால் ஆயிரம் யானைகளை திரையாக கொடுக்கிறேன் என விநாயகரிடம் வேண்டினான். அதன்படியே வெற்றியும் பெற்று வேண்டுதலை நிறைவேற்றினான். எனவே, யானையை திரையாக பெற்றதை அடையாளப்படுத்தவே இத்திருநாமம் விநாயகருக்கு.

சுவாமி சன்னதியின் வலதுபுறம் கோயில் கொடி மரம் அருகே அமைந்துள்ள சம்மந்த விநாயகரும், அம்மன் சன்னதியின் வலப்புறம் அமைந்துள்ள விஜயராகவ கணபதியும் செந்நிறமாக அருள்தருகின்றனர். சம்மந்த விநாயகரை செந்தூர விநாயகர் எனும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். சம்மந்தாசூரன் எனும் அசுரனை சம்ஹாரம் செய்தபோது, அசுரனின் உதிரம் பூமியில் விழுந்ததும் மீண்டுமொரு அசுரன் உயிர்பெற்றெழுந்தான். அதனால், சமந்தாசூரனின் உதிரம் பூமியில் விழாமல் தன்னுடைய உடலில் தாங்கிப்பிடித்தார் கணபதி என்கிறது ஆன்மீக வரலாறு. அதனால், எந்நாளும் செந்நிறமாக வினாயகர் இங்கு அருள்பாலிக்கிறார்.

இக்காட்சியை வேறெங்கும் காண இயலாது என்பது தனிச்சிறப்பாகும். அண்ணாமலையார் கோயிலில் அருள்தரும் விநாயகரில், தனிச்சிறப்பு மிக்கவர் ராஜ கோபுர இடதுபுற தூணில் எழுந்தருளி அருள்தரும் செல்வ கணபதி. முருகபெருமானுக்கு அறுபடைவீடுகள் அமைந்திருப்பதை போல, விநாயகரின் அறுபடை வீடுகளில் முதலாம் வீடு ராஜகோபுரத்து செல்வ கணபதி என்பது பலரும் அறியாத புதுமை. விவேக சிந்தாமணி எனும் தமிழின் தொன்மையான நூலில், அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் பெருமையும், புகழும் முதல் பாடலாக அமையப்பெற்றிருக்கிறது.

‘அல்லல் போம் வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்: நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை கைதொழுக் கால்’ காலத்தால் அழியாத இந்த பாடல் வரிகள் மூலம், ராஜகோபுரத்தில் அருள்பாலிக்கும் செல்வகணபதியின் சிறப்பை உணரலாம். அருணை திருக்கோயிலுக்குள் பிரதான ராஜகோபுரத்தின் வழியாக செல்லும் பக்தர்கள், செல்வ கணபதியை தரிசித்து செல்வது நன்மை தரும். விநாயகரின் இரண்டாம் படை வீடு, விருதாச்சலத்தில் அமைந்திருக்கிறது. அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் எனும் திருப்பெயர்.

திருக்கடையூரில் மூன்றாவது படைவீடு அமைந்திருக்கிறது. ஆயுளை அருளித்தரும் திருக்கடையூர் கணபதிக்கு கள்ள வாரணப் பிள்ளையார் எனும் திருநாமம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சித்தி விநாயகர், நான்காம் படைவீடு கணபதியாக அருள்தருகிறார். எடுத்த காரியங்கள் நிறைவேற சித்தி விநாயகரின் அருள் அவசியம். ஐந்தாம் படைவீடான பிள்ளையார்பட்டியில் அருள்தரும் கற்பக விநாயகரை வணங்கினால், பதினாறு செல்வங்களும் கிடைக்கும். கணபதியின் ஆறாம் படைவீடான திருநரையூரில் அருள்தரும் பொல்லாப் பிள்ளையாரை துதிப்போரின் முயற்சிகள் கைகூடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்