SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

2019-08-06@ 15:59:25

163. நியமாய நமஹ: (Niyamaaya namaha)

“யாராலும் என்னை வெல்ல முடியாது!” என்று தனது அரசவையில் ஆணவம் தோற்றச் சொன்னான் மகாபலி. “எப்படி இவ்வளவு உறுதியோடு சொல்கிறாய்?” என்று கேட்டார், அவனது குருவான சுக்கிராச்சாரியார். அதற்கு மகாபலி, “ஆம் குருவே! இவ்வுலகை ஆளும் திருமாலால் கூட என்னை வெல்ல முடியாது!” என்றான். “அனைத்தையும் படைத்து, அனைவரையும் இயக்குபவர் திருமால். அவரால் உன்னை வெல்ல முடியாது என்கிறாயே! இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டார் சுக்கிராச்சாரியார்.

“குருவே! எனக்கு உங்களின் அருளும் ஆதரவும் எப்போதும் இருக்கிறது. குருவின் அருள் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத் திருமால் தீங்கு செய்ய மாட்டார். மேலும், எனது தாத்தாவான பிரகலாதன் திருமாலுக்கு மிகவும் நெருக்கமானவர். எனக்கு ஒரு சிறு தீங்கிழைத்தாலும், பிரகலாதனின் மனம் நோகும் என்பதால் திருமால் எனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார். அதனால் தான் திருமாலாலும் கூட என்னை வெல்ல முடியாதென்று சொல்கிறேன்!” என்று கர்வத்துடன் சொன்னான் மகாபலி.

“பார்க்கலாம்!” என்றார் சுக்கிராச்சாரியார். சில நாட்கள் கடந்தன. நர்மதா நதிக்கரையில் மகாபலி யாகம் செய்த போது, அந்த யாகசாலைக்கு வாமன மூர்த்தியாகக் குள்ளமான தோற்றத்துடன் திருமால் வந்தார். மகாபலியிடம் மூவடி மண் யாசகமாகக் கேட்டார். “வெறும் மூன்றடி மண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? வீடு கட்ட முடியுமா? விவசாயம் செய்ய முடியுமா?” என்று ஏளனமாகக் கேட்டான் மகாபலி. வாமனரோ, “முதலில் நான் எனது கால்களால் மூவடி மண்ணை அளக்கிறேன். மீதமுள்ள விஷயங்களை அதற்குப் பின் பேசிக்கொள்ளலாம்!” என்றார்.

அதை ஏற்றுக்கொண்டு, மகாபலி தாரை வார்த்துக் கொடுக்க முற்பட்ட போது, சுக்கிராச்சாரியார் அவனைத் தடுத்தார். “வந்திருப்பது திருமால். மூவடி மண் என்ற பெயரில் மூவுலகத்தையுமே உன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப் பார்க்கிறார் அவர். ஏமாந்து விடாதே!” என்று அறிவுறுத்தினார். ஆனால் அதற்கு மகாபலி செவி மடுக்கவில்லை. “தானம் கொடுத்தே தீருவேன்!” என்றான். கோபம் கொண்ட சுக்கிராச்சாரியார், “நீ உன் அனைத்துச் செல்வங்களையும் இழக்கக் கடவது!” என்று சாபம் தந்தார்.

மகாபலி தன் விருப்பப்படி வாமனருக்கு மூவடி மண்ணைத் தாரை வார்த்துத் தந்த அளவிலே, அவர் பேருருவம் தாங்கி ஓரடியால் மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்துப் பூமிக்குக் கீழே உள்ள சுதல லோகத்தில் அவனைச் சிறை வைத்தார். தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தை அவர்களுக்கு மீட்டுத் தந்தார்.

சுதல லோகத்தில் மகாபலிக்குக் காவலாளியாக வாமன மூர்த்தி இருந்து அவனைப் பாதுகாத்து வந்தார். அப்போது மகாபலி வாமனரிடம், “சுவாமி! எனக்கொரு ஐயம்! யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்ற கர்வத்தோடு இருந்தேன். உங்களாலும் என்னை வீழ்த்த முடியாது என்று எண்ணினேன். என்னை எப்படி வென்றீர்கள்?” என்று கேட்டான்.

“உன் குருவின் அருள் இருப்பதால் நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என நீ எண்ணினாய். ஆனால் நானோ, சுக்கிராச்சாரியாரின் மனதுக்குள் புகுந்து, நீ தானம் செய்யும் போது அவர் தடுக்கும்படிச் செய்தேன். அவரது கூற்றை மீறி நீ தானம் செய்ததைக் கண்டு வெகுண்டு அவர் உன்னைச் சபித்து விட்டார் அல்லவா? அப்போதே நீ குருவருளை இழந்து விட்டாய்!” என்றார் வாமனர்.

“மேலும், நான் உன்னை வீழ்த்தினால் உன் தாத்தாவான பிரகலாதனின் மனம் நோகும் என்பதால் நான் உன்னை வீழ்த்த மாட்டேன் என எண்ணினாய். பிரகலாதனின் மனம் நோகாதிருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம் உனக்குக் கிடைக்கும்படிச் செய்தேன்!” என்றார். “அது என்ன?” என்று கேட்டான் மகாபலி.
“நரசிம்மாவதாரத்தில் என் கரத்தைத் தான் பிரகலாதனின் தலையில் வைத்தேன். திரிவிக்கிரம அவதாரத்தில் என் திருவடிகளையே உன் தலையில் வைத்தேன். என் கரங்களை விட என் திருவடிகள் பெருமை பெற்றவை அல்லவா? தனக்குக் கிட்டாத பெரும் பேறு தன் பேரனுக்குக் கிட்டியதை நினைத்துப் பிரகலாதனும் மனம் மகிழ்ந்தான். எனவே அவனையும் திருப்திப்படுத்தி விட்டேன். உன்னையும் வீழ்த்தி விட்டேன். இருந்தாலும் வருந்தாதே! இந்த சுதல லோகத்தில் நான் எப்போதும் உன்னோடு உனக்குக் காவலாளியாக இருப்பேன்!” என்றார் வாமனர்.

இவ்வாறு அனைவரையும் நியமித்து இயக்கும் சக்தியால், யாராலும் வெல்ல முடியாதவர்களாகக் கருதப்படும் மகாபலி போன்றோர்களையும் திருமால் எளிதில் வெல்வதால், அவர் ‘நியம:’ என்றழைக்கப்படுகிறார். ‘நியம:’ என்றால் அனைவரையும் கட்டுப்படுத்த வல்லவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 163-வது திருநாமம்.“நியமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் நல்ல முறையில் கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனைத் திருமால் அருள்வார்.

164. யமாய நமஹ: (Yamaaya namaha)

கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் திருக்குடந்தை தேசிகன் என்னும் மகான் வாழ்ந்து வந்தார். அவர் ஒப்பிலியப்பன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளின் அம்சமாகக் கருதப்பட்டார். வடநாட்டு யாத்திரை செல்ல விரும்பிய திருக்குடந்தை தேசிகன், தனது மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டார்.

முதலில் திருமலையை அடைந்த திருக்குடந்தை தேசிகன், அங்கே திருவேங்கடமுடையானைத் தரிசித்து விட்டு ஆழ்வார் தீர்த்தம் என்று அழைக்கப்படும் அருவிக்கு அருகே தம் சீடர்களுடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். “வயது முதிர்வால் எனது உடல் தளர்ந்து விட்டது. இந்நிலையில் நான் எப்படி மேற்கொண்டு அயோத்தியா, மதுரா, பிருந்தாவனம், பத்ரிநாத் உள்ளிட்ட தலங்களுக்கெல்லாம் செல்வேன்?” என்று வருத்தத்துடன் தம் சீடர்களிடம் சொன்னார் திருக்குடந்தை தேசிகன்.

அப்போது அங்கே வந்த யாத்திரிகர் ஒருவர், திருக்குடந்தை தேசிகனை வணங்கினார். “சுவாமி! அடியேன் நம்மாழ்வாருடைய அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் இருந்து வருகிறேன். இங்கே நம்மாழ்வார் பெயரில் ஒரு அருவி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அருகிலிருந்த ஆழ்வார் தீர்த்தத்தைக் காட்டிய திருக்குடந்தை தேசிகன், “இது தான் நம்மாழ்வாரின் திருநாமத்தால் வழங்கப்படும் ஆழ்வார் தீர்த்தம்!” என்று கூறினார்.

மேலும், “நம்மாழ்வார் திருமலையைப் பற்றித் தம் திருவாய்மொழியில் பாடுகையில்,
“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே”

என்று பாடினார். திருமலையிலுள்ள அருவிகளில் நீர் பாயும் போது எழும்புகின்ற ஒலியானது, திருமலையப்பனுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்! வாருங்கள்! என்று அடியார்களை அழைப்பது போல உள்ளது. அத்தகைய திருத்தலமாகிய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலையப்பனுக்கு நாம் எல்லா நேரங்களிலும் அனைத்து விதமான கைங்கரியங்களும் செய்ய வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்து.

இப்பாசுரத்தில் திருமலையிலுள்ள அருவியின் ஒலி, மலையப்பனுக்குத் தொண்டு செய்ய வருமாறு தம்மை அழைப்பது போல் ஆழ்வார் உணர்ந்தமையால், அந்த அருவியில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆழ்வார் தீர்த்தம் என்று அவரது திருநாமத்தை இந்த அருவிக்குப் பெரியோர்கள் சூட்டினார்கள்!” என்றார் திருக்குடந்தை தேசிகன்.
“நம்மாழ்வார் திருமலைக்கு வந்த போது இவ்விடத்தில் தங்கியிருந்தார் என்றும் அதனால் தான் ஆழ்வார் தீர்த்தம் என்று இது அழைக்கப் படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே!” என்று கேட்டார் யாத்திரிகர்.

திருக்குடந்தை தேசிகன், “அனைவரின் இதயங்களிலும் இறைவன் எழுந்தருளியுள்ளான். அவ்வாறு இதயத்தில் உறையும் இறைவனை எப்போதும் அனுபவிக்கும் ஒருவன், மேற்கொண்டு இறைவனைத் தேடிக் கங்கைக்கோ குருக்ஷேத்ரத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. இதை விளக்கும் வகையில் ராமாநுஜ நூற்றந்தாதியில் ஒரு பாடல் உள்ளது:

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் எந்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே”

அந்த வகையில், நம்மாழ்வார் உள்ளத்தில் திருமால் குடிகொண்டு இருந்தமையால், அவர் எந்தத் திருத்தலத்துக்கும் செல்லவில்லை. முப்பத்தேழு திருத்தலங்களைச் சேர்ந்த பெருமாள்கள் புளியமரத்தடியில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரைத் தேடி வந்து அவரிடமிருந்து பாசுரம் பெற்றுச் சென்றார்கள். திருமலையப்பனும் ஆழ்வாரைத் தேடி வந்து பாசுரம் வாங்கிக் கொண்டாரே ஒழிய ஆழ்வார் திருமலைக்கு வரவில்லை!” என்று விடையளித்தார்.

“உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே!” என்று சொல்லிச் சிரித்த யாத்திரிகர், திடீரென மறைந்து விட்டார். யாத்திரிகர் வடிவில் வந்தவன் மலையப்பன்!
ஆம்! “உடல் தளர்ந்த நிலையில் எப்படி வடநாட்டுக்கு யாத்திரை செல்வது?” என்று திருக்குடந்தை தேசிகன் கேள்வி கேட்டு வருந்தினாரல்லவா? அவர் வாயாலேயே அதற்கான விடை வந்துவிட்டது. “இதயத்திலிருக்கும் இறைவனை அனுபவிப்பவர்கள் தனியாக இறைவனைத் தேடி யாத்திரை செல்ல வேண்டியதில்லை!” என்று திருக்குடந்தை தேசிகன் தம் வாயாலேயே கூறிவிட்டார்.

எனவே வருத்தம் நீங்கிக் கும்பகோணத்துக்குத் திரும்பிய அவர், அங்கே எழுந்தருளியிருக்கும் ஆராவமுதப் பெருமாளுக்குத் தொண்டு செய்தபடித் தம் வாழ்நாளைக் கழித்தார்.
இவ்வாறு அனைவரின் இதயத்தினுள்ளும் வீற்றிருந்து அனைவரின் மீதும் ஆளுமை செலுத்துவதால், திருமால் ‘யம:’ என்றழைக்கப்படுகிறார். ‘யம:’ என்றால் உள்ளிருந்து இயக்குபவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 164-வது திருநாமம். “யமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இதயத்தில் எப்போதும் திருமால் குடிகொண்டிருப்பார்.

165. வேத்யாய நமஹ: (Vedhyaaya namaha)

அசுர அரசனான நிகும்பனின் மனைவி மகிஷ்மதி. அவள் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தாள். அவளுக்குப் பிரம்மா காட்சியளித்த போது, “எனக்கு இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும். அவர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டு மடிந்தால் தான் அவர்களுக்கு மரணம் ஏற்பட வேண்டுமே ஒழிய வேறு யாராலும் அவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடாது!” என்று வரம் கேட்டாள். பிரம்மாவும் அவ்வரத்தை அளித்தார்.

சிலநாட்களில் அவளுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவரும் தேவ லோகத்துக்குச் சென்று தேவர்களை எதிர்த்துப் போரிட்டு வீழ்த்தினார்கள். பிரம்மா தந்த வரத்துக்கேற்ப தேவர்கள் யாராலும் அவர்களைக் கொல்ல முடியவில்லை. அவர்களைக் கொல்ல என்ன வழி எனச் சிந்தித்த பிரம்மா, விஸ்வகர்மாவை அழைத்து ஒரு அழகான தேவமாதைச் சிற்பமாக வடிக்கச் சொன்னார். அந்தச் சிலைக்கு உயிர் கொடுத்த பிரம்மா, அவளுக்குத் ‘திலோத்தமை’ என்று பெயரிட்டார்.

மகிஷ்மதியின் இரு அசுர மகன்களின் இருப்பிடத்துக்குச் சென்றாள் திலோத்தமை. இருவரும் அவளது அழகில் மயங்கி அவளை மணம்புரிய விரும்பினார்கள். விளைவு? போட்டி போராட்டமாக மாறியது! சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டு போனார்கள். திலோத்தமைக்கு நன்றி கூறிய பிரம்மா, “நீ இனி தேவலோகத்தில் நடனமாடும் தேவமாதாக இருப்பாய்!” என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அவளோ, “எனக்கு அதிலெல்லாம் ஆசையில்லை. திருமாலின் தரிசனம் எனக்குக் கிட்டவேண்டும்! அதற்கு வழிகாட்டுங்கள்!” என்று கூறினாள்.

“பூமியில் வரமங்கை என்னும் திருத்தலத்தில் நாரதர் தவம் புரிந்து வருகிறார். அவரைச் சந்தித்தால், திருமாலின் தரிசனத்தைப் பெற அவர் வழிகாட்டுவார்!” என்றார் பிரம்மா. வரமங்கைக்கு வந்து நாரதரைச் சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்த திலோத்தமை அவரோடு இணைந்து தானும் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தாள். இவ்வாறு திலோத்தமை தவம் புரிவதைக் கேள்வியுற்ற தேவமாதான ஊர்வசி, தானும் வரமங்கைக்கு வந்து தவம் புரிந்தாள்.

அவர்களுக்குத் திருமால், ஆதிசேஷன் மேல் தேவி, பூதேவி, நீளாதேவியோடு வைகுண்டத்தில் அமர்ந்திருப்பது போன்ற அதே திருக்கோலத்தில் காட்சியளித்தார். வானமாகிய வைகுண்டத்தில் உள்ள மலைபோன்ற தோற்றத்துடன் வந்தமையால் வானமாமலை என்று அப்பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. அதை ஒட்டி அவ்வூரும் ‘வானமாமலை’ என்று அழைக்கப் படுகிறது. நான்கு ஏரிகளால் சூழப்பட்டுள்ளதால் ‘நாங்குநேரி’ என்றும் வழங்கப்படுகிறது.

திலோத்தமை மற்றும் ஊர்வசியைப் பார்த்து, “சூரியனும் சந்திரனும் உள்ள வரை, நான் இவ்விடத்தில் இருந்து உங்களுக்குக் காட்சியளிப்பேன்!” என்றார் திருமால். அதற்குச் சாட்சியாக சூரியன், சந்திரன் இருவரையும் தன் கருவறையில் தனது இருபுறங்களிலும் குடிகொள்ளச் சொன்னார். இன்றும் நாம் வானமாமலைக்குச் சென்று திருமாலைத் தரிசித்தோமானால், பெருமாளின் இருபுறங்களிலும் திலோத்தமையும் ஊர்வசியும் இருந்துகொண்டு பெருமாளுக்குச் சாமரம் வீசுவதைக் காணலாம். அவ்வாறே சூரியனும் சந்திரனும் பெருமாளின் இருபுறங்களிலும் இருப்பார்கள். ஆனால், நம் கண்களால் அவர்களைக் காண்பது மிகவும் கடினம்.

அடியேனுக்கு மிக நெருங்கிய நண்பரான மதுபயவே. வானமாமலை கிருஷ்ணன் ஸ்வாமியிடம், “உங்கள் திவ்ய தேசத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிசேஷன், திலோத்தமை, ஊர்வசி அனைவரையும் நன்கு காண முடிகிறது. ஆனால் அர்ச்சகர் தீபாராதனை காட்டும் போது கூட சூரிய-சந்திரர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையே!” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அடியார்களுக்குத் தன் வடிவழகைக் காட்ட வேண்டும் என்ற பேரானந்தத்தில் மிகுந்த ஒளிபொருந்திய திருமேனியுடன் இவ்வூருக்குப் பெருமாள் வந்தார். அவருடைய ஒளியில் சூரிய சந்திரர்கள் ஒளிமங்கிப் போய்விட்டார்கள்.

 சூரிய ஒளிக்கு முன் சாதாரண விளக்குகளின் ஒளிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா? அதுபோல் தான் இங்கே பெருமாள் முன் சூரிய சந்திரர்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை!” என்றார். இவ்வாறு மிகவும் ஒளிபொருந்திய திருமேனியோடு வந்து தன் மேன்மைகளையும் அழகையும் தன் அடியார்களுக்கு வெளிப்படுத்துவதால், திருமால் ‘வேத்ய:’ என்றழைக்கப்படுகிறார். ‘வேத்ய:’ என்றால் வெளிப்படுத்துபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 165-வது திருநாமம். “வேத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது பெருமைகளை நன்கு உணர்த்துவார்.

166. வைத்யாய நமஹ: (Vaidhyaaya namaha)

தட்சனின் யாகத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்ற சதிதேவி, அங்கே பலவிதமான அவமரியாதைகளை எதிர்கொண்டாள். குறிப்பாகத் தன் கணவரான பரமசிவனைத் தன் தந்தை தட்சன் அவமானப் படுத்தியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அங்கேயே அக்னிப் பிரவேசம் செய்தாள். இச்செய்தியைக் கேள்வியுற்ற பரமசிவன், கடும் கோபம் கொண்டார். வீரபத்திரன் என்ற தளபதியின் தலைமையில் பெரும் சேனை ஒன்றை அனுப்பினார். அந்தச் சேனை தட்சனின் யாகசாலையையே அழித்துத் தரைமட்டமாக்கியது. தட்சன் மற்றும் அவனைச் சார்ந்தோர் பலரின் தலைகளை வீரபத்திரன் கொய்தான். அங்கிருந்த தேவர்களையும் துன்புறுத்தினான் வீரபத்திரன்.

தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது பெரும் பாபச்செயல் அல்லவா? அந்தப் பாபத்தின் பயனாக, வீரபத்திரன் மனநோய்க்கு ஆளாகித் தன் மன நிம்மதியை முழுவதுமாக இழந்து தவித்தான். தன் மனநோய் தீர என்ன வழி என்று பரமசிவனிடம் சென்று கேட்டான். பரமசிவன், “நான் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்த போது, எனக்கும் இது போன்ற மனநிலை ஏற்பட்டது. அப்போது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூரில் உள்ள ‘ஹ்ருத்தாபநாசினீ’ (மன நோய்களைப் போக்கும் பொய்கை) என்னும் புனித நீரில் நீராடி, அந்தப் பொய்கைக் கரையில் எழுந்தருளியிருக்கும் ‘வைத்திய வீர ராகவப் பெருமாளைத்’ தரிசித்தேன். அந்தப் பெருமாள் அருளால் மீண்டும் மன நிம்மதி பெற்றேன். நீயும் அவ்வாறே செய்தால் உனது மன நோயும் நீங்கும்!” என்றார்.

(இன்றும் திருவள்ளூரில் ஹ்ருத்தாபநாசினீ தீர்த்தக்கரையில் தீர்த்தேஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார்.) சிவனது அறிவுரைப்படித் திருவள்ளூருக்கு வந்த வீரபத்திரன், தீர்த்தேஸ்வரரை வணங்கி, ஹ்ருத்தாபநாசினீ தீர்த்தத்தில் நீராடி, அதன்பின் வைத்திய வீர ராகவப் பெருமாளை வணங்கினான். வைத்திய வீர ராகவனின் அருளால் அவனது மனநோய் நீங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘வடலூர் வள்ளலார்’ எனப்படும் ராமலிங்க அடிகளாருக்கு ஒருமுறை கடும் வயிற்று வலி ஏற்பட்டதாம். அவரும் திருவள்ளூருக்கு வந்து, ஹ்ருத்தாபநாசினீ பொய்கையில் நீராடி, தீர்த்தேஸ்வரரை வணங்கினார். அதன்பின் கனகவல்லித் தாயாரையும், ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும் வைத்திய வீர ராகவப் பெருமாளையும் வணங்கினார்.

தனது வயிற்றுவலியைப் போக்கி அருளும்படி வைத்திய வீர ராகவனிடம் பிரார்த்தித்து ஐந்து பாடல்கள் இயற்றினார் வள்ளலார். அந்த ஐந்து பாடல்களும் ‘வீர ராகவப் போற்றிப் பஞ்சகம்’ என்ற பெயரில் திருவருட்பாவில் இடம்பெற்றுள்ளன. அதன் ஐந்தாம் பாடலில்,

“அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா! போற்றி!
பொற்புறு திகிரி சங்கு பொருந்து கைப் புனிதா! போற்றி!
வற்புறு பிணிதீர்த்து என்னை மகிழ்வித்த வரதா! போற்றி!
வெற்புயர் எவ்வுளூர் வாழ் வீர ராகவனே! போற்றி!”

என்று தமது பிணியைப் போக்கியருளிய வைத்திய வீர ராகவனுக்கு நன்றி தெரிவிக்கிறார். வீர ராகவப் பெருமாள் அருளால் வயிற்று வலி நீங்கப் பெற்ற வள்ளலார், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் வயிற்றுப்பிணியாகிய பசிப்பிணியைப் போக்க எண்ணினார். வாடிய பயிர்களை மட்டுமின்றி, வாடிய வயிறுகளைக் கண்ட போதும் அவர் வாடினார். அதனால் வடலூரில் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதற்கு வழிவகை செய்தார். அவர் ஏற்றிய அருட்பெருஞ்சோதி நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அடியார்களின் உடல்நோய், மனநோய் அனைத்தையும் திருமால் போக்குகிறார். அது மட்டுமின்றி, பிறவிப்பிணியைப் போக்கும் மருத்துவராகவும் திருமால் திகழ்கிறார்.
“எருத்துக்கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா மறுபிறவி தவிரத்திருத்தி உன் கோவில் கடைபுகப் பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்!” என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

அலோபதி, நாச்சுரோபதி, ஹோமியோபதி இவை எதனாலும் குணப்படுத்த முடியாத பிறவிப்பிணியை வேங்கடாசலபதியால் மட்டுமே குணப்படுத்த முடியும். அதனால் அவர் ‘வைத்ய:’ (வைத்தியர்=மருத்துவர்) என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 166-வது திருநாமம். “வைத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் அனைத்து நோய்களையும் திருமால் போக்கி அருள்வார்.

167. ஸதாயோகினே நமஹ: (Sadhaayogine namaha)

“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்!” என்றாள் ஆண்டாள். பரம புருஷனாகிய கண்ணனை மணந்து கொள்வதே தனது லட்சியம் எனக்கருதி அவள் வாழ்ந்தாள். கண்ணனைத் தன்னிடம் வரவழைப்பதற்காகப் பல முயற்சிகளையும் மேற்கொண்டாள். கோபிகைகள் ஆயர்பாடியில் அனுஷ்டித்த காத்யாயினி விரதத்தைத் தானும் அனுஷ்டிக்க விரும்பினாள். ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆய்ப்பாடியாகப் பாவித்து, தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து, தனது தோழிகளை எல்லாம் ஆய்ச்சிகளாகப் பாவித்து, வடபத்ரசாயியின் கோயிலையே நந்தகோபன் திருமாளிகையாகப் பாவித்து, வடபத்ரசாயியைக் கண்ணனாகப் பாவித்து மார்கழி நோன்பு நோற்றாள். ஆனால் நோன்பு நோற்று முடித்தபின்னும் கண்ணன் வரவில்லை.

அடுத்தபடியாக, தைமாதம் ‘விஷ்ணு காமதேவ விரதம்’ எனப்படும் வழிபாட்டைச் செய்தாள். கண்ணனையே மன்மதனாகப் பாவித்து அவனைக் குறித்து நோன்பு இருந்தாள். அதற்கும் கண்ணன் மனமிரங்கவில்லை. அடுத்து, கூடல் இழைத்தாள் ஆண்டாள். ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு, கண்ணை மூடியபடி அதற்குள் சிறிய வட்டங்களைப் போட்டுக்கொண்டே வர வேண்டும். சிறிய வட்டங்களின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும். ஒற்றைப் படையில் வந்தால் நினைத்த காரியம் நடக்காது என்பார்கள். கூடல் இழைத்த போது அவளுக்கு இரட்டைப் படை எண் கிடைத்தது. ஆனாலும் கண்ணன் வரவில்லை.

அடுத்து, மேகங்களைக் கண்ணனிடம் தூது அனுப்பினாள். தனது நிலையை அவனிடம் எடுத்துச் சொல்லும்படி அவைகளிடம் சொன்னாள். மேகங்கள் தூது மொழிந்தும் கண்ணன் வரவில்லை. குயில் கூவினால் மனத்துக்குப் பிடித்தவர் வீட்டுக்கு வருவார் என்றோர் ஐதீகம் இருப்பதாக அவளது தோழிகள் கூறினார்கள். அதனால் “உலகளந்தான் வரக் கூவாய்!” என்று குயிலைக் கூவச் சொன்னாள். அப்போதும் கண்ணன் வரவில்லை.

இனி என்ன செய்வது என்று தெரியாமல், விரக வேதனையில் துடித்தாள் ஆண்டாள். அதைக் கண்ட அவளது தந்தை பெரியாழ்வார் வில்லிபுத்தூரில் சயனித்திருக்கும் ‘வடபத்ரசாயீ’ எனப்படும் வடபெருங்கோவிலுடையானிடம் சென்று, “எம்பெருமானே! என் மகளை இப்படித் தவிக்க விட்டுவிட்டு நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! இது நியாயமா? நீ இன்னும் உறங்கலாமா? எழுந்து வந்து அவளை மணக்க வேண்டாமா?” என்று அழுது புலம்பிவிட்டு வீடு திரும்பினார்.

அன்று பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய வடபெருங்கோவிலுடையான், “நான் உறங்குகிறேன் என்று சொல்லி விட்டீர்களே! நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். கடோபநிஷத் என்ன சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அடுத்த நாள் காலை பெரியாழ்வார் துயிலெழுந்த போது, கனவில் பெருமாள் சொன்ன வார்த்தைகள் அவர் மனதில் நன்கு பதிந்திருந்தன.

“ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண:|”

என்ற கடோபநிஷத் வாக்கியம் அவரது நினைவுக்கு வந்தது. “இறைவன் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்குக் கனவு உள்ளிட்ட அனுபவங்களை எப்போதும் விழித்திருக்கும் அந்த இறைவன் தருகிறான்!” என்பது இதன் பொருள். பெரியாழ்வாரிடம் ஓடி வந்த ஆண்டாள், “நேற்று இரவு நான் கனவு கண்டேன். அதில் கண்ணன் வந்து என்னை மணந்து கொண்டான்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்ப்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”
என்று தொடங்கிப் பத்துப் பாடல்களால்
அக்கனவை ஆண்டாள் வர்ணித்துள்ளாள்.

வடபெருங்கோவிலுடையானிடம் ஓடிச்சென்ற பெரியாழ்வார், “நீ ஏன் இன்னும் உறங்குகிறாய் என்று கேட்டேன். ஆனால் நீ எப்போதும் விழித்துக் கொண்டிருந்து தூங்கிக் கொண்டிருக்கும் எங்களை எல்லாம் காக்கிறாய் என இப்போது உணர்ந்தேன்!” என்றார். பின்னர் ஆண்டாளை ரங்கமன்னார் மணந்த வரலாறு வாசகர்கள் அறிந்த ஒன்றே.இவ்வாறு எப்போதும் விழித்திருந்து, உலக வாழ்வாகிய இருளில் உறங்கும் நமக்கு வைத்தியம் செய்வதால் திருமால் ‘ஸதா யோகீ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 167-வது திருநாமம். “ஸதாயோகினே நமஹ” என்று தினமும் சொல்லி வருவோரை அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து எழுப்பி, நல்லறிவைத் திருமால் அருளுவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை உ.வே வெங்கடேஷ்

Tags:

namam Anandan

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

 • moon27

  பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்