SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்!

2019-08-06@ 15:54:25

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 27

‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்ற பழமொழியை நாம் அனைவருமே அறிந்திருப்போம். கால்களை உதைத்து, ‘ஓ’ வென்று கதறிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் குழந்தைகள் போல் ஆண்டவனிடமும் நாம் மனதாற உருகிக் குழைந்து பன்முறை வேண்டினால் வரத்தை வழங்கி விடுவார் கடவுள் என்கின்றனர், அனுபவம் மிகுந்த ஆன்மிக சீலர்கள்.

ஆலயத்தின் மூலஸ்தான மூர்த்தியை வெறும் விக்கிரகம் என்று நினைத்தால் நம் பிராத்தனைகள் எப்படி பலிக்கும்? சிலைதானே என எண்ணினால் நம் சிந்தை எவ்வாறு உருடும்?. கல்விக் கிரகம், பஞ்சலோக சிலை, சுதைச் சிற்பம் , படம் என்று தெய்வ உருவங்களைப் பார்க்காமல் ‘சாட்சாத் தெய்வம்’ என்று பூரணமாக இறையருளில் பொருந்துபவர்களுக்கே மன்றாடி வரம் கேட்கும் மனப்பக்குவம் வரும்.

ஒன்றியிருந்து நினைமின்கள்!
வந்தமக்கு ஊனமில்லை!
என்று பாடுகிறது தேவாரம்.
 நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

- என்கின்றார் திருவருட்பிரகாசவள்ளற் பெருமான்!

அயோத்தியில் தசரத குமாரனாக திருமால் பிறந்தார். மனித வடிவில் அவர் பிறந்ததை ராம அவதாரம் என்கிறோம்.  அவ்வாறே வசுதேவர் - தேவகிக்கு அவர் பிறந்ததை கிருஷ்ண அவதாரம் என்கிறோம். திருமால் சிலை வடிவாக ஆலயங்களில் எழுந்தருளி இருப்பதை வைணவத்தில் அர்ச்சாவதாரம் என்றே அழைக்கின்றனர்.

அப்படி என்றால் என்ன பொருள்? ராமராக, கிருஷ்ணராக ஜீவனோடு திருமால் விளங்கியதைப் போலவே மூலஸ்தான மூர்த்தியும் உயிர்ப்போடு விளங்குகிறார் என்று தானே பொருள். நம் அர்ச்சனைகளை ஏற்பதெற்கென்றே அவதாரம் செய்துள்ளார் அவர்.    ‘‘அர்ச்சாவதாரம்’ என்று அழைப்பதின் அர்த்தத்தை மேற்கண்டவண்ணம் காஞ்சி மகாசுவாமிகள் விளக்குகின்றார். எனவே நாம் வணங்கும் ஜீவனுள்ள தெய்வ மூர்த்தத்தை பரிபூரண பக்தியுடன் வணங்கித் துதித்தால் நம் பிராத்தனைகள் பலிக்கும்.

தெய்வம் என்றால் அது தெய்வம்!- வெறும்
சிலை என்றால் அது சிலை தான்!
உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை’
‘கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலும் தெய்வம் வரும்.

 - என்று பாடுகின்றாரே கவியரசர் கண்ணதாசன். ஆறே நாளில் மிகப்பெரிய பேறான - யாரும் அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாத- முக்திப் பேற்றைப் பெற்றவர் வேடர் குல கண்ணப்பர் என்று விவரிக்கிறது பெரிய புராணம். திருக்காளத்தி மலையில் சிவலிங்கத்தைக் காணப் பெற்ற கண்ணப்பர் பரமேஸ்வரராகவே அத்திருவுருவை பாவித்தார். இறைவனுக்கு அமுதூட்ட வேண்டும். அவ்வுணவைக் கொண்டுவர மலை அடிவாரம் செல்ல வேண்டும்! அதுவரை தனியாக இறைவர் எப்படி இருப்பார்? போகலாமா , வேண்டாமா என்று தவித்தார் கண்ணப்பர். கண்ணப்பரின் அன்புச் செயல்களை சேக்கிழார் பெரிய புராணத்தில் அற்புதமாக விவரிக்கின்றார்.

மாக மார் திருக் காளத்தி
மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரைக் கண்டார்
எழுந்த பேருவதை அன்பின்
வேக மானது மேற் செல்ல
மிக்கதோர் விரைவினோடும்
மோகமாய் தேடிச் சென்றார்
தழுவினார், மோந்து நின்றார்
போதுவர் ; மீண்டு செல்வர்,
புல்லுவர், மீளப் போவர்,
காதலின் நோக்கி நிற்பர்;
கன்றகல் புனிற்றாய் போல்வர்
நாதனே அமுது செய்ய
நல்ல மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
கொண் டிங்கு வருவேன் என்பார்!

கண்ணப்பன் போன்ற அன்பை என்னால் காட்ட முடியவில்லையே என்று கண்ணீர் விடுகிறார் மாணிக்கவாசகர்.

‘கண்ணப்பன் ஏப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் ஏப்பில் என்னையும் ஆட்கொண்டு அருளி’ என்பது திருவாசக வரிகள்.

பணம் என்பது உண்மையில் என்ன ?
காகிதம் தானே!

ஆனால், நாம் அனைவரும் காகிதத்தை பணமாக மதிக்கக் கற்றுக் கொண்டுவிட்டோம்!

‘தாயின் மணிக் கொடி புகழ்ந்திடவாரீர், என்று அனைவரையும் அழைக்கின்றோம்.
காகிதம் பணமாகின்ற பொழுது, மூல விக்கிரகம் மட்டும் ஏன் கல்லாகவே நம் கண்ணில் படுகிறது?
‘இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
மதுவளர் பூம்பொழில் உத்தர கோச
மங்கை உள்ளாய்’
- என்று அற்புதமாகப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். வாசகரின் ‘இவன் அவன்’ என்னும் பதப்பிரயோகத்தின் அர்த்த புஷ்டியை ஆழ்ந்து சிந்தியுங்கள். மாணிக்கவாசகரின் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆழ்ந்த பேரன்பும், மூலஸ்தான மூர்த்தியைப் பற்றிய மனத்தெளிவும் நமக்கும் வந்து விட்டால் நாம் கர்ப்பகிரக இறைவனை உறுதியாக ஏற்றிக் கொள்வோம்.

தேவாரம், திருவாசகம் , திருப்புகழ், திவ்யப் பிரபந்தம் எல்லாம் அடியார்களால் எங்கே, எப்படி அருள் பெற்றன என்று சிந்தித்தால் நாம் தெளிவடைவோம். அருளாளர்கள் அனைவருக்கும் அருவியான பாடல் அருளியதே கருவறைத் தெய்வங்கள்தானே! தெய்வங்கள் எழுந்தருளிய தலங்கள் தோறும் சென்று அந்தந்த மூலஸ்தானங்களில் நின்று தரிசனம் கண்ட போது அவர்கள் நாவில் சுரந்தவை தானே பாடல்கள், பதிகங்கள் பாசுரங்கள்! பக்தி உலகில் பொலியும் மிகச்சிறந்த அருளாளர் சூர்தாசர். இந்தக் கவிஞானியாகிய சூர்தாசர் இருகண்களிலும் பார்வை இழந்தவர். ஆனால் அகக்கண் மூலம் ஆண்டவனை தேஜோமயமாக தரிசித்தவர்.

ஒருமுறை பத்ரிநாதரை சேவை செய்ய ஆலயம் சென்றார் சூர்தாசர். வியப்பு மேலிட அவரைப் பார்த்த பக்தர் ஒருவர் கேட்டார். சுவாமியை உங்களால் எப்படி பார்க்க முடியும் ? எதற்காக பத்ரிநாதர் சந்நதி நோக்கி வருகின்றீர்கள் ? பக்த சூர்தாஸ் அதற்கு இப்படி பதில் அளித்தார்.

‘அன்பரே! அந்தகனாகிய என்னால் ஆண்டவரைப் பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் பகவான் பத்ரிநாதர் என்னைப் பார்ப்பாரே!
   சூர்தாசரின் பதில் எவ்வளவு
சூட்சுமம் ஆனது பார்த்தீர்களா ?
‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே!
 - என்கிறது சிவஞான போதச் செய்யுள்.

வரம் தர இறைவன் வரவேண்டு மென்றால் முறுகிய பக்தியும், உருகிய உணர்வும், உள்ளார்ந்த நம்பிக்கையும் அவசியம் தேவை அதனால் தான் பாரதியார் பாடுகின்றார்.
 நம்பினோர் கெடுவதில்லை!
 நான்கு மறைத் தீர்ப்பு !
 அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம் !

காவியக் கவிஞர் கூறுகின்றார். ‘கல்’ என்று கடவுளைச் சொல்கிறார்கள் சில பேர். ஆனால் அந்தக் கல் எனும் சொல் பெயர்ச் சொல் அல்ல! வினைச் சொல்! ஆம்! கடவுளைக் கற்க, கற்க பார்வை விசாலமாகும். புவி எல்லாம் பரம் பொருளின் விலாசமாகும்.
(இனிக்கும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags:

life death

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்