SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முயற்சிப்போனிடம் திருமகள் தங்குவாள்

2019-08-06@ 15:48:23

* குறளின் குரல் 107

சுய முன்னேற்றச் சிந்தனைகள் தொடர்ந்து எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வரும் காலம் இது. விடாமுயற்சி இருக்குமானால் ஒருவர் எந்த எல்லைவரை வேண்டுமானாலும் வாழ்வில் உயரலாம் என்ற கருத்தையும், ஒருவரின் முன்னேற்றத்தைத் தீர்மானிப்பது அவரது விடாமுயற்சி என்ற பண்புதான் என்பதையும் இன்று சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் பலர் உலகெங்கும் வலியுறுத்துகிறார்கள்.

சுயமுன்னேற்ற இலக்கியம் என்பது தமிழில் ஒரு தனி வகையாகவே வளர்ந்திருக்கிறது. புத்தகக் காட்சிகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் கூடுதலாக விற்பனையாவதாகத் தகவல்கள் சொல்கின்றன.  இளைஞர்கள் சுயமுன்னேற்ற நூல்களை விரும்பி வாசிக்கிறார்கள். பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் பெரிய அளவில் ஆளுமையை வளர்க்க உதவுவதில்லை. ஆனால் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பதென்பது தங்களின் ஆளுமை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள்.

  இந்த சுயமுன்னேற்ற இலக்கியத் துறைக்குத் தமிழில் வித்திட்டவர் வள்ளுவர் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. எண்ணற்ற சுய முன்னேற்றச் சிந்தனைகளின் அரிய தொகுப்பாக அமைந்த நூல் நம் பழந்தமிழ்ப் பொக்கிஷமான திருக்குறள்.   முயற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் ஒரு லட்சியத்தை அடையத் தொடர் முயற்சி எவ்வளவு கட்டாயமாகத் தேவை என்பதையும் விளக்க ஒரு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இடைவிடாத தொடர் முயற்சியை `ஆள்வினையுடைமை’ என்கிறார் அவர். (அதிகாரம் 62.)

‘‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.’’ (குறள் எண் 611)

 ஒரு செயலை முடிப்பது ‘மிகவும் கடினம், நம்மால் இயலாது’ என்று நினைத்துத் தளர்ந்து விடக்கூடாது. தளராது செயலாற்றுவதற்குத் தேவையான வலிமையை முயற்சியே தரும். எனவே தொடர்ந்து முயல வேண்டும்.

‘‘வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.’’ (குறள் எண் 612)

ஒரு செயலைச் செய்யும்போது, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் எனக்கருதி, செய்யாமல் விட்டுவிடக்கூடாது. அவ்வாறு செயலை இடையிலேயே தொடராது விட்டுவிடுபவரை இந்த உலகமும் கைவிட்டுவிடும்.

‘‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.’’ (குறள் எண் 613)

முயற்சி எனப்படும் உயர்ந்த பண்பில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மையும் நிலை பெற்றிருக்கிறது.

‘‘தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.’’ (குறள் எண் 614)

முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவுவேன் என்று சொல்வது படையைக் கண்டு நடுங்கும் பேடி தன் கைவாளைச் சுழற்றுவதுபோல் ஒரு பயனும் தராது.

‘`இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.’’

தன் இன்பத்தை விரும்பாதவனாய் தான் மேற்கொண்ட செயலை முடிக்கவே விரும்புகிறவன், தன்னுடைய சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

‘‘முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.’’ (குறள் எண் 616)

முயற்சி அதிகரித்தால் பலவகைப் பட்ட செல்வங்கள் தானே வந்துசேரும். முயற்சி இல்லாது போனால் வறுமையில் வாட நேரிடும்.  

‘‘மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.’’ (குறள் எண் 617)

சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவாள். சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பார்கள்.

‘‘பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.’’ (குறள் எண் 618)

உடல் உறுப்பு செயலற்று இருப்பது ஒரு குறை ஆகாது. ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறையாகும்.

‘‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.’’ (குறள் எண் 619)

விதி நமக்கு உதவ முடியாமல் போனாலும் நாம் செய்யும் முயற்சி அதற்கேற்ற பலனைக் கட்டாயம் தரும்.

‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.’’ (குறள் எண் 620)

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டும் படிச் செய்வர்.    இந்தப் பத்துக் குறள்களையும் மனப்பாடம் செய்து இவற்றின் கருத்துக்களை அடிக்கடி மனத்தில் நினைத்துப் பார்த்து அந்தக் கருத்துக்களை வாழ்வில் பின்பற்றும் இளைஞர்கள் தங்கள் லட்சியத்தை அடைவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வள்ளுவர் சொல் வானும் கடலும் உள்ளவரை பொய்ப்பதில்லை.....

ஜேம்ஸ்ஆலன் என்ற உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளரால் கவரப்பட்ட தமிழ்ப் பெருமக்கள் இருவர். ஒருவர் சுதந்திர காலத்தில் வாழ்ந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை. இன்னொருவர் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அண்மைக் காலத்தில் வாழ்ந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. இவர்கள் இருவரையும் `ஆட்கொண்ட` சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் என்று சொல்வதே சரி.

  இயற்கைச் சட்டங்கள் மாறாதவை. அவற்றிற்கு உட்பட்டே மனிதர்கள் வாழ்ந்தாக வேண்டும். சேது அணை கட்டுவதற்கு முன் சமுத்திர ராஜனிடம் தனக்கு வழிவிடச் சொன்னான் ராமபிரான். ‘நீ கடவுளேயானாலும் உனக்காக நான் இயற்கைச் சட்டத்தை எப்படி மீற முடியும்? உனக்கு மட்டும் நான் எப்படி வழிவிட முடியும்? மாற்ற முடியாத இயற்கைச் சட்டத்தைப் படைத்ததே நீயல்லவா?` என்று சமுத்திர ராஜன் கேட்டதும் ராமன் தெளிவுபெற்றான். இயற்கை விதிகள் அவ்வளவு வலுவானவை.

  இந்த இயற்கை விதிகளைப் போலவே மாற்ற முடியாத பல வாழ்வியல் விதிகளும் உள்ளன என்பதைக் கண்டறிந்து சொன்னவர் ஜேம்ஸ் ஆலன். இன்றைய சமுதாயத்திற்கு ஜேம்ஸ் ஆலன் செய்த அற்புதமான பங்களிப்பு அது.   `சிறிய வியாதியோ பெரிய வியாதியோ எந்த வியாதியாக இருந்தாலும் அதைக் குணப்படுத்தும் ஒரே மருந்து, பிரதான மருந்து, இறையருளால் அந்த வியாதி நமக்கு இல்லை என்று ஆழ்மனத்தில் நாம் நம்புவதுதான்’ என்ற அரிய கருத்தும் கூட அந்த நூல்களில் சொல்லப்படுகிறது.

வெளிதேசத்தில் வாழ்ந்த ஜேம்ஸ் ஆலன் வள்ளுவத்தைப் பயிலாமலே வள்ளுவம் காட்டிய நெறிப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதை வ.உ.சி.யின் நூல்களைப் படிக்கும்போது நாம் புரிந்துகொள்கிறோம். ஆன்மாவைப் பற்றி மட்டுமே ஆன்மிகவாதிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் `உடலைப் பற்றியும் கவலைப்படு, உடம்பில் தானே ஆன்மா குடியிருக்கிறது’ எனச் சொன்னவர் திருமந்திரம் எழுதிய திருமூலர்.

`உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!’
 என்கிறது திருமந்திரம். உடலையும்
கவனத்தோடு பேணச் சொல்கிறது.

  அண்மைக்காலத்தில் வாழ்ந்த துறவியருள், மனத்தின் சக்தியைப் பற்றி எடுத்துக் கூறி இளைஞர்களுக்கு எழுச்சியூட்டிய துறவி சுவாமி விவேகானந்தர். `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!’ என்ற அவரது முழக்கமே மனம் தொடர்பானதுதான். சோம்பிக் கிடக்கும் மனத்தால் எதையும் சாதிக்க முடியாது. வீரத்தோடு பொங்கியெழும் மனமுடையவர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது என்று எதுவும் கிடையாது.

  ‘இன்றைய தோல்விக்காக நீ வருத்தப்படாதே. இந்த நிலைமை கடந்த காலத்தில் நீ செய்த தவறுகளால் ஏற்பட்டது. இப்படிச் சொல்லும்போது அதிலேயே பொதிந்திருக்கும் இன்னொரு விதியை நீ உணர்ந்துகொள். கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இன்று நீ இந்த நிலையை அடைந்திருப்பது மெய்யானால், இப்போது நீ செய்யும் சரியான செயல்களால் எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை நீ அடைய முடியும் என்ற விதியும் அதில் பொதிந்துள்ளதே? அதைக்கவனி. எழு. விழி. செயல்படு!’ என்கிறார் விவேகானந்தர். ‘ஆள்வினையுடைமை’ அதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்தும் தொடர் முயற்சியின் அவசியத்தை சுவாமி விவேகானந்தரும் வலியுறுத்துகிறார்.

 சுவாமி சிவானந்தர் ‘வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல் முழுவதும் கொட்டிக் கிடப்பது இளைஞர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சுயமுன்னேற்றச் சிந்தனைகளே. வள்ளுவம் சொல்லும் தொடர்முயற்சியின் அவசியத்தைச் சிவானந்தரும் வலியுறுத்துகிறார்.   இடைவிடாமல் தொடர் முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களின் தலையில் சூட்டுவதற்காக இயற்கை மணி மகுடத்தோடு காத்துக் கொண்டிருக்கிறது. வள்ளுவர் சொன்ன கருத்துக்களைப் பின்பற்றுபவர்களே அந்த மகுடத்தைச் சூட்டிக் கொள்ளப் போகும் பாக்கியசாலிகள்.

(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்