SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான வாழ்வளிப்பாள் மகாலட்சுமி

2019-08-06@ 15:17:13

பொள்ளாச்சி மெயின்ரோடு, கோவை

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒரே கருவறையில் கொலுவிருந்து  அருட்பாலிக்கும் கோயில் கோவையில் இருக்கிறது. கோயிலினுள் மூன்று மண்டபங்கள் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலில் இருப்பது வேத மண்டபம். இது ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. அடுத்து நவகிரக மண்டபம். இங்கே சூரியனை மையமாக வைத்து பிற எட்டு கிரகங்களும் சுற்றி அமைந்திருக்கின்றன. இந்த மண்டபத்தில் அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய கருட கம்பம் ஒன்றும் உள்ளது.

தினசரி காலை 7:30 முதல் 8 மணிக்குள் சூரிய ஒளி  கொடி  கம்பத்தின் அருகே உள்ள இடைவெளி வழியே தரையில் விழுந்து, சந்நதியின் நடுவில் இருக்கும் அலைமகளான லட்சுமியின் முகத்தில் பிரதிபலிக்கும் காட்சி அற்புதமானது. அதேபோல தினமும் பகல் 12 மணி அளவில் இந்த மூன்று தேவியரையும் சூரியன் தன் ஒளியால் பூஜை செய்கிறான். பொதுவாக சிவாலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் அருட்பாலிப்பது வழக்கம். பெண் தெய்வங்கள் கிழக்கு நோக்கி காட்சி தருவது அபூர்வமான அமைப்பு. அதை  இத்தலத்தில் காணலாம். கருவறையில் எங்கு நாம் நின்றிருந்தாலும் தேவியர் மூவரும் நம்மையே பார்ப்பது போன்று சிற்ப வேலைப்பாடு அமைந்திருக்கிறது.

மகாலட்சுமிக்கு முன்பாக மகாமேரு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த மகாமேரு இந்தியாவிலேயே மிகப்பெரியது என்கிறார்கள். பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். அனந்த பத்மநாப சுவாமி, பிரம்மா மற்றும் ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். அவரது தலைப்பகுதியில் சக்கரமும், கால்பகுதியில் சங்கும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் தென் திசை நோக்கியபடி தனிக் கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் கோபுரம் வட இந்திய பாணியில் அமைந்துள்ளது. கருவறை மும்பாய் மகாலட்சுமி கோயில் அமைப்பைப் போலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  

இந்த குங்குமம் மகாலட்சுமிக்கு முன்பாக உள்ள மகாமேருவிற்கு அர்ச்சனை செய்யப்பட்டது என்பதால் தனிச் சிறப்பு வாய்ந்தது. இங்கு எந்த தனிப்பட்ட நபர் பெயரிலும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை. அம்மனுக்கு மட்டும்தான்! அனைத்து  உயிர்களும்  நலமாக  இருக்க  வேண்டி பொது  சங்கல்பம்  செய்து  அர்ச்சனை  செய்கின்றனர். சித்திரை  மாதம்  முதல்  நாள் கருவறைக்குள் தண்ணீர் நிரப்பி, தாமரை மலர்களை அதில் மிதக்கவிட்டு, தாமரைத் தடாகத்தில் மகாலட்சுமி இருக்கும் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

செவ்வாய், வெள்ளி மற்றும் மாதப் பௌர்ணமி நாட்களில் தேவியருக்கு பால், மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நவராத்திரியின்போது முதல் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். மிகப்பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுகிறது. புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் விஜயதசமி அன்று பெற்றோர்களுடன் இங்கு கூடுகின்றனர். அன்று, அவர்கள் கலைவாணியின் ஆசியுடன் எழுதத் தொடங்குகிறார்கள். முப்பெரும் தேவியரையும் மாதத்தின் முதல்  மூன்று  வாரங்கள் பூக்களாலும், நான்காவது வாரம் காய்கறிகள் அலங்காரத்தாலும் ஐந்தாவது வாரம் பழங்களாலும் அலங்கரிக்கின்றனர்.

ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று  இங்கு  வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. அன்று  திருமாங்கல்ய  சரடை தேவியர் பாதங்களில் வைத்து பூஜித்து, இங்கு வரும் பெண்களுக்கு பிரசாதத்துடன் தருகின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் தேவியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இத்தலத்தில் அருள் பொழியும் முப்பெரும் தேவியரின் அருட் பார்வை நம்மீது பட நம் துயரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகுகிறது என்பது அனுபவ நம்பிக்கை. கோவையிலிருந்து ஈச்சனாரி, கிணத்துக்கடவு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த ஆலயம் வழியே செல்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்