SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மனுக்கு வேப்பஞ்சேலை ஏன்?

2019-07-31@ 12:35:15

ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்களில் விசேஷமான வழிபாடுகளோடு ஒரே கோலாகலமாக இருக்கும். ஏன்? மா முனிவரான  ஜமதக்கினியும் அவர் மனைவி ரேணுகாதேவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்- தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன். நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் குடும்பத்தில் ஒரு புயல் வீசியது. ஜமதக்கினி முனிவரிடம் ஏற்பட்ட விரோதத்தால், கார்த்தவீர்யார்ஜுனனின் பிள்ளைகள் ஜமதக்கினி முனிவரைக் கொன்று விட்டார்கள். ரேணுகாதேவியால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. கணவரை இழந்து வாழ விரும்பாமல், அவள் இறக்கத் துணிந்து தீயில் விழுந்தாள்.

அவள் தீயில் விழுந்ததும் அதைப் பார்த்த தேவேந்திரன், வருணபகவானை ஏவி மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால் அதற்குள், ரேணுகா தேவியின் ஆடைகள் முழுவதுமாக எரிந்துபோய், அவள் உடம்பில் தீக்கொப்புளங்கள் உண்டாகி விட்டன. என்ன செய்வது? உடனே உடம்பில் ஆடை ஏதும் இல்லாத அந்த நிலையில், அங்கே வனத்தில் இருந்த வேப்பந்தழைகளை எடுத்து, ஆடையாகச் சுற்றிக் கொண்டாள். (இதை முன்னிட்டே இன்றும் வேப்பஞ்சேலை அணிந்து மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் நடந்து வருகிறது.)

வேப்பஞ்சேலை அணிந்து வெளியே கிளம்பிய ரேணுகாதேவிக்குப் பசித்தது. பக்கத்தில் இருந்த பகுதிக்குப் போய் அங்கு இருந்த மக்களிடம், ‘‘எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள்!’’ எனக் கேட்டாள். ஆனால்  அங்கு இருந்தவர்களோ, ‘‘அம்மா! உங்களைப் பார்த்தால், அந்தணப் பெண் போலத் தெரிகிறது. நாங்களோ தாழ்த்தப்பட்டவர்கள். எங்கள் உணவை உங்களுக்குக் கொடுக்கக் கூடாது. அதனால், உணவுக்கு வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி உபசரித்தார்கள். (இதையொட்டியே இப்பொருட்களைக் கொண்டு, மாரியம்மன் கோயில்களில் கூழ் வார்க்கப்படுகிறது.) அவர்கள் தந்தவற்றால் ரேணுகாதேவி பசி ஆறினாள்.

அதன்பிறகு அவள், சலவைத் தொழிலாளர்கள் வசிக்கும் வீதிக்கு வந்து, அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்தாள். ஆனாலும், ரேணுகா தேவியால் கணவர் இறந்துபோன துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் கண்ணீர் வடித்தாள். அப்போது, தேவர்கள் ரேணுகாதேவியின் முன்னால் தோன்றி, அவள் துயரத்தைக் குறைத்தார்கள். கூடவே, சிவபெருமானும் தரிசனம் தந்தார். ‘‘ரேணுகா தேவி! நீ சக்தி தேவியின் அம்சமாக இருப்பவள். பூமியிலேயே இருந்து, மனிதர்களைத் தீமைகளில் இருந்து காப்பாற்றும் வல்லமையை உனக்கு நான் அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், உலகத்தில் இருக்கும் மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். அந்தத் துயரம் நீங்க அவர்களுக்கு, நீ அணிந்த ஆடையான வேப்பிலையே மருந்தாகும்.

நீ சாப்பிட்ட வெல்லம், இளநீர், பச்சரிசி மாவு, பானகம் முதலானவைகளை, மக்கள் உனக்கு நைவேத்தியமாகப் படைப்பார்கள். உன்னை வழிபடுபவர்களின் துயரத்தை நீக்கு!’’ என்று சொல்லி மறைந்தார். அதன்பிறகே ரேணுகாதேவிக்கு ‘முத்துமாரி’ என்ற திருநாமம் உண்டானது. உடம்பில் தோன்றும் முத்து முத்தான அம்மைக் கொப்புளங்களை நீக்கி அருள் செய்வதால் அப்பெயர். இந்த நிகழ்ச்சி நடந்தது - மழைக்காலத் தொடக்கமான ஆடி மாதத்தில்! அதனால்தான் மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வேப்பஞ்சேலை பிரார்த்தனையும் கூழ் வார்ப்பதும் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்