SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபாவை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள்....நல்லது நடக்கும்

2019-07-25@ 10:14:26

1947-ல் நெல்லூரில் வாழ்ந்த ஸ்ரீராமுலு என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.  அங்கே அவளுக்கு குளிர்காய்ச்சலும், வலிப்பும் வந்துவிட்டது.  குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர்.  ஸ்ரீராமுலு மிகவும் மனமுடைந்துவிட்டார்.

மனைவிக்கு பிரசவம் ஆன மறுநாள் அவர்  வகித்த வேலையின் பதவிக்காலமும் முடிவடைந்தது.  நண்டும் சுண்டுமாக மூன்று குழந்தைகள்.  ஆஸ்பத்திரி படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி மனைவி.  வேலையில்லாத அவலம்.  வறுமையின் பிடியில் ஸ்ரீராமுலு மிகவும் கஷ்டப்பட்டார்.  ஏதோ இரக்கமுள்ள சில நண்பர்கள் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்து உதவினர்.  பதிமூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மனைவி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

வீட்டுக்கு வந்த மனைவிக்கோ கால்களின் வீக்கம் வற்றவில்லை.  நிற்ககூட முடியாத பலகீனம்.  இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட தனது மனைவியை தானே கைத்தாங்கலாக தூக்கி வைக்கும் தர்மசங்கடமான நிலைமை ஸ்ரீராமுலுவுக்கு.

தன்னுடைய கர்மவினையை நினைத்து கலங்கிப் போயிருந்த ஸ்ரீராமுலுவின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த ஒரு நண்பர், அவரிடம் வந்து, 'ஷீரடி சாய்பாபா என்று ஒரு மகான் இருக்கிறார்.  அவர் எளியோர்களின் இறைவன்.  அவரை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் !  நல்லது நடக்கும் !' என்றார்.  தனது நண்பரின் வழிகாட்டுதலை ஏற்று, தனது குடும்பத்தின் நிலைமையை விரைவில் சீராக்குமாறு பாபாவிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்தார்.

மறுநாள் வழக்கம்போல காய்கறிகள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வந்தபோது அவர் முன்னே பாபா எதிர்பட்டார்.  ஒரு கணம் 'இது கனவா நனவா' என ஆச்சர்யத்தோடு பாபாவை உற்று நோக்கிய ஸ்ரீராமுலு , 'பாபா சமாதியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன.  பாபாவாவது நேரில் வருவதாவது' என்று மனதுக்குள் நினைத்தார்.

இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஒருவித தயக்கத்துடன் பாபாவை நோக்கி 'அய்யா !  நீங்கள் யார்?'  என்று கேட்டார்.  'நீ யார் என்று உணர்ந்து கொண்டால் நான் யார் என்பது தன்னால் தெரியும்' என்று பதிலளித்தார் பாபா.

பாபாவின் லீலைகளை பலர் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீராமுலு உடனே சுதாரித்துக் கொண்டு, 'தாங்களே பாபா என்றால் இன்று எங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் !' என்றார்.  பாபாவும் சற்றும் தாமதிக்காமல் சிரித்துக் கொண்டே , 'அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!'. என்றார்.

பாபாவை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்த ஸ்ரீராமுலு,  தன் வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் சுருட்டி மெத்தை தயார் செய்து அதை கயிற்றுக் கட்டிலில் போட்டு பாபாவை அதன் மீது அமர வைத்து ,  தனது கண்ணீர் கலந்த தண்ணீரால் பாதபூஜை செய்தார். ஸ்ரீராமுலுவின்  எளிமையான பக்தியில் இரக்கம் கொண்ட பாபா,  பாதபூஜை செய்த தண்ணீரை எடுத்து , 'ம்ம்.. இந்தாருங்கள் !  அனைவரும் அருந்தி மகிழுங்கள் !' என்றார். ஸ்ரீராமுலு, குழந்தைகள்,  மனைவி அனைவரும் பயபக்தியுடன் அருந்தினார்கள்.

ஸ்ரீராமுலு விரைந்து கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் பாபாவைக் காணவில்லை.  எழுந்திருக்ககூட முடியாமல் எந்நேரமும் படுத்தே இருக்கும் தனது மனைவி நின்று கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்து , 'பாபாவை எங்கே?' என்று கேட்டார்.

அவரது மனைவியோ, பாபா என்னை நோக்கி,  'அம்மா !  எழுந்திரு! உணவை நீ பரிமாறு !  அசாத்தியப் பசி !'  என்றார்.  தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அவருக்கு பரிமாறினேன்.  ஒரு பிடிதான் சாப்பிட்டார்.   'ஆஹா ! மனது நிறைந்தது !  இதோ வருகிறேன்!' என்று கூறிவிட்டு போய்விட்டார்!' என்றாள்.

அதைக் கேட்ட ஸ்ரீராமுலுவோ பாபாவின் விந்தையை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார்.  அதற்கடுத்த நிமிடத்திலிருந்து அவரது மனைவி அடிக்கடி சிறுநீர் கழிக்கலானாள்.  அன்று மாலைக்குள் கால்களில் வீக்கம் வற்றி சகஜமாக நடமாட ஆரம்பித்தாள்.  அதன்பிறகு அவர்களின் குடும்பத்தின் வறுமை நிலையும் அடியோடு மாறி சுபிட்சமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்