SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு : காரியங்கள் சித்திபெறச்செய்யும் திருவானைக்காவல் கோவில்

2019-07-22@ 10:07:34

அம்மன் மகிமையைப் பக்தர்கள் உணர, ஆடி சிறந்த மாதம். சூரியன் கடக ராசியில் தங்கியிருக்கும் காலம் ஆடி மாதமாகும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தேவதை உண்டு. கடக ராசிக்குரிய தேவதை பராசக்தியாவாள். எனவேதான் ஆடி மாதங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.திருச்சி திருவானைக்காவலில் உள்ள பிரசித்தி பெற்ற நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில், ஆடி மாதத்தில் அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிகளில் அம்மன் சன்னதி களைகட்டும்.

தல வரலாறு:

திருச்சி திருவானைக்காவல் அம்பிகையின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரியின் காதுகள் பிரகாசமாகத் தெரியும். இதற்குக் காரணம் அன்னை அணிந்திருக்கும் தாடகங்கள்(காதணிகள்). ஆதிசங்கரர், சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் என காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தைத் தணித்தார். இதன் பொருட்டே சன்னதியின் முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்தார் என்கிறது புராணம்.சிவன் கட்டளைப்படி அம்பிகை, பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமானது. யானை இங்கு பூஜித்ததால் இது யானைக்காவல். அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேசத் தலம். ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் உள்ளிட்ட பெயர்களிலும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு: பிரசன்ன விநாயகர் சன்னதி சேர்த்து அகிலாண்டேஸ்வரி சன்னதி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தினம் 12 முறை 48 நாட்கள் வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும். அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது.51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் என்ற வராஹி பீடமாக இந்த சன்னதி விளங்குகிறது. பவுர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி சன்னதியில் உள்ள மஹாமேருவிற்கு நவாபரண பூஜை நடக்கிறது. உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம்.

அகிலாண்டேஸ்வரியின் அருள்பெற்ற, மடப்பள்ளியில் பணியாற்றிய சிப்பந்தியே கவி காளமேகம் எனும் புலவராக பெயரும் புகழும் பெற்றார். 1752ல் இங்கு தங்கியிருந்த பிரெஞ்சு தளபதி ஒருவர், ஜம்புகேஸ்வரர் குறித்து அரிய நூல் ஒன்றை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார்.மூன்றாம் பிரகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கிணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பத்தை தரிசிக்கலாம். குறத்தி மண்டபம் என்ற குறை தீர்த்த மண்டபத்தில் நடன மங்கையர், குறி சொல்லும் குறத்தி போன்றோரின் சிற்பங்கள் அழகு மிளிர காட்சி தருகின்றன. இத்தலத்தில் 108 பிள்ளையார்கள் அருள்கின்றனர். அதில் அகிலாண்டேஸ்வரி சன்னதியில் உள்ள பிரசன்ன விநாயகரும், தனிச் சந்நதி கொண்டருளும் வல்லப விநாயகரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

அம்மன் சன்னதியின் பின்புறம் ஆயிரங்கால் மண்டபத் தூண் ஒன்றில் தொந்தியில்லாத, புலிக்காலுடன் கூடிய வியாக்ர விநாயகரை தரிசிக்கலாம். இத்தல ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ரிஷபகுஞ்சர சிற்பம் விசேஷமானது. காளையைக் காணும்போது யானையும், யானையைக் காணும்போது காளையும் தெரியாது. வீணை இல்லா சரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக விநாயகர் போன்றோரும் இத்தல சிறப்பு மூர்த்திகள்.ஜம்புகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் நின்ற நிலையில் விஸ்வரூப மகாலட்சுமியையும், இரு தேவியருடன் சந்திரனையும், இரு நந்தி தேவர்களையும் தரிசிக்கலாம். இங்கு சனி பகவான், பால சனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவியுடன் காட்சி தருகிறார்.வெள்ளை நாவல் பழம் பழுக்கும் வெண் நாவல் மரமே இத்தல விருட்சம். 20 கோஷ்ட தேவதைகளைக் கொண்ட சிவன் சன்னதி உள்ளது இந்தத் தலம் ஒன்றில்தான். கருவறைக்கு முன்பாக ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் உள்ளது. இதன் வழியாக மூலவரை தரிசிப்பதே சிறப்பு.
ஆடி வெள்ளி: ஆடி வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்தலத்தில் 5 மணி நேரம் தங்கி அகிலாண்டேஸ்வரியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும் என்பது சித்தர்கள் வாக்கு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்