SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி

2019-07-18@ 10:24:15

செண்பகராமன்புதூர், கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் அருட்பாலிக்கிறார் மேலதிரட்டு சுவாமி.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிலுள்ள பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று அவ்வூர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்த மாலவன் பெருமாள் உத்தரவு கொடுக்கிறார். தேரோட்டம் நடத்த வேண்டும் என்றால் கொடியேற்றம் செய்து தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி. கொடியேற்றம் செய்ய கொடி மரம் வேண்டும் என முடிவு செய்து, அவ்வூர் பிரமுகர்களும், இளைஞர்கள் சிலரும் கொடிமரம் வெட்ட காக்காச்சிமலைக்கு செல்கின்றனர்.

ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரம் ஒன்றை கண்டு அதை வெட்ட முற்படுகின்றனர். அந்த மரத்திலே சிவனின் அம்சமான சுடலைமாடன் வாசம் செய்கிறார். இதையறியாமல் கொடி மரம் வெட்ட வந்தவர்கள் ஓங்கி உயர்ந்த மரத்தை வெட்டிக்கொண்டு வருகின்றனர். அந்த மரத்தில் குடியிருந்த சுடலைமாடனும் மரத்தோடு வருகிறார். அவருடன் மா இசக்கியும், புலமாடனும் உடன் வருகிறார்கள். கண்ணாடிச்சோலை கடந்து பேச்சிப்பாறை, சுருளோடு, தடிக்காரண்கோணம், காரிக்கோணம், மார்த்தால், துவரங்காடு, ஆட்டுப்பாறை, ஆண்டித்தோப்பு, சீதப்பால் கடந்து மூத்தபிள்ளை கோணம் அடுத்து குதிரைப்பந்தி விளைக்கு வருகின்றனர். அங்கு கொடிமரம் கொண்டு வந்தவர்கள் ஓய்வு எடுக்கின்றனர். அப்போது சுடலைமாடன் அங்குள்ள வேப்பமரத்தில் குடிஅமர்கிறார்.

ஓய்வுக்கு பின் கொடிமரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் மாட்டு வண்டியில் கட்டரகுளம் வழி கடந்து ஆரல்வாய்மொழி வழியாக ஆழ்வார்திருநகரி சென்றுவிட, சுடலைமாடனும் உடன் வந்த இசக்கி, மாடன்தம்புரான், புலமாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களும் குதிரைபந்தி விளையில் தங்கிகொண்டனர். குதிரை பந்திவிளை தாடகை மலையின் தென்புறத்து அடியில் அமைந்துள்ளது. இந்த விளையை சுற்றி கடலை, எள் உள்ளிட்ட தானிய பயிர்களும், கத்தரிக்காய், மிளகாய் ஆகிய காய் வகைகளும் பயிரிடப்பட்டிருந்தது. இந்த இடங்களை சுற்றி கால் நடைகளை மேய்ப்பதற்காக செண்பகராமன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு அங்கே வருவதுண்டு. பெரும்பாலும் சிறுவர்களே மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி வருவர். மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டும் வரும் சிறுவர்கள், மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது சுற்றி நிற்கும் மரங்களின் நிழலில் கிளியாந்தட்டு என்ற ஒரு வகை விளையாட்டை விளையாடி மகிழ்வர். அப்படி ஒரு நாள் விளையாடும் போது எட்டு பேர் விளையாட அதில் ஒருவர் குறைவாக ஏழு பேர் மட்டுமே இருந்தனர். அப்போது மாயாண்டி சுடலை வாலிப இளைஞனாக வந்து நின்றார்.
பகல் முழுவதும் அந்த சிறுவர்களோடு நல்ல முறையில் விளையாண்டு மகிழ்ந்தார் சுடலைமாடன். மாலை நேரம் ஆனது சிறுவர்கள் ‘‘பால் கறக்க நேரமாச்சு மாட்டை பத்திட்டு போணும் போட்டுமா அண்ணே’’ என்றனர். அப்போது ‘‘சுடலை ஏ, இருங்கப்பா இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாம்’’ என்றார். சிறுவர்கள் ‘‘இல்லை, இல்ல நேரமாச்சி உடனே போணும்’’ என்ற படி மாடுகளை ஓட்டிக்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றனர். செல்லும் போது திரும்பி பார்த்தனர். சுடலை நின்ற இடத்தில் இல்லை. மாயமானார் மாயாண்டி.

அன்றிரவு சுடலையோடு விளையாடிய சிறுவர்கள் வயிற்றுப்போக்கு, வாந்தியும் எடுத்து நோய்வாய்ப்பட்டனர். அப்போது காலரா நோய் எல்லா இடமும் பரவி இருந்த நேரம். அதனால் சிறுவர்களுக்கும் காலரா நோய் தான் தாக்கியுள்ளது என்று அவர்களது பெற்றோர்கள் எண்ணினர். ஆனால் இது சுடலைமாடன் விளையாட்டு என்பது யாருக்கும் தெரியவில்லை. மருத்துவமனைக்கும், வயித்தியர் வீட்டுக்கும் சென்று பார்த்தும் நோய் குணமாக வில்லை. ஊர் மக்கள் ஒன்று கூடி,  முடிவு செய்து கேரள நம்பூதரியிடம் சென்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது நம்பூதரி, காக்காச்சி மலை காவலில் இருந்த சுடலைமாடன் உங்கள் ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு பெயரைச் சொல்லி பீடம் அமைத்து நிலையம் இட்டு,
வேண்டிய பலி கொடுத்து பூஜித்து வாருங்கள். வந்த பிணி மாறிவிடும், வருங்காலம் வளமாகும் என்று உரைத்தார்.

சுடலை இருக்கும் இடம் தேடினர். முடிவில் சுடலை குதிரை பந்தி விளையில் இருந்தது தெரிந்தது. அங்கு அவருக்கும், அவருடன் வந்த இருபத்தியோரு தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்து பூஜித்து வந்தனர். சுடுகாட்டு பார்வை வேண்டும். ஊர் எல்லையில் நிலையம் என்று சுடலைமாடன் கூறியதன்பேரில் மேலத்திரட்டு விளையில் மாரிமுத்தாரம்மன். சந்தனமாரியம்மன் கோயிலில் தெற்கு பக்கம் சுடலைமாடனுக்கு நிலையம் கொடுத்து கோயில் எழுப்பினர். இந்த கோயிலில் முதல் பூஜை சுயம்புவாக தோன்றிய மூன்று கன்னிமாரியம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு மாரிமுத்தாரம்மன், சந்தனமாரியம்மன், உச்சிமாகாளியம்மன், வயிரவர், பூதத்தார், மாடன்தம்புரான், பூசனிக்காய் சுடலைமாடசுவாமி, ஈனன் சுவாமி, பேச்சியம்மன், இசக்கியம்மன், சிவணணைந்த பெருமாள், புலமாடன் உள்ளிட்ட தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளனர். இக்கோயில் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் கொடை விழா நடைபெறுகிறது.

பூதை.K.சண்முகம்பிள்ளை
படம்: E.S.சுகந்தன்,
ஓவியம்: வெங்கி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்