SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேஷ ராசிக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள்?

2019-07-15@ 16:17:48

என்னோட ராசி நல்ல ராசி 4

முனைவர் செ. ராஜேஸ்வரி

ஓர் உற்சாக ஊற்று


சுறுசுறுப்புத் திலகம் மேஷ ராசியே குழந்தை ராசி என்று சொல்லும்போது அந்த ராசியில் பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்? அது குழந்தைக்கும் குழந்தையாக இருக்கும். கோழி தன் சிறகுகளுக்குள் வைத்து தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல மேஷ ராசிக் குழந்தையை ஒரு தாய் பாதுகாக்க வேண்டும். குழந்தை பருவம் முதல் கிழப்பருவம் எய்தும் வரை மேஷ ராசிக்கு தேவை அன்பும் அக்கறையும் [love and care only] மட்டுமே. மூன்று நாள் பட்டினியாக கூட இந்தக் குழந்தை இருந்து விடும். ஆனால், அன்பானவர்கள் இல்லாத இடத்தில் என்னதான் சுவையான உணவு, துணிமணி, விளையாட்டுகள், பொழுது போக்குகள் இருந்தாலும் இந்த குழந்தை தங்கவே தங்காது. . எனவே இதனை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் தாயோ ஆயாவோ பாட்டியோ இது கூடவே இருக்க வேண்டும். கடைசி காலம் வரை மேஷ ராசிக்காரருக்கு உணவும் உயிர் மூச்சும் அன்பும் பாதுகாப்பும் மட்டுமே.

குழந்தையின் வளர்ச்சி

பொதுவாக மேஷ ராசிக் குழந்தை செவ்வாய் ஆதிக்கத்தில் இருப்பதாலும் மேஷம் நெருப்பு ராசியாக இருப்பதாலும் வேகமாக சூட்டிகையாக வளரும், வளரும்போது குழந்தைக்கு வரக்கூடிய அம்மை, சிரங்கு, காய்ச்சல், கால்ரா, சளி, இருமல் என அனைத்து நோய்களும் ஒருமுறை வந்து எட்டி பார்த்து விடும். அதன் பிறகு மிகுந்த வலிமையுடன் திகழும். இது நோஞ்சான் குழந்தை அல்ல. திடகாத்திரமான குழந்தை. இக்குழந்தை மற்ற குழந்தைகளை விட ஒரு மாதம் முன்பாகவே பேச தொடங்கும், நடக்கும், சாப்பிடும், ஓடும், துறு துறுவென்று அழகாக இருக்கும். பொதுவாக இதற்கு தலையில் இருக்கும் பலம் காலில் இருக்காது எனவே கீழே மேலே விழுந்து தலை முகம் போன்ற பகுதிகளில் காயத்தை ஏற்படுத்திக் கொள்ளும். மேஷம் என்பது உடலில் தலையைக் குறிக்கிறது. இக்குழந்தையின் முகம் பிரகாசமாக இருக்கும் கண் அழகாக இருக்கும் . வாய் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்.

விளையாடும் விதம்

மேஷ ராசி குழந்தை தன் பொம்மைகளை, பொருட்களைக் கேட்பவர்களுக்குக் கொடுக்கும். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும். ஆனால் யாராவது இதன் விருப்பத்துக்கு மாறாக நடந்தால் உடனே அவர்களிடம் இருக்கும் தன் பொருட்களை ஈவு இரக்கமில்லாமல் பிடுங்கிக் கொண்டு தனியாகப் போய் விடும். இதனால் இந்தக் குழந்தை பெரும்பாலும் தனியாகவே விளையாட நேரிடும். இந்தக் குழந்தைக்கு டாக்டர் விளையாட்டு, டீச்சர் விளையாட்டு என்று தான அதிகாரம் படைத்தவராக இருக்கும் விளையாட்டுகள் விளையாடவே பிடிக்கும். இக்குழந்தை தோற்றுப் போகும் விளையாட்டு விளையாடாது. அது டீச்சராக இருக்கும் மற்றவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும். இது டாக்டராக இருக்கும் மற்ற குழந்தைகள் நோயாளிகளாக இருக்க வேண்டும். மேஷ ராசி குழந்தை விளையாட்டுக் கூட மாணவராக நோயாளியாக, திருடனாக இருக்க விரும்பாது. அவ்வளவு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். மேஷ ராசி குழந்தைக்கு தோற்றுப் போகும் விளையாட்டுகளில் ஆர்வம் இருக்காது. விளையாட்டில் ஈடுபட்டால்
இக்குழந்தை வெற்றியை மட்டுமே பெற்று வரும். தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனம் இல்லாததால் விளையாட்டைப் பார்க்கும் ஆர்வம் விளையாடுவதில் இருக்காது. ஆனால் விளையாடினால் நெருப்பாக விளையாடும்.

எப்படி கூப்பிட வேண்டும்?

மேஷ ராசிக் குழந்தை தன் குழந்தைப் பருவத்திலேயே தான் தோற்பது அவமானம் என்பதை உணர்ந்து விடும். அதனால் தோற்றுப்போகும் விளையாட்டை விரும்பாது. அதை மக்கு என்றோ லூசு என்றோ விளையாட்டுக்கு கூட யாரும் திட்டக் கூடாது. இதைத் தாய்மார் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறர் தன் பெயரை சொல்வதில் கூட மேஷ ராசி குழந்தை கவனமாக இருக்கும். யாராவது பட்டப் பெயர் [nickname] வைத்து கூப்பிட்டாலோ அல்லது பலர் இருக்கும் இடத்தில் பெயரைச் சொல்லி சத்தமாக கூப்பிட்டாலோ தன் மானமே போய்விட்டதாக அவர்களைக் கோபிக்கும். பெரியவரான பிறகு தன்னை மற்றவர் address பண்ணுவதில் இன்னும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும். தன் பெயரில்கூட தன் கௌரவம் இருப்பதாக இக்குழந்தை கருதும்.

கண்டிப்பு தேவை

மேஷ ராசி குழந்தை நிறைய கனவுகளோடும் கற்பனைகளோடும் வளரும். அதனால் அதற்கு சிறு குழந்தைலேயே கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கற்று தந்துவிட்டால் பெரியவனாகும் போது மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும். மேஷ ராசி குழந்தை சிறு வயதில் விளைவு தெரியாமல் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடும். அதைப் பெரியவர்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். தீயைத் தொட்டால் சுடும் என்பது குழந்தைக்கு தெரியாதல்லவா? அது போல மேஷ ராசிக்காரருக்கும் தெரியாது. இவர்களில் பலர் ‘அனுபவப்பட்டு’ திருந்துவார்கள். அதனால் குழந்தை பருவத்தில் சில தவிர்க்க வேண்டிய விஷயங்களை கண்டித்துச் சொல்ல வேண்டும். அவற்றைச் செய்யாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அட்வென்ச்சர் என்பது மேஷ ராசிக் குழந்தையின் விருப்பங்களில் ஒன்று. அதாவது ஒன்றைச் செய்யப்போய் வேறு ஏதாவதொரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்.

கண்ணாடி பாத்திரம்

மேஷ ராசிக் குழந்தையை ஒருவர் நேரடி பார்வையில் வைத்து வளர்ப்பது நல்லது. பெரியவருக்குப் பயப்படும் இக்குழந்தை கண்டித்துச் சொன்னால் மட்டுமே கீழ்ப்படிந்து நடக்கும். கண்டிப்பும் அவ்வப்போது ஒரு அடியும் கொடுப்பதும் மிகமிக அவசியம் ஆகும். கண்டிப்பதாகக் கருதிக் கொண்டு பட்டினி போடுவதும் அடித்து உதைப்பதும் கூடாது. சிறு கடுஞ்சொல் கூட மேஷ ராசிக் குழந்தையைத் தீயாகச் சுட்டுவிடும். சிறு காயம் அல்லது லேசான அடியைக் கூட அது தாங்காது. மனதுக்குள் நொறுங்கிவிடும். எனவே கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வது போல மேஷ ராசிக் குழந்தையை கவனமாக கையாள வேண்டும். அதனை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தக் கூடாது. பெரியவரான பிறகு கூட அதன் மனதில் அந்த பயம் அப்படியே உறைந்து போயிருக்கும்.

மாதா பிதா குரு தெய்வம்


மேஷ ராசி குழந்தை பெரியவர்களுக்குக் கட்டுப்படும். பயப்படும். இக்குழந்தை ‘இந்த உலகம் அழகானது ; தனக்கு அனைத்து சந்தோஷங்களையும் இவ்வுலகம் தரத் தயாராக இருக்கிறது’ என்ற பாஸிடிவ் அணுகுமுறையில் தன் வாழ்க்கையை எதிர் நோக்கியிருக்கிறது. பெரியவர்கள் தங்களின் புலம்பலால் விரக்தியால் அதன் கனவுகளை சிதைத்து விடக்கூடாது. பெற்றோர் குரு பெரியவர்கள் ஆகியோரை மேஷ ராசி குழந்தை தெய்வமாகப் போற்றும். அதனால் இவர்கள் குழந்தை முன் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடக்கூடாது. குழந்தைதானே அதற்கு என்ன தெரியப்போகிறது என்று நினைக்கக் கூடாது. நீங்கள் வேறொரு சமயத்தில் அதை எதற்காவது திட்டினால் அது நீங்கள் செய்த தவறை பலரறிய சொல்லிக்காட்டும். சொல்லிக் காட்டுவது மேஷ ராசிக்காரருக்கு இருக்கும் ஒரு பொதுவான குணம். ‘‘நான் நடந்ததை தானே சொன்னேன். உண்மையை தானே சொன்னேன்’’ என்று தன் செயலை நியாயப்படுத்துவார்கள். பெரியவர்கள் செய்யும் தவறை இந்தக் குழந்தையால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே அம்மா செய்தால் அப்பாவிடமும் அப்பா செய்தால் பாட்டியிடமும் சொல்லிக் கொடுத்து விடும். ஜாக்கிரதை. பெரியவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் எதிர்பார்ப்பு.

குற்றம் கடிதல்

மேஷ ராசிக் குழந்தை தான் ஏதாவது குற்றம் செய்துவிட்டால் மறுகிவிடும். குற்ற உணர்ச்சியில் தவித்துப் போய்விடும். எனவே அது தன் குற்றத்தை எண்ணி வருந்தும் போது பெரியவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் பேசக் கூடாது. எந்த செயலுக்கும் ஒரு நியாயம் இந்த குழந்தையிடம் உண்டு. அதையும் பெரியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. ஆனால், பெரும்பாலும் தான் செய்தவை சரி என வாதாடும் போக்கு மேஷ ராசிக்காரரிடம் உண்டு, அதையும் மறந்து விடக்கூடாது.

பாராட்டு தேவை

மேஷ ராசி குழந்தைகள் நல்லவனாக வாழ வேண்டும் என்று சிறு வயதிலேயே உறுதியாக இருக்கும். எனவே பெரியவர்களிடம் இருந்தும் தன் சகாக்களிடம் இருந்தும் பாராட்டை எதிர்பார்க்கும். தான் செய்யும் அருஞ்செயல்களுக்காக மற்றவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சி அடையும். விரைவில் உணர்ச்சிவசப்படுதல் சட்டென்று அழுதல் சிரித்தல், கோபப்படுதல் ஆகியன மேஷ ராசியின் பொதுவான இயல்பு ஆகும். மேஷ ராசி பெரியவர்கள் நண்பர்கள் உறவினர்களை சந்திக்கும்போது கையைப் பிடித்து தோளை அணைத்துப் பேசுவார்கள். மேஷ ராசி சிறுவர் சிறுமியருக்கு தம்மை டீச்சர் மடியில் உட்காரவைத்து பாடம் கற்றுக்கொடுக்கலாமே, அத்தை நம்மை கை குலுக்கி முத்தம் கொடுத்து பாராட்டலாமே என்று ஆசைகள் தோன்றும். எப்போதும் இக்குழந்தை தனக்குப் பிடித்தவரிடம் பாசமும் பரவசமுமாக இருக்கும். இக்குழந்தைகள் தனக்குப் பிடித்த தோழர் தோழிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பணம் பொருள் ஆகியவற்றை கொண்டு போய் கொடுத்துவிடும். எனவே, பெரியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பெரியவர் நட்பு

மேஷ ராசிக் குழந்தைக்கு ஊரில் இருந்து பாட்டி தாத்தா வந்துவிட்டால் உற்சாகம் கரை புரண்டோடும். தன் வயது சிறுவர்களை விட பெரியவர்களிடம் பழங்கதைகள் கேட்பதில் விருப்பம் மிகுதி. குறிப்பாக தொன்மைக் கதைகளை விரும்பிக் கேட்கும்.ஏனெனில் மேஷ ராசியின் சிறப்பியல்பு ஆராய்ச்சி பண்பாகும். அப்பண்பு சிறு வயதிலேயே இக்குழந்தையிடம் துளிர்ப்பதை காணலாம். எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு தெரிந்துகொண்ட பின்பே அதை நம்பும். தனக்கு தெரிந்த விஷயங்களை உடனே மற்ற குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளும் வகுப்பில் talkativeஎன்று பெயர் வாங்கும்.மேஷ ராசி குழந்தை சோம்பி இருப்பதைப் பார்க்கவே முடியாது . எந்நேரமும் யாரிடமாவது ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும்; ஆனால் அது வெட்டிப் பேச்சாக இருக்காது. அங்கிங்கு சேகரித்த புதுப்புதுத் தகவல்களை மற்றவருக்குச் சொல்லும். சில சமயம் பெரியவர்கள் கூட இக்குழந்தையை பேசச் சொல்லி ஆசையாகக் கேட்பார்கள்.

நெறியாளர் தேவை

மேஷ ராசிக்கு எப்போதும் எந்த வயதிலும் கூடவே இருந்து நெறிப்படுத்த ஒரு ஆள் தேவை. சிறு வயதில் அன்றாடப் பாடங்களை படிக்க வைத்து வீட்டுப் பாடத்தை செய்ய வைத்து அனைத்து நோட்டுப் புத்தகங்களை பையில் எடுத்து வைத்து பேனா பென்சில் ஸ்கேல் எடுத்து வைத்து அனுப்ப வேண்டும். இந்த வேலைகளை அந்தக் குழந்தையைச் செய்ய விட்டால் இவற்றை முழுமையாகச் செய்யாது. அதற்குப் படிக்க பிடிக்கும்; எழுதப் பிடிக்கும்; பேசப் பிடிக்கும். அவ்வளவு தான். ஆனால், மறுநாளைக்கு என்ன பாடம் படிக்க வேண்டுமோ அதை படிக்காமல் ஆங்கிலப் புத்தகத்தின் அத்தனை பாடங்களையும் வரிசையாக வாசிக்கும். வரலாற்று பாடங்களை சுவாரசியமாக வாசித்துக் கொண்டிருக்கும். இடையிடையே பகல் கனவுகளில் மூழ்கிவிடும். பெரும்பாலும் ஆசிரியர் மூன்று பாடங்கள் நடத்துவதற்குள் இக்குழந்தை முப்பது பாடங்களை வாசித்திருக்கும். ஆனால், இரண்டாம் பாடத்தில் வைத்த ‘டெஸ்ட்டில்’ அதிக மார்க் எடுத்திருக்காது. எனவே தினமும் இக்குழந்தையை பள்ளியிலும் வீட்டிலும் கவனித்துப் படிக்க வைக்க வேண்டும்.

அறிவுத் தேடலில் நாட்டமுள்ள குழந்தை என்பதால் மதிப்பெண் ‘டெஸ்ட்’ பற்றி கவலைப்படாமல் தனக்குப் பிடித்தவற்றை வாசிக்கும். எனவே நெறிப்படுத்துதல் மிகமிக அவசியம். பொதுவாகவே மேஷ ராசிக் குழந்தை முதல் மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் மாணவராக இருப்பதுண்டு. ஆனால், கணக்கு பாடம் அறிவியலில் ‘ஈக்வேஷன்’ போடும்போது ‘கேர்லெஸ்’ மிஸ்டேக் விடுவதில் அதி சூரப்புலிகள். மேஷ ராசிக் குழந்தைகள். ஐந்தும் மூன்றும் எட்டு என்று சொல்லிவிட்டு ஏழு என்று எழுதும். எனவே, அருகில் இருந்து இந்த குழந்தைகளை தலையில் குட்டி படிக்க வைக்க வேண்டும். கவனக்குறைவால் centumஐ (நூற்றுக்கு நூறு மதிப்பெண்) தவற விடும்.

பொறுமையில்லை


மேஷ ராசி குழந்தைக்கு ‘சஸ்பென்ஸ்’ பிடிக்காது; எதுவாக இருந்தாலும் மேஷ ராசி குழந்தையிடம் straight forward ஆக இருக்க வேண்டும். எதையாவது ஒளித்துவைத்துவிட்டு போய் எடுத்துக்கொண்டு வா என்றால் கோபம் வரும் .ஒரு கிஃப்ட் கொடுத்துவிட்டு அந்த கிஃப்ட் ரேப்பரை கிழிக்காமல் பிரி என்றால் கோபம் வரும். வேகமாக ரேப்பரை கிழித்துவிட்டு உள்ளே இருக்கும் பரிசுப்பொருளைப் பார்த்து ஆனந்தப்படும். நூலில் சிக்கல் விழுந்துவிட்டது இதை எடுத்துக்கொடு என்று சொன்னால் அதன் பொறுமையின்மையால் அந்த நூலின் சிக்கலை இன்னும் அதிக சிக்கலாகிவிடும். தான் நினைத்ததை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று துடிக்கும்.முன்கோபம் அதிகம் என்பதால் சுள் சுள் என்று பேசும். தங்கை தம்பிகளை அடிக்கும். தான் விரும்பியதை செய்ய விடாமல் தடுத்தால் பயங்கரமாக ரியாக்ட் செய்யும். தான் சொல்வதை மற்றவர்கள் கேட்காவிட்டால எதையாவது எடுத்து உடைக்கும்; கையில் இருப்பதை தூக்கியெறியும். இது போன்ற நேரங்களில் அடி கொடுத்தால் அடங்கி
விடும். அதன் வார்த்தைக்கு மதிப்பளித்தால் அமைதியாக இருக்கும். இது முரட்டுக் குழந்தை அல்ல; அனைவரும் தன் மீது கவனம் வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு அப்பாவித் குழந்தை. மேஷ ராசி குழந்தையை அன்பளிப்புகள் கொடுத்து அடிமையாக்க முடியாது. எதுவும் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிடும்.

நல்லவன் வாழ்வான்

மேஷ ராசிக் குழந்தைகள் லட்சியவாதிகளாக [யுடோபியன் கேரக்டர்களாக] வளரும். அறம் வெல்லும். பாவம் தோற்கும், தர்மம் தலை காக்கும். நல்லவன் வாழ்வான். கெட்டவன் அழிவான் என்று சொல்லியபடி ஒரு ‘ஐடியலிஸ்டாக’ வாழும். நாம் நல்லவராக இருந்தால் அனைத்து நன்மைகளும் நம் மடியில் வந்து விழும் என்று கற்பனைகளில் மிதக்கும். கெட்டவர்களை கண்டால் இக்குழந்தை ஒதுங்கிவிடும். இந்த உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற இரு சாராரும் உண்டு. அவர்களுடன் சேர்ந்துதான் நாம் வாழவேண்டும் என்ற பக்குவம் மேஷ ராசிக்கு எப்போதுமே வராது. அது வந்துவிட்டால் அதன் ‘ஸ்பிரிட்’ குறைந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். தங்கத் தட்டில் வைத்து தாங்கினாலும் மேஷ ராசிக் குழந்தை கேட்டவர்கள் மத்தியில் வராது. அவர்களிடம் சேராது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

மேஷ ராசி குழந்தைகள் self centred and self motivated என்பதால் தன்னைப் பற்றிய விஷயங்களில் வெகு கவனமாக இருக்கும். எல்லா இடத்திலும் தான் முதன்மை பெற வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளும். இக்குழந்தைக்கு தனது பிறந்த நாள் கொண்டாடுவதில் மிகுந்த விருப்பம் உண்டு. அந்த நாள் இந்த உலகத்தில் தனக்காக மட்டுமே கொண்டாடப்படுவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும். சில மேஷ ராசிப் பெரியவர்கள் தான் இறந்த பிறகும்கூட தன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று வீட்டாரிடம் சொல்வதுண்டு. எனவே மேஷ ராசிக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களின் பிறந்த நாளை விதவிதமாகக் கொண்டாடி அவர்கள் மனதில் இடம்பிடியுங்கள். நம்பிக்கை

நெஞ்சில் வை; தித்திக்கும் வாழ்க்கை.
   
மேஷ ராசிக் குழந்தைக்கு அழுவாச்சி கதை பிடிக்காது. எனவே பெற்றோர் இக்குழந்தை முன் அழக்கூடாது; புலம்பக் கூடாது. உன்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் அக்குழந்தையிடம் பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் இக்குழந்தையின் கனவுகளை கற்பனைகளைச் கேலி செய்யக் கூடாது. நீ இந்நாட்டின் மிக முக்கியமானவனாக வருவாய் என்று உற்சாகமூட்டி வளர்க்க வேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்களோடு மேஷ ராசி குழந்தையை இணைத்துப் பேச வேண்டும்

தலைமைப் பண்பு

மேஷ ராசிக் குழந்தை வகுப்பிலும் வீட்டிலும் எப்போதும் தானே தலைவராக இருந்து வழி நடத்த தன்னை மற்றவர் பின்பற்ற வேண்டும் என்பதை விரும்பும். எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் வித்தியாசமான செயல்களை, கடினமான சவாலான செயல்களை மற்றவரால் செய்ய இயலாத செயல்களை தான் செய்துகாட்ட வேண்டும் என்பது இதன் குறிக்கோளாக இருக்கும். Be first; be daring; be different என்ற வாசகம் மேஷ ராசிக்காக எழுதப்பட்டது எனலாம். பெற்றோர் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது இக்குழந்தையைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.மேஷராசிக் குழந்தைக்கு தலைமைப் பண்புகளை ஊட்டி மிகுந்த தன்னம்பிக்கை உடைய குழந்தையாக வளர்க்க வேண்டும் பொதுவாக மேஷ ராசி குழந்தைகள் தன் தம்பி தங்கைகளை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வர்.

பள்ளிக்கூடத்தில் தன் வகுப்பு மாணவர்களை அமைதியாக இருக்கும்படி க்ளாஸ் லீடராக’ இருந்து பார்த்துக்கொள்வர். டூர், ட்ரிப், பிக்னிக் என்று போகும்போது மேஷ ராசி மாணவர் தன் சகாக்களின் தேவைகளை கவனத்துடன் நிறைவேற்றுவர். அவர்களை பொறுப்பாக அழைத்துச் செல்வர். ‘’நீ தான் எல்லாம்’’ என்று சொல்லிவிட்டால் மேஷ ராசி குழந்தை சிறு வயதிலேயே குடும்பத் தலைவனாக உயர்ந்துவிடும். மொத்தத்தில் மேஷ ராசிக் குழந்தை ஒரு உற்சாக ஊற்று, சுறுசுறுப்புத் திலகம், குட்டி தலைவன், நேர்மையின் சிகரம்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்