SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சனி பகவான் தரும் ஸ்தான பலன்கள்

2019-07-15@ 16:15:44

மங்கு சனி - பொங்கு சனி - லாப சனி

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

நம் வாழ்க்கையில் ஜோதிடம் , ஜாதகம், கைரேகை, பெயர் ராசி, நல்ல நேரம், முகூர்த்தம், திதிகள், சகுனங்கள் எல்லாம் தொன்று தொட்டு காலம் காலமாக, பல பரம்பரைகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சாஸ்திர அமைப்பின்படி அதை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷங்களும் மேற் கொள்ளப்படுகின்றன நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் ஆதிக்கமும், அனுக்கிரகமும்தான் காரணமாக இருக்கிறது.12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் அதற்குரிய 108 பாதங்களில் கிரகங்கள் பயணிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பூர்வ புண்ணிய பிராப்தம், கர்ம. வினைக்கேற்ப கிரகங்கள் பலன்களை தருகின்றது. இதில் பல்வேறு விதமான ஜோதிட கணக்குகள் இருக்கின்றது. அந்த வகையில் தற்கால கோச்சார கிரக ஸ்தான பலன் என்பது ஒன்றாகும்.

இந்த கிரக ஸ்தான பலத்தின்படி சந்திரன் தினக்கோள், ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தில் பயணம் செய்து பலன்களை தருபவர். ஏறத்தாழ 30 நாட்களில் 12 ராசிகளில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களையும் வளர்பிறை, தேய்பிறை என்ற கணக்கில் கடந்து செல்பவர். இவர் அதிவேகமாக பயணிப்பதால் பயணக்கிரகம் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் இவருக்கு நேர்மாறாக மிக மந்தமாக, நகர்ந்து கொண்டே இருக்கும் கிரகம் சனி பகவான். ராசி மண்டலத்தை இவர் கடப்பதற்கு ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த 30 ஆண்டுகளில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல முக்கிய மாற்றங்கள் உண்டாகும். குழந்தைப் பருவம், பால பருவம். இளமைப் பருவம் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, உயர் கல்வி, வேலை, தொழில், வியாபாரம் என தொடங்கி திருமணத்தில் முடியும். அதன் பிறகு அடுத்த 30 ஆண்டுகள் குடும்பம். மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள்,  பேரன், பேத்திகள், பணியில் இருந்து ஓய்வு  பெறுதல் என வாழ்க்கைச் சக்கரம் சுழலும்.

 ஜோதிட சாஸ்திரத்தில் இந்த 30 வருடக் கணக்கை சனிபகவான் சஞ்சாரம் அதாவது ராசிப் பெயர்ச்சி மூலம் கணக்கிடப்படுகிறது. 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்பது ஜோதிட சொலவடை, வழக்கு மொழியாகும். அடுத்த 30 ஆண்டு நிறைவு அடைவதை சஷ்டியப்த பூர்த்தி என்று கொண்டாடுவார்கள். அதாவது ஒருவர் பிறந்த தமிழ் வருடம் மீண்டும் வருகின்ற அமைப்பை குறிப்பதுதான் அந்த நாளின் விசேஷம். ஏறத்தாழ சனியின் சஞ்சார சுற்றும் இதை ஒட்டியே மங்கு சனி, பொங்கு சனி என்று அமையும்.வருடக் கணக்கில் பெயர்ச்சி அடையும் கிரகங்களின் வரிசையில். குரு, ராகு, கேது,சனி. இதில் சனியின் பெயர்ச்சி காலம் சுமார் 2½ ஆண்டுகளாக கணக்கிடப்படுகிறது. மற்ற கிரக பெயர்ச்சிகளின் போது இல்லாத முக்கியத்துவம் சனி கிரக பெயர்ச்சிக்கு இருக்கிறது. மேலும், இது சமூகத்தில் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், ஜாதக பலன்களுடன் சனியின் கோச்சார ஸ்தான பலன்கள் அனுபவ ரீதியாக பெரும்பான்மையானவர்களுக்கு சரியான பலன்களை தருவதாக அமைந்துள்ளது.

பொதுவாக குடும்பத்தில் எந்த விதமான பிரச்னைகள், கஷ்ட நஷ்டங்கள், உடல் நலக் குறைவு, விபத்துக்கள், ஓயாத மருத்துவ செலவுகள், இடமாற்றங்கள். வியாபாரம் , தொழிலில் கடன், நஷ்டம், பதவி இழப்பு, கோர்ட், கேஸ், போலீஸ். சட்ட விவகாரங்கள். விவாகரத்து, சொத்துப் பிரச்னை, குடும்பத்தில் பிரிவு. சுபகாரிய தடைகள். பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், அடங்காமல், படிக்காமல் உதாரித்தனமாக சுற்றித் திரிவது என நம் வாழ்க்கையில் எந்த தீய நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதற்கு காரணம் சனி கிரகம் என்ற எண்ணம் தெரிந்தோ தெரியாமலோ பொதுவாக, பரவலாக இந்த சமூகத்தில் நடைமுறையில் வந்து விட்டது. குழந்தைகளை திட்டும் போது ஏய் சனியனே என்று தான் திட்டுவார்கள். அவனுக்கு ஏழரைச் சனி பிடித்து ஆட்டுகிறது அது தான் அவனுக்கு இப்படி யெல்லாம். நடக்கிறது என்று இல்லாத ஒன்றை சொல்வார்கள். அவனுக்கு புதன் பிடித்து இருக்கிறது, கேது பிடித்து ஆட்டுகிறார் என்று எவரும் சொல்வதில்லை. நம் வாழ்க்கையில் எந்த கிரக, தசா புக்தி அந்தரத்தில் எந்த கெடுதல், தீமைகள்,
ஏற்பட்டாலும்  சனியின் தலைதான் உருளும். எல்லா கிரகங்களுக்கும் அந்தந்த ஜாதக கிரக அமைப்பு லக்னம், ராசிப்படி யோக, அவயோகங்கள், நன்மை, தீமைகளை எல்லா கிரகங்களும் தரும். சனி மட்டுமே கெடுதல் செய்வார் என்பது தவறான கருத்து.

சனியின் ஸ்தான பலன்கள்

சனி பகவானின் கோச்சார ஸ்தான பலன்கள் என்பது சனிப் பெயர்ச்சியை குறிப்பதோடு மட்டும் அல்லாமல் இந்த சனி, ஒருவரின் ராசிக்கு எந்தெந்த வீட்டில் இருக்கும் போது எந்த மாதிரி பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வது தான் யோக, அவயோக தசா புக்திகள் நடந்தாலும் சனியின் சஞ்சார ஸ்தான பலன் மிகவும் முக்கிய மானதாக இருக்கும்.பொதுவாக சனி ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் தங்கி பலன்களை தருவார். ஒருவரின் ஜாதக கட்டத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனி பகவான் கடந்து செல்லும் போது 7½ சனி என்ற அமைப்பு உண்டாகிறது. இதனுடைய பலன்கள் அவரவர்கள் வயதுக் கேற்ப மாறுபடும் முதலில் விரைய சனியாக 7½ சனி தொடங்கும். அந்த காலகட்டத்தில் சதா அலைச்சல், பயணங்கள், வேளைக்கு சாப்பிட முடியாத சூழ்நிலைகள், ஏற்படும். மகனின் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சொத்து வாங்கும் யோகத்தை தருவார், அதனால் சிலருக்கு கடன் ஏற்பட்டாலும் பாதிப்பு வராது மகன், மகள் திருமணத்தை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பார். வராததை தருவார். புதிய வீடுகட்டி கிரகப் பிரவேசம் செய்கின்ற பாக்கியத்தை தருவார். கூடவே அலைச்சல், வீண் செலவுகள், அநாவசிய செலவுகள் வரும். வயதான தாய், தந்தை கூட இருந்தால் அவர்கள் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படும். கோயில் திருப்பணிகள் செய்யும் அமைப்பை ஏற்படுத்துவார். ஆன்மிகத் தாகத்தை உண்டாக்குவார் பிரசித்தி பெற்ற பரிகார கோயில்கள். காசி, ராமேஸ்வரம் முதலான புண்ணிய தலங்களுக்குச் செல்லும் பாக்கியத்தை அருள்வார். இந்த கால கட்டத்.திலே செய்கின்ற முதலீடுகள் பிற்காலத்தில் பயன் தரும் வகையில் அமையும்.

ஜென்ம சனியாக ராசியில் வந்து அமரும்போது அந்தந்த ராசிக்கு ஏற்ப. பலன்களை தருவார். சில விஷயங்கள் அதிக அலைச்சலுக்கு பிறகு கூடிவரும். நமக்கு நல்ல படிப்பினை, அனுபவத்தை தருவார். உண்மையான நண்பர்கள் யார் என்பது நமக்கு தெரிய வரும். நமக்கு எதிராக செயல் படக் கூடியவர்களின் சுய ரூபம் வெளிப்படும். சிந்தனைகள் அதிகரிக்கும். சோர்வு, சோம்பல், மனதில்
இனம் புரியாத ஒரு கலக்கம், பயம் தோன்றும். மாணவர்களுக்கு பாடம் சரியாக மனதில் பதியாமல் போகும். எந்தக் காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாத மனோபாவம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் வரலாம் அல்லது கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து தனியாக சுயமாக செயல்படுவீர்கள். குழப்பம் மன அழுத்தம் இருக்கும். பல்வேறு காரணங்களுக்காக இடமாற்றம், குடும்பத்தில் இருந்து பிரிந்து
இருப்பது போன்ற விஷயங்கள் உண்டாகும்.தனம், குடும்பம், வாக்கு ஸ்தான சனி நிறை, குறைகளை தருவார். சனி மூலம் வருகின்ற யோகம், ஏற்றம் அசுர வளர்ச்சியாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, பதவி, பொறுப்புக்கள் கிடைக்கும். ஆன்மிக சம்மந்தமான ஈடுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கூடி வர சனி அருள் புரிவார்.

பிள்ளைகளின் திருமணம் சுபமாக முடியும். இடமாற்றம் இருக்கும். தசாபுக்தி யோகமாக இருப்பவர்கள் சொந்த வீடு கட்டி கிரக பிரவேசம் செய்வார்கள். இரண்டு, நான்கு சக்கர வண்டி வாங்கும் பாக்கியத்தை தருவார். பணம் வரும், செலவுகளும் இருக்கும். அவசியத் தேவைக்காக கடன் வாங்கும் நிலை உருவாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து அயல் நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். இந்த நேரத்தில் வாக்கு வாதம், ஜாமீன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உறவுகளிடையே சில கருத்து வேறுபாடுகள் வரும்.திட, தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி தடைகளை நீக்குவார். பாராட்டு, பதக்கம், பரிசுகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் விஷயங்களை விட எதிர் பார்க்காத விஷயங்கள் தானாக நடைபெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு பாக்கிய முண்டு. சொத்து சம்மந்தமான பிரச்னைகள், வழக்குகள் சாதகமாக முடியும். வீடு, நிலம், ஃபிளாட், வாங்கும் யோகம் உண்டு. உழைப்பில்லாத செல்வம் சேரும். சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் கல்வி, திருமணம் சம்மந்தமாக செலவுகள் வரும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படலாம் பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். ஒய்வில்லாத உழைப்பு இருக்கும்.

சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனி அமரும்போது அவரவர் வயதிற்கேற்ப உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும். உத்யோகத்தில் வெளியூர் மாற்றங்கள் வரும். தாய் வழி உறவுகளிடையே சில  கருத்து வேறுபாடுகள் வரலாம். சொந்த ஊரில் சொத்து வாங்கும் அமைப்பு உண்டு. வீடு கட்ட எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். கல்வி வகையில் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொழில் வகையில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். புதிய தொழிலில் கால் பதிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஓயாத அலைச்சல், பயணங்கள் இருக்கும். பிற்கால வாழ்க்கைக்கு தேவையான அதிர்ஷ்டகரமான அமைப்புக்களை சனி பகவான் அமைத்துத் தருவார்.
பூர்வ புண்ணிய ஸ்தானமென்னும் ஐந்தாம் இடத்தில் சனி பகவான் சாதக பாதகங்களை தருவார். குறிப்பாக பெண்கள் இல்லாததை கற்பனை செய்து கொண்டு மன அமைதியை இழப்பார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் காரணமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிறந்த ஊர், வசிக்கும் ஊரில் இருந்து வௌி மாநிலம், வெளிநாடு செல்ல வேண்டியது இருக்கும். நண்பர்களிடையே வருத்தங்கள், பிரிவுகள் வரும். குடும்ப சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொடுப்பீர்கள். உயில் சொத்து உழைப்பில்லாத செல்வம் சேரும். கண், சிறுநீரக
கோளாறுகள் வந்து நீங்கும்.

 சனி 6ல் வந்து நிற்பது லட்சுமி யோகம் என்று பழைய ஜோதிட சுவடிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மள மள வென்று காரியங்கள் தானாக கூடி வரும். எதிர்பாராத தன லாபம் அடைவார்கள். எதையும் எதிர் கொள்ளும் மனோ பலத்தை சனி தருவார். சொத்து வாங்குவீர்கள், பூர்வீக சொத்துக்களை மாற்றி  அமைப்பீர்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் மீண்டும் தொடங்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குண மடைவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும் நெருங்கிய உறவுகளிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தொட்டது துலங்கும்.
சனி சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்தில் பெயர்ச்சியாக அமர்வது மிக முக்கியமான கால கட்டமாகும். எதிலும் நிதானம், கவனம் தேவை. வண்டிகளில் பயணம் செய்யும் போது அதிக கவனமாக இருப்பது அவசியம். நண்பர்களால் பிரச்னைகள் வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டில் இருந்து விலகி தனியாக தொழில் தொடங்குவார்கள். கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம், மனக் கசப்புக்கள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்து சம்மந்தமாக ஒரு மித்த கருத்து உண்டாகும். வீட்டில் வயதான தாய், தந்தை மூலம் மருத்துவ செலவுகள் வரும். பஞ்சாயத்து, ஜாமீன், வட்டி, வரவு, செலவு நகை இரவல் தருவது, ஆகியவை கூடாது. நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் அதிக எச்சரிக்கையுடன் ெசயல்படுவது அவசியம்.

சனி எட்டாம் இடத்திற்கு பெயர்வதை அஷ்ட சனி என்று சொல்வார்கள். பொதுவாக விபத்து, கிழே வழுக்கி விழுவது, அறுவை சிகிச்சை, குடும்பத்தில் பிரிவு என்றுதான் பலரும் நினைத்து வதந்திகளை பரப்புவார்கள். நிறை குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத ராஜயோகம் அமையும். வராது என்று நினைத்த பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் திடீரென்று கூடி வரும். கோயில் கும்பாபிஷேகம், ஊர் பொது காரியங்களில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். உயர் பதவியில் அமரும் பாக்கியம் கிடைக்கும். அவசிய சுய செலவுகள் அத்துடன் அநாவசிய தண்ட செலவுகள், மருத்துவ செலவுகள் இருக்கும். பேச்சில் கவனம் தேவை. நகைச்சுவையாகவும், உணர்ச்சி வசப்பட்டும் பேசும் சொற்களால் வீண் பிரச்னைகள் ஏற்படும்.பாக்கிய ஸ்தான சனி தடைகளை நீக்குவார். பிரிந்த உறவுகள் மனக் கசப்புக்களை மறந்து ஒன்று சேருவார்கள். பூர்வீகச் சொத்து சம்மந்தமாக ஒருமித்த கருத்து உண்டாகும். மனைவி வீட்டில் இருந்து பொன், பொருள், பணம் சேரும் உயர்ந்த பதவியில் அமரும் யோகம் உண்டு. புதிய எண்ணங்கள், திட்டங்கள் மனதில் தோன்றும். அரசியல் அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம், ஆதரவு கிடைக்கும். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். நாட்டிலுள்ள புண்ணிய புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவீர்கள்.

பத்தாம் இடத்தில் சனியின் அம்சங்களைப் பார்க்கும்போது. பெரிய மாற்றங்கள். வரக்கூடிய காலம் என்று சொல்லலாம். தொழில் விருத்தியாகும், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும். இடமாற்றம் எல்லா வகையிலும் வரலாம். பல ஊர்களில் வியாபாரம், தொழில் செய்யும் அமைப்பு ஏற்படும். வீடுமாற வேண்டியிருக்கும். சொத்துக்கள் சம்மந்தமாக சில முக்கிய முடிவுகள் வரும். உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் அமையும் பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடிவரும். அவரவர்கள் சார்ந்த துறைகளுக்கேற்ப புதிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அவரவர் வயதிற்கு ஏற்ப சில பிரச்னைகள் வரும். வயிறு, அஜீரணம், மூலம் போன்றவைகள் இருக்கும். கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த நேரத்தில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம் . தாயார், மற்றும் தாய் வழி  உறவுகளால் அலைச்சல், செலவுகள், வருத்தங்கள் வரும் வாய்ப்புள்ளது.

லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் இடத்தில் சனியின் ஸ்தான பலன்கள் அதிவேகமாக இருக்கும். பொதுவாக 3, 6, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும்போது அவரவர் கர்மவினை, ஜாதக பலம், தசாபுக்தி யோகத்தின்படி எதிர் பாராத யோக பலன்களை வாரி வழங்குவார். சனி கொடுத்தால் தவிட்டுப் பானையும் தங்கமாக மாறும் என்பது வழக்கு மொழி. அந்தளவிற்கு உயர்தரமான, ஏற்றமான பலன்கள் நடக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெற்றி பெற்ற பெரிய மனிதர்களின் நட்பு ஆதரவு கிடைக்கும். சொத்து பிரச்னைகள் தீரும். வராத கடன் வசூலாகும். குடும்பத்தில் சொந்த பந்தங்களிடையே மகிழ்ச்சியான நிலைகள் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கடன் பிரச்னைகள், வழக்கு சிக்கல்கள் தீருவதற்கு நல்ல வழி பிறக்கும். குடும்பத்தில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். அவரவர்கள் சார்ந்துள்ள துறை, தொழில், வியாபாரத்தில் உயர் உச்ச நிலையை அடைவார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்