SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா?

2019-07-15@ 10:54:45

இஸ்லாமிய வாழ்வியல்

‘விதி’ என்று ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். ‘அவன் இன்றி அணுவும் அசையாது’ என்றுதான் இஸ்லாமும் கூறுகிறது. இந்த விதிக் கொள்கையை நம்பாதவர்கள் சுவனம் செல்ல முடியாது என்று நபிகள் நாயகம் அவர்கள் அழுத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.“உங்களிடம் உஹத் மலையளவு தங்கம் அல்லது செல்வம் இருந்து அந்தத் தங்கம் அல்லது செல்வம் முழுவதையும் இறைவழியில் தான தர்மமாக வழங்கினாலும் நீங்கள் விதி குறித்த அனைத்து அம்சங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளாதவரை அந்த தான தர்மங்கள் உங்களிடமிருந்து ஏற்கப்படாது.

“அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள ஒன்று உங்களுக்குக் கிடைக்காதென விதியில் எழுதப்படவில்லை. உங்களுக்குக் கிடைக்காமல் போன ஒன்று உங்களுக்குக் கிடைக்கும் என்று விதியில் எழுதப்படவும் இல்லை.(அதாவது, எது கிடைக்கும் என விதியில் இருந்ததோ அது கிடைத்தது; எது கிடைக்காது என்று விதியில் இருந்ததோ அது கிடைக்கவில்லை) “இவ்வாறே விதி குறித்து நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு மாறான நம்பிக்கையில் நீங்கள் இறந்துபோனால் நரகத்தில்தான் நுழைவீர்கள்” என்று இறைத்தூதர் அவர்கள் விதியின் மீது நம்பிக்கை கொள்வது பற்றி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்கள். (ஆதாரம் - இப்னு மாஜா)

சரி, இந்த அளவுக்கு விதி பற்றிக் கூறப்பட்டுள்ளதே, அதன் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்படாமல் இருந்துவிட மார்க்கம் அனுமதிக்கிறதா? இல்லவே இல்லை. “செயல்படுங்கள்” என்று ஆர்வம் ஊட்டுகிறது இஸ்லாம்.இது குறித்து ஒரு சுவையான நிகழ்வை விவரிக்கிறார் நபித்தோழரான அலீ அவர்கள். “இறந்துபோன ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக இடுகாட்டில் (மதீனாவில் உள்ள பகீஉ எனும் இடுகாடு) நாங்கள் கூடியிருந்தோம். அப்போது நபியவர்களின் கையில் ஒரு குச்சி இருந்தது. அதன் மூலம் தரையில் கீறிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.“பிறகு தம் தலையை உயர்த்தி, ‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடமும் நரகத்திலுள்ள தமது இருப்பிடமும் எழுதப்படாமல் உங்களில் யாரும் இல்லை’ என்று கூறினார். அப்போது நபியவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே, நாங்கள் இதையே நம்பிக்கொண்டு (அதாவது, விதியை மட்டுமே நம்பிக்கொண்டு) ஏதும் செய்யாமல் இருந்துவிடலாமா?” என்று தோழர்கள் கேட்டனர்.

“இல்லை. நீங்கள் செயலாற்றுங்கள். இதையே நம்பிக்கொண்டு இருந்துவிடாதீர்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் அவர் படைக்கப்பட்டதை அடைய வகை செய்யப்படும்” என்று கூறிய நபிகளார், பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினார்.“எவர் இறைவழியில் பொருளை வழங்கினாரோ, மேலும் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகியிருந்தாரோ அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். எவர் கஞ்சத்தனம் செய்கிறாரோ, மேலும் தன் இறைவனைப் பொருட்படுத்தாமல் நடந்தாரோ, இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ அவருக்குக் கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.” (குர்ஆன் 92:5-10)இதிலிருந்து தெளிவாகும் உண்மை, விதியையும் நாம் நம்ப வேண்டும். அதே சமயம் விதியின் மீது பழிபோட்டு சோம்பி இருந்து விடாமல் நாம் தொடர்ந்து செயல்படவும் வேண்டும் என்பதுதான்.இம்மையிலும் மறுமையிலும் நம் விதியும் கதியும் நல்லவிதமாக அமைய இறையருள் துணை நிற்கட்டும் என்று பிரார்த்திப்போம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப் படுத்தியவன். மேலும் தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்.” (குர்ஆன் 91:9-10)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்