SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவருளால் திருமணம் கைகூடும்!

2019-07-13@ 10:25:39

?2016ம் ஆண்டின் இறுதியில் என் மகனுக்கு விபத்து உண்டாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிர் பிழைத்தது கடவுள் கருணை. ஒரு வருடம் கழித்து வலிப்பு வந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அது முதல் பேசுவதில் பிரச்னை தோன்றி உள்ளது. என் மகன் எப்பொழுது முழுமையாக குணம் அடைவான்? பரிகாரம் கூறுங்கள்.
- குணசுந்தரி, கோவை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் குரு நீசம் பெற்றிருந்தாலும், ஜென்ம லக்னத்தில் அமர்ந்து அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் பயப்படும்படியாக பல விஷயங்களைக் கூறினார்கள் என்றும், கடவுளின் கருணையால் அது போல் எதுவும் நடக்கவில்லை என்றும் கடிதத்தில் நீங்கள் எழுதியிருப்பது நூற்றுக்கு நூறு சதவீதம் அவரது ஜாதகத்துடன் பொருந்திப் போகிறது. எத்தனையோ பிரச்னைகள் அவருக்கு உண்டாகியிருந்தாலும் அவை அத்தனையும் இறைவனின் அருளால் விலகி வருகிறது.

தற்போது உண்டாகியிருப்பது ஒரு சிறிய பாதிப்பு அவ்வளவு தான். இதனை ஒரு பெரிய குறையாக எண்ணாமல் அவரை உற்சாகப்படுத்தி செயல்பட வையுங்கள். உங்கள் மகன் மிகுந்த திறமை சாலி. செவ்வாய், சுக்கிரன் ,ராகுவின் இணைவும், சனி, கேதுவின் இணைவும் இதுபோன்ற சிறு சிறு சங்கடங்களை அவ்வப்போது தந்துகொண்டு தான் இருக்கும். இவை எல்லாவற்றையும்விட மிகப்பெரிய கண்டத்தில் இருந்து உங்கள் மகன் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றால் அவர் இந்த உலகத்தில் இன்னும் பல பெரிய விஷயங்களை சாதிக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் பேசித்தான் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை.

தன் மனதில் தோன்று வதை எழுத்து வடிவில் வெளிப்படுத்தியும் சாதிக்க இயலும். தற்போதைய கிரஹ நிலையின் படி அவரது தொழில் என்பது சிறப்பான வளர்ச்சியைக் காணும் வகையிலேயே அமைந்துள்ளது. உங்கள் மகனின் ஜென்ம நட்சத்திரம் ஆன கேட்டை வருகின்ற நாளில் பிரதி மாதந்தோறும் மருதமலைக்குச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதோடு ஏதேனும் மூன்று வறியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினையும் செய்து வாருங்கள். மகனின் ஆரோக்யத்திலும், வாழ்வியல் சூழலிலும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பீர்கள்.

?36 வயதாகும் எனக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் உண்டு. நான் காஞ்சி மகா பெரியவரை குருவாக நினைத்து வழிபட்டு வருகிறேன். நாம் அவரைப் போல் என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு  பரிகாரம் கூற விரும்புகிறேன். எனக்கு அந்த பிராப்தம் கிடைக்குமா? வீட்டில் குடும்பத்தினருடன் எப்போதும் பிரச்னை உண்டாகி கோபம் வருகிறது. இவை எப்போது தீரும்?
- அசோக், சங்கரன்கோவில்.

சந்நியாச யோகத்தினை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமில்லை. அதிலும் திருமணமாகி ஒரு பிள்ளைக்குத் தந்தையாகிய உங்களுக்கு அதற்கான தகுதி வந்து சேராது. குடும்பத்தினருடனேயே கோபம் கொள்ளும் உங்களால் எப்படி மனதினை அடக்கி ஆள இயலும்? திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின் படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. எட்டாம் இடத்துச் சந்திரன், ராகு அநாவசியமான குழப்பத்தைத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எதிர் பார்ப்பது போல் வருகின்ற 24.03.2020க்குப் பின் ஒரு குருவினை சந்திப்பீர்கள்.

அவரது வழிகாட்டுதலின் பேரில் உங்கள் வாழ்க்கைப் பயணம் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும். ஜென்ம லக்னத்திலேயே உங்கள் ஜாதகத்தில் குரு அமர்ந்திருப்பதால் குருவின் அனுக்ரஹம் என்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதுவரை வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் அளவிற்கு நாம் வளர வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் மனம் பக்குவப்பட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் குடும்பத்தினரிடம் முழுமையாக அன்பு செலுத்துங்கள்.

நம்மால் ஆன சிறு சிறு உதவியினைச் செய்வதன் மூலமாகவும் அடுத்தவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண இயலும். பிரதி வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும் போது தேனி அருகில் அமைந்துள்ள வேதபுரி பிரக்ஞா தட்சிணாமூர்த்தி பீடத்திற்குச் சென்று சுவாமி ஓம் காரானந்தா குருஜியைச் சந்தித்து அருளாசி பெறுங்கள். உங்கள் சிந்தனை தெளிவு பெறுவதோடு இந்த உலக வாழ்வினையும் முழுமையாக அனுபவிப்பீர்கள்.

?நான் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். தந்தை இறந்துவிட்டார். தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. என் மனைவிக்கு கண் தெரியவில்லை. மன நோயாளி போல் ஆகிவிடுகிறாள். நான் எப்போது விடுதலை ஆவேன்? பரிகாரம் கூறுங்கள்.
 - தங்கப்பாண்டி, மதுரை மத்திய சிறை.

முத்து முத்தான கையெழுத்து, கடிதம் எழுதியிருக்கும் முறை ஆகியவை உங்களை நல்ல கல்வியறிவு பெற்றவர் போல் காட்டுகிறது. இருந்தும் விதிப்பயனின் காரணமாக நிகழ்ந்த தவறுக்கு பிராயச்சித்தமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறீர்கள். வாலிப வயதிலேயே சிறைக்குள் செல்லும் அளவிற்கு விதி தன் பணியைச் செய்திருக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. ராகு தசை முடிந்து குரு தசை துவங்கும் காலத்தில் அதாவது அடுத்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் விடுதலை அடைந்து விடுவீர்கள்.

குருபகவான் உங்கள் ஜாதகத்தில் சுகத்தினைத் தரும் நான்காம் வீட்டில் உச்ச பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். குருவின் அருளால் மனப்பக்குவம் அடைவீர்கள். மனைவியோடு நல்லபடியாக குடும்பம் நடத்த இயலும். வாழ்வினில் இழந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் முயற்சியைத் துவக்குங்கள். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டபின் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. விடுதலை ஆன பிறகு உங்களால் சுயதொழில் செய்து சம்பாதிக்க இயலும். ஆன்மிக அலை நிறைந்த பகுதியில் அதாவது ஆலய வளாகம் அல்லது குருமார்களின் திருமடங்கள் போன்ற இடங்களில் உங்கள் பணி அமையும்.

சுப்ரமணிய சுவாமியை மனதில் தியானித்து தினமும் காலை மாலை இருவேளையும் வணங்கி வாருங்கள். ஓய்வு நேரத்தில் ‘ஓம் சரவணபவ’ எனும் மந்திரத்தை எழுதுவதும், மனம் சஞ்சலப்படுகின்ற வேளையில் ‘காக்க காக்க கனகவேல் காக்க’ எனும் வரிகளை உச்சரித்து வருவதாலும்
உங்கள் பிரச்னைக்கான தீர்வினைக் காண்பீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

?எங்கள் பேரன் திருமணப் பேச்சை எடுத்தாலே கோபப்படுகிறான். எல்லோர் மேலேயும் எரிந்து விழுகிறான். அவனுக்குத் திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? திருமணம் எப்போது நடைபெறும்?
- பார்வதி, கர்நாடகா.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து
வருகிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி தற்போது திருமண யோகம் என்பது வந்துவிட்டது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள குருபெயர்ச்சி மேலும் சாதகமான பலனைத் தரும். இவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே.

அவரது மனதிற்குப் பிடித்தமான பெண்ணே வாழ்க்கைத் துணைவியாக அமைவார் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது. உங்கள் பேரனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க இயலாது. அவராக வந்து சொல்லும்போது அவர் அடையாளம் காட்டும் பெண்ணையே திருமணம் செய்து வையுங்கள். வியாழன் தோறும் குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். 26.09.2020 விற்குள் அவரது திருமணம் நடந்துவிடும். நல்ல குணவதியான பெண்ணை கரம்பிடிப்பார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?72 வயதாகும் என்னிடம் மகனும் மருமகளும் சரிவரப் பேசுவதில்லை. தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து எனது மகனின் கடனை வட்டியுடன் அடைத்தேன். கடைசி காலத்தில் என் மகன் என்னைக் காப்பாற்றுவாரா?
- சின்னசாமி, கோவை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் யார் கையையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இறுதி மூச்சுவரை சொந்தக்காலில் நிற்க முடியும். அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனுக்குத்தான் உங்கள் ஆதரவு என்பது தேவை. பெற்ற தந்தைக்கு பொருளுதவி செய்யாவிட்டாலும், உடல் ரீதியாகவும், உள்ளன்புடனும் பணிவிடை செய்ய வேண்டியது ஒரு மகனின் கடமை. இதை அவர் வெகுவிரைவில் உணர்ந்து கொள்வார். அவராக வந்து அழைக்கும் வரை நீங்கள் உங்கள் நிலையிலேயே உறுதியாக நில்லுங்கள்.

யாருக்காகவும், எந்த சூழலிலும் உங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். 14.07.2020க்குப் பின் உங்கள் மகன் உங்களை நாடி வர வேண்டிய சூழல் உருவாகும். அதுவரை பொறுத்திருங்கள். பெற்ற தந்தைக்கு தான் செய்ய வேண்டிய கடமையை வேறொரு நண்பரின் மூலமாக அறிந்துகொள்வார். தந்தை ஆயிரம் தவறு செய்திருந்தாலும், தன்னை இந்த உலகிற்குத் தந்த பெற்றோருக்கு ஒரு மகன் செய்ய வேண்டிய கடமையில் இருந்து எந்தச் சூழலிலும் தவறக்கூடாது என்பதை அவர் புரிந்துகொள்ளும் காலம் நிச்சயமாக வரும். சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று சோமாஸ்கந்தரை வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் துன்பத்திற்கான தீர்வு கிடைக்கக் காண்பீர்கள்.

முருகனும் தமிழும்

முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு. தமிழிலும் வல்லினம் ஆறு. மெல்லினம் ஆறு. இடையினம் ஆறு. கரங்கள் பன்னிரண்டு, தமிழிலும் உயிர் எழுத்துக்கள் 12. முருகனின் திருக்கரத்தில் உள்ள வேல், வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஆயுதம். அது போல தமிழில் உள்ள ஆயுத எழுத்து வேறு எந்த உலக மொழிகளிலும் இல்லை. இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று தன்மைகளை முருகனின் வேலாயுதம் கொண்டுள்ளது போல, இவற்றைக் குறிக்கும் மூன்று புள்ளிகளைக் கொண்டது தமிழ் மொழியின் ஆயுத எழுத்து.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்