SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முக்கூடலில் மகிழ்வுற்றிருக்கும் முக்கண்ணன்

2019-07-11@ 10:10:59


மூன்று ஆறுகள் ஒன்றாகக் கூடும் இடங்கள் மிகவும் புனிதம் மிக்கதாகப் போற்றப்படுகின்றன. வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடுமிடமான அலகாபாத்திற்கு அருகிலுள்ள திரிவேணி சங்கமம் பிரயாகை என்றழைக்கப்படுகிறது. இங்கு, பெருமான் சோமேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இதற்குத் தீர்த்தராஜன் என்பதும் பெயராகும். அனைத்துப் புராணங்களும் இதன் மகிமையை விரிவாகக் கூறுகின்றன.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத்திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா எனப்படும் நீராடும் விழா நடைபெறுகிறது. இதற்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கூடுகின்றனர். இதற்கு இணையாகத் தென்னாட்டில் நடைபெறும் விழா குடந்தை மகாமகப் பெருவிழாவாகும்.

விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள கூடலையாற்றூர், தேவாரப் பாடல் பெற்ற பதியாகும். இங்கு மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடுகின்றன. சங்கமத்துறையில் ஆலயம் உள்ளது. இங்குள்ள இறைவர் நர்த்தனவல்லபேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இந்த இடம் தட்சணப்பிர போலவே இங்கும் ஆலமரம் உள்ளது. இங்கு கங்கை மணிமுத்தாறாகவும், லட்சுமி வெள்ளாறாகவும், நதி உருவம் கொண்டு ஓடி வருவதாகவும் அவர்களுடன் சரஸ்வதிதேவி அந்தர்வாகினியாகப் பிரவேசிக்கிறாள் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தலத்தின் சிறப்புக்களை இவ்வூர் தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்று பள்ளியின் முக்கூடலாகும். நன்னிலத்திற்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலம் வெள்ளாற்றின் கரையில் உள்ளதாகும். ஆலயத்தின் முன்னேயுள்ள தீர்த்தம் முக்கூடல் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றின் சங்கமமாகக் கொள்ளப்படுகிறது. இதையொட்டி இது ‘முக்கூடல் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. இறைவன் முக்கூடல் நாதர், அம்பிகை மைமேவுகண்ணி, மக்கள் இவ்வூரை குருவிராமேஸ்வரம் என்றழைக்கின்றனர்.

கொங்குநாட்டில் காவிரியோடு பவானியாறும் அமுத நதியும் கலக்குமிடம் ‘பவானி முக்கூடல்’ ஆகும். ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் பெரிய சிவாலயம் உள்ளது.  இறைவன் சங்கமேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தேவாரத்துள் இத்தலம் நணா என்றும், இறைவர் கல்வெட்டுகளில் நணா உடையார் என்றும் குறிக்கப்படுகின்றார். (பிரயாகை எனும் திரிவேணி சங்கமத்தில் கங்கையும், யமுனையும் மட்டுமே தெரியும். சரஸ்வதி பூமியின் அடியிலிருந்து வந்து கலக்கிறது. இதுபோலவே பவானியிலும் காவிரியும், பவானியாறும் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அமுத நதி என்பது இத்தலத்திலுள்ள அமுதலிங்கத்தின் அடியிலிருந்து அமுத ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கலப்பதாகக் கூறுகின்றனர். இதற்குத் தட்சிணப் பிரயாகை, திரிவேணி சங்கமம் எனும் பெயர்களும் வழங்குகின்றன.)

தொண்டை நாட்டில் பாலாற்றுடன் சேயாறும், வேகவதியாறும் கலக்குமிடம் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் உள்ளது. இந்த இடம் திருமுக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தென்கோடியில் மூன்று கடலும் சங்கமிக்குமிடம் கன்னியாகுமரியாகும். இங்கு சிவபெருமான் காசி விசுவநாதர், குகநாதேஸ்வர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். மூன்று மலைகள் கூடியிருப்பதால் குற்றால மலைக்குத் திரிகூட மலை என்ற பெயர் வழங்குகிறது. இம்மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு எனும் சிறு நதி மலையிலிருந்து அருவியாகப் பொங்குமாகடல் எனும் மலைப்பிளவில் வீழ்ந்து வழிந்து ஓடுகிறது. இதனை சிவமது கங்கை என்றழைக்கின்றனர். இதனுடன் சித்ரா நதியும் கூடுமிடம் முக்கூடல் எனப்படுகிறது. இத்தலத்தின் மீது முக்கூடற்பள்ளு எனும் சிற்றிலக்கியம் பாடப்பட்டுள்ளது.

- ஆட்சிலிங்கம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்