SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடுவனாய் வந்த வேதநாயகன்!

2019-07-02@ 09:58:19

ஸ்ரீ ராமானுஜர் காஞ்சியில் இருந்த சமயம். அருகிலுள்ள திருப்புட் குழியில் வாழ்ந்து வந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடன் கோவிந்தபட்டர் என்பாரும் இருந்தார். இவர் ராமானுஜருக்குத் தம்பிமுறை (சித்தியின் மகன்). குருகுல வாசத்தில் வேதாந்த பாடங்களில் ராமானுஜருக்கும் யாதவப் பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதனால், ராமானுஜரின் மேல் யாதவப் பிரகாசருக்குக் கசப்பு மனப்பான்மை உண்டாயிற்று. அந்த நேரத்தில் அந்நாட்டு மன்னனின் மகளுக்குப் பேய் பிடித்திருந்தது.

மன்னனின் வேண்டுகோளின்படி யாதவப் பிரகாசர்தான் அந்தப் பேயை விரட்டி மகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி, தன் சீடர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். உடன் ராமானுஜரும் சென்றார். யாதவப் பிரகாசரைக் கண்ட பேய் பிடித்த அரசனின் மகள் அவரை அவமானப்படுத்தினாள்.

யாதவப் பிரகாசரால் அவளிடமிருந்து பேயை விரட்ட முடியவில்லை. அதே சமயம் அவருடன் வந்திருந்த ராமானுஜர், தான் அந்தப் பெண்ணைப் பீடித்திருக்கும் பேயிடமிருந்து காப்பாற்றி நல்ல நிலைமைக்குக் கொண்டு வருகிறேன் என்று கூறி சில மந்திரங்களைக் கூற, பேய், அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்றது.

தன் மகளுக்கு நல்ல நிலைமை ஏற்பட்டதைக் கண்ட மன்னன் அவரை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தான். இதனால் ஏற்பட்ட அவமானம், யாதவப் பிரகாசருக்கு மேலும் மனக்கசப்பைத் தந்தது. ராமானுஜரை எப்படியாவது கொன்று விட முடிவு செய்து, தன் சீடர்களுடன் (கோவிந்த பட்டரைத் தவிர்த்து) ஆலோசனை செய்து ஒரு திட்டம் வகுத்தார். சீடர்களுடன் காசி யாத்திரை செல்வதென்றும், அங்கு ராமானுஜரை கங்கையில் தள்ளிக் கொன்று விடவும் முடிவு செய்தனர். அதன்படி யாதவப் பிரகாசர் தன் சீடர்களுடன் காசி யாத்திரையை மேற்கொண்டார். குழுவில் நடந்த விஷயங்கள், எப்படியோ கோவிந்தபட்டருக்குத் தெரிந்துவிட்டது.

இந்த விஷயத்தை ராமானுஜரிடம் சொன்ன கோவிந்தபட்டர், யாத்திரையில் அவர் முழுமையாகக் கலந்து கொள்ளாமல் எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே ராமானுஜரும் ஒருவாறாக யாத்திரையிலிருந்து தப்பித்து, காஞ்சியை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். காட்டு வழிகளில் ராமானுஜர் நடந்து செல்லும் போது இரவு வந்து விட்டது. மிகவும் களைத்துப் போன அவர், அங்கு ஒரு மரத்தடியில்  ஒய்வெடுக்க நினைத்தபோது, அவ்வழி வந்த ஓர் வேடனும் வேடுவச்சியும் ராமானுஜரைக் கண்டு விவரம் அறிந்து அவரின் துணைக்காக அவருடனேயே தங்கினார்கள்.

விடியற்காலையில் வேடுவச்சி தனக்கு தாகம் எடுப்பதாகவும் அருகில் உள்ள நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ள, ராமானுஜரும் நீர் கொண்டுவரச் சென்று திரும்பியபோது வேடனையும் வேடுவச்சியையும் காணாமல் திகைத்தார். ‘தான் காஞ்சி செல்வதற்கு வழி காட்டுவதாகக் கூறினார்களே! அவர்களைக் காணவில்லையே, என்ன செய்வது ?’ என்று காஞ்சி வரதனை மனதில் நினைத்தபடியே நடக்கலானார்.

அப்போது சூரிய உதயமும் ஆகிவிட்டது. ஜன நடமாட்டமும் ஆரம்பித்தது. ஆனாலும், தான் எங்கிருக்கிறோம் என்பது தெரியவில்லையே என்று அங்கு சென்றவர்களிடம் விசாரித்தார். அவர்களும் தூரத்தில் காஞ்சி வரதர் கோயில் ராஜகோபுரம் தெரிவதைக் காட்டி, தாங்கள் காஞ்சியில் தான் இருக்கிறீர்கள் எனத் தெரிவித்தனர்.

காஞ்சி வரதராஜப் பெருமானின் ராஜகோபுரத்தைக் கண்டவுடன் ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. பெருந்தேவித் தாயாரும், பேரருளாளனுமே வேடன், வேடுவச்சியாய் வந்து தன்னைக் காஞ்சியில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்று மிகவும் மகிழ்ந்து, வரம் தரும் மாமணி வண்ணனான வரதராஜனின் கருணையை வியந்து, வரதராஜப் பெருமாள் கோயிலை நோக்கிச் சென்றார்.

ராமானுஜர் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவத்தை நினைவுறுத்தும் விதமாக, இன்றும் பிரதி வருடம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ‘அனுஷ்டான குள வைபவம்’ என்ற ஒரு வைபவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்குப் பத்தாம் நாள் இராப்பத்து / சாற்றுமறை நடக்கும். அதாவது, வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மார்கழியில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகப் பத்து நாளும், வைகுண்ட ஏகாதசியைத் தொடர்ந்து பத்து நாட்களும் நடக்கும். அதன் நிறைவு நாள், ‘ஆழ்வார் திருவடி தொழில்’ என்ற வைபவம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் இயற்பா சாற்றுமறை என்ற வைபவம், இதற்கு அடுத்த நாள் நடைபெறும் வைபவமே ‘அனுஷ்டான குள உத்சவம்’.

ராமானுஜர் காசியிலிருந்து வரதராஜர் அருளால் திரும்பியது முதல், காஞ்சியில் வசித்த காலத்தில், அருளாளனின் ஆராதனைக்காக வேடுவச்சியால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட நீர் நிலையிலிருந்து  தினமும் நீர் கொண்டு வருவாராம் ராமானுஜர். மேலும் அங்கு தன் அனுஷ்டானங்களை (பூஜைகள்)ெசய்து வந்தமையால், அந்த நீர் நிலைக்கு ‘அனுஷ்டான குளம்’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்த இடமானது காஞ்சியில் இருந்து வந்தவாசி பாதையில் அமைந்துள்ள செவிலிமேடு கிராமத்தில் உள்ளது.

இன்றும் அந்தக் குளத்தையும் (சாலைக்கிணறு என்றும் பெயர்). ராமானுஜர் சந்நதியையும் செவிலிமேட்டில் காணலாம். மேற்படி திருவிழா நாளில், ராமானுஜரும், வரதராஜப் பெருமானும் காலை காஞ்சியிலிருந்து  புறப்பட்டு, மதியம் அங்கு சேர்ந்து அங்குள்ள மண்டபத்தில் இருவருக்கும் திருமஞ்சனம், நைவேத்தியம் நடந்து, மாலையில் கிளம்பி காஞ்சிபுரம் வந்தடைவார்கள். திரும்பும் போது வரதராஜப் பெருமானை வேடுவ வேஷத்தில் அலங்கரித்து காஞ்சிக்குத் திரும்புவது வழக்கம்.

காஞ்சி திரும்பும்போது வழியில் அமைந்துள்ள தூப்புல் (ஸ்வாசி தேசிகனின் அவதாரத்தலமும் , தீபப் பிரகாசர் திருக்கோயிலும் அமைந்துள்ளது சந்நதியிலிருந்து ஸ்வாசி தேசிகன் - வரதராஜப் பெருமானையும் ராமானுஜரையும் எதிர் கொண்டு அழைத்து மரியாதை செய்வார். பின்பு, வரதராஜப் பெருமானும் ராமானுஜரும் திருக்கோயிலுக்குத் திரும்புவார்கள்.

ராமானுஜர் சாலைக் கிணற்றிலிருந்து வரதராஜப் பெருமானின் நித்ய ஆராதனைக்கு நீர் கொண்டு வந்ததன் நினைவாக இன்றும் சாலைக் கிணற்று நீர் நித்தமும் கொண்டு வரப்படுகிறது. மேலும், அனுஷ்டான குளப் பகுதியில் (சாலைக் கிணறு) அமைந்திருக்கும் ராமானுஜர் சந்நதியில், ராமானுஜருக்குப் பிரதி மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் விசேஷ வைபவ ஆராதனைகளை நடத்துகிறார்கள். தற்போது செவிலிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் இவ்வைபவம் நடந்து வருகிறது.

எம்.என். ஸ்ரீ நிவாசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்