SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரதராஜப் பெருமாள் உணர்த்தும் தத்துவம்!

2019-07-01@ 17:25:55

திருமாலை அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பிரம்மா தியானம் செய்தார். அந்த தியானம் கைகூடாத நிலையில், திருமாலே பிரம்மாவுக்கு அஸ்வமேத யாகம் செய்யும்படி ஆலோசனை கூறி, அதைக் காஞ்சியில் செய்யுமாறு வழிகாட்டி, யாகத்துக்கு இடையில் வந்த தடைகளைப் போக்கி, முடிவில் தானே வேள்விச் சாலையில் தரிசனமும் தந்து அருள்புரிந்தார்.

இதிலிருந்து திருமாலை அடைய வழியாகத் திருமாலே இருக்கிறார் என்னும் தத்துவத்தை நாம் உணரமுடிகிறது. உதாரணமாக, மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்ல விரும்பும் ஒருவருக்கு இலக்கு சென்னை. அதற்குரிய சாதனம் என்பது பேருந்தாகவோ, புகைவண்டியாகவோ, விமான
மாகவோ இருக்கலாம். ஆனால் இறைவனை அடைவதைப் பொறுத்தவரையில் அடைய வேண்டிய இலக்கும் இறைவன்தான், அடைவதற்குரிய வழியும் இறைவன் தான்.

வரதராஜப் பெருமாளைக் குறித்து வரதராஜ பஞ்சாசத் என்ற ஐம்பது ஸ்லோகங்கள் இயற்றினார் வேதாந்த தேசிகன். அதன் நான்காவது ஸ்லோகத்தில்,
“கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகுஸங்குசித ப்ரகாச:
தன்மே ஸமர்ப்பய மதிம் ச ஸரஸ்வதீம் ச
த்வாம் அஞ்ஜஸா ஸ்துதிபதைர்யதஹம்
தினோமி”

“வரதா! உன்னைத் துதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டேன். ஆனால் என்னால் உன்னை எப்படித் துதிக்க இயலும்? நீயே உனது கருணையால் எனக்கு அறிவையும் வார்த்தைகளையும் தந்தாயாகில், நீ தந்தவற்றைக் கொண்டு உன்னையே துதிசெய்வேன்!” என்கிறார்.

இக்கருத்தையே சுருக்கமாக “ஆறும் அவனே, பேறும் அவனே” என்று சொல்வார்கள். ஆறு என்றால் வழி, பேறு என்றால் இலக்கு. வழி, இலக்கு இரண்டாகவும் அவரே இருக்கிறார். இதைக் கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்கிறது. காஷ்டா என்றால் இலக்கு, கதி என்றால் வழி.
இறைவனை அடைய இறைவனே வழி என்று உணர்வது தான் சரணாகதி. அதை உணர்த்திய வரதராஜப் பெருமாளின் திருவடிகளிலே தாம் சரணாகதி செய்தமையை, அடைக்கலப்பத்து என்ற பத்துப் பாடல்களாலே தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன். அந்தப் பாடல்களையும் அவற்றின்
பொருளையும் காண்போம்:

“பத்திமுதலாம் அவற்றில் பதியெனக்குக் கூடாமல்
 எத்திசையும் உழன்றோடி இளைத்துவீழும் காகம்போல்
முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் கச்சிதனில்
 அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்நான் புகுந்தேனே”

ராம பாணத்திலிருந்து தப்பிக்க எண்ணிய காகம் மூவுலகைச் சுற்றித் திரிந்து வேறு கதியற்று முடிவில் ராமன் திருவடிகளிலே எப்படி சரண்புகுந்ததோ, அவ்வாறே பிறவிப் பிணியில் இருந்து தப்பிக்க எண்ணிய அடியேன், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் உள்ளிட்டவற்றைச் செய்ய
இயலாதவனாக, வேறு கதியற்றவனாக, முக்தி தரும் நகரங்களாகிய அயோத்தியா, மதுரா, மாயா, காசி, அவந்திகா, துவாரகை, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களுள் முக்கியமானதான காஞ்சியில் குடிகொண்டிருக்கும் வரதராஜப் பெருமாளின் திருவடிகளே கதியென்று சரண்புகுந்தேன்.

“சடைமுடியன் சதுமுகனென்று இவர்முதலாம் தரமெல்லாம்அடையவினைப் பயனாகி அழிந்துவிடும் படிகண்டுகடிமலராள் பிரியாத கச்சிநகர் அத்திகிரிஇடமுடைய அருளாளர் இணையடிகள் அடைந்தேனே”பிரம்மா, ருத்திரன் உள்ளிட்ட தேவப் பதவிகளும் கூட கர்மவினைக்கு உட்பட்டவையே என்றுணர்ந்து, சிற்றின்பங்களில் ஆசை வைக்காமல், பெருந்தேவியோடு கூடியிருக்கும் பேரருளாளப் பெருமாளைச் சரணடைந்தேன்.

“தந்திரங்கள் வேறின்றித் தமது வழி அழியாது
மந்திரங்கள் தம்மாலும் மற்றுமுள உரையாலும்
 அந்தரங்கண்டு அடிபணிவார் அனைவர்க்கும் அருள்புரியும்
சிந்துரவெற்பு இறையவனார் சீலமலது அறியேனே”
அஷ்டாங்க யோகம் செய்து முக்தி பெறுவது அரிதாயிருக்க, பேரருளாளப் பெருமாளோ, தமது திருவடிகளில் சரணாகதி செய்த அனைவருக்கும் அனைத்துப் பயன்களையும் தந்தருள்பவராகத் திகழ்கிறார். அவரது அந்த எளிமையையே எப்போதும் எண்ணியிருக்கிறேன்.
“காகம் இராக்கதன் மன்னர் காதலி கத்திரபந்துநாகம்
அரன் அயன் முதலா நாக நகரார்
தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்
செய்தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது
அடைந்தேனே”
காகாசுரன் என்னும் காகம், விபீஷணன் என்னும் அரக்கன், மன்னர்தம் காதலியான திரௌபதி, க்ஷத்திரபந்து என்னும் அரசன், காளிங்கன் என்னும் பாம்பு, பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் என்று தன்னை சரணடைந்த அனைவருக்கும் இம்மை-மறுமைக்குரிய அனைத்து அருள்களையும் செய்தருளிய அத்திகிரி அருளாளர் திருவடிகளை நான் சரணடைந்தேன்.

“உகக்குமவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து உறவுகுணம்
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவல் என வரித்து
 சகத்திலொரு புகலில்லா தவமறியேன்
மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனை நல் அடைக்கலமாய் அடைந்தேனே”

பெருமாளுக்கு விருப்பமானவற்றையே அடியேனும் செய்து, அவருக்கு விருப்பமில்லாதவற்றை விலக்கி, அவருக்கும் அடியேனுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொண்டு, அவர் காத்தருள்வார் என்று உறுதி பூண்டு, என்னைக் காத்தருள வேண்டுமென அவரிடம் பிரார்த்தித்து, வேறு புகலற்றவனாயிருக்கும் அடியேன், காஞ்சீயில் விளங்கும் கருணை மிக்க பேரருளாளப் பெருமாளை அடைக்கலம் புகுந்தேன்.
“அளவுடையார் அடைந்தோர்க்கும் அதனுரையே கொண்டவர்க்கும்
வளவுரைதந்து அவனருளே மன்னிய மாதவத்தோர்க்கும்
களவொழிவார் எமரென்ன இசைந்தவர்க்கும் காவலராம்
துளவமுடி அருள்வரதர் துவக்கிலெனை
வைத்தேனே”

சரணாகதி பற்றிய அறிவோடு சரணடைவோர்க்கும், அத்தகைய அறிவில்லாத போதும் நாம் பிரார்த்தித்தால் அவன் காத்தருள்வான் என்ற நம்பிக்கையுடன் சரணம் என்று சொல்பவர்க்கும், தனக்காக ஆசார்யன் பெருமாளிடம் செய்த சரணாகதியில் அடங்கி இருப்பவர்க்கும், மிகவுயர்ந்த பக்தர் பெருமாளிடம் செய்த சரணாகதியில் அடங்கி இருப்பவர்க்கும் என இவர்கள் அனைவருக்கும் காவலராக இருந்து காக்கும் வரதனின் திருவடிகளில் அடியேனை நிலைநிறுத்தினேன்.

 “திண்மை குறையாமைக்கும் நிறைகைக்கும் தீவினையால்
உண்மை மறவாமைக்கும் உளமதியில்
உகக்கைக்கும்
தண்மை கழியாமைக்கும் தரிக்கைக்கும்
தணிகைக்கும்
 வண்மையுடை அருளாளர் வாசகங்கள்
மறவேனே”
சரணாகதி செய்தபின், பெருமாள் காப்பார் என்ற உறுதி நிலைத்திருப்பதற்காகவும், ஞானம் நிறைவதற்காகவும், நம் முன் பாபங்களால் அறிவு குன்றாதிருப்பதற்காகவும், ஞானத்தால் மகிழ்வதற்காகவும், நாம் தாழ்ந்தவர் என்ற எண்ணம் நீங்காதிருப்பதற்காகவும், மோட்சம் பெறும்வரை உயிர்தரித்திருப்பதற்காகவும், உலகியல் துன்பங்களை மறந்து ஆறியிருப்பதற்காகவும் “மா சுச:” (அஞ்சாதே!) என்று வரதராஜப் பெருமாள் சொன்ன வார்த்தைகளை நெஞ்சில் கொள்வேன்.

(இன்றும் காஞ்சீ வரதராஜப் பெருமாள் தமது திருக்கரத்தில் மா சுச: என்ற
வாசகத்தை ஏந்தி இருப்பதைக் காணலாம்.)
“சுருதிநினைவு இவையறியும் துணிவுடையார் தூமொழிகள்
பரிதிமதி ஆசிரியர் பாசுரம்சேர்ந்து அருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளால் கலக்கமறுத்து அத்திகிரி
பரிதிமதி நயனமுடைப் பரமனடி பணிந்தேனே”

வேத சாஸ்திரங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள், ஆசாரியர்களின் உபதேசங்கள் இவற்றை ஆராய்ந்து, தெளிவு பெற்று, ஞானமென்னும் வாளால் அறியாமையை அறுத்து, சூரிய சந்திரர்களைக் கண்களாக உடைய வரதராஜப் பெருமாள் திருவடிகளைப் பணிந்தேன்.

“திருமகளும் திருவடிவும் திருவருளும்
தெள்ளறிவும்
அருமையிலாமையும் உறவும் அளப்பரிய அடியரசும்
கருமம் அழிப்பளிப்பமைப்பும் கலக்கமிலா வகைநின்ற
 அருள்வரதர் நிலையிலக்கில் அம்பென நான் அமிழ்ந்தேனே”

திருமகளைப் பிரியாதவரும், அழகிய திருமேனியை உடையவரும், கருணை மிக்கவரும், ஞானம் நிறைந்தவரும், எளிமை மிக்கவரும், சேதனாசேதனங்களைத் தனக்கு உடலாகக் கொண்டவரும், அனைத்தையும் ஆள்பவரும், உலகைப் படைத்துக் காத்து அழிப்பவருமான பேரருளாளன் திருவடிகளில் பிரிக்க முடியாத படி கலந்தேன்.

“ஆறுபயன் வேறில்லா அடியவர்கள் அனைவர்க்கும்
ஆறுமதன் பயனுமிவை ஒருகாலும் பலகாலும்
ஆறுபயன் எனவேகண்டு அருளாளர்
அடியிணைமேல்
கூறிய நற்குணவுரைகள் இவைபத்தும்
கோதிலவே”

பேரருளாளன் திருவடிகளில் ஒரே ஒரு முறை சரணாகதி செய்தாலே போதும். அதனால் கிடைக்கும் பலனாகிய முக்தி காலவரையறையின்றி எப்போதும் அனுபவிக்கத்தக்கதாகும். தன்னை அடைவதற்குத் தானே வழியாகத் திகழ்கிறார் வரதராஜப் பெருமாள்.

காஞ்சி எம்.பாஸ்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்