SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கியது : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

2019-07-01@ 11:16:17

காஞ்சிபுரம், :காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைவபம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதல் தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப் புகழ் பெற்றது வரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் மூலவர் வரதராஜ பெருமாளை, மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். முற்காலத்தில் இந்தக் கோயிலில் மூலவராக இருந்த, ஆதி அத்தி வரதர், கோயில் வளாத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில், தண்ணீருக்கு அடியில் எழுந்தருளி உள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இன்று காலை தொடங்கியது.

தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த வைபவத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு முதல் தரிசனம் செய்தார். அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதருக்கு பட்டாச்சார்யார்கள் சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரித்து, காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்க்கும் கோயில் இட்லி, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மைசூர்பா, பாதாம் அல்வா வைத்து நைவேத்யம் செய்யப்பட்டது. பின்னர் அத்தி வரதருக்கு மகா ஆராதனைசெய்யப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் ஜூலை 24 ம் தேதிவரை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஜூலை 25 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை நின்ற கோலத்திலும் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த வைபவத்தைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்
:
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சுமார்  2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், டோல்கேட், தற்காலிக பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தரிசனம்:

ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவரை திரு ஆதாரனை  செய்ய வரும்  பொதுமக்கள் எந்ததொரு சிரமமின்றி வழிபாடு செய்ய கிழக்கு இராஜகோபுரம் முதல்  தேசிகர்  சன்னதி வழியாக  பொது தரிசனத்திற்கு தனிவழியாகவும்,  கிழக்கு இராஜகோபுரம் முதல்  தேசிகர் சன்னதி வழியாக வசந்த மண்டபம் வழியாக சிறப்பு தரிசனம் தனிவழியாகவும், சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் சன்னதிகளுக்கு  செல்லும் வழிக்கான மேற்கு இராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தி  மூலவர் மற்றும் தாயாரை  தடையின்றி தரிசனம் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.  01.07.2019 முதல்  17.08.2019 வரை  நடைபெறும்   திருஆராதனை  நிகழ்வில்  முதல் 24 நாட்கள் சயன கோலமும்,   அடுத்த 24 நாட்களுக்கு  நின்றகோல தரிசனமும் நிகழ உள்ளது.  தரிசன நேரமாக காலை 6  மணி முதல் 2 மணி வரை மீண்டும்  மதியம் 3 மணி முதல் 8  மணி வரையும் மற்றும்  ஆனி கருட மற்றும்  ஆடி கருட  உற்சவத்திலிருந்து  மாலை 6 மணி முதல் 9 மணி வரை பொது தரிசனம்  இல்லை.
 
சிறப்பு ஏற்பாடுகள்:

பக்தர்கள் சிரமம் இன்றி அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை மற்றும் நசரத்பேட்டையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் நசரத்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பேருந்து நிலையத்திலும், வந்தவாசி, செய்யாறு மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலும், வேலூர், அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து மவரும் பேருந்துகள் ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிலையத்திலும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்தே புறப்பட வேண்டும். அங்கிருந்து சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வெளிமாநில பக்தர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு:

அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு தமிழ்முரசு நாளிதழ் சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பகுதி, டோல்கேட், செட்டித்தெரு சந்திப்பு, அறிஞர் அண்ணா தெரு ஆகிய 4 இடங்களில் பக்தர்களை வரவேற்று வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்