SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீராம தரிசனம் :ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

ராமேஸ்வரத்தில், நாகப்பிரதிஷ்டை செய்து வழிபட்டு  செவ்வாய், ராகு தோஷங்கள் நீங்கப்பெற்றார் ஸ்ரீராமன். அவர் பாதங்களை குளத்தின் அருகில் தரிசிக்கலாம்.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி பாதையில் வங்காளவிரிகுடா- மன்னார்வளைகுடா மத்தியிலுள்ள தீவில் கோதண்டராமரை தரிசிக்கலாம். ராமரின் காலடியில் விபீஷணன் காணப்படுகிறார். இத்தல அனுமன் ‘பரிந்துரைத்த அனுமன்’ என போற்றப்படுகிறார். ராமரிடம், விபீஷணரை ஏற்றுக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்த அனுமன்!

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வில்லேந்திய கோதண்ட ராமரை தரிசிக்கலாம். இங்கே சீதாபிராட்டியாருக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபமேற்றி 12 முறை வலம் வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிட்டுகிறது.

விபாண்டக மகரிஷிக்கு, தன் திருக்கல்யாணக் கோலத்தை ராமபிரான் காட்டியருளிய தலம் மதுராந்தகம்.

சேலம்-அயோத்யாபட்டணத்தில் கோதண்டபாணியாக ராமர் அருள்கிறார். அயோத்தி செல்லும் முன், காலதாமதத்தை உத்தேசித்து, ராமன் தன் பட்டாபிஷேகத்தை இங்கே மேற்கொண்டு, பிறகு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டார் என்பார்கள்.  

செங்கல்பட்டு அருகில் பொன்பதர்கூடத்தில் சதுர்புஜகோதண்ட ராமர் தரிசனம் தருகிறார். தேவராஜ மகரிஷிக்காக நான்கு கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி, திருமாலாக ராமர் காட்சி தந்த தலம். இவரது திருமார்பில் மகாலட்சுமி இடம் பெற்றிருக்கிறார்.

கும்பகோணம்-ராமஸ்வாமி ஆலயத்தில் அன்னையும் அண்ணலும் திருமணக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள்.

திருநின்றவூரில் ஏரிகாத்த ராமரை தரிசிக்கலாம். சந்நதியின் வெளியே தோள்களில் ராம லட்சுமணரை சுமந்த அனுமனையும் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், திருப்புள்ளம்பூதங்குடியில் வல்வில் ராமன், சயன திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

திருவண்ணாமலையை அடுத்த நெடுங்குன்றத்தில் வில் அம்பு இல்லாத ராமனைக் காணலாம்! அனுமனுக்கு, ராமன் முக்திகோபநிஷத்தை உபதேசித்த தலம் இது.

திருவாரூர், முடிகொண்டானில் கோதண்டராமர் அருள்கிறார். இங்கு, ராமர் மீது கோபமுற்று ஆலயத்திற்கு வெளியே தனி சந்நதியில் தங்கிவிட்ட அனுமனை தரிசிக்கலாம்.

சென்னை-மடிப்பாக்கம், ராம்நகரில் ஒப்பிலியப்பன் ஆலயத்தில் ராமபிரான் பட்டாபிஷேக ராமராக சீதை, பரதன், சத்ருக்னன், லட்சுமணனோடு அமர்ந்த திருக்கோலத்தில் திருவருள்பாலிக்கிறார்.

தஞ்சாவூருக்கு அருகே திருவெள்ளியங்குடியில் கோலவில்லிராமர் என்ற மூலவராகவும் சிருங்காரசுந்தரர் என்ற உற்சவராகவும் ராமரை தரிசிக்கலாம்.   கண் நோய்களை இந்த ராமர் தீர்த்தருள்கிறார்.

காஞ்சிபுரம் அருகே, திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாளாக ராமபிரான் அருள்கிறார்.  இத்தல தாயார் மரகதவல்லி, மழலை வரம் அருள்வதில் நிகரற்றவள்.

உத்திரப்பிரதேசம், பைசாபாத்தில் உள்ள அயோத்தியில், கருவறையில் ராம சகோதரர்களுடன் அனுமனையும், கருடனையும் தரிசிக்கலாம்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை, ராமர் ஆலயத்தில் அனுமன், நரசிம்மர், ஹயக்ரீவர், தும்பிக்கை ஆழ்வார், அரசமரத்தடி நாகர்கள், ராகு-கேது ஆகியோர் அருள்கின்றனர்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவனாக ராமபிரான் அருள்கிறார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரை தரிசித்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடுகின்றன. ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக நேர்ந்து கொண்டால் சரும உபாதைகள் மறைகின்றன.

திருவையாறு புது அக்ரஹாரத்தில் பட்டாபிராமனை வால்மீகி முனிவர் அருளிய பட்டாபிஷேக தியானத் திருக்கோலத்தில் தரிசிக்கலாம்.

ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் சீதையை மடியில் அமர்த்திய ராமனையும், அருகில் லட்சுமணனையும் தரிசிக்கலாம். கோபண்ணா எனும் பக்தருக்காக மானிட ரூபத்தில் வந்து அவருடைய கடனை அடைத்தார்கள், ராம-
லட்சுமணர்.
 
சென்னை-நங்கநல்லூர் ஆதிவியாதிஹர அனுமனுக்கு எதிரில் ராமர்-சீதை-லட்சுமணர் சந்நதி உள்ளது. இந்த அனுமன் சிலையில் வால் தலைக்கு மேலிருக்கும்படியாக அமையவிருந்தது. எதிரில் ராமர் இருக்கும்போது அவ்வாறு இருத்தலாகாது என சிருங்கேரி ஸ்வாமிகளிடமிருந்து தகவல் வந்த அன்று தலைக்கு மேலே செதுக்கப்பட இருந்த வாலுக்கான கல் பகுதி மட்டும் தானே பெயர்ந்து விழுந்தது!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2019

  23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்