SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி

2019-06-21@ 16:00:45

உத்தர நவசாலபுரி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட ஆதம்பாக்கத்தின் மேற்குப் பகுதியான ஆண்டாள் நகர், 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  வீடுகள் உருவாகின. வருடங்கள் கடந்தன. பல தெருக்கள் அமைந்த ஒரு பகுதியாக அப்பகுதி மாறியது. 1982ம் ஆண்டு விநாயகருக்கு கோயில்  கட்டினர். புதுக்கோட்டையில் உள்ளது போன்று அன்னை புவனேஸ்வரிக்கும் ஆலயம் எழுப்பலாம் என எல்லோரும் ஒரு மனதாக சிந்தித்தனர். பிள்ளையாரின் ஆலய கும்பாபிஷேகத்தன்றே, அன்னை புவனேஸ்வரியின் ஆலயப் பணியும் தொடங்கியது. புதுக்கோட்டை அதிஷ்டானம் சத்குரு சாந்தானந்த  சுவாமிகளின் அருளாசியுடன் 1986ம் ஆண்டு புவனேஸ்வரி ஆலயம் உருவாக்கப்பட்டது. குடநீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

புவனேஸ்வரி தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளும், பொருளும் அள்ளி வழங்கி வருகிறாள். செவ்வாய், நாக தோஷங்கள் காரணமாக திருமணம் தாமதமாகும் அன்பர்கள் தொடர்ந்து ஆறு பௌர்ணமிக்கு செவ்வரளி மாலை சாத்தி  புவனேஸ்வரியை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரத்தில் ஜொலிக்கிறாள். பிரத்யங்கரா கோலத்தில் புவனேஸ்வரியின் அருள்வது பார்க்க சிலிர்த்துப் போகும். ஹிரண்யனை அழித்த நரசிம்ம மூர்த்தி உக்கிரம் தணிக்க  சரபேஸ்வரராக மகேசன் அவதாரம் எடுத்து நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தினார். அப்படி அடக்கிய ஒரு சக்திக்கு பிரத்யங்கரா என்று பெயர்.  சரபேஸ்வரராக பட்சி ரூபத்தில் வந்த ஈசனின் ஒரு இறக்கையே பிரத்யங்கரா ஆவாள். இவள் உடல் நோய் தீர்ப்பாள். உள்ளத்தை தெளிய வைப்பாள்.

வாராஹியாக வளர்ந்த புவனேஸ்வரியின் அலங்காரம், அழகு கொஞ்சும். ராஜ ராஜேஸ்வரியின் சேனாநாயகி இவளின் ரதம், கிரிசக்ர ரதம். காட்டுப்  பன்றிகள் இதை இழுத்துச் செல்லும். வாராஹியை உபாசிப்பவர்களுடன் வாதாடாதே என்பார்கள், பெரியோர்கள். இரவு நேர வழிபாட்டிற்குரிய தேவி  இவள். கிரக பீடைகளை கிழித்தெறிபவள். புவனத்தை ஆள்பவள் பிள்ளை வரம் தரும் தேவியாவதில் ஆனந்தம் கொள்கிறாள். சந்தானலட்சுமியாக சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். தன்னை  தரிசிப்போருக்கு தட்டாது தாயாகும் வரம் தருகிறாள், இந்த தேவி. படைப்பை பெருக்கி பாராளும் பிரம்மனின் அம்சமான ப்ராம்மி எனும் சப்த மாதா கோலத்திலும் தரிசனம் தந்து களிப்பூட்டுகிறாள். அன்னப் பறவையை  வாகனமாகக் கொண்டு, வெண் பட்டாடை உடுத்தி வளம் சேர்ப்பதையே தனது வாடிக்கையாகக் கொண்டவள். கெண்டி கமண்டலம், ஜபமாலை ஏந்தியவள்.

புவனேஸ்வரி தேவி சரஸ்வதியாக வீணை மீட்டும் அழகு, பார்க்க உள்ளம் கரையும். வெண் தாமரையில் அமர்ந்து வெண்ணிற ஆடையுடுத்தி கல்விச்  செல்வத்தை போதிக்கும் குரு இவள். சகல கலைகளையும் தன் விழியில் வழியும் அருளாலே அளிப்பாள். வாக்கு வன்மையை மழையாக வர்ஷிப்பாள்.  அறிவு பெருக இந்த சரஸ்வதியின் திருப்பாதம் தொழுதாலே போதும். வாக்வாதினி என்று கம்பீர நாமம் தாங்கி, புவனேஸ்வரியினின்று எழுந்தருளும் கோலம் பார்க்க, பக்திக் கண்ணீர் கன்னம் வழிந்தோடும்.  ராஜராஜேஸ்வரியின் மந்திரிணியான ராஜமாதங்கியின் அங்கதேவதை, இந்த வாக்வாதினி. ஒரு கரத்தில் எழுத்தாணியும், மறு கரத்தில் ஓலைச் சுவடியும் ஏந்தியிருப்பாள். சந்த்யா காலங்களில் ஜபதபங்கள்  செய்வாள். வித்யாலட்சுமி என்றும் இந்த தேவியை அழைப்பர். இவளை வழிபட ஞாபக சக்தியை பெருக்குவாள்.
ஞானத்தை நிலை நிறுத்துவாள். புவனேஸ்வரியின் அன்னபூரணி அலங்காரம் அளவிலா அழகுடையது. ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உணவருந்த அருள்  புரியும் அம்பிகை. காசி தலத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவள். ஈசனுக்கே உணவளிக்கும் தேவி. ஆதிசங்கரர் தன் அன்னபூர்ணாஷ்டகத்தில்  பிட்சையிட வேண்டி இறைவியைத் துதித்து கடைசியில் ஞானம், வைராக்யம் போன்றவற்றையே வேண்டி நின்றார். அன்னைபூரணியைத் தொழ,  உணவுப் பஞ்சமின்றி வாழலாம். அர்த்தநாரீஸ்வரி என்ற ஆழ்ந்த தத்துவத்தை தன்னிலிருந்து வெளிப்படுத்துகிறாள், புவனேஸ்வரி. சிவமும், சக்தியும் ஒன்று கூடிய அபூர்வ கோலம்.  காணும் தம்பதியரின் ஒற்றுமையை அதிகரிப்பாள், இந்த அன்னை. அன்னையின் புஷ்ப அலங்காரம் காண உள்ளம் பூக்கூடையாகும். பூக்களின் வாசனையோடு அவளின் அருட்சுகந்தம் நம்மை நிறைக்கிறது. பிறவிகள்  தோறும் தொடரும் கர்ம வாசனையை நிரந்தரமாக துடைத்தெறிகிறாள், புவனேஸ்வரி.

அன்னையின் அலங்காரங்கள் எல்லாமே ஆனந்தம் அளிப்பவை.ஆலய முன்புறக் காப்புச் சுவரின் மீது தசமஹாவித்யாக்களின் பஞ்சவர்ண சுதைச் சிற்பங்கள் தரிசனமளிக்கின்றன. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம்  சுந்தர விநாயகர் அருள்கிறார். அதற்கடுத்து நாம் தரிசிப்பது ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளின் திருவுருவச் சிலையையும், தத்தாத்ரேயர் பாதுகையையும்.  மழலை பாக்கியம் பெற தத்தாத்ரேயர் பாதுகைகளுக்கு புஷ்பாஞ்சலி செய்கின்றனர். அதுமட்டுமல்ல மழலை வரம் கிட்டியவுடன் அவரவர் நேர்ந்து  கொண்டபடி துலாபாரம் செலுத்துவது இத்தலத்தின் பிரதான விசேஷம். பூரண மகாமேருவிற்கு மாதத்தில் ஐந்து நாட்கள் நவாவரண பூஜை செய்யப்படுகிறது. புவனேஸ்வரி பேசும் தெய்வமாய் இத்தலத்தில் அமர்ந்திருக்கிறாள். குரல் வளம் திடீரென கம்மியான ஒரு பக்தை ‘குரல் தா பஞ்சக’த்தை  புவனேஸ்வரியின் திருமுன் பாடி இழந்த குரல் வளத்தைத் பெற்ற அதிசயம் இங்கு நடந்திருக்கிறது. இந்தக் கோயில், சென்னை ஆதம்பாக்கம் ஆண்டாள் நகரில் அமைந்துள்ளது. பரங்கி மலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில்  உள்ளது.

- ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்