SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீங்காத செல்வம் அருளும் நீலகேசி அம்மன்

2019-06-21@ 10:39:21

இட்டகவேலி, குலசேகரம், குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள இட்டகவேலியில் நீலகேசி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பன்னிரண்டு வயது நிரம்பிய தேவி தனது தாயுடன் இட்டகவேலியில் உள்ள தாய்வழி பாட்டியான நீலம்மை வீட்டில் வசித்து வந்தார். பாட்டியும், அம்மாவும் தந்தை இல்லா குறை தெரியாமல் பாசம் காட்டி வளர்த்து வந்தனர். தாய்மாமன் அன்பு காட்டுவதில் குறைவில்லை என்றாலும் மனைவி முகம் சுழிக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வார். ஒரு நாள் வீட்டு முன்பு தோழிகளோடு விளையாடிக்கொண்டிருந்த தேவியை அழைத்து, வயல்வெளிகள் நிறைந்த பகுதியின் மறுகரையில் வசிக்கும் வேறு இனத்தவர்கள் வீட்டில் தேங்காய் சிரட்டையில் தீ கங்கு வாங்கி வருமாறு மாமன் மனைவி அனுப்புகிறாள். அதன்படி தேவி தீ கங்கை சிரட்டை(கொட்டாங்குச்சி)யில் வாங்கி வருகிறாள். அப்போது வீசிய காற்றால் கங்கு அனலாகி சிரட்டையில் கண் பகுதி தீ வெப்பத்தால் கருகி, சிரட்டையை பிடித்திருந்த கையில் பட்டுவிடுகிறது. தீ சுட்ட வேகத்தில் வரும் வழியிலேயே சிரட்டை தூக்கி எறிந்து விடுகிறாள்.

பின்னர் கையில் தீ சுட்ட பகுதியை, நாவால் வருடி விட்டபடியே நடந்து வருகிறாள். அதை கண்ட தேவியின் மாமன் மனைவி ‘‘அய்யய்யோ, மோசம், அந்த வீட்டுல இருந்து எச்சி பண்டம் வாங்கி நக்கிட்டு வாறியே உனக்கு வெட்கமா இல்ல.’’ என்று திட்டுகிறாள். அப்போது பேசிய அந்த சிறுமி, ‘‘மாமி, அது எச்சி இல்லா, தீ கங்கு தன்னே யான் வாங்கி வந்து..’’ என்று பேசும்போது குறுக்கிட்ட அவளது மாமன் மனைவி ‘‘நீ, எதுவும் பறயான்ட, குட்டி நீ கள்ளம் பறயா, நின்ட மாமன் வரட்டு, யான் பறஞ்சு கொடுக்கும்’’ என்றபடி வேகமாக வீட்டுக்கு சென்றுவிடுகிறாள். மாமன் வந்ததும், தேவி குறித்து புகார் செய்கிறாள். ‘‘நம்மள் இந்தள கஷ்டப்பட்டு உண்டாக்கி கொடுத்தாயினும் அவள் தாழ்த்தப்பட்ட சாதிமார் வீட்டில போய் கழிச்சிட்டு வருகியானு.’’ என்று கூறினாள்.

மனைவி கூறியதைக் கேட்டு ஆத்திரம் கொண்டு எழுந்த தேவியின் மாமன், மருமகளை அழைத்தான். அச்சத்தோடு தேவி, ‘‘மாமா, நான்…’’, ‘‘நீ, எதுவும் பேச வேண்டாம். இனி நினக்கும், நின்ட அம்மைக்கும் இ வீட்டுல ஸ்தலம் இல்லா’’ என்று கோபமாக பேசினார். பதிலுரைக்க வந்த சிறுமியை நீ எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டி அடித்தார். உடனே தேவி வீட்டை விட்டு வெளியேறினாள்.அங்குள்ள காவு( அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த பகுதி)கோயிலுக்கு வந்து கதறி கதறி அழுதுகொண்டிருந்தார். அந்தி பொழுதான நேரம் அவ்வழியாக மந்திரவாதி ஒருவர் வந்தார். அவர் தேவி, தீ கங்கு வாங்கி வந்த இனத்தைச் சேர்ந்தவர். அவர் என்னம்மா, யாரு நீ, ஏன் அழுகிறாய் என்று கேட்க, நடந்ததை கூறினாள் தேவி. பின்னர் வயிறு பசிக்குது, உண்ண ஏதாவது இருக்குமா என்று அழுதபடி கேட்க, அம்மா, நான் எச்சி விரட்ட ஒரு வீட்டுக்கு போயிட்டு இப்பதான் வாரேன். என்னிடம் இது தான் இருக்கிறது என்று தன்னிடமிருந்த தென்னங்கம்பம்பூ, பச்சரிசி, இளநீரு மூன்றையும் கொடுத்தார்.

அப்போது தேவி, ‘‘கருக்கு(இளநீர்) வெட்டி முதல்ல தாங்க’’ என்றாள். பின்னர் ஒவ்வொன்றையும் உண்டாள் தேவி. இவற்றை கொடுத்து விட்டு அங்கிருந்து அவர் சென்று விடுகிறார். தேவி தாயார், வீட்டுக்கு வந்து தேவியைக்கேட்க, தேவியின் மாமன் நடந்ததை கூற, கோபம் அடைந்த தேவியின் தாயார் வீட்டை விட்டு வெளியேறி மகளை தேடி காவுக்கோயிலுக்கு வருகிறாள். தாயை கண்ட தேவி, ஏங்கி, ஏங்கி அழுதாள். மகளை கட்டி அணைத்து தலையை கோதி விட்டபடி‘‘ மொவளே கரையான்ட, உனக்கு நான் இருக்கின்னு’’ என்று தைரியத்தை கொடுத்த அவளது தாய் சற்று நேரத்தில் தன்னையறியாமல் ஓ வென கதறியபடி அழுதாள். தாயின் அழுகையைக்கண்டு பொறுக்காமல் வேதனையுற்ற தேவி,அப்பகுதியிலிருந்த குளத்துக்குள் விழுந்தாள். நீரில் மூழ்கும் போது கத்தினாள். மகளின் நிலையைக்கண்டு அவளை காப்பாற்ற தாயும் குளத்தில் குதித்தாள். அந்த நேரம் கைக்குழந்தையுடன் வந்த தேவியின் பாட்டி நீலம்மை, மகளும், பேத்தியும் தண்ணீரில் விழுந்து தவிப்பதைக்கண்டு தானும் தண்ணீரில் விழுந்தாள். மூன்று உயிரும் மூணேமுக்கால் நாழிகைக்குள் முடிந்து போனது.

ஏழாவது நாள் இந்த குளத்திலிருந்து ஒரு கி.மீட்டர் தொலைவிலுள்ள பறம்புக்குளத்தில் பிறை சந்திரன் வடிவில் பெரிது,சிறிது,மிகச்சிறியது என மூன்று பிம்பங்கள் தெரிந்தது. அதைக்கண்ட அப்பகுதியில் மாடுமேய்த்த சிறுவன், ஊரார்களிடம் கூற, அவர்கள் குளத்தில் வந்து இறங்கி பார்க்கின்றனர். அப்போது அந்த பிம்பம் அவர்களை விட்டு விலகியே செல்கிறது. தேவி, தீ கங்கு வாங்கிய அந்த இனத்தவர்கள் குளத்திற்குள் இறங்கி வரும்போது அந்த பிம்பம் அவர்களிடம் நெருங்கியது. அப்போது மூன்று பேர்களின் தலை முடி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பிம்பம் போன்று மரத்தால் செய்து, அதன்மேல் மயிலிறகுகள் சூட்டி அதை தேவியாக நினைத்து வழிபடுகின்றனர். நீலகேசி அம்மனின் கோயிலில் தேவிக்கு தீ கங்கு கொடுத்து உதவிய இனத்தவர்களே வாத்திகளாக உள்ளனர். வாத்திகள்(பூசாரிகள்). இவர்கள் பரம்பரையாக பூஜை செய்து வருகின்றனர். திருவிழாவின் போது அதே இனத்திலுள்ள நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர்கள் வந்து பூஜை செய்கின்றனர்.

பத்துநாள் திருவிழாவுக்கு முந்தைய நாள் விரதத்துடன் வரும் அவர்களை, கோயில் நிர்வாகத்தை கவனித்து வரும் தேவி பிறந்த இனத்தவர்கள், பொன்மனை என்ற எல்லையில் வைத்து மேளதாளத்துடன் சென்று மாலை மரியாதையுடன் அழைத்து வருகின்றனர். தேவி பிறந்த இனத்தவர்கள் எதை நைவேத்தியமாக படைக்க வேண்டுமானாலும் அதை வாத்திகளாக இருக்கும் இனத்தவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் தேவிக்கு படைக்கிறார்கள். நைவேத்திய பொருட்களாக கூறப்படுவது தேவி இறக்கும் தருவாயில் உண்ட மாற்று இனத்தவரால் வழங்கப்பட்ட கம்பம்பூ, இளநீர், பச்சரிசி, உள்ளிட்டவைகளாகும். கூடுதலாக பலா உள்ளிட்ட பழங்கள் நைவேத்தியமாக வழங்கப்படுகிறது. முக்கியமாக வேக வைத்த பொருட்கள் எதுவும் இங்கு நைவேத்தியமாக பூஜைக்கு படைக்கப்படுவதும் இல்லை. வழங்கப்படுவதும் இல்லை.நீலம்மையின் கேசம் என்பது தான் மருவி நீலகேசி என்றானது எனவும் கூறப்படுகிறது. நீளமான கேசம் (நீளமான கூந்தல்) உடையவள் என்றும் பொருள்படும். நீளமான கேசம் உடையவள் என்பதன் சுருக்கமே, நீலகேசி என்பதாயிற்று.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்ததாக கூறப்படுகிறது. கோயில் இட்டகவேலியில் அமைந்திருந்தாலும், அந்த பிம்பங்கள் தென்பட்ட பறம்புக்குளம் இருக்கும் பகுதியிலேயே பத்து நாள் திருவிழா நடக்கிறது. 9ம் நாள் திருவிழாவின் போது கமுகு மரத்தை வேறுடன் பிடுங்கி, அதன் தலப்பாகத்தை ஒரு தரப்பினரும், அடிப்பாகத்தை ஒரு தரப்பினரும் பிடித்து இழுக்கின்றனர். முடிவில் தலப்பாகத்தை பிடித்து இழுப்பவர்கள் தோற்று விடுவது போன்றும் பின்னர் அந்த கமுகு மரத்தை மாமியாராக சித்தரித்து கமுகு மரத்தின் தலைப்பகுதியில் தீ வைத்து எரிக்கின்றனர். இது மாமியாரின் கொட்டத்தை அடக்கியதாக கூறுகின்றனர்.நீலகேசி அம்மன் தன்னை வணங்கிடும் பக்தர்களுக்கு நிம்மதியான வாழ்வை அருள்கிறாள். இக்கோயில் இட்டகவேலியில் அமைந்துள்ளது. இது குமரிமாவட்டம் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

படங்கள்: எஸ்.பி. சேகர்

மகேஸ்வரரின் மகத்தான உருவங்கள்


* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* வேலூர் கோட்டை கோயில் மூலவர் ஜ்வரஹரேஸ்வரர் உருவமாக மூன்று கால்களுடன் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

- ஜோ ஜெயக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்