SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தன்வந்திரியை வழிபட்டால் மார்க்கண்டேய யோகம் கிட்டும்!

2019-06-20@ 10:41:26

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா


?என் தம்பி ஒரு பெண்ணை காதலிக்கிறான். எங்கள் குடும்ப ஜோதிடரிடம் இருவர் ஜாதகங்களையும் காண்பித்ததில் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்றும் தசாபுக்திகள் சரியில்லாத காரணத்தால் திருமணம் செய்யக்கூடாது என்றும் சொல்கிறார். உரிய ஆலோசனை சொல்லி உதவிடுங்கள்.
- பார்த்தசாரதி, பாண்டிச்சேரி.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தம்பியின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக் னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. இவர்கள் இருவரின் ராசிகளும் சம ஸப்தமம் என்பதால் ஒருவருக்கொருவர் ஒருவித ஈர்ப்பினைத் தோற்றுவித்திருக்கிறது. ஆனால் கிரஹ நிலையின்படி இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது அத்தனை உசிதமில்லை. உங்கள் குடும்ப ஜோதிடரின் கூற்று உண்மையே. ஒரு சில விஷயங்களை நாகரிகம் கருதி அவர் உங்களிடம் நேரடியாகச் சொல்லாமல் தசாபுக்தி சரியில்லை என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்காது என்றும் சொல்லியிருக்கிறார். உண்மையில் உங்கள் தம்பியின் குணத்திற்கு பொருந்தும் வகையில் அந்தப் பெண்ணின் ஜாதகம் அமையவில்லை. இருவரின் ஜாதகங்களும் வெவ்வேறு விதத்தில் பலம் பொருந்தியதாக உள்ளது.

இவர்கள் இருவரும் ஒற்றுமையாக குடும்பம் செய்வது என்பது சிரமமே. ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதன், சுக்கிரன், ராகு என வலிமையான கிரஹங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடிவாகும். உங்கள் தம்பியின் ஜாதக பலத்தின்படி இவருக்கும் உங்கள் குலத்திற்குத் தகுந்தாற்போல் நல்ல மணமகளாக அமைவார். இந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிடுங்கள். 24.09.2019ற்குப் பின் இவர்கள் இருவருக்குள் தன்னால் கருத்து வேறுபாடு என்பது உருவாகி பிரிவினை உண்டாகிவிடும். இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதே இவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.

?ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் பேரனுக்கு இந்த 14 வயதிற்குள் மூன்று முறை கண்டம் உண்டாகி உயிர் போய் உயிர் வந்திருக்கிறது. தற்போது அவனுக்கு சர்க்கரையின் அளவு 540 உள்ளதன் பேரில் கடந்த மூன்று மாதமாக இரு வேளையும் இன்சுலின் ஊசி போட்டு வருகிறான். அவன் நோயின்றி நீடுழி வாழ உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- மணியன், வந்தவாசி.

 பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தற்போது நடந்து வரும் தசையின் அதிபதி சுக்கிரன் ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் சூரியனின் சாரம் பெற்ற நிலையில் அமர்ந்து கண்டத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் பேரனின் ஜாதகத்தில் புதன், குரு, சனி ஆகிய கிரஹங்கள் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கின்றன. இன்சுலின் எடுத்து வருவதோடு உடன் இயற்கை மூலிகைகளையும் கொடுத்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையை சரிவர பின்பற்றி வாருங்கள்.

அவருடைய ஜாதக பலத்தின்படி 18வது வயது வரை அதாவது 16.08.2023 வரை கண்டம் என்பது நீடிக்கிறது. அதுவரை வருடந்தோறும் வீட்டினில் குடும்ப புரோஹிதரின் துணை கொண்டு ஆயுஷ்ய ஹோமத்தினை செய்து வாருங்கள். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பேரனின் பெயரில் அர்ச்சனை செய்து வருவதும் நல்லது. உங்கள் பேரனிடம் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் 16முறை சொல்லி தன்வந்திரி பகவானை வழிபட்டு வரச் சொல்லுங்கள். இறையருளால் மார்க்கண்டேயன் போல் உங்கள் பேரன் சிரஞ்சீவியாக வாழ்வார்.

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய  
ஸர்வ ஆமய வினாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:”

?என் மகன் திருமணமே வேண்டாம் என்றும் சிவதொண்டனாக பணியாற்றி காலத்தை கழிக்க உள்ளதாகவும் கூறி எங்களைக் கலங்க வைக்கிறான். அவன் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் மகிழ்வுடன் வாழ என்ன செய்ய வேண்டும்? எங்கள் கவலை தீர வழி சொல்லுங்கள்.
- ராஜராஜேஸ்வரி, மயிலாடுதுறை.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்பின்படிதான் அவர் நடந்துகொண்டு இருக்கிறார். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும், ஏழாம் வீட்டிற்கு உரிய சனி இரண்டாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று குருவுடன் இணைந்திருப்பதும் இவருக்கு திருமண வாழ்வினில் ஈடுபாட்டைத் தராது. மாறாக சந்யாச யோகத்தினைத் தந்திருக்கிறது. இவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் குரு-சண்டாள யோகத்தினை சரி செய்யும் விதமாக இந்த சந்யாச யோகமும் பலம் பெற்றிருக்கிறது. உங்கள் மகனை அவரது போக்கிலேயே செல்ல அனுமதியுங்கள். அவர் சிவத்தொண்டு ஆற்றுவதன் மூலம் தனது பிறவிப்பயனை அடைவார்.

இதில் நீங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மனமகிழ்ச்சி என்பது அவரைப் பொறுத்த வரையில் இறைசேவையில் அமைந்துள்ளது. உங்கள் மகனை சாமானிய மனிதனாகக் கருத முடியாது. உலகம் போற்றுகின்ற வகையில் ஒரு மிகச்சிறந்த ஞானியாக அவர் உருவெடுப்பார். தற்போது துவங்கியுள்ள கேது தசை ஞான மார்க்கத்தில் அவரை மேலும் மெருகூட்டும். இறையருள் என்பது அவருக்கு பரிபூரணமாக உள்ளதால் அவரைப் பற்றிய கவலையை விடுத்து பெற்ற தாய் என்ற முறையில் அவருக்கு நல்லாசி வழங்குங்கள். ஒரு ஞானியைப் பெற்ற உங்களை இந்த உலகம் நிச்சயமாகப் போற்றி புகழ்பாடும்.

?என் திருமணத்திற்கு முன் என் கணவரின் தம்பி காதல் திருமணம் செய்தபின் இறந்துவிட்டார். நான் திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்ற நாள் முதல் திடீர், திடீரென்று சத்தம் போட்டு மயங்கி விழுந்துவிடுவேன். திருமண வீடு மற்றும் முக்கியமான விழாக்களில் பங்கெடுக்கும்போது இவ்வாறு விழுந்து விடுவேன். எனது கஷ்டம் தீர வழி சொல்லுங்கள்.
- பிரபாமணி, கன்னியாகுமரி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்காலம் சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் தம்பி இறந்ததற்கும் உங்கள் பிரச்னைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உங்கள் ஜாதகத்தினை கணிதம் செய்ததில் நீங்கள் அமாவாசை நாளில் பிறந்திருக்கிறீர்கள் என்பதோடு குருவும், சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. அதோடு குரு - சனி இருவரும் ஒரே நட்சத்திரக்காலில் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த நிலையினை பிரம்மஹத்தி தோஷம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் முன்னோர்கள் செய்த பாவமானது உங்களை பாதித்திருக்கிறது.

44வயது முடியும் வரை நீங்கள் இந்த சிரமத்தை அனுபவிப்பீர்கள். அதன் பின்னர் இந்தப் பிரச்னை தொடர்வதற்கான வாய்ப்பு இல்லை. மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயது முதிர்ந்த பிச்சைக்காரர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். தமிழ்மாதத்தில் வருகின்ற இரண்டாவது சனிக்கிழமை நாளில் சிவனடியார் ஒருவருக்கு பாதபூஜை செய்து வணங்குவதாலும் உங்களுடைய தோஷத்தின் தாக்கம் குறையத் துவங்கும். மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இறைவன் உங்களுக்கு அளித்திருக்கும் அன்பு நிறைந்த குடும்ப வாழ்வினை அனுபவித்து மகிழுங்கள்.

?என் மகன் பி.இ., மெகானிக்கல் இஞ்சினியரிங் முடித்து கான்ட்ராக்ட்டில் வேலை பார்க்கிறான். அவனுக்கு நிரந்தர வேலை கிடைக்குமா? சொந்த வீடு கட்ட முடியுமா? வாடகை கொடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறோம். எங்கள் குடும்பத்தின் நல்வாழ்விற்கு வழி காட்டுங்கள்.
- லதா, அணைக்கட்டு.

 உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம
லக்னத்தில் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கும் சனி அவரது வளர்ச்சியினைத் தடை செய்து வருகிறார். எல்லா விஷயங்களிலும் ஒருவிதமான தயக்கத்தினை உண்டாக்கி முன்னேற விடாமல் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றுகிறது. தற்போது நடந்து வரும் ஏழரைச் சனியின் காலமும் ஒருவிதமான தேக்க நிலையை உண்டாக்கியுள்ளது. விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்து போராட்டத்தைத் தருகிறார். உடன் இணைந்திருக்கும் சூரியன் இவரது உழைப்பிற்கு துணையாக இருப்பார். உடனடிப் பலனை எதிர்பாராமல் கடுமையாக உழைத்து வர வேண்டியது அவசியம்.

அளவுக்கதிகமாக உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படக் கூடாது. உழைப்பதற்கான பலன் ஓரிடத்தில் இல்லையென்றாலும் நிச்சயமாக மற்றொரு இடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இவர் சொந்தமாகவே கான்ட்ராக்ட் எடுத்து சுயதொழில் செய்ய இயலும். தனது 35வது வயதில் சொந்த வீடு கட்டி அதில் குடிபோகும் அம்சம் நன்றாக உள்ளது. தயக்கம் ஒன்றே அவரது முன்னேற்றத்திற்கான எதிரி. தயக்கத்தினை தவிர்த்து தைரியமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற மனோ பாவத்தினை வளர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். செவ்வாய்கிழமை தோறும் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வதும் கந்த சஷ்டி கவசத்தினைப் படித்து வருவதும் இவரது முன்னேற்றத்திற்கு துணை செய்யும். கந்தனின் அருளால் உங்கள் கவலை தீர்வதோடு மகனின் வளர்ச்சியையும் கண் குளிரக் காண்பீர்கள்.

?36 வயது நடந்து வரும் என் மகனுக்கு திருமணத்திற்காக எவ்வளவோ முயற்சிகள் மற்றும் பரிகாரங்கள் செய்தும் இதுவரை கைகூடவில்லை. வேலையும் நிரந்தரமாகவில்லை. உரிய வழி சொல்லுங்கள்.
- ஏகாம்பரம், கேஜிஎஃப்.

2015ம் வருடம் வரை நடந்து கொண்டிருந்த சந்திர தசையின் காலம் உங்கள் மகனின் திருமணத்திற்கான காலமாக இருந்திருக்கிறது. அதன் பிறகு நீங்கள் செய்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகப் போய் உள்ளது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு மற்றும் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீடு ஆகிய இரண்டிற்கும் அதிபதி குரு ஆறில் கேதுவுடன் இணைந்திருப்பது சற்று இடைஞ்சலைத் தோற்றுவிக்கிறது. நினைப்பது கிடைக்கவில்லை என்றாலும் கிடைப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே உங்கள் மகனின் ஜாதகம் உணர்த்தும் உண்மை. எதிர்பார்ப்பு ஏதுமின்றி பெண் தேடுங்கள்.

நிச்சயம் நல்ல குணவதியான பெண் உங்கள் மகனுக்கு வாழ்க்கைத்துணைவியாக வந்து சேர்வார். திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று சந்நதியை 11 முறை பிரதட்சிணம் செய்து உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். வீட்டில் சிறியதாக ஸ்படிக லிங்கம் வைத்து தினந்தோறும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருவதும் இவரது வாழ்விற்கு வெளிச்சத்தைத் தரும். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின் வாழ்வில் திருப்புமுனையைக் காண்பார்.


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்
229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்