SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அள்ளிக்கொடுப்பான் திருவல்லிக்கேணி திருமகன்

2019-06-20@ 10:38:23

சென்னை

வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதுமான அற்புதத் திருத்தலம் திருவல்லிக்கேணி. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், அயோத்தி போன்ற ஐந்து திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் அர்ச்சாவடிவங்கள் இத்தலத்தில் தனித்தனி சந்நதிகளில் அருளுவது, பிற தலங்கள்  காண இயலாத தனிச் சிறப்பு. இத்தலம் ப்ருந்தாரண்ய தலம் என்றும் வழங்கப்படுகிறது. மிகத்தொன்மை வாய்ந்த ஆலயம் இது என்கின்றன கல்வெட்டுகள். மகாமண்டலேஸ்வரர் மற்றும் வீரப்ரதாப சதாசிவதேவ மகராயர் காலத்தில் இங்கு ஸ்ரீமன்நாதரின் (ரங்கநாதரின்) சந்நதியும், பார்த்தசாரதி ஸ்வாமி சந்நதியும் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கின்றன.

சுமதி என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க திருவேங்கடமுடையான், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கோலத்துடன்
மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரோடும் இங்கே சேவை சாதிக்கிறார். ஆலயத்திற்கு எதிரே நீராழி மண்டபத்துடன் காணப்படும் திருக்குளத்திற்கு கைரவிணி என்று பெயர். ராஜகோபுரத்தின் முன் 36 தூண்கள் தாங்கும் பெரிய மண்டபம் உள்ளது. அதில் தன் மடியின் இடது பக்கத்தில்லட்சுமி தேவியை அமர்த்திக்கொண்டு அருள்கிறார் நரசிம்மமூர்த்தி. இந்த மண்டபத்திலிருந்துதான் உற்சவ மூர்த்தங்கள் திருவீதி புறப்பாடு ஆகும்; வேதபாராயண கோஷ்டி முன்னே செல்லும். வீதியுலா முடிந்ததும் திருவந்திக்காப்பும் இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது. பெருமாள் கருவறைக்கு முன், மகாமண்டபத்தில், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் அருள்கின்றனர்.

மூலக்கருவறையில் ஒருகையில் சங்குடனும், மறுகையில் வரதஹஸ்தத்துடனும் மீசையுடனும் கம்பீரமாக  வேங்கடகிருஷ்ணன் தரிசனம் சாதிக்கிறார். அருகில் ருக்மிணி தேவி. தாயாரின் வலது பக்கத்தில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமர்; பெருமாளுக்கு இடப்பக்கத்தில் தம்பி சாத்யகி; மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என்று கிருஷ்ணன் குடும்பத்தை தரிசிக்கலாம்.  மூலவரின் வலது கையில் உள்ள சங்கு, கீதையின் முதல் அத்யாயத்திலுள்ள 15வது ஸ்லோகமான பாஞ்ஜசன்யம் என்பதின் பொருளையும், இடது கை வரத ஹஸ்தமாக இருப்பது சரம ஸ்லோகமான (18ம் அத்யாயம்) ‘ஸர்வதர்மாந்..’ என்பதையும் உணர்த்துகின்றன. மூலவரின் திருவடிகளின் கீழ் நித்ய உற்சவர், பலிபேரம்-சயனபேரம் ஆகிய மூர்த்திகளும் நவநீத கண்ணனும், சுதர்சனமூர்த்தியும் அருட்காட்சி அருள்கின்றனர்.

உற்சவர் பார்த்தசாரதி, முகத்தில் வடுச் சின்னங்களோடு, புன்னகை ததும்ப, உபயநாச்சியார்களுடன் தரிசனம் தருகிறார். அர்ஜுனனுக்குத் தேரோட்டியபோது எதிர்ப்பட்ட அம்புகள் தைத்ததால் ஏற்பட்ட வடுக்கள் அவை. அவருக்கு சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்களில் மிளகாய் சேர்த்தால் அந்த நெடி சுவாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், நிவேதனங்களில் மிளகாய் சேர்ப்பதில்லை. ‘பள்ளியிலோதி வந்ததன்...’ என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட யோகநரசிம்மர், ‘அழகியசிங்கர்’ என்ற பெயருடன் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார்.
அத்ரி முனிவர் நோய்தீர்க்க யோகநரசிம்மராய், தெள்ளிய சிங்கமாய் காட்சி தந்திருக்கிறார் திருமால். இப்போதும் தன்னை நாடிவருபவர்களுக்கு அபய, ஆஹ்வான அஸ்தங்களுடன் அருள் பொழிகிறார்.  

ஒரு சிறிய தூணில் சிற்பமாகக் காட்சி தந்து, பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் அனுமன். ஆண்டாள் சந்நதி முன் நின்று பார்த்தால், பார்த்தசாரதியின் கருவறை விமானமான ஆனந்த விமானத்தை கண்குளிரக் காணலாம். ‘கலௌ வேங்கடநாயகம்’ என்றும், ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்றும் மகான்களால் போற்றப்பெற்ற வேங்கடாஜலபதியும், கிருஷ்ணனும் ஒன்றிணைந்து ஓருருவாய், வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு
எழுந்தருளியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் ஏதாவது ஒரு சனி-ஞாயிறன்று ஈக்காட்டுத்தாங்கலுக்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்கிறார். பிறகு, சைதை பிரசன்னவெங்கடாஜலபதி ஆலயத்திற்கு வந்து அலங்காரம் செய்து கொண்டு திருவல்லிக்கேணிக்குத் திரும்புகிறார். இது திருவூரல் உற்சவம் எனப்படுகிறது.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்