SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயங்காமல் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்,,!

2019-06-13@ 17:16:43

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மகளுக்கு நீண்ட நாட்களாக வரன் பார்த்து வருகிறேன். கடந்த 2015ல் என் கணவர் திடீரென மின்னல் தாக்கி மரணம் அடைந்தார். மகளுக்கு வருகின்ற வரன்கள் எனக்கு திருப்திகரமாக இல்லை. அப்படி நல்ல வரன்கள் வந்தாலும் ஜாதகப் பொருத்தம் இல்லாமல் போகிறது. ஆயில்யம் நட்சத்திரம் என்பதைச் சொல்லியே பலரும் நிராகரிக்கிறார்கள். என் மகளின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
- மணிமேகலை, திருநெல்வேலி.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கன்யா லக்னத்தில் (துலாம் லக்னம் என்று தவறாக கணித்து அனுப்பியிருக்கிறீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. நீங்கள் நல்ல வரன் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை. பணத்தைப் பார்க்காமல் குணத்தை மட்டும் பாருங்கள். குடும்பச் சூழல் காரணமாக ஏற்கெனவே நீங்கள் அவருக்கு கல்யாண யோகம் கூடி வந்த நேரத்தைத் தவற விட்டிருக்கிறீர்கள். தற்போது நடந்து வருகின்ற நேரம் திருமணத்தை எந்தவிதத்திலும் தடை செய்யாது என்றாலும் வரன் தானாகத் தேடி வருகின்ற அம்சம் இல்லை.

நீங்கள்தான் முயற்சி எடுத்து திருமணத்தை நடத்த வேண்டும். அவர் பிறந்த ஊரில் இருந்து வடக்கு திசையில் வரன் அமையும். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக உள்ளதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு பகவான் உச்ச பலம் பெற்றுள்ளதாலும் நல்ல குணம் படைத்த ஒருவரை தன் வாழ்க்கைத் துணைவராக உங்கள் மகள் கரம்பிடிப்பார். 14.05.2020ற்குள் அவரது திருமணம் நிச்சயமாகிவிடும். புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயார் சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி உங்கள் மகளை வணங்கி வரச் சொல்லுங்கள். மகாலக்ஷ்மியின் திருவருளால் மங்கலநாண் அவரது கழுத்தினில் ஏறும் காட்சியைக் கண்குளிரக் காண்பீர்கள்.

“ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

?என் மகள் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. கடந்த மாதத்தில் கடுமையான ஜூரம் உண்டாகி வலிப்பு வந்துவிட்டது. மருத்துவர்களின் உதவியால் தற்போது சரியாகி குழந்தை ஆரோக்யமாக உள்ளாள். ஜாதகம் பார்த்ததில் குழந்தைக்கு ஏதோ தோஷம் இருப்பதாகச் சொல்கிறார்கள். கலக்கத்தில் உள்ள எங்களின் கவலை தீர வழி சொல்லுங்கள்.
- புதுக்கோட்டை வாசகி.

ஒன்பது மாதக் குழந்தைக்கு ஜாதகத்தை கணித்துப் பார்ப்பது என்பது தவறு. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துத்தான் ஜாதகம் எழுத வேண்டும். ஒரு வயது வரை அது கடவுளின் குழந்தை. ஒரு வயது முடிந்த பின்னரே அது நமது குழந்தை என சொந்தம் கொண்டாட முடியும். அதனை உறுதி செய்யும் விதமாகத்தான் குலதெய்வத்தின் கோயிலுக்குச் சென்று குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தி தெய்வ அனுக்ரஹத்துடன் கடவுள் வந்த வரம் இது என நமது குழந்தையை ஏற்றுக் கொள்கிறோம். குலதெய்வத்தின் சந்நதியில் மொட்டை அடித்து காது குத்தும் வரை குழந்தையின் ஜாதகத்தை அதிகம் ஆராயக் கூடாது. அது தெய்வ நம்பிக்கையைக் குலைத்துவிடும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இதுபோன்று கடுமையான ஜூரத்தின் காரணமாக வலிப்பு வருவது சகஜம்தான். மருத்துவ சிகிச்சையின் மூலம் தற்போது ஆரோக்யமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் குழந்தைக்கு வந்த கண்டம் ஆனது சற்று சோதனையைத் தந்திருந்தாலும் குலதெய்வத்தின் அருளால் அதனைத் தாண்டியாகிவிட்டது என்று எண்ணிக் கொள்ளுங்கள். குலதெய்வத்திடம் உங்கள் பிரார்த்தனையை முன் வையுங்கள். குழந்தையின் காதணி விழா நாள் அன்று உங்களால் இயன்ற வரை ஏழை எளியோர்க்கு அன்னதானம் செய்யுங்கள். தெய்வத்தின் திருவருளாலும், முன்னோர்களின் ஆசிர்வாதத்தாலும் உங்கள் குழந்தை தீர்க்காயுளுடன் திடகாத்திரமாக வாழ்வார். கவலை வேண்டாம்.

?என் மகனுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. தகுந்த பரிகாரம் சொல்லுங்கள்.
 - பெரியசாமி, திருச்சி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் (கடக லக்னத்தில் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகன் அமாவாசை நாளில் பிறந்திருக்கிறார் என்பது ஜாதக கணக்கில் புலப்படுகிறது. அவரது ஜாதகத்தில் சூரியன் - சந்திரன் இணைந்து 12ல் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். மகனின் ஜாதகப்படி பிதுர்தோஷம் என்பது தென்படுகிறது. பரம்பரையில் உண்டாகியிருக்கும் பிரச்னை வம்ச விருத்தியை தடை செய்கிறது.

குடும்பத்தில் உள்ள முதியவர்களிடம் உண்மை நிலையை அறிந்துகொண்டு அதற்கு பிராயச்சித்தம் தேட முயற்சியுங்கள். இவர்களது திருமணத்தை கோயிலில் வைத்து நடத்தியிருப்பது நிச்சயமாக நன்மையைத் தரும். உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஐந்தில் ராகு இருப்பதால் பிரச்னை ஏதுமில்லை. ஐந்தாம் வீட்டின் அதிபதி செவ்வாயின் பார்வை பலமும் நன்றாக உள்ளது. தம்பதியரை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று அக்னி தீர்த்தக் கடலில் ஸ்நானம் செய்து புத்ர தோஷம் நீங்க பரிகாரம் செய்வதுடன் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ராமநாதேஸ்வரரையும் பர்வதவர்த்தினியையும் வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். விரைவில் வம்சவிருத்தி உண்டாகக் காண்பீர்கள்.

?என் கணவர் திருமணத்திற்கு முன்பிலிருந்தே அதாவது கடந்த 10 வருடங்களாக தூக்க மாத்திரை மற்றும் டென்ஷன் மாத்திரை எடுத்து வருகிறார். இதனை விட முடியவில்லை. மிகவும் கவலையாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.
- மகேஸ்வரி, ஊட்டி.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் சந்திர கிரஹணத்திற்கு மறுநாள் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஜோதிட அறிவியல் கணிதத்தின் அடிப்படையில் அந்த கிரஹணத்தின் தாக்கம் முழுமையாக விலக 40 மணி நேரம் ஆகியிருக்கிறது. உங்கள் கணவரின் ஜாதகம் கிரஹணத்தின் லேசான தாக்கத்தினைப் பெற்றிருக்கிறது.

லக்னாதிபதி செவ்வாய் மூன்றில் உச்ச பலம் பெற்றிருப்பது அடிக்கடி டென்ஷனைத் தருகிறது. ராகு - சந்திரனின் இணைவு மன உளைச்சலைத் தந்து நிம்மதியான உறக்கத்தைக் கெடுக்கிறது. மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் உங்கள் பேச்சின் மூலம் அவரது டென்ஷனைக் குறைக்க இயலும். எப்பொழுதும் புன்னகையுடன் அவரிடம் பேசி வாருங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவரை தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபடச் செய்யுங்கள். இந்த இரண்டு பயிற்சிகளால் மட்டுமே அவரது பிரச்னையை சரிசெய்ய இயலும். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்திற்குச் சென்று இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். கணவரின் ஆரோக்யம் வலிமை பெறக் காண்பீர்கள்.

?என் மகனுக்கு இரண்டு முறை திருமண ஏற்பாடு செய்து நின்றுவிட்டது. அவனது ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா? தாய்மாமாவின் மகள் இருக்கிறாள். 10 வயது குறைவான பெண்ணாக உள்ளாள். அவளைத் திருமணம் செய்து வைக்கலாமா? என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் உள்ளதா-?
- ஜானகிராமன், சென்னை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி ஐந்தில் அமர்ந்திருப்பதால் அவரது மனதிற்குப் பிடித்தமான பெண் மனைவியாக வருவார். ஏழில் ராகு அமர்ந்திருப்பதும், ஜென்ம லக்னத்தில் சந்திரன் - கேது இணைந்திருப்பதும் தோஷத்தைத் தந்து திருமணத் தடையை உண்டாக்கியிருக்கிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் நேரம் திருமண யோகத்தினை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. உறவுமுறையில் திருமணம் செய்வதற்கான வாய்ப்பு இவரது ஜாதக பலத்தின்படி நன்றாக இல்லை. தாய்மாமாவின் பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைப்பது உசிதமாகாது.

உங்களை விட வசதி வாய்ப்பில் குறைந்த இடமாகப் பாருங்கள். குடும்பப் புரோஹிதரின் துணை கொண்டு உங்கள் பிள்ளையை அமர வைத்து சர்ப்பபலி சாந்தி பரிகார பூஜையை ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் நடத்துங்கள். உங்கள் மகனிடம் திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள அம்மனின் ஆலயத்திற்குச் சென்று சந்நதியை ஏழுமுறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். அம்பிகையின் அருளால் திருமணத் தடை நீங்கி இந்த வருட இறுதிக்குள் அவரது திருமணம் நடந்துவிடும்.

?கடந்த ஐந்து வருடங்களாக துபாயில் வேலை பார்க்கும் என் மகன் அந்த ஊரைச் சேர்ந்த மலையாளப் பெண்ணை விரும்புவதாகக் கூறுகிறான். பெண்ணின் பெற்றோருக்கும் எங்களுக்கும் இதில் விருப்பம் இல்லை. மகன் ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிடுவானோ என்று பயமாக உள்ளது. எங்கள் குழப்பம் தீர வழி சொல்லுங்கள்.
- நந்தகுமார்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசை முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றில் ராகுவுடன் இணைந்து அமர்ந்து களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறார். மேலும் அவருடைய ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபகிரஹங்களும் வக்ரம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பது சற்று பலவீனமான அம்சம் ஆகும்.

இறைவனின் அருளால் வருகின்ற ஜூன் மாதம் 15ம் தேதியோடு வீண்மாயையைத் தந்து கொண்டிருக்கும் இந்த நேரமானது முடிவிற்கு வருவதால் உங்கள் மகன் வெகுவிரைவில் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்துவிடுவார். உங்கள் மகனுடைய ஜாதக பலத்தின்படி அந்தப் பெண் அவருடன் மனைவியாக குடும்பம் செய்வதற்கு வாய்ப்பில்லை. ஜூன் மாதத்தின் பிற்பாதியில் இருந்து குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவதால் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைப்பீர்கள். தற்போதைய சூழலில் அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள். அந்தப் பெண் தானாகவே அவரை விட்டு விலகிவிடுவார். வெள்ளிக்கிழமை தோறும் ராகுகால வேளையில் துர்கையின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். துர்கையின் அருளால் உங்கள் மகனின் மனம் தெளிவு பெறுவதோடு குடும்ப வாழ்வும் சிறப்பான முறையில் அமையும்.

?வேற்று மொழி பேசும் பையனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்து ஒன்றரை வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டது. நிறையவே நஷ்டப்பட்டுவிட்டோம். இவளுக்கு மறுமணம் எப்போது அமையும்? வெளிநாட்டு வேலை கிடைக்குமா? உரிய வழி
சொல்லுங்கள்.
- புதுடெல்லி வாசகி.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில்  பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவத்தில் வக்ரம் பெற்ற செவ்வாய் அமர்ந்திருப்பது தோஷத்தைத் தந்திருக்கிறது. அதோடு புதன், குரு ஆகிய கிரஹங்களும் வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் மறுமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். அவரது விருப்பப்படி ஸ்திரமான நல்ல உத்யோகம் என்பது 13.08.2019ற்குப் பின் அமைந்துவிடும். வெளிநாட்டில் உத்யோகம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

மனக்குழப்பம் அதிகம் உடையவர் என்பதால் இவர் தனித்து வசிப்பது என்பது அத்தனை உசிதமல்ல. பெற்றோருடன் வசிப்பதே இவரது எதிர்காலத்திற்கு நல்லது. அவரது விருப்பத்திற்கு ஏற்றார் போல் சொந்த வீட்டினை வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம். 31வது வயதில் மறுமணம் என்பது அவரது விருப்பத்திற்கு ஏற்றார் போல் நடைபெறும். வியாழன்தோறும் அருகில் உள்ள சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். ஸத்குரு சாயிநாதனின் திருவருளால் உங்கள் மகளின் மறுமண வாழ்வு நல்லபடியாக அமையும். கவலை வேண்டாம்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்
229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,
ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்