SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலை உறுதி செய்

2019-06-10@ 15:49:33

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 18

மரபின் மைந்தன் முத்தையா


உடம்பு உயிரின் வாகனம். அன்றாடம் மேற்கொள்ளும் பயணமாக இருந்தாலும் சரி, உங்கள் லட்சியத்தை நோக்கி போகிற பயணம் என்றாலும் சரி அதற்கு உங்களுக்கான வாகனம் இந்த உடல்.சித்தர்கள் உடலை குப்பை என்று ஒருபுறம் ஒதுக்குகிறார்கள். மறுபுறம் அதை இறைவனின் ஆலயம் என்று கொண்டாடுகிறார்கள். இரண்டில் எது சரி என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். எதை எப்போது எதற்காக சொல்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். உடலானது சிற்றின்ப நாட்டங்கள் பெரிதும் ஈடுபடும் போது அதனை நிலையற்றது என்றும் அருவெறுப்பானது என்றும் சொல்கிறார்கள். அதே நேரம் ஒருவர் ஆத்ம சாதனையில் ஈடுபடும் போது உடம்பு இறைவன் உறையும் ஆலயம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
என்கிறார் திருமூலர்.

உடலெனும் அற்புதமான கருவி சரியான நோக்கில் பயன்படுத்தப்படும்போது அது இன்னும் உயர்ந்த நிலைகளை எட்டுவதற்கான கருவியாகவும் வாய்ப்பாகவும் அமைகிறது. அதே நேரம் உடலை சரியான நோக்கில் பயன்படுத்தாத போது அது சித்தர்களால் கண்டிக்கப்படுகிறது.பழைய சித்தர் பாடல் ஒன்று உங்களுக்கு நினைவிருக்கும்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

இந்த பாடல் மனித உடலை வேண்டி விரும்பி பெற்று அதை எப்படி எல்லாம் பலரும் பாழடிக்கிறார்கள் என்பதை சொல்கிறது. இதில் நாலாறு மாதங்கள் என்பது கருவில் இருக்கும் பத்து மாதங்களை குறிக்கும் இதில் சொல்லப்படும் குயவன் ஒரு உயிரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப உடலை உடலாகிய மண்பாண்டத்தை வனைந்து கொடுக்கும் நான்முகன் நந்தவனம் என்பது வானுலகத்தை குறிக்கும். ஆண்டி என்பதோ ஆன்மாவை குறிக்கும் சொல்.நம் ஆன்மா ஆகிய ஆண்டி வானுலகத்தில் இருந்தபோது பூமியில் பிறக்கும் ஆசையால் குயவன் ஆகிய பிரம்மனை வேண்டி உடலாகிய மண் பாத்திரத்தை வாங்கிக்கொண்டு இந்த பூமிக்கு வந்தது இதைத்தான்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
என்பது வரையிலான வரிகள் குறிக்கின்றன.

அப்படி கொண்டு வந்த உடலை பேணிக்காக்க தெரியாமல் ஆன்மா என்ன செய்தது என்பதையும் இந்த சித்தர் பாடல் சொல்கிறது.கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டிவெகுநாளாக வாங்க விரும்பிய பொம்மையை அப்பா வாங்கித்தந்ததும் குழந்தை அதீத உற்சாகத்தில் அதனோடு விளையாடி விளையாட்டிலேயே அந்த பொம்மையை உடைத்துவிட்டு விழிப்பதைப் போலத்தான் ஆன்மா அல்லாடுகிறது.எனவேதான் இறை தேடலைக் கூட உடலில் இருந்து தொடங்கினார்கள். மனிதன் எல்லாம் வல்ல இறையை தேடும் முயற்சியில் ஈடுபட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வெறுமனே வயிற்றுக்கான இரையைத் தேடி நடந்தாலும் கூட உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே தான் நம்முடைய மரபில் அனைத்து விதமான ஆன்மிக பயிற்சிகளையும் உடலில் இருந்து தொடங்கினார்கள்.எந்தக் குறைகளும் உடலில் இல்லாமல் பிறக்கும் வாய்ப்பு அமையாதவர்களும் நம்மிடையே உண்டு. அத்தகைய மாற்றுத் திறனாளிகள் தங்கள் இடத்தை எட்டிப் பிடிக்க பெரிதும் முயன்று வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால் எந்தக் குறையும் இன்றி பிறக்கக் கூடியவர்களில் சிலர் உடல்நலம் பேணுவதில் இருக்கும் கவனக்குறைவால் பல நோய்களுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.முதலில் மனிதராகப் பிறந்ததற்கே நாம் பெரிதும் நன்றி பாராட்ட வேண்டும். அதிலும் உடல் சார்ந்தும் மனம் சார்ந்து குறைபாடுகள் இல்லாத பிறவி நேர்ந்தால் இன்னும் கூடுதல் நன்றி உணர்வோடு கடவுளை வணங்க வேண்டும். அப்படி வாய்த்த பிறவி வீணாகாமல் அறிவுத்தேடலோடு வாழ வேண்டும். இது மட்டும் இருந்தால் போதாது. நாம் யார் என்று உணர்வதற்கு தவம் செய்து இல்லாதவர்களுக்கு தானம் செய்தால் இந்த உயிர் தானாகவே உய்கதிக்கு செல்லும் என்பதை அவ்வையார் அறுதியிட்டுச் சொல்கிறார்.

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது
மானிடராகப் பிறந்த காலையும்
கூன் குருடு செவிடு என்னும்
பேடு நீங்கி பிறத்தல் அரிது ;
பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது’
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தாம் செய்தல் அரிது ‘
தானமும் தவழும் தாம் செய்பவர் ஆயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

இந்த பாடல் மனிதனாகப் பிறந்தால் போதாது மனிதப் பிறவியை எப்படி எல்லாம் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அழகுபட  பேசுகிறது. மகாகவி பாரதி  “உடலினை உறுதிசெய்” என்று அறிவுறுத்தினார். தனக்கு அந்த வாய்ப்பு தரப்படாவிட்டால் கூட அடுத்தவர்களுக்கு  அது அவசியம் தேவை என்பதே பாரதியின் பரந்த எண்ணம்.இன்று இளைஞர்களாய் இருப்பவர்கள் உடல் நலம் பேணு வதில் ஒரு மணி நேரம் செலவிட்டால் நடுத்தர வயதுக்காரர்கள் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் உடல் நலனுக்காக செலவிட வேண்டும்.ஒரு மணி நேரம் நடைப்பழக்கம். ஒரு மணி நேரம் யோகா என்று வழக்கப் படுத்திக் கொண்டால் ஆயுளும் நீளும். ஆரோக்கியமும்  கூடும்.உடலை உறுதி செய்தால் உள்ளம் வலிமை பெறுகிறது. ஆரோக்கியத்தின் அகலில், திட்டமிடும் கூறிய மதியின் திரியில்  வெற்றியின் தீபம் ஒளி வீசுகிறது.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்