SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருசேவையால் ராம தரிசனம் பெற்ற சபரி

2019-05-30@ 10:35:01

* திருமூலர் மந்திர ரகசியம்

மழை! எல்லோருக்கும் பொதுவாகத்தான் பெய்கிறது. அவரவர்கள் தங்களிடம் இருக்கும் பாத்திரங்களுக்கு ஏற்ப, மழை நீரைப் பிடித்துச் சேமித்து  வைத்துக் கொள்கிறார்கள். அதுபோல, தெய்வம் எல்லோருக்கும் பொதுவாகத்தான், அருள்மழை பொழிகிறது. அவரவர்கள் தங்கள் மனங்களுக்கு ஏற்ப,  இறையருளைப் பெறுகிறார்கள்.
‘‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’’ எனும் வள்ளுவர் வாக்கு பொய்யாகுமா? உள்ளத்தால் உயர்ந்த உத்தம  ஜீவனைத்தேடி, தெய்வமே வந்த வரலாறு இது.

மகரிஷி மதங்கர், யமுனா நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். நதியில் புஞ்ஜிதஸ்கலை, கிருதாசி முதலான அப்சரசுகள் விளையாடியபடியே  நீராடிக் கொண்டிருந்தார்கள். தவம் முடித்த மதங்கமுனிவர், நதியில் இறங்கி கைகளில் நீரை அள்ளினார். அதேசமயம், நீரில்விளையாடிக்  கொண்டிருந்த புஞ்ஜிதஸ்கலை, நீரில் மூழ்கியபடியேபோய், மதங்கமுனிவரின் கால்களைப் பிடித்து இழுத்தாள். கோபம் கொண்ட முனிவர்,  புஞ்ஜிதஸ்கலைக்கு சாபம் கொடுத்தார்.

முனிவரின் சாபம்பெற்ற இந்தப் புஞ்ஜிதஸ்கலைக்கும் அஷ்டவசுக்களில் ஒருவரான உபரிசரன் எனும் அரசருக்கும், ஆண் ஒன்றும் பெண் ஒன்று மாக  இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தையைத் தன் அரச வாரிசாக ஏற்றுக்கொண்ட அரசர், ஆண் குழந்தையைத்தான் எடுத்துக் கொண்டார்.  புஞ்ஜிதஸ்கலையோ, சாபவிமோசனம் பெற்றுத் தன் உலகம் சென்று விட்டாள்.

ஆதரவு இல்லாமல் இருந்த பெண்குழந்தையை, மதங்கமுனிவர் எடுத்து வளர்த்தார். அப்பெண் குழந்தைக்கு மதங்க முனிவர், ‘விமலா’ எனப்பெயர்  சூட்டினார். விமலாவும் ஆசிரமத்திலேயே, மிகவும் பொறுப்போடு வளர்ந்தாள். முனிவரால் வளர்க்கப்பட்டவள் அல்லவா? நற்குணங்கள் எல்லாம்,  தாமாகவே கூடின விமலாவிடம். கொஞ்சகாலம் ஆனதும் மன்னர் உபரிசரன் மதங்க முனிவரிடம் வந்து, “மன்னியுங்கள் மாமுனியே! அந்தப்  பெண்குழந்தையையும் பெற்றுப்போகலாம் என்று வந்தேன்” எனச்சொல்லி, விமலாவைத் தருமாறு வேண்டினார். மகரிஷி மறுத்து விட்டார்; “அவள்  இங்கேயே இருக்கட்டும்!” என்றார்.

ஆனால், எவ்வளவு நாட்களுக்குத்தான் ஆசிரமத்திலேயே வளர முடியும்? விமலா கொஞ்சம் வளர்ந்தவுடன், அவளை வேடர்களிடம் விட்டு,  பொறுப்போடு வளர்க்கச் சொன்னார் மதங்க முனிவர். ஆசிரமத்தில் பெண்கள் இருக்கக்கூடாது அல்லவா? அதனால்தான் முனிவர் அவ்வாறு செய்தார்.  வேடர்களால் வளர்க்கப்பட்ட விமலா, மணப்பருவம் அடைந்ததும், அவளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள் வேடர்கள். வேடர்களிலேயே  ஒருவனை மணமகனாக ஏற்பாடு செய்தார்கள். ஆனால் சிறுவயதில் ஆசிரம சூழலிலே வளர்ந்த விமலாவின் மனம், திருமணத்தை ஏற்கவில்லை.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் விமலாவின் சொற்கள் எடுபடவில்லை. வேறுவழியற்ற நிலையில் ஒருநாள், விமலா காணாமல் போனாள். சிலகாலம்  தேடிப்பார்த்த வேடர்கள், அதன்பிறகு தேடுவதை நிறுத்தி விட்டார்கள். காலம் சென்றது. திடீரென்று மதங்க முனிவர் ஆசிரமத்தைச் சுற்றி,  தூய்மையாக இருக்கத் தொடங்கியது. முனிவருக்கும் சீடர்களுக்கும் காரணம் புரியவில்லை.  ஒருநாள், “சீடர்களே! ஆசிரமத்தைச்சுற்றி, இவ்வாறு  தூய்மை செய்வது யார் என்பதை, விரைவாக அறிந்து கூற வேண்டும்” எனக்
கட்டளையிட்டார்.

சீடர்களும் முயற்சி செய்யத் தொடங்கினார்கள். கடைசியில், பகலில் யாரும் வந்து தூய்மை செய்வதில்லை. இரவில் தான், தூய்மை செய்யும் வேலை  நடக்கிறது என்பதைக் கண்டு பிடித்த சீடர்கள், “அவ்வாறு தூய்மை செய்வது யார்?” என்பதை அறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஒருசில சீடர்கள்,  ஆசிரமத்திற்கு முன்னால் சற்று தொலைவில் இருந்த மரங்களில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

நள்ளிரவு தாண்டி கொஞ்ச நேரமானதும், தூரத்தே ஏதோ ஒருவெளிச்சம் தோன்றியது. தோன்றிய வெளிச்சம் அவ்வப்போது, மேலும் கீழுமாக ஏறி  இறங்கியபடி, முன்னேறி வந்தது. மரத்தின்மேல் இருந்த சீடர்கள் மெள்ள நடுங்கத்தொடங்கினார்கள். வயதில் இளையவர்களாக இருந்தாலும்,  அவர்களும் மனிதர்கள் தானே! மேலும் சற்றுநேரம் ஆனது.
வெளிச்சம் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தது. அந்த வெளிச்சத்தை வெளிப்படுத்திய ஒரு தீப்பந்தமும், அதைத் தாங்கிய ஒரு கையும் தெரிந்தன.

சீடர்களுக்குச் சற்று துணிவு வந்தது. “இது பேயல்ல யாரோ மனிதர்தான்” என்று தீர்மானித்தவர்கள் மரங்களில் இருந்து இறங்கி, வெளிச்சத்தை  நோக்கிப் போனார்கள். அருகில் போனதும், கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி பெண் மணி ஒருவர் ஆசிரமத்தின் முன்னால் வழி நடைப்பாதையை  சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். பிறகென்ன? பொழுது புலரும் வேளையில், அப்பெண்மணியைக் கூட்டிப் போய் குருநாதர் முன்னால்  நிறுத்தினார்கள்.

தன் முன்னால் நிறுத்தப்பட்ட பெண்மணியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்த மதங்கமுனிவர், முகம் மலர்ந்தார். உண்மை புரிந்தது அவருக்கு.   எதிரில் இருந்த பெண்மணி பேசத்தொடங்கினார்; “சுவாமி! தங்களால் சிறுவயதில் வளர்க்கப்பட்ட விமலாதான் நான். பிற்பாடு வேடர்களிடம் வளர்ந்த  நான், அவர்கள் எனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யும்போது வேண்டாமென்று மறுத்தேன். ஆனால் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள்.

வேறு வழியில்லாமல், அவர்களிடம் இருந்து தப்பிப்போய்க் காட்டில் வாழ்ந்தேன். வேடர்கள் பார்வையில் படாதபடி இருந்த நான், அவர்கள் தேடுவதை  நிறுத்தியதும் கொஞ்சகாலம் கழித்து, நான் வளர்ந்த இந்த ஆசிரமத்தைச் சுற்றியும், தாங்கள் நதி தீரத்தத்திற்குச் செல்லும் பாதையையும் தூய்மை  செய்யத் தொடங்கினேன்” என்று நடந்ததை விவரித்தார். மதங்கமுனிவர் உண்மை உணர்ந்தார்; “விமலா! இன்று முதல் நீ இங்கேயே இருந்து, உன்  தொண்டுகளைச் செய்யலாம்” என்று ஆசி கூறினார். கூடவே, விமலாவின் தவமும் தவத்தால் இளைத்த திருமேனியும் கண்ட மதங்கர் விமலாவிற்கு  ஸ்ரீராம சடட்சரி மந்திரத்தை உபதேசமும் செய்தார்.

ஏற்கனவே பக்தியில் பக்குவம் பெற்றிருந்த விமலா, அன்றுமுதல் நின்றாலும் அமர்ந்தாலும் படுத்தாலும், எந்தநேரமும் மந்திர ஜபமாகவே இருந்தார்.  சபரர்கள் எனும் வேடர்களால் வளர்க்கப்பட்ட அந்த விமலா தான் - சபரி. இந்த சபரியைத் தேடித்தான், ஸ்ரீராமர் வந்தார். சபரிக்கும் ஸ்ரீராமருக்கும்  இடையே நிகழ்ந்த நிகழ்வுகள், ஓரளவிற்காவது மக்கள் மனதில் பதித்திருக்கின்றன. ஆகையால் ஸ்ரீ ராமருக்கும் சபரிக்கும் இடையே நடந்த  உரையாடல்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம். ஸ்ரீராமரும் லட்சுமணரும் மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள்; வந்தவர்களை  முறைப்படி வரவேற்றுப் பூஜித்த சபரியிடம் ஸ்ரீராமர் பேசத் தொடங்கினார்;

“அம்மா! உன் தவம் நல்லவிதமாக நடந்து வருகிறதா? இடையூறுகள் ஏதும் இல்லாமல் இருக்கின்றனவா? காமக்குரோதங்களுக்கு வசப்படாமல்  இருக்கின்றாயா? மனது சந்தோஷமாக இருக்கிறதா? குருவிற்கு நீ செய்த பணிவிடைகளே, உனக்குப் பெருமையைத் தந்திருக்கின்றன. குருவிற்குச்  செய்யப்படும் பணிவிடை, என் தரிசனத்தைச் சுலபமாகச்சம்பாதித்துக் கொடுப்பதைப்போல, வேறு எந்த சாதனமும் - உபாயமும் செய்வதில்லை”  என்றெல்லாம் கேட்டுப் பேசினார்.

என்ன பாக்கியம்! என்ன பாக்கியம்! தெய்வமே தேடி வந்து விசாரிக்கிறது என்றால், சபரியின் தூய்மையான வாழ்வும் உள்ளமும் எப்படி இருந்திருக்க  வேண்டும்? அதற்கான காரணத்தை ஸ்ரீராமரே சொல்லிவிட்டாரே! இனி சபரியின் பதிலை பார்ப்போம்! “ராமா! உன் தரிசனத்தால், என் தவத்தின்  பலனை நான் அடைந்து விட்டேன். என் பிறவி, பயனுள்ளதாக ஆகிவிட்டது. என் குருநாதர்களை நான் முறைப்படி ஆராதித்திருக்கிறேன்.

அவருக்கான தொண்டுகளைத் தவறாமல் செய்திருக்கிறேன் என்பதற்கு இதுவே உதாரணம். “நீ சித்திரகூட பர்வதம் வந்தபோதே, என் குருநாதர்களான  மதங்கர் முதலான அனைவரும், சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்கள். அவர்களுக்கு நான் பணிவிடை செய்பவளாக இருந்தேன். “அவர்கள்  சொர்க்கத்திற்குச் செல்லும்போது, “ராமர் லட்சுமணன் கூட, இந்த ஆசிரமத்திற்கு வரப்போகிறார். அப்போது அவர்களை நீ,முறைப்படி வரவேற்றுப்  பூஜிக்க வேண்டும். அதற்காக உன்னை இந்த ஆசிரமத்திலேயே விட்டுவிட்டுப்போகிறோம்.

ராமரைப்பூஜித்து அவரருளால், உத்தமமான உலகங்களை நீ அடைவாய்! ‘‘என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதுமுதல் தங்கள் வருகையை  எதிர்பார்த்து நான் இங்கே இருந்து வருகிறேன்” என்ற சபரி, தான் சுவை பார்த்துச்சேகரி்த்து வைத்திருந்த பழங்களை, ஸ்ரீராமருக்குச் சமர்ப்பித்தார் சபரி.  அவற்றை ஏற்ற ஸ்ரீராமர் பேசத்தொடங்கினார்;
“சபரி! உன்னைப்பற்றிய தகவல்களையெல்லாம், கபந்தன் மூலம் தெரிந்து கொண்டேன். காதால் கேட்டதைக் கண்ணாலும் பார்த்து விடலாம்  என்றுதான், இந்த ஆசிரமத்திற்கு வந்தேன்” என்றார் ஸ்ரீராமர்.

ஸ்ரீராமரின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சபரி, ஆசிரமம் முழுவதும், ஒவ்வோர் இடமாகச் சுற்றிக்காட்டி, விவரிக்கத் தொடங்கினார். “ராமா! இந்த  ஆசிரமத்திற்குத் தங்கவனம் என்றொரு பெயரும் உண்டு. அபூர்வமான பறவைகளும் விலங்குகளும் இங்கு விளையாடுவதை, நீங்களே பாருங்கள்!  இந்த இடத்தில்தான், என் குருநாதர் உட்கார்ந்து தவம் செய்வார்கள்.

“ஒரு சமயம் மஹோதய புண்ணியகாலத்தை முன்னிட்டு, சமுத்திரத்தில் நீராட வேண்டும் என்று, என் குருநாதருக்கு விருப்பம் உண்டானது.  உபவாசங்களாலும் கடுமையான தவத்தினாலும் வயது முதிர்ந்ததாலும், சக்தியில்லாமல் போனதால், என் குருநாதரால் சமுத்திரம்போய் நீராட  முடியவில்லை. “இருந்த இடத்திலிருந்தே, என் குருநாதர் தியானம் செய்ய, ஏழு கடல்களும் இங்கே வந்தன. என் குருநாதர் நீராடினார். அவர்  மகிமையை யாரால் விளக்க முடியும்? இதோ! அவர்கள் நீராடி உலர்த்திய வஸ்திரங்கள் இன்னும் ஈரமாக இருப்பதைப் பாருங்கள்! இதோ! அவர்கள்  அர்ச்சித்த பூக்கள் எல்லாம், இன்னும் வாடாமல் இருப்பதைப் பாருங்கள்!” என்று சொல்லிக் கொண்டு வந்தார் சபரி.

பார்த்துக்கொண்டே வந்த ஸ்ரீராமர் அமர்ந்தார். சபரி தொடர்ந்தார். “ராமா! தங்கள் சந்நதியில் இந்தப் பிராரப்த உடம்பை விட்டுவிட்டு, தங்கள் அருளால்  என் குருநாதர்கள் அடைந்த பதவியை நான் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று முடித்தார். சபரியின் விருப்பம் நிறைவேறும்படியாகப்  பேசத்தொடங்கினார் ஸ்ரீராமர் “சபரி, பெண்களில் உன்னைப்போல ஒரு தபஸ்வினியை, நான் பார்த்ததில்லை. உனக்குச் சமமானவர் இல்லையென்றே  சொல்லி விடலாம். குரு பணிவிடைக்கு இணையான தவம், உலகில் இல்லை. அதைச்செய்து உன் பிறவியை உயர்ந்ததாகச்செய்து விட்டாய்.  சொர்க்கலோகம் என்ன சொர்க்கலோகம்? உன்னால் அடைய முடியாத புண்ணிய உலகங்களே கிடையாது. நீ உன் விருப்பப்படி, நீ எந்த உலகத்தை  வேண்டுமானாலும் அடையலாம்” என்றார்.

சபரியும் ஸ்ரீராமரின் அருளால், யோகாக்கினியில் தன்மேனியை உகுத்துவிட்டு, மதங்கமுனிவர் அடைந்த உத்தம உலகத்தை அடைந்தார். சபரியின்  புண்ணிய மகிமையை, தவ மகிமையை வர்ணிக்க ஆதிசேஷனாலும் இயலாது.  தூய்மையான பக்தி, பிரதிபலன் எதிர்பாராத பக்தியிருந்தால்,  தெய்வமே தேடிவந்து அருள் செய்யும் என்பதை விளக்கும் அருள்மயமான கதாபாத்திரம் ‘சபரி’.

பி.என் பரசுராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்