SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில் என்ன பிரசாதம்

2019-05-30@ 10:32:49

* திருப்புல்லாணி (ராமநாதபுரம்) - பால் பாயசம்

ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம், தர்ப்பசயனம் என்று பல பேராலும் புகழ்  பெற்றதாகும்.ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை கொண்டு தலவிருட்சமாக அரசமரத்தைக் கொண்டு ஜகந்நாதப்பெருமாள்  கல்யாணவல்லித் தாயாரோடு அருளும் திருத்தலம்.முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும்பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப்  பெற்றனர்.  மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை  காப்பாற்றி பின்   சுயவடிவாய் அதாவது சங்கு சக்ர தாரியாய் அபய முத்திரையுடன் காட்சியளித்து  தன்னை  தரிசிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும்  சாந்நித்யமாய் அருட்பாலிக்கிறார்.  

தசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000  மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று  வேண்ட உடனே ஆதி ஜகந்நாதப்  பெருமாள் ஒரு  மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில்  நாகபிரதிஷ்டை (அதாவது  இப்போது அந்த   சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சந்நதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின்  புத்ர காமேஷ்டி யாகம் செய்து பால் பாயசத்தை நிவேதித்து  மழலை வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் மழலை வரம் வேண்டுவோர் காலை 9 - 10 1/2 மணி பூஜையின் போது பால் பாயசத்தை  பிரார்த்தனை செய்து நிவேதித்து அவ்வரத்தைப் பெறுகிறார்கள். அதுதவிர திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இந்த புண்ணிய கைங்கரியத்தை  தினமும் செய்து வருவது சிறப்பு.

ராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி  செல்வது, கடலை தாண்டுவதா? யார்  உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன்  வல்வில்  ராமன் சோகமயமாய் தன் தம்பி லட்சுமணன் மடியில் சயனம் (படுக்கை) தலை சாய்த்து  தர்ப்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள்  இத்தலத்தில் உபவாசம் கிடந்தார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில்  சிலை  வடிக்கப்பட்டுள்ளது.

சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை  இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை.    ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார்.  மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். பாற்கடலில்  பள்ளி கொண்ட பரமனின் அவதாரமான
ராமபிரானின் தர்ப்பசயன ராமபிரான் தனி சந்நதியில் மூலவராகத் தர்ப்பசயனகோலத்தைக்  கடற்கரை தலமான திருப்புல்லாணி நமக்கு இன்றும்  காட்டி அவனே இவன் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

சென்னை ராமேஸ்வரம் இருப்புப்பாதையில் மானாமதுரை அடுத்து வரும் ராமநாதபுரம் சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இந்தத்  தலம் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. ஆக்னேய புராணத்தில் இத்தலத்தின் வரலாறு இடம் பெற்றுள்ளது. இங்கே சயன கோலத்தில்  கத்தியை வைத்துக் கொண்டு மாவீரனாகக் காட்சி அளிப்பதால் இவரை வீர சயனர் என்று கூறுவது வழக்கம். ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதால்  லட்சுமணனே இங்கு ராமபிரானுக்குப் படுக்கையாகப் பணி செய்வதாக வரலாறு.

புராண வரலாற்றின் படி ராமபிரான் புல்லினைப் பரப்பி அதன் மேல் சயனம் கொண்டதால் புல்லனை என்று வழங்கப் பெற்ற இத்தலம் நாளடைவில்  மருவி புல்லாணி ஆயிற்று. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டு அவர் அளித்த வில்லினாலேயே ராமர்  ராவணனை வென்றதாகக் கூறுவர். சமுத்திரராஜன் தன் மனைவிமார்களுடன் ராமபிரானிடம் சரணம் புகுந்த தலமாதலாலும், ராவணனின் ஒற்றர்களாக  வந்த சுகரும், சாரங்கரும் ராமபிரானால் மன்னிக்கப்பட்டு காக்கப்பட்டதாலும் இதை ஒரு சரணாகதி தலம் என்றே கருதலாம்.

மற்றும் புல்லாரண்யர், கண்வர் என்ற முனிவர்களும் ராமபிரானைச் சரணடைந்து முக்தி அடைந்ததாகவும் வரலாறு. தஞ்சம் அடைந்த விபீஷணனுக்குச்  சக்கரவர்த்தித் திருமகன் தம்பி லட்சுமணனைக் கொண்டு போருக்கு முன்பாகவே முடி சூட்டி மகிழ்ந்ததும் இந்தத் தலத்திலேதான் மக்கட்பேறு  வேண்டுவோர் இத்தலத்தில் கடலில் நீராடி, கோயிலில் அளிக்கப்படும் பாயஸத்தை அருந்தினால் புத்திர பாக்கியத்தை அடைவர் என்பதும் புராணம்  காட்டும் உண்மையாம். ராமபிரான் வீர சயனம் மேற்கொண்டுள்ள சந்நதிக்கு மேலுள்ள விமானம் புஷ்பக விமானம் என்றழைக்கப்படுவதால்  புராணத்துடன் இத்தலத்திற்குள்ள தொடர்பு மேலும் நன்கு வெளிப்படுகிறது.

மூலவரான தர்ப்பசயன ராமருக்கு முன்பாக உத்ஸவராகக் கோதண்டராமர் சீதை, லட்சுமணன், ஹனுமன் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில்  சேவை தருகிறார். தர்ப்ப சயனரின் சந்நதிக்கருகிலேயே ராமபிரானின் மற்றொரு சந்நிதியில் பட்டபிராமனாக மூலவராக நின்ற திருக்கோலத்தில் சீதை,  லட்சுமணர் ஆஞ்சனேயருடன் உள்ளார். ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயிலில் கல்யாண ஜகந்நாதர் என்ற திருநாமத்துடன் ராமபிரானுக்கு வெற்றி  அருளிய பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீ  தேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். தாயார் பத்மாசனி தனி சந்நதியிலுள்ளார்.

மற்றும் ஆண்டாள், சந்தான கோபாலன், மணவாள மாமுனிகள், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனி சந்நதிகள் உள்ளன. இந்தத் தலவிருட்சமாகிய  அரசமரத்தினடியில் நாகப்ரதிஷ்டை செய்வது புத்திரப் பேற்றை அளிக்கும் என்பதால் நாகர் சந்நதியும் இக்கோயிலில் உள்ளது. ராமபிரானின்  குலதெய்வமான ரங்கநாதர் கிடந்தவண்ணராகவும், அவரை வழிபட்ட சூரிய குலத் தோன்றல் ரகுவீரன் நின்ற வண்ணராகவும் திகழ்ந்தது பல  தலங்களில். ஆனால் இந்த ஒரு தலத்தில் தான் ராமபிரான் கிடந்த வண்ணராகவும், அவருக்கு அருட் பாலித்த ரங்கநாதர் நின்ற கோலத்தில்  ஜகந்நாதராகவும் சேவை தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு தலம் தேவிப்பட்டிணம், இதற்கருகிலேயே  உள்ளது. அங்குறைபவரும் ஜகந்நாதப் பெருமானே. ஆனால் திருப்புல்லாணியே ராமபிரானின் திருத்தலம் நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.15  மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்