SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

2019-05-30@ 10:28:23

* அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 42

உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்ததிங்
கெமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.பாடல்
பாடல் எண் ; - 31

மனித வாழ்வானது ஆசையில் தொடங்கி ஆண்டவனில் முடிவடையும். ஆனால் அபிராமி பட்டரோ ஆண்டவன் தொடங்கி ஆசையில்  முடித்திருக்கின்றார். ஆசையில் தொடங்கி வாழ்க்கை ஆண்டவனில் முடிய வாய்ப்பில்லை. ஆசை என்பது வெவ்வேறு விதமாக பயணித்து ஆண்டவன்  காலடியில் அல்லாமல் காலனின் கைப்பிடியில் நம்மை மாட்டி விடும் என்பதை நன்கு அறிந்துதான் அபிராமி பட்டர் ஆண்டவனில் தொடங்கி  ஆசையில் முடிக்கின்றார். இதை அவரே நமக்கு  ‘‘ஆசைக்கடலில் அகப்பட்டு அந்தகன் கை பாசத்தில் அல்லற்பட இருந்தேனா’’ - பாடல்-32  என்பதனால் அறியலாம். ஆனால் வாழ்க்கை ஆண்டவனில் தொடங்கினால் ஆசை ஓடி விடும் என்கிறார். இதையே ‘‘அமையும் அமையுறு தோழியர்  மேல் வைத்த ஆசையுமே’’ என்கிறார்.

மானுடத்தின் இயல்பே ஆசை என்கிறது இலக்கியம். ப்ரக்ரிதி காமோஹி மர்த்ய: என்பதனால் நன்கு அறியலாம். இயல்பான ஆசை என்பது  மனதிலுள்ள எண்ணத்தை உடல் சார்ந்து, உலகம் சார்ந்து அனுபவமாக்கிக் கொள்ள முயல்வதாகும். அந்த முயற்சியை வரையறுப்பதுதான் சமயம்.  வரையறுக்கப் படாவிடில் ஆசையே துன்பத்தை விளைவித்துவிடும். அதனால்தான் சமயத்தை கொண்டு ஆசையை வரையறுக்கிறார்கள்.

இறையன்பு மட்டுமே ஆசையை வரையறுக்கும் சமயச் சார்புடையதாக அமையும். அந்த சமயச் சார்புதான் நாம்  எண்ணும் ஆசையை அனுபவத்தில்  சாத்தியப்படுத்தி அதைத்
தொடர்ந்து துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளும் சமயம் சாராது நிறைவேற்றப்படும் ஆசைகள் அனைத்தும் ஒரு பக்கம் மகிழ்ச்சியை நமக்கு வாரி  வழங்கினாலும், காலம் ஒருநாள் அதை பிரித்து விடுகிறபோது அதுவே மிகச்சிறந்த துன்பத்தை விளைவிக்கும். அப்படி துன்பத்தின் பின்விளைவு  இல்லாத ஆசையையே அனுமதிக்கிறது சமயம்.

இப்படி மானுட இயல்பு, ஆசை, ஆசையை நிறைவேற்றும் அருள், அருளை பெற்றுத்தருவது சமயம், சமயத்தோடு தொடர்புடையது வீடு பேறு எனும்  மோட்சம், இப்படி எல்லாவற்றையும் சேர்த்து நமக்கு விளங்க வைப்பது எளிதல்ல, அதைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல, புரிந்துகொண்டேன் என்று  தவறாக புரிந்துகொள்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. இவற்றை எல்லாம் தெளிவுற இப்பாடலில் விளக்குகிறார் பட்டர். இனி பாடலுக்குள்  செல்வோம்.

‘‘உமையும் உமையொருபாகரும் ஏக உருவில் வந்து இங்கு இந்து மதத்தின் தனித்தன்மையுள் ஒன்று இறைவனுக்கு உருவம் உண்டு என்பது. அது  இறைவனுக்கு இல்லை என்றால் எந்த கேள்வியும் எழுவதில்லை. ஆனால் உண்டு என்றால் எந்த உருவம், அதன் பயன் என்ன? அதன் அவசியம்  என்ன? பிற உருவங்களில் இருந்து அதற்கு உண்டான தனித்துவம் என்ன? என்றெல்லாம் பல கேள்விகள் நம் நெஞ்சத்ைத துளைக்கின்றன.

இந்த கேள்விகளுக்கு முதலில் விடை கண்ட பிறகுதான் இந்த வரியை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இறைவன் அருவமாய்  இருந்தால் மனிதனால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.  அடையாளம் காண முடியாதபோது அது தொடர்பான அறிவோ, அனுபவமோ  நமக்கு அறிதாகிறது. அதை எண்ணித்தான் ஆகமங்களை அருளிய இறைவன் தனக்கான உருவத்தை தானே அறிவித்தான். அதுவே அவனை  கண்டுகொள்ள சாதனமாக அமைந்தது மேலும், மனிதர்கள் ஏதோ ஒன்றை நாடியே இறைவனிடம் கையேந்தி செல்கிறார்கள். அதை பெறுவதனால்தான்  மகிழ்கிறார்கள். அதை அளிப்பதற்கு எல்லையில்லா இறைவன் மானுடத்தின் தன்மை அளவிற்கு குறுகி தோன்ற வேண்டிய அவசியம் தோன்றுகிறது.

செல்வத்தை கொடுப்பதற்கு அவள் கையில் பொற்கிண்ணமும், வீரத்தை தருவதற்கு வாளையும், கல்வியைத் தருவதற்கு ஓலையையும் தனது  திருக்கரங்களில் தாங்கி இருக்கிறாள். இறைவிக்கு விருப்பம் என்று ஒன்றும் இல்லையாயினும், கேட்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதன்  பொருட்டே அவை ஒவ்வொன்றிற்குமான தனி அடையாளம் உடையவளாய், பலவாய் தோன்றி அருள்கிறாள். இந்த ஆசை மனிதனுக்கு அளவின்றி  வளர்கின்றபோது அவன் கேட்பதே அவனுக்கு தொந்தரவாய் ஆகிவிடுகிறது. இதை நன்கு உணர்ந்த அபிராமி பட்டர் ஆசையை அழிக்க ஆசைப்பட்டார்.  அதற்கான கடவுளைத் தேடினார். அவர் சொன்ன ஆகமத்திலேயே அதற்கான விடையையும் கண்டார். அதுதான் ‘‘உமையும் உமையொருபாகரும் ஏக  உருவில் வந்து’’ என்பதாகும்.

உமையம்மை வழிபாட்டு நெறியை வலியுறுத்தும் பரமாகமம் என்ற நூலில்  உமையம்மையானவள் தான் மட்டும் தனித்து நின்று ஒன்றாய்  அருளும்போது மோட்ஷத்தையும் இறைவன் என்ற தன் கணவனாகிற சிவனோடு உடனாய் நின்று அருள்கிறபோது உலகியல் சார்ந்த வீடு, மனைவி,  மக்கள், செல்வம் போன்ற விருப்பங்களை நிறைவேற்றும் யோகத்தையும், ஆண்பாதி, பெண் பாதியாக ஒரே வடிவத்தில் இருவேறாக தோன்றுவதால்  ஞானத்தையும் அருள்கிறாள்.

அந்த கருத்தைத்தான் படித்து நன்கு உணர்ந்ததை படிப்போராகிய நமக்கு உணர்த்துவதை கீழ்க்கண்ட வரிகளால் உறுதி செய்து கொள்ளலாம்.

‘‘ஆத்தாளை எங்களை அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு
ஒரு தீங்கில்லையே (அபிராமி அந்தாதி  - நூல் பயன்)
என்று தான் மட்டும் தனியாக நின்றதையும்
‘‘கணவருடன் கூடி நம் காரணத்தால்’’
(பாடல் எண் - 41) என்று

தன் கணவனுடன் உடனாகயிருந்ததையும், நின் கேள்வர் ஒரு பக்கமோ’’ (பாடல்-20) என்று வேறாய் நின்று அருளியதையும், நமக்கு உணர்த்துகிறார்.  ஞானம் என்பதற்கு ஆகமம் ஐந்து பொருள் களைத் தருகிறது.

1. உடல் சார்ந்து பசி, தாகம், பிணி, மல, ஜல அவஸ்தைகள் குறைவுபடுதல்,
2. உள்ளம் சார்ந்து காமம், கோபம், பற்று, காதல், ஆணவம், பொறாமை போன்ற தீய
குணங்கள் அற்றுப் போதல்.
3. அறிவு சார்ந்து - ஐயம், திரிபு, பொய் இவை அற்றுப் போதல்.
4. ஆன்மா சார்ந்தது - துன்ப இன்பங்கள் அற்றுப் போதல் என்பதாகும்.
5. இவைகளுக்கு மாறாக உடல் எடை குறைதல். எப்பொழுதும் உண்ணாமல் இருக்கும்
போதும் சுறுசுறுப்பாக இருத்தல்.
6. உள்ள உணர்வுகளால் பாதிக்கப்படாமல் அமைதியுற்று இருப்பான்.
7. அறிவு முக்காலத்தையும் அறியும் ஆற்றல் பெற்றும், ஆன்மாவானது இறைவனோடு தொடர்பு பெற்றுயிருப்பதே ஞானம்.

இந்த பண்புகள் அனைத்தும் ஞானம் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய மேலான ஞானத்தை அருள்வதற்காக உமையம்மையை
‘‘உமையும் உமையொருபாகரும் ஏக உருவில் வந்து’’ (பாடல் - 31) என்று கூறுகின்றார்.

‘‘எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்’’ சொல்வதை கேட்காதவன், தாமாக புரிந்துகொள்ளாதவன், அறத்தை அறிந்தும் அதைப் பின்பற்றாதவன்,  தீயதை அறிந்தும் அதை விலக்காதவன், தன் மனம் போன போக்கிலே போகும் இழிவான பண்புகளை எல்லாம் தனக்கே உரிமையாகக் கொண்டவராக  அபிராமி பட்டர் தன்னைக் குறித்துக்கொள்கிறார்.

ஆசைக் கடலுள் அகப்பட்டு  (பாடல் - 31) 32
‘பேயேன்...’ (பாடல் - 61)  ‘நாயேனையும்’ (பாடல்-61) ‘மிண்டு செய்தாலும்’ (பாடல் - 45)

என்று அவர் தன்னை இழிவாக குறிப்பிடுகின்றார். ‘எமை’ என்று கூறாமல் ‘எமையும்’ என்று கூறுவது இழிவு சிறப்பை குறிப்பது. பல உணர்ந்தோர்  எல்லாம் தவம் செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கெல்லாம் அருளாமல் ‘எமையும்’ என்ற வார்த்தையால் மறைமுகமாக மிக உயர்ந்த  சிறப்பையும், உயர்வையும் கொண்ட தேவர்களோடு ஒப்பு நோக்கி, அவ்வகை சிறப்பு, உயர்வு எதுவும் இல்லாத தன்னை ‘எமையும்’ என்ற  வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

‘‘வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியா பரமானந்தர்...’’  (பாடல்-14)

- என்ற பாடல் வரிகளால் மிக உயர்ந்த பண்புகளைக் கொண்ட தேவர்களை சூட்டி கூறுவதிலிருந்து நன்கு உணரலாம்.

பூசைகள், தீட்சை முதலான வேதாகம முறைப்படி செய்து வருபவர்கள் பலர் இருக்கையில், எச்செயலையும் செய்யாது மிண்டு செய்துவரும்  அடியவராகிய அபிராமி பட்டருக்கு பூசை, தீட்சை இச்செயலின் பயனாக வரும் பயனை எமக்கு நல்கினால் என்பதையே ‘எமையும்’ என்று குறித்தார்.

‘‘தோத்திரம் செய்து தொழுது’’ (பாடல் - 67)
‘‘மறை சொல்லிய வண்ணம் தொழும்...’’
(பாடல் - 91)

‘‘தமக்கு அன்பு செய்ய வைத்தார்’’ - என்பதனால் தானே முயன்று அன்பு செய்யவில்லை, இறைவன் தானே தன் அருளினால் அவரை குறித்து அன்பு  செய்யும்படி எனக்கு அன்பாகிய உணர்வை இதயத்தில் பதித்தார் என்பதையே ‘‘தமக்கு அன்பு செய்ய வைத்தார்’’ என குறித்தார். அன்பு என்கின்ற  உணர்வு தாய் துவங்கி தாரம், தன் மகன், அவன் மகன், என் தாய் வழி, தந்தை வழி, தன் வழி, சுற்றம் அனைவரையும் தாண்டி, தன்னைச் சார்ந்தோர்,  தனக்கு நலன் செய்தோர் என தன் சமூகம் வரை விரிந்து, அதையும் தாண்டி, தன் இனம் என்ற மானுடர் அல்லாத புல், பூண்டு பறவை முதல் பிற  உயிர்களிடத்தும் செலுத்தப்படும் அன்பு இந்த பண்பானது தோன்றுவது என்பது பிற உயிர்களிடத்துக் கொள்ளும் தொடர்பு சார்ந்தே அமைகிறது. அந்தத்  தொடர்பு என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புலன் வழி இணைந்த மனதில் தோன்றுகிற பண்பாகும்.

தொடர்பற்ற பொருளிடத்தில் இந்த அன்பெனும் பண்பு தோன்றுவதில்லை. இது உலக உயிர்கள் இடத்து நல் இணக்கத்தால் அனைத்துயிர்க்கும்  தோன்றும் இயல்பேயாகும். இதை பிறர் செய்விக்கத் தேவையில்லை என்றபோது, இறைவன் தன்னிடத்து ‘அன்பு செய்ய வைத்தார்’ என்று ஏன்  குறிப்பிட்டார்? என்றால் மானுடர்களின் தாய், தந்தை முதலிய வரவுகளில் ஒன்றாக இயல்பாக இல்லாததன் காரணத்தாலேயே இவ்வாறு  குறிப்பிடுகிறார்.

மேலும் மெய், வாய், கண், மூக்கு, செவி இவை இணைந்த மனது முதலியவற்றால் தொடர்புற்று அரிய முடியாத தன்மையை தன் இயல்பாகக்  கொண்டவர். ஆதலால் அவனிடத்து அன்பு இயல்பாக தோன்றுவதில்லை. அதேசமயம் அவன் தாயின் வடிவம் தாங்கியோ புலன்களால் பற்றப்படும்  மனதில் பதியத்தக்க உருவம் தாங்கியோ இறைவி தானாக முன்தோன்றும்போது மட்டுமே அவனை குறித்த அன்பு நமக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படி தானாகத் தோன்றி இறைவி அருளியதால் மட்டுமே அபிராமி பட்டர் சிறப்பாக அவர்மேல் அன்பு செய்தார் என்பதை ‘எமையும் தமக்கு அன்பு  செய்ய வைத்தார்’
இதையே புலன்களின் பற்றப்படாத தன்மையை ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திருமூர்த்தி’ என்பதனாலும், அவளே முன்தோன்றி  அருளும்போது

 ‘துணையும் தொழும் தெய்வமும், பெற்ற
தாயும் என்பதனாலும் அறியலாம்.
‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின. (பாடல்-9) தானே வந்து செய்த அன்பை உணர்த்துகிறார்.

‘‘இனி எண்ணுதற்கு சமயங்களும் இல்லை’’
சமயம் என்பது சமையல் என்ற வினையடியிலிருந்து தோன்றியது.

சமையலானது கத்தரிக்காய், பச்சையரிசி போன்ற ெபாருள்களை வேக வைத்தோ, வதக்கியோ, உப்பு, காரம் முதலியன சேர்த்தோ, தோல் காம்பு  முதலிய நீக்கியே உண்ணுதற்கு தக்க வகையில் அதை மாற்றுவதாகும். அதுபோல மனிதனிடத்துள்ள மனம், வாக்கு, காயம் முதலானவற்றை  இறைவனைக் குறித்த பாதையில் முக்கரணங்களையும் பக்குவப்படுத்தி செலுத்துவதை சமயம் என்கிறார்கள்.

இந்த சமயமானது மானுடர்களால் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சாதனமாகத் திகழ்கிறது. அது சைவம், வைணவம், சாக்தம்,  காணாபத்தியம், சௌரம், காபாலிகம், காலாமுகம் என்று பல சமயங்கள் உள்ளது. அதில் மனிதன் தன் தேவைகளை எது முதலில் தீர்வு செய்கிறதோ  மற்றும் பிறப்பின் அடிப்படையிலோ, சமயத்தின் கொள்கை அடிப்படையிலோ தேர்வு செய்து பின்பற்றப்படுவதாக இருக்கிறது.

ஒரு சமயத்தின் உயர்வு என்பது ஐந்து அடிப்படை கொண்டது என்கிறது சாக்தம். அந்த வகையில்,

1. கொள்கையை தெளிவுற வரையறுப்பது
2. சொல்லிய வண்ணம் கொள்கையை
அனுபவச் சாத்தியப்படுத்துவது.
3. மாறுபட்ட பல்வேறு இனம், மொழி, பழக்க வழக்கம் இருந்த போதிலும் அனைவராலும்
ஏற்கும்படி இருப்பது.
4. நடைமுறைக்கு சாத்தியப்படுத்துவதாக இருப்பது.
5. காலம், இடம், சூழல் இவற்றால் மாறுபடாததாக இருப்பது என்ற போதும் சமய உண்மைகளை வலியுறுத்துவதற்கு அதை அனுபவப்பட்டவரே  போதிக்க வேண்டும்.

அபிராமி பட்டர் தான் இறைவியை பற்றி சமய நூல்கள கற்று அதன் கருத்துக்களை குற்றமற உணர்ந்து அதை செயல்படுத்தி அதன் வழியில் வந்த  அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இறையருளை பெற்றதனால் ‘‘இனி எண்ணுதற்கு சமயங்களும் இல்லை’’ என்கிறார். ஒரு பிரச்னைக்கு தீர்வு  காண தெய்வத்தைக் கொண்டு முயல்கிறபோது அந்த தெய்வத்தை வணங்கி அது நடைமுறையில் பிரச்னை தீரவில்லையெனில் வேறொரு  தெய்வத்தை தேடிச் செல்வது மானிட இயல்பு. அவ்வாறு தான் செல்லவில்லை என்கிறார்.

‘‘இனியான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்’’
(பாடல் - 92)
- என்று தெளிவாக வரையறுக்கிறார்.

ஒரே நேரத்தில் இரு வாகனங்களில் ஒருவர் பயணிக்க முடியாது, அதுபோல அபிராமி பட்டரை பொறுத்தவரை எல்லா சமயமும் மெய்யென  இருந்தாலும், ஒரு சமயத்தைத்தான் ஒரு மனிதன் பின்பற்ற முடியும். இக்கருத்தை வலியுறுத்தவே, ‘‘இனி எண்ணுதற்கு சமயங்களும் மில்லை’’  என்கிறார். பட்டர் அபிராமியின் மேல் தான் கொண்ட எல்லையற்ற அன்பினாலும், எங்ஙனம் மறப்பேன் விரகினையே (பாடல்-82)
அபிராமியின் மீதுள்ள மிகச்சிறந்த நம்பிக்கையினாலும்

‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே’’ (பாடல்-33)
என்று கூறுகிறார்.

இறைவிக்கே உன்னைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்ற உயர் பண்பை மறைமுகமாக வலியுறுத்துவதற்காகவும், ஒன்றுக்கு  மேற்பட்ட தேவதைகளை வணங்குவதால் தனக்குள் ஒவ்வொரு தெய்வமும் பிற தெய்வம் செய்யும் என தான் செய்யாமலிருந்து விடப் போகிறது  என்ற தன் மனக் கலக்கத்தினாலும், ‘‘கொண்டதல்ல என் கை நன்றே’’ (பாடல்-30) ‘‘இனி எண்ணுதற்கு சமயங்களுமில்லை’’ என்று  வலியுறுத்துகிறார்.

ஞான நெறியில் பிற சமயங்களை நன்கு கற்று, தன் சமயத்தை அதனோடு ஒப்ப வைத்து எண்ணி அதில் ஏற்படும் சந்தேகங்களை, குறைகளை,  குற்றங்களைத்தான் ஏற்கும் சமயம் எப்படி தீர்க்கிறது என்பதை சிறப்புற தான் விளங்கிக்கொண்டு, மேலும் தான் பின்பற்றும் சமயத்திற்கு உண்டான  பிற சமயங்களில் இல்லாத தனி பண்புகளை நன்கு ஆய்ந்து தெளிந்து அதனாலேயே ‘‘இனி எண்ணுதற்கு சமயங்களுமில்லை’’ என்கிறார்.

(தொடரும்)

முனைவர்  பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

 • chicagosnow

  பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்