SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

2019-05-30@ 10:20:20

மஞ்சள் குங்குமத்தோடு நீடுழி வாழ்வீர்கள்!

* என் மகனுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக தீவிரமாக முயற்சித்தும் சரியான வரன் அமையவில்லை. அவரது திருமணம் தாமதமாவதன் காரணம்  என்ன? பரிகாரம் ஏதும் உண்டா? - வெங்கட்ராமன், கேரளா.


நீங்கள் அனுப்பியிருக்கும் பிறந்த  தேதி மற்றும் நேரத்தினைக் கொண்டு ஜாதகம் கணித்துப் பார்த்ததில் பூசம் நட்சத்திரம், கடக ராசி, கன்யா  லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் சிம்ம லக்னம் என்று  குறிப்பிட்டிருக்கிறீர்கள். முதலில் மகனின் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக்கொண்டு பெண் தேடுங்கள். முப்பத்திநான்கு வயது முடிந்திருக்கும்  உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது.

இவருடைய ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டின் அதிபதி குரு பகவான் நீசம் பெற்ற நிலையில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.  ஜாதகத்தை நன்றாக ஆராயும்போது முன்னோர்கள் வழியில் ஒரு குறை இருப்பது தெரிய வருகிறது. இந்தக் குறை என்பது திருமணம் மட்டுமல்லாது  வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இவரது முன்னேற்றத்தில் சிறிது தடையினை உண்டாக்கி வருகிறது. அந்தத் தடை என்ன என்பதை ஆராய்ந்து  அதனை சரி செய்ய முயற்சியுங்கள்.

அதோடு உங்கள் பரம்பரையில் யாரை குருவாக பின்பற்றி வருகிறீர்களோ, அந்த குருவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரது ஆசியினை உங்கள்  மகன் நேரடியாகப் பெறுவதும் திருமணத் தடையினை நீக்கும். உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி அவரது மனதிற்கு பிடித்தமான பெண்ணை கரம்  பிடிப்பார். அவரது விருப்பத்தின்படியே திருமணம் என்பது நடக்கும். குருப்ரீதி செய்வதாலும், முன்னோர்களின் கடன் பாக்கியினைத் தீர்ப்பதாலும்  உங்கள் மகனின் திருமணத்தை வெகுவிரைவில் உங்களால் காண இயலும். இந்த வருட இறுதிக்குள் அதற்கான வாய்ப்பு என்பது பிரகாசமாக உள்ளது.

* நான் கேட்டரிங் துறையில் டிப்ளமோ படித்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன். எனது திருமணம் தடைபட்டு வருகிறது. என் ஜாதகப்படி  எப்படிப்பட்ட பெண் அமைவார்? திருமணம் எப்போது நடக்கும்? - ஸ்ரீராம், தாராபுரம்.


பாம்பு பஞ்சாங்க அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் நீங்கள் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில்  பிறந்திருப்பது தெளிவாகிறது. உங்களுடைய ஜாதக பலத்தின் படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்  பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் எட்டில் அமர்ந்திருப்பதும் திருமணத்தை தடை செய்து  வருகிறது.

ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியோடு ராகு இணைந்திருப்பதால் நீங்கள் எல்லா விஷயங்களையும் சற்று மாற்றி யோசிக்க வேண்டிய  கட்டாயத்தில் உள்ளீர்கள். சராசரி மனிதராக யோசிக்காமல் சற்று வித்தியாசமாக யோசித்து செயல்பட்டு வந்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி காண  இயலும். தொழில்முறையில் நீங்கள் இந்த முயற்சியை பரிசோதனை செய்து பார்க்கலாம். மற்றவர்கள் போல் செயல்படாமல் உங்களுக்கென்று ஒரு  தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக சாதிப்பீர்கள்.

உங்கள் திருமண வாழ்வினைப் பொறுத்த வரை ஜாதி, மத வேறுபாடு பாராமல் பெண் தேட வேண்டியிருக்கும். மாற்றுமொழி பேசும் பெண்ணாக  அமையவும் வாய்ப்பு உண்டு. 31 வயது முடியும் தருவாயில் திருமண யோகம் என்பது வருவதால் தற்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய  அவசியம் இல்லை. 12.02.2021ற்கு பிறகு உங்கள் திருமணம் நல்லமுறையில் நடைபெறும்.

* 42 வயது முடிந்தும் என் மகன் திருமணம் செய்ய மறுக்கிறான். காரணம் தெரியவில்லை. அடுத்த வருடம் என்று சொல்லி சொல்லி 10 வருடம்  ஓடிவிட்டது. பி.இ. படித்திருந்தும் பார்த்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில்தான் நடிப்பேன் என்று வெட்டியாக சுற்றிக்கொண்டும், வீண்வாதம்  செய்துகொண்டும் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கிறான். இவன் திருந்தி நல்லபடியாக வாழ்வானா? - ஒரு வாசகி, சென்னை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து  வருகிறது. கலைத்துறையில் ஆர்வம் உண்டு என்பதை அவரது ஜாதகம் உணர்த்தினாலும் அதன் மூலம் சம்பாதிக்க இயலுமா என்பது கேள்விக்குறியே.  வேறு எங்காவது வேலை பார்த்துக் கொண்டே தனது கலை ஆர்வத்திற்கான வாய்ப்பினை அவர் தேட வேண்டியது அவசியம்.

உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் பணிக்குச் செல்ல விருப்பமின்றி உள்ளார். இருந்தாலும் நான்காம்  வீடாகிய சுக ஸ்தானத்தில் சூரியன்-செவ்வாய்-புதன்-ராகு என நான்கு கிரஹங்கள் இணைந்திருப்பதால் சுகமான வாழ்விற்கு என்றுமே குறைவு  உண்டாகாது. ஐந்தாம் இடத்துச் சுக்கிரன் கற்பனைத் திறனைக் கூட்டுவார். சினிமாவில் நடிக்கத்தான் வேண்டும் என்பதில்லை.

சினிமாவில் உள்ள பிற துறைகளில் தனது கவனத்தை செலுத்தினால் முன்னேற இயலும். நினைத்தது கிடைக்கா விடினும், கிடைப்பதைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுரை சொல்லுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு  வரச் சொல்லுங்கள். அவருடைய ஜாதகம் என்பது நன்றாகத்தான் உள்ளது. சுகமான வாழ்வு என்றென்றும் அவருக்கு நிலைத்திருக்கும்.

* எம்.டெக் படித்துள்ள என் மகன் கடந்த 19 ஆண்டுகளாக வேலைக்குப் போகாமல் இருக்கிறான். அவன் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு என்னால்  வீணாகிவிட்டது. அதன் பிறகு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் வாங்கினால் அதனை வருடக்கணக்காக பத்திரப்படுத்தி  வைக்கிறான். நேரத்திற்கு எழுந்திருப்பது, குளிப்பது, சாப்பிடுவது எதுவுமில்லை. மனநிலை பாதித்தது போல் இருக்கிறான். அவன் வாழ்வு எப்படி  அமையும்-?  - நடராஜன், சிதம்பரம்.

சந்திர கிரஹண நாளில் உங்கள் மகன் பிறந்திருக்கிறார். தங்கள் மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனுடன் சனி இணைந்திருப்பதும், ஜென்ம  ராசியில் கேது இணைந்திருப்பதும் சிரமத்தைத் தந்திருக்கிறது. ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவர் சதா சுகவாசியாக வாழ்வார். உத்திரட்டாதி  நட்சத்திரம், மீன ராசியைச் சேர்ந்த அவருக்கு தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. சுக்கிரனும், சனியும் இணைந்து நான்காம்  இடமாகிய சுக ஸ்தானத்தில் இருப்பதால் சுகமான வாழ்விற்குக் குறை உண்டாகாது. மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்திருப்பதால்  மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.


முதலில் அவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள். கவுன்சிலிங் மூலம் அவரது மனதினை நல்வழிப்படுத்த இயலும்.  சிதம்பரத்தில் வசிக்கும் நீங்கள் நடராஜப் பெருமான் ஆலயத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி கோயிலின் பிராகாரத்தில் இடம்பெற்றிருக்கும்  சித்ரகுப்தனின் சந்நதிக்கு திங்கட்கிழமை தோறும் உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள். காலையில் ராகு கால வேளையில் அங்கேயே ஒரு அரை  மணி நேரத்திற்கு அவர் அமர்ந்திருப்பது நல்லது. பூர்வ ஜென்ம வினை என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரது நிலையை அத்தனை எளிதாக  மனித சக்தியால் மட்டும் மாற்ற இயலாது. நமது விடா முயற்சியோடு இறைவனின் திருவருளும் இணைந்தால் மட்டுமே அவரது மன நிலையில்  மாற்றத்தைக் காண இயலும். தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக இருப்பதால் நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். உங்கள் மகனின் வாழ்வு  வளம் பெறட்டும்.

* நான் வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரிய ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் உள்நாட்டில் வேலை செய்யும் ஒருவரை மனதாற விரும்புகிறேன்.  எங்கள் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் புத்ரபாக்கியம் இல்லை என்று கூறுகிறார். வெளியில் கொடுத்திருக்கும் கடன் தொகையும் திரும்ப  வரவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது. என் ஜாதகத்தைப் பார்த்து உரிய தீர்வு சொல்லுங்கள்.  - கலையரசி, பெருங்களத்தூர்.


உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. வெளிநாட்டு உத்யோகத்தினை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்  கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது. தற்போதைய கிரஹ சூழ்நிலையில் தங்களது ஜாதகத்தைப் பொறுத்த வரை  பொருள் விரயமாகின்ற காலமாக உள்ளது. வெளிநாட்டிற்குச் சென்றாலும், உள்நாட்டில் இருந்தாலும் விரய காலமே தவிர பொருள் வரவிற்கான  நேரத்தினை உங்கள் ஜாதகம் தற்போது உணர்த்தவில்லை. எங்கிருந்தாலும் ஒரே விதமான சூழலே நிலவுவதால் உள்நாட்டிலேயே பணி செய்து  வாருங்கள். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்.

வீண் அலைச்சலே மிஞ்சும். நீங்கள் விரும்பும் மனிதருடன் உங்கள் திருமணம் நிச்சயமாக நடந்துவிடும். அவர் உள்நாட்டில் பணி செய்வதால் உங்கள்  வெளிநாட்டுப் பணி மோகத்தினை மூட்டை கட்டி வையுங்கள். உங்கள் ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு  பகவான் ஜென்ம லக்னத்திலேயே நிற்பதால் உங்களுக்கு வரவிருக்கும் கணவர் மிகச்சிறந்த மனிதராக இருப்பார்.

உங்கள் வயதினை மனதில் கொண்டு உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். தற்போது விரய காலம் என்றாலும் ஆகின்ற செலவினை  சுபவிரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. உங்களது எண்ணங்களுக்கும் செயல் திட்டங்களுக்கும் உங்களுக்கு வரவிருக்கும் கணவர் உற்ற துணையாக  செயல்படுவார். உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீடாகிய புத்ர ஸ்தானத்திற்கு அதிபதி ஆகிய சனி பகவான் எட்டாம் வீட்டில் நீசம் பெற்றிருப்பதால் புத்ர  பாக்யம் இல்லை என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். குரு பகவானின் பார்வை பலம் துணையிருப்பதால் நிச்சயமாக புத்திர பாக்கியம் என்பது உண்டு.

சற்று தாமதமாகக் கிடைக்கும். அவ்வளவுதான்.. குழந்தைப் பேறு இல்லை என்று நினைத்து திருமணம் செய்து கொள்ளத் தயங்காதீர்கள். தற்போதைய  நேரம் நன்றாக இருப்பதால் நீங்கள் விரும்பும் நபரை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் கொடுத்திருக்கும் கடன்  தொகை யாவும் வருகின்ற 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வசூலாகிவிடும். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கினை ஏற்றி வைத்து  அதில் மகாலட்சுமித் தாயார் குடிகொண்டிருப்பதாக மனதில் நினைத்து விளக்கு பூஜை செய்வதை வாழ்நாள் முழுவதும் வழக்கத்தில் கொள்ளுங்கள்.  உங்கள் ஜாதகத்தில் சௌபாக்யவதி யோகம் என்பது சிறப்பாக இருப்பதால் மஞ்சள் குங்குமத்தோடு நீடுழி வாழ்வீர்கள்.

சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம்.  கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்