SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளக்கேற்றி வழிபட்டால் வெளிச்சம் உண்டாகும் வாழ்வில்

2019-05-29@ 17:33:31

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?மூன்று பங்குதாரர்களாக இணைந்து செய்து வந்த வியாபாரத்தை 2013ல் நிறுத்திவிட்டு பங்கு தொகையினை பிரித்துக்கொண்டோம். ஒரு பார்ட்னரின்  பங்காளிகள் இதில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்று வாதிடுகிறார்கள். இவர்களால் எனக்கு ஏதாவது பிரச்னை உண்டாகுமா? உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- மாரிமுத்து, கும்பகோணம்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தசாநாதன்  குரு ஒன்பதாம் வீட்டிலும், புக்திநாதன் புதன் ஐந்தாம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு தற்காலம் எந்தவிதமான பிரச்னையும் உண்டாகாது.  வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அப்படியே அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும்  உண்டாகாது. சிம்ம ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். எந்தவிதமான சமாதான முயற்சிக்கும் உடன்பட  வேண்டிய அவசியம் இல்லை. 40 வருடங்களாக எந்தவிதமான தொடர்பும் இன்றி இருந்த அந்த மனிதர்கள் பங்கில் சம உரிமை கோருவதில்  எந்தவிதமான நியாயமும் இல்லை. தர்மத்திற்கு எதிரான விஷயங்களைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஜாதக பலம்  மிகவும் நன்றாக உள்ளதால் உங்களை எதிர்த்து அவர்களால் நீதிமன்றத்தில் வெற்றி காண இயலாது. உரிமை கோரி அவர்கள் உங்களிடம் நேரடியாக  வருகின்ற பட்சத்தில் முகத்திற்கு நேராக எந்தவிதமான தயவு தாட்சண்யமுமின்றி தைரியமாக நிராகரித்துவிடுங்கள். செவ்வாய் தோறும் பைரவர்  சந்நதியில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும்.

?என் மகனுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இரண்டும் பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தைக்காக வேண்டாத தெய்வம் இல்லை. எனது  மகனும் மருமகளும் மூன்றாவதும் பெண் குழந்தையாகிவிட்டால் என்ன செய்வது என்று தயங்குகிறார்கள். தங்களுடைய ஆலோசனையைப் பெற்று  தைரியம் சொல்ல நினைக்கிறேன்.
- வேல்முருகன், சென்னை.

குழந்தை பிறந்தால் போதும் என்று ஆதங்கத்துடன் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மட்டும் ஒரு  லட்சத்தைத் தாண்டுகிறது. ஆங்காங்கே ஃபெர்ட்டிலிட்டி சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறைவன் அருளால்  அழகான இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பின் இன்னும் என்ன குறை? இந்த காலத்தில் ஆணென்ன, பெண்ணென்ன..? ஆண் குழந்தை  இருந்தால் மட்டுமே வம்சம் விருத்தியடையும் என்று எண்ணுவது தவறானது. வம்சம் விருத்தி அடைவதைவிட ஒரு வம்சம் கரையேறுவது என்பது  இன்னமும் உயர்வானது. தான் பெற்ற மகளை ஒரு தந்தை கன்யாதானம் செய்து தரும்போது அவருடைய 21 தலைமுறை கரையேறுகிறது என்கிறது  தர்மசாஸ்திரம். அப்படிப்பட்ட பெரும் பாக்கியத்தை உங்கள் மகன் பெற்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். கேட்டை நட்சத்திரம்,  விருச்சிக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதி சுக்கிரன் என்பதாலும், சித்திரை நட்சத்திரம்,  கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்த நிலையில்  ஐந்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதாலும் பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது. ஆண் குழந்தைதான்  வேண்டும் என்ற மனநிலையை விடுத்து ஆண்டவன் தந்த அருட்பிரசாதமான இரு பெண் குழந்தைகளையும் ஆண்களுக்கு இணையாக நன்றாக படிக்க  வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் குடும்பத்திற்கு இறையருள் என்பது பரிபூரணமாக உள்ளது. கவலை வேண்டாம்.

?கடந்த ஐந்து வருடங்களாக எனது மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டுள்ளேன். ஏதாவது ஒரு வகையில் திருமணத் தடை ஏற்படுகிறது. நல்ல  இடமாகவும், நல்ல வரனாகவும் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டும்?
- தனபூபதி, திருப்பூர்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து  வருவதாக நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி வாழ்க்கைத்துணைவரைக் குறிக்கும் ஏழாம்  பாவகம் சுத்தமாக இருப்பதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குருபகவான் நான்கில் அமர்ந்திருப்பதாலும் நிச்சயமாக நல்ல குணம் உடைய கணவனைப்  பெறுவார். அதே நேரத்தில் நீங்கள் நல்ல இடம் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை. வசதி வாய்ப்பினை பெரிதாக எதிர்பார்த்து  நல்ல நேரத்தினைத் தவறவிட்டுவிடாதீர்கள். காசு-பணம், வசதி-வாய்ப்பு என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ள இயலும்.  நல்ல மனிதர்களை சம்பாதிப்பது என்பது கடினம். உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி வருகின்ற கார்த்திகை மாதம் வரை திருமண யோகம் நன்றாக  இருப்பதால் அதற்குள்ளாக திருமணத்தை நடத்திவிடுவது நல்லது. நேரத்தைத் தவறவிட்டால் திருமணம் என்பது தாமதமாகிவிடும் என்பதை  நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உறவுமுறையிலேயே மகளின் மனதிற்கு பிடித்தமான வரனாக வந்து சேரும். அந்தஸ்து குறித்து பெரிதாக  எண்ணாமல் குணத்தினை மட்டும் கருத்தினில் கொண்டு பெண்ணின் திருமணத்தை நடத்துங்கள். குருபகவானின் திருவருளால் உங்கள் மகளின்  வாழ்வு சிறப்பாக அமையும்.

?என் மனைவியின் பெயரில் 2010ல் நிலம் வாங்கினேன். 2011ல்  கிணற்றில் கண்மாய் தண்ணீர் கரைபுரண்டு வந்தது. எப்படி ஆமை கிணற்றில்  விழுந்தது என்று தெரியவில்லை, ஒரு வருடம் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியே சென்றுகொண்டு இருந்தது. தற்போது கிணற்றில் சுத்தமாக  தண்ணீர் இல்லை, மூன்று போர் போட்டும் தண்ணீர் இல்லை. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? தண்ணீர் கிடைக்குமா?
- பழனியப்பன், திண்டுக்கல்.

உங்கள் மனைவியின் பெயரில் உள்ள நிலத்தின் அமைப்பினை வரைந்து அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் வரைபடத்தினைக்  காணும்போது உங்கள் கிணற்றிலேயே நீர் நன்றாக ஊற்றெடுக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே தண்ணீர் நன்றாகப் பெருக்கெடுத்து நிரம்பியிருந்த  கிணறு என்ன காரணத்தால் வற்றியிருக்கிறது என்பதை நீர்வள ஆய்வாளர்களைக் கொண்டு கண்டறிந்து தீர்வு காண முயற்சியுங்கள். நீங்கள் உங்கள்  ஜாதகத்தையோ உங்கள் மனைவியின் ஜாதகத்தையோ அனுப்பவில்லை. என்றாலும் உங்கள் மனைவியின் பெயர் ராசியின்படி நிச்சயமாக தண்ணீர்  பாக்கியம் என்பது உண்டு என்று தெளிவாகத் தெரிகிறது. வருகின்ற தென்மேற்கு பருவமழையின் காலத்திலேயே அதாவது ஜூன், ஜூலை  மாதத்திலேயே உங்கள் கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும். கிணற்றில் தூர் வாருதல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஊர் புரோஹிதரின் துணைகொண்டு கங்கைபூஜை செய்து வழிபடுங்கள். கங்கையம்மன் வழிபாடும் சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். அம்மனின் அருளால் உங்கள் கிணற்றில் நீர்வளம் பெருகுவதோடு, தென்னந்தோப்பு சிறப்பான வளர்ச்சியைக் காணும். உங்கள் தோப்பு இளநீர் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் தாகத்தினைத் தீர்க்கக் காத்திருக்கிறது.

?என் மகன் பாடசாலையில் வைதீகம் படித்துவிட்டு அந்த வேலையைச் செய்யாமல் எம்.ஏ., படித்துக்கொண்டும் குடும்பத்திற்கு எந்த உதவியும்  செய்யாமல் ராணுவத்தில் இந்த வைதீக படிப்பிற்கு வேலை கிடைக்கும் என்றும் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். இவருக்கு நினைக்கும் வேலை  அமையுமா? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? பரிகாரம் சொல்லவும்.
- சீனிவாசன், கோயமுத்தூர்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி முடிந்து புதன்  புக்தி துவங்க உள்ளது. ஜென்ம லக்னத்திற்கும், உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதி புதன் 10ம் வீட்டிலேயே ஆட்சி  பலம் பெறுவதால் இந்த நேரத்தில் உங்கள் மகனின் உத்யோகம் நிலைப்பட்டுவிடும். தொழில்முறையில் நன்கு சம்பாதிக்கத் துவங்கிவிடுவார்.  அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருப்பதால் ராணுவம் சார்ந்த பணிக்குச் செல்ல இயலாது. அதே நேரத்தில் வாழ்வினில் பரபரப்பாக  எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு ஏற்றார்போல் வாழ்வியல் முறை அமையும். வைதீகப் பணியையே அவரால் சிறப்பாக  செய்ய இயலும். ஆனால் மற்றவர்களைப் போல் சாதாரணமாக இல்லாமல் மலைப்பாங்கான பகுதிகள் அல்லது அறிவியல் ஆய்வுக்கூட நிறுவனங்கள்  முதலான பகுதிகளில் தனக்கான தொழிலை அமைத்துக் கொள்வார். 01.06.2019 முதலே அவருடைய ஜாதகப்படி நல்ல நேரம் என்பது  துவங்கிவிடுவதால் அவரைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உத்யோகம் நிலைப்படுவதோடு வெகுவிரைவில்  திருமணமும் நடந்து நல்லபடியாக வாழ்வார். அவரது எதிர்காலம் என்பது சிறப்பாக அமைந்துள்ளது. புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள்  கோயிலுக்குச் சென்று துளசிமாலை சாத்தி பிரார்த்தனை செய்து வாருங்கள். மகனின் ஆனந்தமயமான வாழ்வினை கண்குளிரக் காண்பீர்கள்.

?+2 முடித்திருக்கும் என் மகனை மேற்கொண்டு என்ன படிக்க வைப்பது? அவன் முரட்டுத்தனமாகப் பேசிக்கொண்டு பிடிவாதமாக இருக்கிறான்.  காலேஜ் போகமாட்டேன் என்கிறான். அவனை மேற்கொண்டு வெளியூரில் படிக்க வைக்கலாமா? அவன் கெட்டுப்போய் விடுவானோ என்று பயமாக  உள்ளது. தக்க பரிகாரம் கூறவும்.
- ரவி, திருச்சி.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது.  இந்த வயதிற்கு உரிய பிடிவாதம் மட்டுமே உங்கள் மகனிடம் காணப்படுகிறது. நீங்கள் பயப்படும்விதமாக ஒன்றும் இல்லை. தகாத நண்பர்களுடன்  சேர்ந்து கெட்டுப் போய்விடுவாரோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருந்தாலும் உடன்  இணைந்திருக்கும் குரு பகவான் அவரை நல்வழிப்படுத்துவார். 03.09.2019ற்குள் நண்பர்கள் வழியில் அவர் சந்திக்கும் சம்பவம் ஒன்று அவரது மனதை  மாற்றும். நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அடையாளம் காண்பதோடு தனது வாழ்விற்கு உரிய சரியான பாதையையும் தேர்ந்தெடுத்துக்  கொள்வார். அவரை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். உள்ளூரிலேயே நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்கும். அவர் எதைப் படிக்க விரும்புகிறாரோ அது போன்ற படிப்பிலேயே சேர்த்துவிடுங்கள். சட்டம், பொலிடிக்கல் சயின்ஸ், எகனாமிக்ஸ் போன்ற  படிப்புகள் அவரது வாழ்விற்கு துணைபுரியும். அவரது ஜாதக பலத்தின்படி அரசுத்துறையில் அதிகாரியாக பணி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  சூரியன்-புதன்-சுக்கிரனின் இணைவு அவரை வாழ்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இன்னும் மூன்று மாத காலத்திற்கு ஞாயிறு தோறும்  மாலை வேளையில் சரபேஸ்வரருக்கு விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். உங்கள் மகன்  பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார். கவலை வேண்டாம்.

“தேவாதி தேவாய ஜகந்மயாய சிவாய நாலீக நிபாநநாய
 சர்வாய பீமாய ஸராதிபாய நமோஅஸ்து துப்யம் சரபேச்வராய.”

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்
229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,
ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்