SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதம் எனும் ஒளி

2019-05-29@ 17:30:07

இஸ்லாமிய வாழ்வியல்

இருள் அடர்ந்த ஒற்றையடிப் பாதையில் நடப்பவனும் ஒளிமிகுந்த ராஜபாட்டையில் நடப்பவனும் சமம் ஆவார்களா? ஒருபோதும் சமம் ஆகமாட்டார்கள். இறைவேதம் ஓர் ஒளி. அது நேர்வழியின் ஊற்றுக்கண் ஆகும்.  மனிதன் இந்த உலகில் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவன்  விரும்புகிறான் என்பதை குர்ஆன் மூலம்தான் மனிதன் அறிந்திட முடியும். மற்ற அனைத்து வழிகளையும் விட்டு விட்டு யார் இறைவன் காட்டும்  நேரான வழியில் நடைபோடுகிறார்களோ அவர்களுக்கு இறைவன் தரும் வெகுமதிகள் காத்திருக்கின்றன.இறுதிவேதமான குர்ஆனைப் பற்றிப் பிடித்துக்கொண்டவர் இங்குமங்கும் அலைந்து திரிந்து வழிதவறுவதற்கு வாய்ப்பே இல்லை.“இறைவா, எங்களுக்கு நேரான வழியைக் காட்டு” என்று இறைஞ்சும் மனிதனுக்கு “இதோ, என் தரப்பிலிருந்து நேர்வழியை உனக்கு அருளிவிட்டேன்” என்று இறைவன் அருளிய வேதம் இது.

திருக்குர்ஆனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றில் ஒன்று, ‘ஃபுர்கான்’. இதன் பொருள் “சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்  காட்டுதல்.” எதுசரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது, எது நன்மை, எது தீமை என்பதைப் பிரித்தறிவிக்கும் வேதம் என்று பொருள். இது ஓர்  அற்புதமான உரைகல். இந்த உரைகல்லில் உரசிப் பார்த்து நம் வாழ்வின் ‘தரத்தை’ அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆனை ஓதும்போது கண்கள் கண்ணீர் வடிக்க வேண்டும். வேதம் கூறுகிறது:“இறைத்தூதருக்கு அருளப்பட்ட இவ்வேதத்தை அவர்கள் செவியுற்றால் சத்தியத்தை அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர்கள், ‘எங்கள் இறைவனே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக’ என்று இறைஞ்சுகிறார்கள். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்:

 “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, இறைவன் மீதும் எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?”(குர்ஆன் 5:83-84)இவ்வாறு வேதத்தின் மீது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக்’ கூறி, அந்த ஒளியில் நடைபோட்டு வாழ்ந்தவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதிகள் என்ன தெரியுமா? இதோ, இறைவன் கூறுகிறான்:“கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான  கூலியாகும்.”(குர்ஆன் 5:85)தூய ரமளான் மாதம் வேதம் அருளப்பட்ட மாதம் ஆகும். இந்தப் புனித மாதத்தில் இயன்ற வரை பொருள் அறிந்து மாமறையை ஓதி, வெளிச்சம் பெறுவோம். அந்த வெளிச்சத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் மகத்தான அருளைப் பெறுவோம்.

- சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

 • roborestaurantbang

  பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்