SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

2019-05-24@ 10:48:12

- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. பௌர்ணமி என்றவுடன் சித்ரா பௌர்ணமி என்ற வார்த்தை மட்டும் நினைவிற்கு வரும். வேறெந்த மாதத்தின் பெயரோடும் பௌர்ணமியை இணைத்துச் சொல்வதில்லை. புராணத்தின் வழியில் பார்த்தால் நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி.

இந்த நாளில் ஆலயங்களில் சித்ரகுப்த பூஜை செய்வார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு சித்திரத்தை வரைந்து, சக்தி தேவியின் துணையுடன் அதற்கு உயிரைக் கொடுத்து சித்திரகுப்தன் தோன்றியதாகச் சொல்வார்கள். ஜோதிட ரீதியாக சந்திரனை மனோகாரகன் என்றழைக்கிறோம். அதாவது நமது மனநிலையைக் குறிக்கும் கோள் சந்திரன்.

அதனால்தான் பௌர்ணமி நிலவைக் காணும் போது நம்மையும் அறியாமல் நம் மனதில் உற்சாகம் பெருக்கிடுகிறது. உச்ச வலிமையுடன் படு உஷ்ணமாக அமர்ந்திருக்கும் சூரியனுக்கு நேர் எதிரே, சரியாக 180வது பாகையில் துலாம் ராசியில் அமர்ந்து பௌர்ணமி நிலவாக ஒளி வீசும் நாள் இந்த சித்ரா பௌர்ணமி நாள் ஆகும். துலாம் ராசி சூரியனின் நீச ராசி என்பதும் கவனிக்கத்தக்கது. பிதுர்காரகன் எனும் தந்தையாகிய சூரியன் உஷ்ணமாக தகிக்கும்போது, மாதுர்காரகன் எனும் தாய் ஆகிய சந்திரன் நான் இருக்கிறேன் மகனே, கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்வதாகப் பொருள் கூறுவார்கள் பெரியோர்கள்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளில், முழுநிலவின் ஒளியில் வெட்ட வெளியில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பாருங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும். இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைமுறையில் அந்த ஒரு நாளில் மட்டுமாவது நிலவொளி படுகின்ற இடத்தில், கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை முடியாவிட்டால் குறைந்தது மொட்டை மாடியில் அமர்ந்தாவது சாதாரண சாப்பாடு ஆக இருந்தாலும் பரவாயில்லை... குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுப் பாருங்கள்.

மனதளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள் என்பது உறுதி. மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளை சுறுசுறுப்பானால் நமது இயக்கமும் வேகம் பெறும். இயக்கம் வேகம் பெற்றால் லட்சியத்தை எளிதாக அடைய முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமியில் நிலவொளியில் சமபந்தி போஜனம் செய்வோம், சித்திரையில் முத்திரை பதிப்போம்.

* தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கியமான விசேஷ நாட்களில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க நேர்ந்தால் எப்படிச் செய்வது என விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  - ப.த. தங்கவேலு, பண்ருட்டி.

பண்டிகை நாட்களில் முன்னோர்களுக்கான திதி வரும்போது வீட்டினில் முதலில் சிராத்தத்தை செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு பண்டிகையைக் கொண்டாட வேண்டும். உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை அன்று சிராத்தம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காலையில் எழுந்து வீடு துடைத்து முதலில் சிராத்தத்தினைச் செய்து முடிக்க வேண்டும்.

காகத்திற்கு சாதம் வைப்பது வரை சிராத்தத்திற்கான பணிகளை எந்தவிதமான குறையுமின்றி செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் மீண்டும் வீடு துடைத்து புதிதாக வேறு நைவேத்யங்களைச் செய்து சூரிய பகவானுக்கு பூஜை செய்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். முன்னோர்களின் ஆசியைப் பெற்றால்தான் தெய்வ அனுக்ரஹம் என்பதும் சித்திக்கும். பண்டிகை நாளில் சிராத்தம் வருகிறது என்று அதனைத் தவிர்ப்பது முற்றிலும் தவறு.

சிராத்தம் என்பதை எந்தவிதமான குறையும் இன்றி சிறப்பாகச் செய்தல் வேண்டும். ஒரே நாளில் பண்டிகையும், முன்னோர்களுக்கான திதியும் ஒன்றிணையும் போது முன்னோர்களே முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை குறையின்றி செய்து முடித்துவிட்டு அதன் பின்னர் பண்டிகையைக் கொண்டாடுவதே சரியான வழிமுறை ஆகும்.

* இப்படித்தான் வாழ வேண்டும் என்று உரைக்கிறது ஆன்மிகம். எப்படியும் வாழலாம் என்கிறது இன்றைய கால சூழ்நிலை. எப்படிச் செல்வது?   
- ஆர். விநாயகராமன், திசையன்விளை.

இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே நமது தர்மம். அந்த தர்மத்திற்கு அவ்வப்போது சங்கடம் என்பது வரத்தான் செய்யும். எப்படியும் வாழலாம் என்பது அதர்மமே. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கையை உடையவர்களுக்கு சங்கடம் என்பது கிடையாது. அதனால்தான் தர்மசங்கடம் என்ற வார்த்தை மட்டும் நம் அகராதியில் உள்ளது. அதர்மசங்கடம் என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டது கூட இல்லை. ஏனென்றால் அதர்மத்திற்கு சங்கடம் என்பதே கிடையாது.

அப்படியென்றால் எல்லோரும் அதர்ம வழியிலேயே போகலாமே என்ற கேள்வி எழலாம். சங்கடம் உண்டானாலும் தர்ம நெறியில் நடப்பவர்களுக்குத்தான் சந்தோஷம் என்பது கிடைக்கும். அதர்ம வழியில் நடப்பவர்களுக்கு அந்த சந்தோஷம் கிடைப்பதில்லை. தர்மநெறியில் வாழ்பவர்களையே இந்த உலகம் போற்றுகிறது. அதர்மத்தைத் தூற்றுகிறது. குறிப்பாக தர்ம நெறியினைக் கடைபிடிப்பவர்களைக் கண்டு அதர்மவழியில் நடப்பவர்களும் அஞ்சுவார்கள்.

ஆனால் அதர்ம வழியில் நடப்பவர்களைக் கண்டு யாரும் அஞ்சுவதில்லை. மாறாக அவர்கள் மீது வெறுப்பே உண்டாகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு விதிமுறையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து மாறாமல் வாழ்வதற்கு ஆன்மிகவாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒழுக்க நெறி மாறாமல் வாழும் நாத்திகவாதியைக் கூட ஆன்மிகவாதிக்கு இணையாக இந்த உலகம் போற்றும். எப்படியும் வாழலாம் என்பது மாயை. அந்த மாயையை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றி வாழ்ந்தீர்களேயானால் வாழ்வினில் உயர்வு காண்பீர்கள்.

* சித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா?  
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

சித்ராபௌர்ணமி நாள் அன்று சித்ரகுப்த பூஜை செய்து வழிபடுவார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு உருவத்தை வரைந்து உமையவளின் துணையுடன் அந்த சித்திரத்திற்கு உயிர்சக்தியைக் கொடுத்து உருவானவரே சித்ரகுப்தன். இதனால் சிவாலயங்களில் விசேஷமாக சித்ரகுப்த பூஜையைச் செய்வார்கள். வீட்டிலும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று சித்திரகுப்தனின் படத்தினை வைத்து பூஜை செய்யலாம்.

பூஜை முறையை அறிந்தவர்களின் துணையுடன் அல்லது குடும்ப புரோஹிதரைக் கொண்டு வீட்டிலும் இந்த பூஜையைச் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் ஆலயத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டாலும் அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

* எங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்டதில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை. நீர்வளம் பார்த்ததில் அக்னி மூலையில் நீர்வளம் நன்றாக இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு அக்னி மூலையில் போர் போடலாமா? இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா?    - ம. நாதன், சென்னை.

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி அக்னி மூலையில் நீரோட்டத்தின் வேகம் தடைபடும், அதனால் போர் போடக்கூடாது என்று சொல்வார்கள். அக்னி மூலை என்பது உஷ்ணத்தைத் தருகின்ற பகுதி. அந்த உஷ்ணத்தைத் தணிக்கின்ற வகையில் அங்கே நீரோட்டத்தை உருவாக்கினாலோ அல்லது உஷ்ணத்துடன் கலந்து வெளியே
வருகின்ற அந்த நீரை உபயோகிப்பதாலோ விரும்பத் தகாத மாற்று பலன்கள் உருவாகிவிடும் என்று நினைப்பதில் தவறில்லை.

ஆனால் இந்த விதியை நகர்ப்புறங்களில் அதிலும் சென்னை போன்ற பெருநகர் பகுதியில் பொருத்திப் பார்க்க இயலுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு உண்மையாக நடந்த ஒரு நிகழ்வினைச் சொல்கிறேன். சென்னை நகரின் முக்கியமான பகுதியில் (நீங்கள் வசிக்கின்ற அதே பகுதியில்) இரண்டு கிரவுண்டு அளவில் மேற்கு திசையை நோக்கிய ஒரு மனை இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் அதனை தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். மேற்கு நோக்கிய அந்த மனையின் வடபுற பாதியை பெரிய பிள்ளையும், தென்புற பாதியை இளையவரும் பிரித்துக் கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் வீடு கட்டத் துவங்கும்போது இளையவரின் பாகத்தில் உள்ள ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு திசையில் நீர்வளம் நன்றாக உள்ளதை அறிந்து அங்கே போர் போட்டார்கள். பெரியவருக்கான பாகத்தில் நீர்வளத்தைத் தேடும்போது அதுவும் அதே பகுதியில் அதாவது தம்பி போர்போட்ட இடத்திற்கு அருகில் நீர்வளம் நன்றாக இருப்பதாகத் தெரிய வந்தது. அதாவது தம்பியின் மனைக்கு அந்த இடம் ஈசான்ய பாகத்தில் அமைந்தாலும் அதற்கு அருகில் என்று காணும்போது பெரியவரின் மனையில் அதே பாகம் அக்னி மூலையாக அமைந்து விடுகிறது. அதாவது தென்கிழக்கு மூலையில் மட்டுமே நீர்வளம் என்பது நிறைந்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை ஒரே மனையானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு பெயர்களில் அந்தச் சொத்தானது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒருவரின் பாகத்தில் அது வடகிழக்கு மூலையாகவும், அதே பகுதி மற்றொருவரின் பாகத்தில் தென்கிழக்கு மூலையாகவும் இடம் பிடிக்கிறது. இந்த அமைப்பினைக் கொண்டு அண்ணனின் வீடு அமைகின்ற மனையில் வாஸ்து தோஷம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. முதலில் வாஸ்து சாஸ்திரம் என்பது புவியியல் ரீதியான அறிவியல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 உங்கள் அபார்ட்மென்ட்டைப் பொறுத்த வரை நீங்கள் அதனை அக்னி மூலையாக நினைத்தாலும் இயற்கையாகவே அந்த மனையில் அந்த தென்கிழக்கு பகுதியில் நீரோட்டம் என்பது அமைந்திருக்கிறது எனும்போது அதனைக் குறையாகக் கருத முடியாது. மேலும் அக்னி மூலையில் நீங்கள் போர் போட நினைக்கும் பகுதி கார் பார்க்கிங் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த பகுதி எந்த விதத்திலும் தரை தளத்தில் உள்ள பிளாட்வாசிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேலும் ஏற்கெனவே ஈசான்ய பாகத்தில் போர் போடப்பட்டு இருப்பதால் ஒரு பிரச்னையும் நேராது. இதற்கு மாற்று வழி உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள்.

தரைதளத்தில் உள்ள பிளாட்வாசி தனக்கு இதனால் பாதிப்பு ஏதும் உண்டாகிவிடும் என்று எண்ணுவதால் அவருடைய பயத்தைப் போக்குகின்ற வகையில் நீங்கள் மற்றொரு திட்டத்தினை செயல்படுத்தலாம். உங்கள் மனையில் நீர்வளம் மிகுந்திருக்கும் அக்னி மூலையில் போர் போட்டுவிடுங்கள். அபார்ட்மென்ட்டின் ஈசான்ய பாகத்தில் சம்ப் போன்ற ஒரு பெரிய தொட்டியினைக் கட்டி அந்தத் தொட்டிக்குள் இந்த போரில் இருந்து வரும் நீரினை மோட்டார் மூலம் இறைத்து சேமித்து வையுங்கள்.

அதன் பின்பு ஈசான்ய பாகத்தில் இருக்கும் தொட்டியில் இருந்து நீரினை மேலே மாடியில் உள்ள ஓவர்ஹெட் டேங்க்கிற்கு மற்றொரு மோட்டார் மூலம் நிரப்பிக் கொள்ளுங்கள். மின்சார செலவு என்பது கூடினாலும் வாஸ்து குறித்த பயத்திற்கு இதுவே தீர்வாக அமைந்துவிடும். மனையில் இயற்கையாக நீர்வளம் அமைந்துள்ள பகுதி எதுவாக இருந்தாலும் அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதால் (போர் போடுவதால்) எந்தவித சங்கடமும் நேராது என்பதே அறிவியல் பூர்வமான உண்மை. இதில் வாஸ்து தோஷம் என்பது நிச்சயமாக உண்டாகாது.

* இடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண்டிருந்தால் நன்மைகள் விளையுமா?  
- மு. மதிவாணன், அரூர்.

நிச்சயமாக விளையும். மனதிற்குள்ளேயே என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெளியில் வாய் மட்டும் கடவுளின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு மனதில் வேறு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தால் அதனால் எந்தவிதமான பயனும் இல்லை. அதே நேரத்தில் நீங்கள் கேட்டிருப்பது போல் மனதிற்குள் கடவுளின் திருநாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றால் இறை சிந்தனை என்பது அந்த மனிதரிடம் நிறைந்திருக்கிறது என்றே பொருள்.

 கடவுளின் திருநாமத்தினை மனதிற்குள் இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருப்பவருக்கு நிச்சயமாக இறையருள் என்பது கிடைத்திருக்கிறது என்பதே நிஜம். இறையருள் இல்லாவிடில் மனதினைக் கட்டுப்படுத்த இயலாது. இறையருள் பெற்ற ஒருவரால் மட்டுமே மனதினைக் கட்டுப்படுத்தி பரம்பொருளின் மீது தனது சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநாமத்தினை மனதிற்குள் சொல்ல இயலும். இவ்வாறு மனதிற்குள் இறைநாமத்தினைச் சொல்லும்போது அதற்கு நூறு சதவீத பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

* சிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிறப்பு, புண்யகால நாட்களில் தர்ப்பணம் செய்வதும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஆண்டுக்கு மொத்தம் எத்தனை முறை தர்ப்பணம் செய்வது உத்தமம்?  - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

இதனை ‘ஷண்ணவதி’ என்று சொல்வார்கள். அதாவது ஆண்டிற்கு 96 நாட்கள் தர்ப்பணம் அல்லது சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் என்று சாஸ்திரம் உரைக்கிறது. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்கள் 12, தமிழ் மாதப் பிறப்பு நாட்கள் 12, மன்வாதி தினங்கள் 14, யுகாதி தினங்கள் 4, மஹாளய பக்ஷ நாட்கள் 16, திஸ்ரோஷ்டகா நாட்கள் 12, வ்யதீபாதம் 13, வைத்ருதி 13 (கடைசி இரண்டும் 27 யோகங்களில் வருபவை, ஆண்டிற்கு 13 முறை வரும்) ஆக மொத்தம் 96 நாட்கள் சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் ஆகும்.

பெற்றோர் இறந்த திதியில் செய்யும் சிராத்தத்துடன் இந்த 96 நாட்களும் சிராத்தம் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். அமாவாசை நாட்கள் என்பது கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் ஆகும். இவ்வாறு ஷண்ணவதி (96 நாட்கள்) சிராத்தம் செய்பவரின் இல்லத்தில் பித்ருக்களின் அனுக்ரஹம் நிறைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

* சிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்ட ஹோமகுண்டம் பயன்படுத்துகிறேன். ஒரு சிலர் இரும்பை உபயோகிக்கக் கூடாது என்றும் பித்ருக்கள் இரும்பைக் கண்டால் ஓடியே போய்விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அது உண்மையா? தெளிவுபடுத்துங்கள்.  
- ரா. பாஸ்கரன், பெங்களூரு.

 பொதுவாகவே அக்னியை ஆவாஹனம் செய்யும்போது அதனை இரும்பினில் செய்யக்கூடாது. சிராத்த தினத்தன்று செய்யப்படும் ஹோமம் மட்டுமல்ல, எந்த ஹோமம் ஆக இருந்தாலும் அதனை இரும்பினால் ஆன ஹோம குண்டத்தில் செய்யக் கூடாது. மண்ணால் ஆன ஹோம குண்டத்திற்குள் பசுமாட்டின் சாணத்தினைக் கொண்டு நன்றாக மெழுகி அதன் பின்னர் ஹோமத்தினைச் செய்ய வேண்டும். மண்ணால் ஆன ஹோம குண்டம் கிடைக்காத பட்சத்தில் செங்கற்களைப் பயன்படுத்தலாம்.

செங்கல் என்பது மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதால் அதற்கு தோஷம் இல்லை. இரும்பினைக் கண்டு பித்ருக்கள் ஓடிவிடுவார்கள் என்று சொல்வதை விட பித்ருக்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ நாம் கொடுக்கும் ஆஹூதியை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கின்ற அக்னி பகவான் இரும்பினை ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லலாம்.

* புத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத்தினை வீட்டிலேயே செய்யலாமா?  
- மல்லிகா அன்பழகன், சென்னை - 78.

வீட்டில்தான் செய்ய வேண்டும். உலக நன்மை வேண்டி செய்யப்படுகின்ற பூஜைகளும், யாகங்களும் ஆலயத்தில் செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுகின்ற பூஜைகளும், ஹோமங்களும் அவரவர் இல்லத்தில்தான் செய்யப்பட வேண்டும். குழந்தை வரம் வேண்டி செய்யப்படுகின்ற சந்தான கோபால ஹோமம், கல்யாண யோகம் வேண்டி செய்யப்படுகின்ற சுயம்வரா பார்வதி ஹோமம், செல்வ வளம் வேண்டி செய்கின்ற மஹாலக்ஷ்மி ஹோமம் முதலான தனிப்பட்ட பிரார்த்தனையை உள்ளடக்கிய பூஜைகளையும் ஹோமங்களையும் அவரவர் வசிக்கின்ற இல்லத்தில் வைத்துச் செய்வதே நல்லது.

இல்லத்தில் வைத்து பூஜை செய்யும்போது அந்த மந்திரத்தின் வைப்ரேஷன் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். அந்த வீட்டில் வசிப்பவரின் உடலில் இந்த மந்திரங்களின் சக்தியானது செயலாற்றும். செய்த பூஜைக்கான பலனும் முழுமையாகக் கிடைக்கும். ஒரு மனிதனின் தனிப்பட்ட பிரார்த்தனைக்காகச் செய்யப்படுகின்ற ஹோமங்கள் அவரவர் வசிக்கும் இல்லத்தில் செய்வதே சரியானது. அதே நேரத்தில் பொது மக்களின் நலன் கருதி செய்யப்படுகின்ற யாகங்களை தனிப்பட்ட முறையில் செய்யாமல் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஆலயங்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
- திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்