SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயில் உகந்த அம்மன்

2019-05-24@ 09:43:43

திருச்செந்தூர், தூத்துக்குடி

பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித்தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து தனக்கு சாகாவரம் வேண்டும் என கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை சிறையிலடைத்தனர்.

மிஞ்சிய தேவர்கள், இந்த துன்பத்தில் இருந்து எங்களை காக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் ஓடினர். அவர் சிவனிடம் முறையிட்டார். சிவன் தனது நெற்றி கண்ணை திறந்தார். அதிலிருந்து  அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அது ஆறு நெருப்பு பந்துகளாக மாறின.     சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெற்றன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர். அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்க கார்த்திகை பெண்கள் வந்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினார்கள். ஓடும் போது பார்வதி தேவியின் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழுந்தன. அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார்.

ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்த்து  நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள் என்று உத்தரவிட்டார். சிவன் அருளால் அவர்களுக்கு வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான்.

சிவன் அவர்களிடம், மக்களே! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழ்ந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நிகழ, நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம் என்றார். பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச்சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்தனர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது ஆறு குழந்தைகள் ஒரு குழந்தையாக மாறியது. அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் சிவன், இந்தப் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள்.

உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். முருகனிடம் அவர் உருவான காரணத்தை கூறிய சிவனார்,லட்சக்கணக்கான படை வீரர்கள் உனக்கு உண்டு. இவர்களுக்கு சேனாதிபதியாக வீரபாகு  தலைமை தாங்குவான் என்றார். அப்போது பார்வதிதேவி தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கினாள். அந்த சக்தியே வெயில் உகந்த அம்மனாக திகழ்கின்றாள். முருகனுக்கு சக்திதேவி தான் வேல் கொடுத்தாள். அதன் காரணமாக வேலை ஈந்த அம்மன் என்ற சொல்லே வேலீந்த அம்மன் என்றாகி வெயிலுகந்த அம்மனாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்தக்கோயில் திருச்செந்தூரில் முருகன் கோயில் அருகே உள்ளது.  திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்பாக, ஸ்ரீவெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப்பெருமான் சூட்சும உருவில் அம்பாள் திருக்கோயிலுக்கு வந்து, தனது அன்னைக்கு தன் கைகளாலே பூஜை செய்து அருளாசி பெற்று வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்வதாக ஐதீகம். தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்மனுக்கு பாரம்பரியமாக ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரகுணபாண்டியன் என்னும் மன்னன் குழந்தை பாக்யம் இல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோயில் வந்து கந்தசஷ்டி விரதம் இருந்தான். அதன் பயனாக மன்னனின் மனைவி கருவுற்றாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும், உடல் மனித உருவிலும் இருந்தது. அதை கண்டு மன்னன் பெரிதும் கவலையுற்றான். மன்னனின் கனவில் காட்சி கொடுத்த முருகப்பெருமான், ஊரின் வடக்கே வீற்றிருக்கும் என் அன்னையிடம் சென்று வேண்டினால் உன் குறை தீரும் என்று கூறியதைக் கேட்டு, மன்னன் இவ்விடம் வந்து கடும் விரதம் மேற்கொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்தான். இரக்கமே உருவான அன்னை ஸ்ரீ வெயிலுகந்தம்மன் ஆடி செவ்வாய்க்கிழமை அன்று என் எதிரே இருக்கும் கடலில் இறங்கி உன் குழந்தையோடு தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள் என்று அருள்வாக்கு தந்தாள். அன்னை கூறியபடியே மன்னன் தனது குதிரை முகம் கொண்ட குழந்தையோடு கடலில் இறங்கினான்.

அதுவரை ராட்சத அலைகளால் ஆர்ப்பரித்து கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் குதிரைமுகம் மாறி, அழகான பெண் குழந்தை முகமாக உருமாறியது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் அந்த இடம் வதனாரம்ப தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. குழந்தையின் அழகான முகத்தைக்கண்டு ஆனந்தம் கொண்ட மன்னன் குழந்தையோடு அன்னையை தரிசிக்கச் சென்றபோது அன்னையின் முகம் குதிரை முகமாக மாறி இருந்தது. அதைக்கண்டு மன்னன் அதிர்ச்சியுற்றான்.

மன்னன் அன்னையிடம் காரணம் வேண்டியபோது என்னிடம் வந்து  ‘‘அம்மா என்று யார் என்ன கேட்டாலும் என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்களின்படி, நீ அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உன் கர்மபலன்கள் தீர்ந்ததும். நான் ஏற்றுக்கொண்ட குதிரை முகம் மாறிவிடும்’’ என்று அன்னை அபயம் அளித்தாள்.

கோயிலின்றி வராந்தாவில் இருந்தால் வேல் ஈந்த அம்மன், வெயிலுகந்த அம்மன் என அழைக்கப்பட்டாள். அன்னையின் கருணையை எண்ணி வியந்த மன்னன் அன்னைக்கு கோயில் கட்டி சிறப்பித்தான். இன்றும் இக்கோயிலில் கொடிமரத்தின் அருகே பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். இன்றும் ஆடிச்செவ்வாய் அன்று அதிகாலையில் பெண்கள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி கால்களில் நலுங்கு மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை கொண்டு அன்னையை வணங்கினால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

மேலும் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை பேறு பெறுவார்கள் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் அதிக அளவில் இங்கு வந்து அன்னையை தரிசிக்கிறார்கள்.  பன்னீர்மரம் ஸ்தலவிருட்சம், ஆவணி மற்றும் மாசித்திருவிழாவில் பத்தாம்நாள் அன்று அன்னைக்கு கடலில் எழுந்தருளி தன் புதல்வனான சண்முகருக்கு அருளாசி வழங்குகிறாள். அதன் பின்பே ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் தொடங்கும்.

 படங்கள்: உடன்குடி சாமுவேல்
சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்