SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேட்டதை தருவாள் கோட்டை மாரியம்மன்

2019-05-21@ 10:28:34

சேலம்

சேலத்திலுள்ள எல்லா மாரியம்மன் கோயில்களுக்கும் தாய் கோயிலாக கோட்டை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. 500 ஆண்டுக்கு முன்பு சேரநாட்டை ஆண்ட சிற்றரசர்கள் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மனை பிரதிஷ்டை செய்தனர். ஆனால் தற்போது அப்பகுதியில் கோட்டை கரைந்து காணாமல் போனாலும்,மாரியம்மன் மழையாக அருட்பாலிக்கிறாள். கோயில் கருவறை, திருமணிமுத்தாறு ஆற்றுப் படுகையிலிருந்து 25 அடி உயரம்உடையது. நீருக்கும், நெருப்பிற்கும் உடையவளான மாரியம்மன் அக்னி திசை நோக்கி வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள்.

வலது மேற்கரத்தில் பாம்புடன் கூடிய உடுக்கையும், வலது கீழக்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும், தீச்சுடருடனும் காட்சியளிக்கிறாள். பொதுவாக அம்மன் தலங்களில் அரக்கன் தலை அவள் காலடியில் இருக்கும். ஆனால் இங்கு, தாமரை மொட்டு இருக்கிறது. அம்மனின் காலடி தரிசனம் கிடைத்தால் அசுர குணம் கொண்டவர்கள் கூட அடக்கமான தாமரை மொட்டுபோல மாறிவிடுவார்கள் என்பதை விளக்கும் அம்சம் அது. நைவேத்தியம் படைப்பதும் வித்தியாசமாக இருக்கிறது. ஆமாம், அம்மனை குழந்தையாக பாவித்து நிவேதனப் பொருளை ஊட்டிவிடுவது போல பாவனை செய்கிறார்கள்.

 ஆடி மாதம் நிகழும் பண்டிகையின்போது கோட்டை மாரியம்மனுக்கு மண் பொம்மைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குகிறார்கள். பக்தருக்கு அவர் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு உண்டாகிறதோ, அந்த உறுப்பை மண் பொம்மையாகச் செய்து அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். இந்தப் பரிகார நடைமுறையை ‘உருவாரம்’ என்று சொல்கிறார்கள். சுமார் 2 அடி உயரம் வரையிலான பொம்மைகளில் வேப்பிலை சொருகி கோயில் முன்பு வைப்பார்கள். கடவுளை இந்த பொம்மைகள் வணங்கும் என்பது இன்றும் தொடரும் நம்பிக்கை. திருச்சியில் காவிரியாற்றுக்கு ஒரு கரையில் அரங்கநாதரும், மறுகரையிலும் சமயபுரம் மாரியம்மனும் இருப்பது போல, சேலத்தில் திருமணிமுத்தாறு நதிக்கு ஒரு கரையில் பெருமாள் கோயிலும்,
மறுகரையில் மாரியம்மன் கோயிலும் உள்ளன.

திருக்கல்யாண வைபவத்தின்போது கோட்டை மாரியம்மனுக்கு, அண்ணனான பெருமாள் தட்டுகளில் சீர் வரிசை தருவார். ஆண்டுக்கு ஒருமுறை ஆடி 18 அன்று பெருமாள் வாசலில் மாரியம்மன் உற்சவர் காத்திருக்கும். அப்போது பட்டுப்புடவை, வளையல், மங்கலநாண், காதோலை, கருகமணி, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், மலர், பழம் எல்லாவற்றையும் பொருமாள் காலடியில் வைத்து பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு கோயிலை வலம் வந்து வாசலில் காத்திருக்கும் அம்மனிடம் வழங்குவார்கள். அம்மனுக்கு உச்சிகால பூஜைக்கு பிறகு, நிவேதன அமுதூட்டி பிறகு மணி அடிப்பார்கள். இந்த மணி சத்தம் கேட்டபிறகுதான் சேலம் நகர மக்கள் அன்றைய முதல் உணவு உட்கொள்வது என்பது அந்த காலத்திய வழக்கம்.சேலம் நகரத்திற்கு இரண்டு காவல்தெய்வங்கள். திருமணிமுத்தாற்றின் கிழக்கு கரையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி கோட்டை மாரியம்மனும், மேற்கு கரையில் மேற்கு திசையை பார்த்தபடி எல்லைப் பிடாரி அம்மனும் காவல் இருக்கின்றனர்.

மற்ற கோயில்களை போல சூரிய, சந்திர கிரகண நேரங்களில் இந்த கோட்டை மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படுத்துவது இல்லை. அந்த நாட்களில் கோயில் திறந்தே இருக்கும். இந்நாளில் இக்கோயிலில் வழிபடுவோருக்கு விசேஷ சக்திகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. வெய்யில் உக்கிரத்தால் அம்மை நோய் கண்டால் கோட்டை மாரியம்மன் கோயில் பலி பீடத்தில் உப்பு, மிளகாய் போட்டு பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். உடனே உக்கிரம் தணிந்து விடுகிறது என்பது அனுபவ நம்பிக்கை.  வெல்லம் கலந்த இடித்த பச்சரிசி மாவு, பாயாசம், மாவிளக்கு, ஆரியக்கூழ், கஞ்சி, பனை வெல்லம் கலந்த கம்பு பானகம் என்று பக்தர்கள் அன்னைக்குப் படைக்கின்றனர்.

பிரார்த்தனை பொருட்களாக கண் மலர், மண் உரு, உலோகத்தால் ஆன கை கால், வயிறு, ஆகியவற்றை அளிக்கின்றனர். அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், முடி காணிக்கை என்றும் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். ஆடி மாதத்து அம்மன் விழாக்களில், கோட்டை மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து வந்து பூச்சாட்டு முடித்து விட்டுத்தான் சேலம் நகரத்தில் உள்ள தாதகாபட்டி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சஞ்சீவிராயன்பேட்டை, அன்னதானப்பட்டி, பட்டகோயில், குகை ஆகிய 8 பட்டி அம்மன் கோயில்களிலும் பண்டிகையை துவங்குவர். இது வழி, வழியாக வரும் சம்பிரதாயம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்