SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வு வளம் பெறும்..!

2019-05-20@ 16:40:22

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?12 வயதாகும் என் மகளுக்கு கடந்த வருடம் மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது. மருத்துவரின் அறிவுரையின்படி காலை - மாலை இருவேளையும் ஒரேயொரு மருந்தினை உட்கொள்கிறார். எனக்கு அலுவலகம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வருகிறது. நான் வெளிநாடு செல்லலாமா? என் மகளின் ஆரோக்யம் சிறக்க பரிகாரம் சொல்லுங்கள்.
- ஜெகதீஸ்வரன்.

மகளின் ஆரோக்யம் பற்றிய கேள்விக்கு மகளின் ஜாதகத்தையோ பிறந்த குறிப்பையோ அனுப்பாமல் உங்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் உங்களது ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதி, நேரத்தை வைத்து கணக்கீடு செய்ததில் அவிட்டம் நட்சத்திரம்3ம் பாதம் கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் ஜாதகத்தில் சதயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரைக் கொண்டு தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தியின் காலம் நடந்து வருகிறது.

சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். உத்தியோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் புதன் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். நன்கு சம்பாதிக்க வேண்டிய நேரம் இது. தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பினை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். மகள் தனுசு ராசியில் பிறந்தவர் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். கோச்சார ரீதியாக தனுசு ராசியில் சனி-கேதுவின் இணைவு உள்ளதால் சற்று சிரமப்பட்டு வருகிறார். வேளை தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வரச் சொல்லுங்கள். உங்கள் மனைவியை சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து எட்டு பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். மகளின் ஆரோக்யம் விரைவில் சீரடையும்.

?30 வயதாகும் என் மகன் 24 மணி நேரமும் வீட்டில் அமர்ந்தபடியே எந்த வேலையும் செய்யாமல் அதிகாரம் செய்து சாப்பிட்டுக் கொண்டு கஷ்டப்படுத்துகிறான். வீட்டில் இருந்து கொண்டே அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் நினைக்கிறான். அவன் வேலைக்குச் செல்ல தகுந்த வழி காட்டுங்கள்.
- காஞ்சிபுரம் வாசகி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி வக்ரம், குரு எட்டில் என சிறு சிறு குறைகள் இருந்தாலும் மற்ற கிரஹங்கள் நல்ல நிலையில்தான் உள்ளன. ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டில் ஆட்சி பெற்ற சூரியனுடன் லக்னாதிபதி செவ்வாய், லாபாதிபதி புதன் மற்றும் கேது ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். கேதுவின் ஆதிக்கம் சற்று கூடியிருப்பதால் தத்துவம் பேசிக்கொண்டு திரிகிறார். பாவ- புண்ணியம் பாராமல் உங்கள் மகனிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள். சம்பாதித்தால்தான் சோறு கிடைக்கும் என்று கறாராகச் சொல்லுங்கள். அவரது மிரட்டலுக்கும், பயமுறுத்தலுக்கும் நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரால் மகனைக் கண்டிக்க இயலும். நல்ல அறிவும் திறமையும் கொண்ட உங்கள் மகன் தனது சோம்பல் தன்மையால் எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார். மனநிலையில் எந்தவிதமான கோளாறும் இல்லை. தினசரி வீட்டில் விளக்கேற்றுவதற்குக் கூட வழியில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். ஜாதகத்தில்எந்தவிதமான தோஷமும் இல்லை. அவரை நல்வழிப்படுத்துதல் என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மகனை கண்டிப்புடன் வளர்க்க முயற்சியுங்கள். அவரது எதிர்காலம் என்பது உங்களது அதிரடி நடவடிக்கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். பழநி மலை முருகனுக்கு தங்கத்தேர் இழுப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகனுக்கு நல்வாழ்வு அமையட்டும்.

?நான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை விரும்புகிறேன். எங்கள் காதல் விஷயம் வீட்டிற்குத் தெரிந்து அவரது வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டார்கள். ஆனால் எங்கள் வீட்டில் யாரும் என்னிடம் பேசுவதில்லை. பாசமும் குறைந்துவிட்டது. இரு குடும்பத்திற்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்கள் திருமணம் நடக்க வழி சொல்லுங்கள்.
- சல்மா, வேலூர்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் மிகவும் சென்ட்டிமென்ட் உணர்வு கொண்டவர் என்பது புரிய வருகிறது. உங்களால் உங்கள் குடும்பத்தினரின் கருத்திற்கு எதிராக செயல்பட இயலாது. மேலும் திருமணத்திற்குப் பிறகும் பிறந்த வீட்டின் அன்பும் ஆதரவும் என்றென்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும். அதோடு உங்கள் ஜாதக பலத்தின்படி உங்கள் உறவுமுறையிலேயே மாப்பிள்ளை அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் காதலரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

அவருடைய ஜாதக பலத்தின்படி அவர் மனதிற்கு பிடித்தமான பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக அடையும் பாக்கியம் நன்றாக உள்ளது. அதற்காக உங்களைத்தான் அவர் கரம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் இருவருக்கும் இடையே இருவரும் ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவிதமான சிறப்பம்சமும் தென்படவில்லை. இருவரின் ஜாதகங்களை ஒப்பீடு செய்து பார்க்கும்போது குணத்தில் அவரது ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த குணம் நாளடைவில் உங்களுக்கு ஒத்து வராமல் போகும். உங்கள் பிறந்த வீட்டார் உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்கள் என்பதே நிஜம். அவர்களது பாசத்திற்கான பிரதி உபகாரமாக அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. தோஷம் ஏதும்
இல்லாததால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகனுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லை. மகனுக்கு குழந்தை இல்லை என்பதைவிட 29 வயதாகும் மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற கவலை வாட்டி வதைக்கிறது. எங்கள் கவலை தீர ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
- எலிசபெத், பெங்களூரு.

மகனுக்கு பிள்ளைப்பேறு எப்போது கிடைக்கும் என்பதை அறிய நீங்கள் உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் அனுப்ப வேண்டும். மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை கணிதம் செய்ததில் அவருக்கு தற்காலம் குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் என்பது உண்டாகி இருக்கிறது.

இதனால் அவரது திருமணம் தாமதமாகி வருகிறது. என்றாலும் குரு - சந்திர யோகம் என்பது அவரது ஜாதகத்தில் சிறப்பாக உள்ளதால் மனதிற்கு பிடித்த நல்வாழ்வினைப் பெறுவார். தாமதமான திருமணம் என்பதே அவருக்கு நல்வாழ்வினைத் தரும். தினமும் தேவாலயத்தில் உங்கள் கணவர் சேவை செய்து வருவதாக எழுதியுள்ளீர்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் உங்கள் மகளையும் தனது தந்தையுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவையைச் செய்து வரச் சொல்லுங்கள். சூரிய பகவானால் உண்டாகும் சூட்டினைத் தணிக்கும் விதமாக தன் கையால் உங்கள் மகளை பக்தர்களுக்கு நீர்மோர் கொடுக்கச் சொல்லுங்கள். சூரியனால் ஜாதகத்தில் உண்டான தோஷமும் நீங்கும். தாகம் தீர பெரியவர்கள் தரும் அருளாசியும் அவரது நல்வாழ்விற்குத் துணைபுரியும். 08.08.2020ற்குள் உங்கள் மகளுக்கு திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.

?என் ஒரே மகள் பி.காம் படித்திருந்தும் கடந்த 15 ஆண்டுகளாக மன ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகிறாள். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் வேதனையாகஉள்ளது. ஒரே பெண் என்பதால் செய்வதறியாமல் தவிக்கிறோம். அவளது வாழ்க்கை நல்லபடியாக அமைய நல்ல வழி காட்ட வேண்டும்.
- ராஜசேகரபாபு, சென்னை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. ராகு பகவான் அவரது ஜாதகத்தில் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பது பிரச்னையைத் தந்திருக்கிறது. அதோடு ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியும், லக்னாதிபதி செவ்வாயும் வக்ரம் பெற்ற நிலையில் மூன்றில் சஞ்சரிப்பதும் புத்தியில் சலனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ராகு தசை துவங்கியதில் இருந்து பிரச்னையைக் காணத் துவங்கியிருக்கிறீர்கள். ராகு தசையின் மொத்த கால அளவான 18 வருடங்களில் 15 வருடங்கள் ஓடிவிட்டது.

இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர் துவங்கும் குரு தசையானது இவருடைய வாழ்வினில் சுகமான சூழலை உண்டாக்கித் தரும். 2 மற்றும் 5ம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குருபகவான் இவரது ஜாதகத்தில் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே ஆகும். குரு தசையின் துவக்கத்தில் அதாவது உங்கள் மகளின் 35வது வயதில் நல்லதொரு துணை கிடைக்கக் காண்பீர்கள். அவரது கையில் ஒப்படைத்த பின் நீங்கள் உங்கள் மகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள புற்றுமாரியம்மன் அல்லது நாகாத்தம்மன் ஆலயத்திற்கு உங்கள் மகளையும் அழைத்துச் சென்று 18 முறை சுற்றி வந்து வணங்கச் செய்யுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவரது மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

?என் மகன் முதலில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3 செமஸ்டர் மட்டும் படித்து, பிறகு பிடிக்கவில்லை என்று பாதியில் விட்டுவிட்டு அதன்பின்பு எம்.பி.ஏ முடித்து நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அந்த வேலைக்கும் செல்லாமல் தனக்கு ஷேர்மார்க்கெட் வேலைதான் பிடித்துள்ளது என்று கூறி தற்போது வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று கவலையாக உள்ளது.
ஏதாவது பரிகாரம் உள்ளதா?
- அனந்தராமன், மும்பை.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் பாவகத்தில் கேது அமர்ந்து தனது தசையை நடத்திக் கொண்டிருப்பதால் தெளிவற்ற மனநிலையில் உள்ளார். சிந்தனையில் உண்டாகியுள்ள குழப்பம் அவரை சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிலும் தற்போது நடந்து வருகின்ற சனி புக்தி அவரது முயற்சிகளுக்குத் துணைபுரியாது. அவரது நேரம் தற்கால ரீதியாக சுமாராக உள்ளதால் நீங்கள் அவருக்கு பக்கபலமாகத் துணை நில்லுங்கள். 29வது வயதில் துவங்கும் சுக்கிர தசை அவரது வளர்ச்சிக்கு வழிகாட்டும். உத்யோக ஸ்தான அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை உணர்ந்துகொண்டு தனது பேச்சுத்திறமையின் மூலம் பணியில் சிறந்து விளங்குவார். லக்னாதிபதி சனி 12ல் ஆட்சி பெற்றிருப்பதால் இவரால் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு தொழிலைச் செய்ய இயலாது. மார்க்கெட்டிங் போன்ற துறையில் நன்கு பிரகாசிப்பார். 29வது வயது வரை அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்கு சனிக்கிழமை தோறும் சென்று உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 14.02.2020ற்குப் பிறகு திருப்புமுனையையும், 15.02.2021 முதல் தனது வாழ்விற்கான பாதையையும் அடையாளம் காண்பார். கவலை வேண்டாம்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்
229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.
பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,
ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்