SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வல்லமை தருவாள் வண்டி மலைச்சியம்மன்

2019-05-19@ 00:14:31

அஸ்தினாபுரம் அடுத்த பகாசுரவனம் இருந்தது. இங்கு, பகாசுரன் மற்றும் பகாசுரவள்ளி என்னும் அசுர தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த வனத்தையொட்டி இருந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்துவந்தனர்.அசுரனுக்கு பசி எடுத்தால் கிராமத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவரை கொன்று தின்று விடுவான். கிராம மக்கள் ஏதோ, பேய், பிசாசு, சாத்தான் வந்து இப்படி மனிதர்களை பலிவாங்கி தின்று விடுகிறதே, என்று அஞ்சி இருந்தனர். ஒரு நாள் அசுரன் ஒரு வாலிபனை அடித்து தின்று கொண்டிருந்ததை கிராம மக்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் ஏ, அசுரனே, நீ ஒருத்தனை கொன்று தின்க, ஊரையே ஆட்டி படைத்து இறுதியில் ஒருத்தனை கொன்று தின்கிறாய், உனக்கு பசியாறும் அளவிற்கு மலையளவு உணவை ஆக்கி வண்டி கட்டி அனுப்பி வைக்கிறோம். எங்களை ஒன்றும்
செய்யாதே என்றனர்.

அதற்கு அசுரன் ‘‘எனக்கு மது, மாமிசத்துடன் வண்டி நிறைய சோறு வேண்டும். நீங்கள் அனுப்பி வைக்கும் உணவு போதவில்லை என்றால் உணவை கொண்டு வரும் நபரை நான் தின்று விடுவேன். ஆகவே எனக்கு தினமும் ஒரு வாலிபன் தான் உணவை கொண்டு வரவேண்டும்’’ என்று கூற, கிராம மக்களும் சரி என்று ஒப்புக்கொண்டனர். வீட்டுக்கு வீடு முறை வைத்து ஆண் மகனை அனுப்பி வைக்க திட்டமிட்ட அவர்கள், கிராமத்தின் முதல் வீடான, கணவனை இழந்து தனது மகன் மற்றும் வயதான தாயுடன் வாழ்ந்த பெண்ணிடம், அதிகாலை சென்று, நாளை முதல் கிராமத்திலிருந்து அசுரனுக்கு உணவு படையல் அனுப்ப வேண்டும். வரிசைப்படி முதலாவதாக உன்னுடைய வீடு உள்ளது. ஆகவே உணவை உன் மகன் தான் நாளை கொண்டு செல்ல வேண்டும் என்று கிராமத்தினர் சொல்ல, அந்த பெண் அழுதவாறு ஒப்புக்கொண்டாள்.

இதனிடையே, துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் அன்று காலை இந்த கிராமத்திற்குள் வருகின்றனர். கிராமத்தின் முகப்பில் இருந்த அந்தண பெண்மணியிடம் குடிக்க நீர் கேட்க, பின்னர் நடந்தவற்றை அவர்கள் கூற அந்த பெண்மணியும், நீங்கள் விரும்பினால் என் வீட்டிலேயே நீங்கள் அனைவரும் தங்கலாம் என்று கூறி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்று வந்தவர்களுக்கு உபசரனைகள் செய்து நல்லமுறையில் கவனித்து வந்த அந்த பெண்மணி மறுநாள் அதிகாலையில் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள், ஒரே மகனின் நிலையை எண்ணி, துக்கம் தாளாமல் தனது கன்னத்தில் அவ்வப்போது தன்னையறியாமல் வழிந்தோடும் கண்ணீரை தனது சேலை முந்தானையால் துடைத்துக்கொண்டே இருந்தார். அதைக்கண்ட  குந்தி தேவி அந்த பெண்ணிடம் சென்று , ‘‘ஏனம்மா அழுகிறாய்’’ என்று பரிவுடன் விசாரித்தாள். அசுரனின் கதையை சொன்ன அவள், ‘‘இன்று என் பிள்ளை வண்டி ஓட்டிச் செல்ல வேண்டும். எனக்கு இருக்கும் ஓரே ஆதரவு அவன் தான். அவனையும் அசுரனுக்கு பலி  கொடுக்க போவதை நினைத்து கதறுகிறேன்’’ என்றாள்.

 அப்போது குந்தி தேவி, ‘‘கவலைப்படாதே எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை பகாசுரனிடம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றாள். அதன்படி பீமன் அசுரனுக்கு உணவு கொண்டு சென்றான். செல்லும் வழியில் வண்டியை நிறுத்தி விட்டு,  கொண்டு சென்ற உணவுகளை தானே உண்டான். மீதமிருந்ததை வனவிலங்குகளுக்கு கொடுத்தான். இதைக்கண்டு பசி தாங்காமல் கோபம் கொண்ட பகாசுரன், பீமனை தாக்க ஆரம்பித்தான். பீமன் அவனை வதம் செய்தான். பிறகு பீமன் வண்டியை ஓட்டிக்கொண்டு கிராமத்துக்கு வந்தான்.பகாசுரன் அழிந்ததை கேட்டு அந்த ஊரே மகிழ்ந்தது. அதே நேரம் பகாசுரன் மனைவி பகா சூரவள்ளி, மணாளன் மாண்ட செய்தி கேட்டு அவனது உடல் கிடந்த இடத்துக்கு ஓடி வந்து கதறினாள். பின்னர் அவிழ்ந்த தலையை சூடாமல், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளின் தவவலிமையை கண்டு மனம் இறங்கிய சிவன், அவள் முன் தோன்ற, தனது கணவனின் உயிரை மீட்டுத் தருமாறு சிவபொருமானிடம் வேண்டினாள். கொடுஞ்செயல் புரிய மாட்டோம், எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டோம் என்று கூற, அவளது வேண்டுதலை ஏற்ற சிவன், சூரனை உயிர்ப்பித்து, இருவரையும் பொதிகை மலைப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

பொதிகை மலை பகுதிக்கு வந்த அவர்கள் இருவரும் தாமிரபரணி  உற்பத்தியாகும் இடத்திலிருந்து பயணித்தனர். பல இடங்களில் தங்கியும் அவர்கள் திருப்தியடையாமல் அம்பாசமுத்திரத்திற்கு வந்தனர். மீண்டும் தங்கள் அராஜகத்தை இருவரும் தொடர்ந்தனர்.  அந்த வழியாக சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு சந்தைக்கு   செல்லும் வண்டிகளை இருவரும் மறித்து(கவிழ்த்து) காய்களை எடுத்து தின்றனர். இதனால்  பயந்த அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் குல தெய்வமான முனியப்பனிடம் சென்று வேண்டினர். முனியப்பன்(சிவனின் அம்சங்களில் ஒன்றான முனீஸ்வரனே, இந்த முனியப்பசாமி) ஆங்கார ரூபம் கொண்டு வந்தார். இருவரையும் கீழே தள்ளினார். அவர்களது தலை முடியை பிடித்து பூமியில் திணித்தார். இருவரது உடலும் பூமியில் பதிந்தது.
அவர்கள் முனியப்பனை வேண்ட, மல்லாந்து வீழ்ந்த வண்டிமலையனும் வண்டிமலையத்தியையும் வீழ்த்தாமல் அவர்களை நம்பி வரும் பக்தர்களுக்கு அவர்கள் அருளும் பொருட்டு வரங்களை கொடுத்துச் சென்றார்.  அவர்களுக்கு எதுவும் கண்ணில் படாது. அவர்கள் கால்பகுதியில் நின்றால் மட்டுமே அவர்களுக்கு வந்தவர்களை தெரியும். இந்த நிலை உருவாக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வண்டிகள் அவர்கள் கண்ணில் படவில்லை. ஊர் மக்களும் பயமின்றி சந்தோஷத்துடன் சந்தைக்கு சென்று வந–்தனர். அவர்களால் ஏதும் தீவிணைகள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கிராமத்து மக்களும், வணிகர்களும், வண்டி மலையனுக்கும், மலையச்சிக்கும்  அவர்கள் மல்லாந்து விழுந்த இடத்தில் அதே போல் மண்ணுருவம் படைத்து திறந்த வெளி ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். இதுவே தற்போது வண்டி மறிச்ச அம்மன் கோயிலாக திகழ்கிறது. இப்போதும் இந்த கோயில் மேல் கூரையில்லாமல் உள்ளது. கோயிலுக்குள் வண்டி மறிச்ச அம்மனும், வண்டி மலையனும் மல்லாந்து படுத்த நிலையில்  உள்ளனர்.

பிரமாண்டமான இந்த இரண்டு சிலைகளும் மண்ணால் செய்யப்பட்டவைதான். இவை மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டாலும், திருவிழா காலங்களில் இந்த சிலைகளை புதுப்பித்து வண்ணம் பூசுகிறார்கள். இந்த ஆலயத்தில் வேறு துணை தெய்வங்கள் எதுவும் இல்லை. விவசாயம் சிறக்கவும், வாகன விபத்துகள் வராமல் இருக்கவும், வாகன தொழில் செய்பவர்கள் தொழில் சிறந்து விளங்கவும், இந்த கோயிலுக்கு வந்து  வேண்டி சென்றால் உரிய பலன் கிடைக்கிறது. இக்கோயிலில் தை மாதம் கடைசி செவ்வாய் கொடை விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் மேளதாளம் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவார்கள். தொடர்ந்து புதிதாக வண்ணம் பூசப்பட்ட  சாமிக்கு கண் திறக்கும் வைபவம் நடக்கும். அது சமயம் சுவாமிகளுக்கு எதிரே யாரும் போகக்கூடாது. என்று கூறுகிறார்கள். நள்ளிரவு பூஜையின் சுவாமிக்கு அனை பூஜை நடைபெறுகிறது. அப்போது பாகற்காய் நீங்கலாக அனைத்து  வகை காய்களுடன் சமைக்கப்பட்ட உணவு மலைபோன்று படைக்கப்படுகிறது. மறு நாள் புதன்கிழமை காலையில் கிடா வெட்டு பூஜைகளுடன்  திருவிழா நிறைவு பெறும். இது தவிர தை பொங்கலின் போது இக்கோயிலில்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஒருமுறை இந்த கோயிலுக்கு மேற்கூரை போட முயற்சி செய்தனர். அம்மனிடம் இதற்காக உத்தரவு கேட்டபோது. மக்களை பார்த்து அம்மன், ‘‘என் உயரம் என்னவென்று தெரியுமா, நான் எழுந்து நின்றால் தட்டாத உயரத்துக்கு உங்களால் கூரை அமைக்க முடியுமா’’ என்று எதிர் கேள்வி சுவாமி ஆடுபவர் மூலம் கேட்டதாகவும், அதன் பிறகு கோயிலுக்கு கூரை அமைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் அப்பகுதியினர் கூறினர். தற்போதும் கூட அம்மன் கோயிலுக்கு எதிரே இருக்கும் கட்டிடங்கள் குறிப்பிட்ட உயரத்துடனேயே உள்ளன.  அம்மனின் நேரடி பார்வை பட்டால் விவகாரம் ஆகி விடுமே என்ற பய பக்தியே இதற்கு காரணம் என்கிறார்கள், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். கோயில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

படங்கள்: ரா.பரமகுமார்

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்