SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில் என்ன பிரசாதம்

2019-05-15@ 09:54:35

* கஞ்சனூர் (கும்பகோணம்) - சுரைக்காய் கறி

இறைவன் அக்னீஸ்வரராகவும்,  இறைவி, கற்பகாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் நவகிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரனின் தலமாகப் போற்றப்படுகிறது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம். பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்தருளிய தலம். அக்னிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தருளிய தலம். பராசரருக்குச் சித்தப் பிரமை நீங்கியதும், சந்திரனின் சாபம் நீங்கியதும் இத்தலத்தில் தான். கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.

இத்தல இறைவனுக்கு  அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காயே  முக்கியமான நிவேதனமாக  செய்யப்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. தன் பெயரிலேயே அக்னியைச் சுமந்து நிற்கும் ஈசனுக்கு குளுமையான சுரைக்காயை நிவேதிப்பதன் வரலாற்றை அறிவோம்!

இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர்  சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. ஓர் நாள் இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிராகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடது புறம் விநாயகர் சந்நதியும், வலதுபுறம் விஸ்வநாதர் சந்நதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நதிகள் உள்ளன. தலமரம் - புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார்.

மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவகிரக சந்நதி, நால்வர் சந்நதிகள் உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தரிசிக்கத் தக்கது. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முக்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோயில் இறைவனை திருமால், நான்முகன், சந்திரன், கம்சபாண்டியன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இறைவன் பிரம்ம தேவருக்குத் திருமணத்திருக் கோலம் காட்டி யருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார். முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர்.

தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை.

அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று “கோட்டூர்” “கஞ்சனூர்” என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சுரைக்காய் பொரியல்

என்னென்ன தேவை?

சுரைக்காய் - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்கிறார்கள் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கிறார்கள். பின்பு அதில் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்ததும் (தண்ணீர் முற்றிலும் வற்றியதும்) அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்குகிறார்கள். சுரைக்காய் பொரியல்  பிரசாதம் ரெடி!!

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்