SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகமான வாழ்வருளும் சுவாமி நாதன்

2019-05-13@ 17:24:59

குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை

1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார்.பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை காஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப்பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல்  சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ் வேலை பக்தர்கள் பலர் பூஜை செய்து வந்தனர்.

09.02.1979ம் ஆண்டு  ஸ்வாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தினர்.  03.02.1983ல்  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தினால் “லகு சம்ப்ரோஷணம்” செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள். பின்  மீனாட்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்கள், இடும்பன் சந்நதிகள் அமைத்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள்.  ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது.  ஜெயமங்கலகாளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 03.05.1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 12.06.2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. சமீபத்தில் 9.2.2014 அன்று மீண்டும்  சுவாமி நாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய ஜீர்ணோத்தர அஷ்ட பந்தனமும், நூதன ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ராஜகோபுரத்திற்கும் விநாயகர் சந்நதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்றும் எழுந்துள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள  சித்தி விநாயகர் சந்நதியையும், வடபுறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நதியையும் காணலாம்.  ஷண்முகர் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் கீழிருந்த படியே முருகப்பெருமானை அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம். மலையடிவாரத்தின் தெற்கில் நவக்கிரகங்களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம் மாற்றம் செய்யப் பட்ட தனிச்சந்நதியில் இடும்பனை வணங்கலாம்.

அடுத்துள்ள சிவன் கோயிலில் சுந்தரேஸ்வரர் ஆவுடையார் மேல் பாணலிங்கமாக காட்சி தருகிறார்.
சிவன் சந்நதியை அடுத்து  மீனாட்சி அம்மன் சந்நதி உள்ளது. தனிக்கோயில் அம்பிகையின் கருவறையைச் சுற்றி தெற்கில் மாகேஸ்வரியும், மேற்கில் வைஷ்ணவியும், வடக்கில் பிராம்ஹியும் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர். நடராஜர் சந்நதிக்குப் பக்கத்தில்  பைரவர் சந்நதி உள்ளது. மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஒரு கையில் தண்டமும் மற்றொரு கரத்தை தொடையில் வைத்தவாறு இரு திருக்கரங்களுடன் சுவாமிநாத ஸ்வாமி உற்சவரையும் அவருக்கு எதிரில் அமர்ந்த நிலையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட  அருணகிரிநாதரையும் தரிசித்து உள்ளே சென்றால்  கருவறையினுள்ளே  முருகப்பெருமான்  சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் (ஊருஹஸ்தம்) ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன்  அருட்பாலிக்கிறார். சுவாமிநாதனைப் பணிந்து பேறுகள் பல பெற்றிடுவோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்