SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரகங்கள் தரும் யோகங்கள் - ராகு - கேது, சனி சேர்க்கை என்ன செய்யும்?

2019-05-09@ 14:30:44

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

நிழல் கிரகங்கள், சாயா கிரகங்கள் என்று சொல்லக் கூடிய ராகு, கேது இந்த இரண்டு கிரகங்களும். மிகவும் வீரியம் மிக்க கிரகங்களாகும். அசுர,  அம்சம், சர்ப்ப அம்சம் உள்ளவை அசுர குணத்தால் எது நடந்தாலும், எது கிடைத்தாலும் மிக மிக உச்சமான பலன்களாகவே இருக்கும். உச்சத்தையும்,  உயர்வையும், யோகத்தையும் எவ்வளவு வேகமாக தரும் வல்லமை உள்ளதோ. அதே போல் நீச்சத்தையும், கஷ்ட, நஷ்டங்களையும் தந்து ஒருவர்  எங்கு இருக்கிறார் என்று தேட வேண்டிய நிலைக்கு கொண்டு செல்லும்.இந்த ராகு கேதுவுடன் சனி சம்பந்தப்படும் போது அந்தந்த லக்னத்திற்கு ஏற்ப  பலன்கள் கொஞ்சம் மாறுபடும். இருந்தாலும் இயற்கையான பொது பலன்களை அந்த ஜாதகம் அனுபவித்தே தீரும். ராசியிலோ, லக்னத்திலோ ராகு -கேது சனி சம்மந்தப்படும் போது தீய பழக்க வழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்க்கை வழக்குகள், போலீஸ், பஞ்சாயத்து, விபத்துக்கள், கண்டங்கள், கூடா  நட்பு, பெண்களால் கலகம், சட்ட விரோதமாக செயல்படுதல், தீய வழிகளில் பணம் சம்பாதிக்கும் சூழல்கள், மறைவு வாழ்க்கை, உடல் நலம், மனநலம்  பாதிப்பு எனப் பல வகைகளில் பிரச்சனைத் தரும்.

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் ராகு - கேது, சனி மூவரும் சம்மந்தப்படும் போது இளமையில் சோதனை, கஷ்ட நஷ்டம்  இருக்கும் 50 வயதிற்கு மேல் சாதகமான சூழ்நிலைகள் அமையும். திருமண விஷயத்தில் தடைகள், தாமத  திருமணம் உண்டாகும். வளர்பிறை,  தேய்பிறை போல இல்லற வாழ்க்கை அமையும். கணவன்- மனைவி இடையே வாக்குவாதம், கோபதாபம், போராட்ட வாழ்க்கை இருக்கும். சாண்  ஏறினால் முழல் சறுக்கும் என்பார்கள். அந்தளவிற்கு பொருளாதாரம் பாதிக்கும். கடன் பிரச்னைகள் காரணமாக மன அமைதி கெடும். குடும்பத்தில்  நிச்சய மற்ற, நிம்மதியற்ற நிலை உண்டாகும். பெண்களுக்கு தோழிகள் மற்றும் குடும்ப நெருங்கிய உறவுகளால் பிரச்னைகள் வரும். அடுத்தவர்  குடும்ப விஷயங்களில் ஆலோசனை, கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. ராகு, கேது, சனி சம்பந்தப்பட்ட தசா புக்திகளில் அந்தந்த வயது  சூழ்நிலைக்கு ஏற்ப பல பாதிப்புக்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பம், பிரிவு, வழக்கு, கடன், நோய் அறுவை சிகிச்சை, வீண் விரயங்கள். எனப் பல  சோதனைகள் வரலாம்.

நான்காம் இடமான சுகஸ்தானத்தில் ராகு , கேது, சனி சம்மந்தப்படும் போது அந்தந்த வயது கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் இருக்கும்.  தாயாருக்கு பிரசவ சமயத்தில் பிரச்னைகள் இருந்திருக்கும். அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஜாதகத்தில் இந்த  அமைப்பு இருக்கும். இளம் வயதில் தாயாருக்கு தோஷம் காட்டும். தாயை பிரிந்து வேறு இடத்தில். வளரக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். கல்வி  வகையில் தடைகள் உண்டாகும். விரும்பிய பள்ளி, கல்லூரி, விரும்பிய பாடப்பிரிவு கிடைப்பது கடினம். கல்வியில் சுமாரான மதிப்பெண்கள்  பெற்றாலும் இவர்களுக்கு அனுபவ அறிவுஞானம் அதிகம் இருக்கும். வயிறு சம்மந்தமான பிரச்னைகள், குடல் நோய்கள், மூலம், அஜீரணகோளாறுகள்  இருக்கும். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் பிரச்னைகள் வரும். கர்ப்பப்பை கோளாறு , மாதவிடாய் சுழற்சி முறையில் பிரச்சனைகள் உண்டாகும்.  அடிக்கடி இடமாற்றம் இருக்கும். காலில் சக்கரம் என்று சொல்வார்கள் அதன்படி அலைச்சல், பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் யாருக்காவது எந்த  வகையிலாவது மருத்துவச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.

ஐந்தாம் இடம் என்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, கேது, சனி மூவரும் சம்மந்தப்படும் போது. எதிர் மறையான எண்ணங்கள் உண்டாகும்.  எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். பக்தி மார்க்கம், ஆன்மிகத்தில் மனம்  லயிக்கும். அடிக்கடி மனத்தளர்வு ஏற்படும். சோகம், சோர்வு, உணர்ச்சி வசப்பட்ட நிலை என்று மாறுபட்ட அமைதியற்ற நிலை இருக்கும். புத்திர  பாக்கியம் உண்டாவதில் தாமதம் உண்டாகும். புத்திர சோகம் ஏற்படும், புத்திரன், புத்திரிகள் மூலம் மன அமைதி கெடும். உதவ வேண்டிய காலத்தில்,  தாங்க வேண்டிய நேரத்தில் பிள்ளைகளால் உபயோகம் இருக்காது. அற்ப ஆயுள் உள்ள குழந்தைகள் பிறக்கும், ஊனமுற்ற, மூளை வளர்ச்சி அடையாத  குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது.

ஏழாம் இடம் என்று களத்திர ஸ்தானத்தில் ராகு ,கேது, சனி சம்மந்தப்படும் போது திருணத் தடை, சர்ப்ப தோஷம் உண்டாகிறது. பெரியோர்கள்  நிச்சயத்த திருமணம் என்றாலும், காதல் திருமணம் என்றாலும் நிம்மதியற்ற மண வாழ்க்கை இருக்கும். கருத்து வேறுபாடுகள், சண்டைகள்,  குழப்பங்கள் இருக்கும். இரண்டாம் தாரமாக செல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். வயது அதிகம், முதுமைத் தோற்றம் உடையவர்களை மணக்க  வேண்டி வரும். தசாபுக்தி சரியில்லாத ஜாதகங்கள் வழக்கு, விவாகரத்து என்று போராட வேண்டி இருக்கும். அடிக்கடி விபத்துக்களை சந்திக்க  கூடியவர்கள், ஆகையால் வண்டி ஒட்டும் போது அதிக கவனம் தேவை. நல்ல நட்பு, நண்பர்கள் அமைவது கடினம். ஆகையால் நண்பர்களிடம் இருந்து  சற்று விலகி இருப்பது நல்லது. குடும்பத்தை பிரிந்து வெளிநாடு, வெளி மாநிலத்தில். ஜீவனம், தொழில் அமையும். கூட்டுத் தொழில் சரிப்பட்டுவராது.  முறை தவறிய கூடா நட்பு, தொடர்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டாகும்.

எட்டாம் இடம் என்னும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானத்தில் ராகு, கேது, சனி சம்மந்தப்படும் போது. பல பிரச்னைகள் ஏற்படுகின்றது. எட்டாம் இடமும்.  இரண்டாம் இடமும் சம்மந்தப்படுவதால் குடும்பம் அமைவதில் தாமதம், தடை  இருக்கும். இல்லற வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய  சூழ்நிலைகள் ஏற்படும். கடன், வட்டி, பொருட்கள் தொலைந்து போவது என்ற வகையில் ஏதாவது விரையும், நஷ்டம் உண்டாகும். பெண்களுக்கு  மாங்கல்ய தோஷம் காட்டும். இருவருக்கும் மனதளவில், உடல் சுகத்தில் ஒத்துப் போகாது கணவன், மனைவி இருவரில் யாருக்காவது மருத்துவ  சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மொத்தத்தில் இந்த கிரக அமைப்பு உடையவர்கள். சில சோதனைகள், பிரச்சனைகளை சந்தித்துக்  கொண்டே இருப்பார்கள். ஜாதகத்தில் யோக கிரக பார்வை, பிரபல ராஜயோக தசா நடந்தால் பிரச்னைகள் இருந்தாலும் அதன் தீவிரம் தெரியாது பெரிய  அளவில் பாதிப்பு இருக்காது. ஆக ஜாதக ராசி, நவாம்ச பலத்தை வைத்து வாழ்க்கை பயணம் அமையும்.
 
கர்ப்பகால விஷயங்கள்

குழந்தை பாக்கியம் என்பது திருமணத்திற்கு பின்பு ஒவ்வொரு குடும்பத்திலும்.மிக மிக ஆவலோடு எதிர் நோக்கும் சுப நிகழ்வாகும். எத்தனையோ  வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது. வம்ச விருத்தி, வாரிசுயோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த பாக்கியம் முதல் வருடத்திலேயே  சிலருக்கு அமைகிறது. ஒரு சிலருக்கு 2,3 ஆண்டுகள் கழிந்து குழந்தை பேறு கிடைக்கிறது. மேலும் சிலருக்கு 6,7 ஆண்டுகள் அதற்கு மேலும்  தாமதமாக கர்ப்பம் உண்டாகிறது. பலருக்கு ஒரு குழந்தை அது ஆணோ, பெண்ணோ ஒன்றுடன் நின்று விடுகிறது. இப்படி இந்த கர்ப்பம் தரிக்கும்  விஷயம் கணவர், மனைவி இருவரின் உடற் கூறுப்படி அமைகிறது. இந்த உடல் கூறு ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்பின்படி இயக்கப்படுகிறது.  இந்த விஷயத்திற்கு நிறை, குறைகளை இருவரின் ஜாதகத்திலும் பார்ப்பது முக்கியமாகும்.

கர்ப்பம் உண்டாகி அடிக்கடி கருச்சிதைவு, கருகலைதல் போன்றவை ஆண், பெண் இருவரின் ஜாதக அமைப்பு, அந்தக் கால நேரத்தில் நடைபெறும்  சாதகமில்லாத தசாபுக்திகள், கோச்சார கிரக அமைப்புக்களே காரணமாகும். புத்திர தோஷம் பல வகைகளில் உண்டாகும். புத்திர தோஷம் எந்த  அளவில் உள்ளது ராசியில் மட்டும் உள்ளதா, நவாம்சத்திலும் உள்ளதா என்று பார்ப்பது அவசியம் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது 7 பொருத்தம், 9  பொருத்தம் என்று வெறும் நட்சத்திரப் பொருத்தம் மற்றும் அதில் சொல்லப்பட்டுள்ள மகேந்திர பொருத்தம் எல்லாம் இருந்தாலும் அஸ்திவாரம்  அடிப்படை என்று சொல்லக் கூடிய ஜாதக கட்டத்தில் புத்திர யோகம் இருந்தால் தான் ஆணோ, பெண்ணோ பிறக்கும்.புத்திர ஸ்தானமான ஐந்தாம்  இடம், புத்திர ஸ்தானாதிபதி, புத்திர காரகன் குரு போன்ற விஷயங்கள் ஆண்கள் ஜாதகத்தில் பலமாக அமைய வேண்டும். மேலும் சுக்கிரன் பலமாக  இருந்தால் தான் சம்போகத்தில் நிறைவு உண்டாகும்.

சுக்கிரன் நீசம், தீய கிரகங்களில் சேர்க்கை பெற்றால் விந்து குறைபாடு காரணமாக குழந்தை பாக்கியம் அமைவதில் தாமதம் வரும். அதே போல்  ஜாதக கட்டத்தில் திட தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் இடம் நல்ல பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். வீரிய சக்தி குறைபாடு  காரணமாக கருத்தரிப்பதில். பிரச்னைகள், தடைகள் வரும். புத்திர காரகன் குரு, புத்திர ஸ்தானாதிபதி எந்த கிரகமோ. இந்த இருவரும் புதன், சனி  வீடுகளான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் இந்த ராசிகளில் இருக்கக் கூடாது. இந்த அமைப்பு ஒரு வகையில் புத்திர பாக்கிய தடையை ஏற்படுத்தும்.  காரகனும்,தனாதிபதியும், புதன், சனி மனைசென்றிட புத்திர சூன்யம் என்று சித்தர் பாடல் தெரிவிக்கிறது. அதற்கு காரணம். இயற்கையிலேயே நபும்சம்,  அதாவது அலி கிரகங்களாக புதன், சனி இருப்பதுதான் . புதன் பெண் அலி, சனி ஆண் அலி என சாஸ்திரம் கூறுகிறது.
 
14 ஆம் இடம்

பொதுவாக பல கிரகங்களில் பலம், பங்களிப்பு மூலம் தான் எல்லா யோகங்களும் உண்டாகிறது. அந்த வகையில் புத்திர பாக்கியமும் உள்ளது.  பெண்கள் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் லக்னத்திற்கு நான்காம் இடம் மிக முக்கிய அம்சமாகும். இந்த இடம் வயிறு சம்மந்தமாக  தெரிவிக்கும் இடம். வயிறு என்பது பல விஷயங்களை உள்ளடக்கிறது அதில் முக்கியமானது கர்ப்பப்பை இந்த ஸ்தானம் பாதிக்கப்படும் போது தான்  மாதவிடாய்க் கோளாறுகள், கரு முட்டை வளர்ச்சி பாதிப்பு, சுக்கில சுரோணிதம் சரியாக சேராமல் இருப்பது. அடிக்கடி கருச்சிதைவு (அபார்ஷன்)  உண்டாகிறது. நான்காம் இடத்தில் நீச கிரகம் இருப்பது. ராகு, கேது, 6,8,12 ஆம் அதிபதிகள் இருப்பது பார்ப்பது.சனி பார்ப்பது போன்ற அமைப்புக்களால்  கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகிறது.
 
செவ்வாயின் பங்கு

வலிமை, செயல் திறன், ஆற்றல், வீரியம் மிக்க கிரகம் அங்காரகன் எனப்படும் செவ்வாய் ஆகும். ரத்த ஓட்டம், வெப்பம், வீரியம், காம இச்சை,  ஊக்கம், மாதவிடாய் சுழற்சி, உறவில் உணர்ச்சியை தூண்டக் கூடியவர். ஆகையால் தான் தோஷம் என்ற பெயரில் செவ்வாய் தோஷம் உள்ள  ஜாதகத்தை சமதோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்கிறோம். சகோதரகாரகன் என்ற அமைப்பு உடையவர். இவர் பலமாக இருந்தால் தான் சகோதர  உறவுகள் அமையும். செவ்வாய் ஆண் குழந்தை வாரிசை தரும் வல்லமை உடையவர். கர்மபுத்திர அமைப்பு என்று சொல்வார்கள். செவ்வாய் நல்ல  யோக அமைப்பில் லக்னம், நான்கு, ஐந்து, பத்தாம் இடங்களில் இருந்தாலும் பார்வை, பரிவர்த்தனை தொடர்புகள் இருந்தாலும். நிச்சயம் ஆண் வாரிசை  தருவார்.
 
கர்ப்ப காலமும். கிரகங்களும்

கர்ப்பம் அடைவதற்கு எத்தனையோ விஷயங்கள் இயற்கையிலேயே நமக்கு ஒத்துழைக்க வேண்டும். கர்ப்பம் உண்டானவுடன் எல்லா கிரகங்களும்  அதனதன் பங்களிப்பை. அந்த சிசுவின் கர்மாப்படி ஏற்படுத்துகின்றன. இந்த பிண்ட ரகசியத்தை சப்த ரிஷிகள், சித்தர்கள், திருமூலர் திருமந்திரம்  போன்ற நாடி சுவடிகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.ஆண், பெண் சேர்க்கையில் ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் சரியான  நேரத்தில் கலக்கும் போது சுக்கில, சுரோணிதம் இணையும் காலம் கர்ப்பம் உண்டாகிறது. இந்த நிகழ்வு முழுமைக்கும். சுக்கிரன் தான் காரணகர்த்தா.  அதே நேரத்தில் லக்கினாதிபதி எந்த கிரகமோ அந்த கிரகத்தின் ஆளுமை ஏற்பட்டுவிடும். ஆக கர்ப்பம் ஏற்பட்டவுடன் அந்த குழந்தை எந்த  லக்கினத்தில் பிறக்க வேண்டும் என்பது கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இரண்டாம் மாதம் கருவலுப் பெறுவதற்கு செவ்வாய் காரணமாகிறார்.மூன்றாம் மாதம் கருநன்குவளர குரு காரணமாகிறார்.நான்காம் மாதம் எலும்பு,  மஜ்ஜை, நரம்பு போன்றவற்றிற்கு சூரியன் காரணம்.ஐந்தாம் மாதம் தோல், நிறம், ராசி அமைப்புக்கு சந்திரன் காரணமாகிறார்.ஆறாம் மாதம் பிண்ட  நிலை மாறி உருவம் வளர்ச்சியடைந்து முடிவளரும் பருவத்தில் சனி ஆதிக்கம் செலுத்துகிறார்.ஏழாம் மாதம் குழந்தை உதைப்பது, அசைவது, உணர்வு,  நினைவு போன்றவற்றிற்கு புதன் அதிபதியாகிறார்.எட்டு, ஒன்பது, பத்தாம் மாதம், இந்த காலங்களில் எந்த நேரத்தில் பிரசவம், உண்டாகக் கூடிய சூழல்  ஏற்படும். இந்த நிகழ்வுக்கு லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவர் காரணமாக இருக்கிறார்கள். இப்படி எல்லா கிரகங்களின் பங்களிப்பில் தான்  குழந்தை ஜெனனமாகிறது.ராகு, கேது இருவரும் நிழல் கிரகங்களாக எந்த கிரகத்தின் சாரம், அமைப்பை பெறுகிறார்களோ அதற்கேற்ப பலன்கள்  அமையும்.லக்னம், ராசி, நான்காம் இடம், ஏழாம் இடம் ஆகியவற்றுடன் சம்பந்தப்படும் போது கொடி சுற்றி பிறப்பது, மாலை போட்டு பிறப்பது, பிரசவ  சிக்கல்கள், சிசேரியன் போன்றவை ஏற்படுகிறது. ஆகையால் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று  ஜோதிடரிடம் கேட்காமல் ஜாதக பலம், கிரகபலம், ஸ்தானபலம், தசாபலம் இன்றும் ஸ்தூல சூட்சும பொருத்தங்கள் எப்படி உள்ளது என்பதை தெரிந்து  அந்த ஜாதகங்களை சேர்ப்பது உத்தமம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்