SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்!

2019-05-07@ 17:50:52

* அருணகிரி உலா - 75

ஆமாத்தூர் ஷண்முகனுக்குத் திருப்புகழைச் சமர்ப்பித்து வலம் வரும்போது, வேப்ப மரத்தடியில் ஒரு குட்டி முருகனின் திருவுருவைக் காண்கிறோம். விநாயகரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. தலவிருட்சமாகிய வன்னியை வணங்குகிறோம்.காசி விஸ்வநாதர், வாயு லிங்கேஸ்வரர், அம்மையப்பர், சண்டிகேஸ்வரர், பைரவர், வலம்புரி விநாயகர் ஆகியோரை வணங்கி வெளியே வருகிறோம். ஈசனுடைய கோயிலுக்கு எதிரே முக்தாம்பிகைக்கு தனிக் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிராகாரத்தில் சந்நதி ஏதுமில்லை. வலப்பால் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நதி உள்ளது. [அம்பிகையின் சாந்நித்ய ரூபம்; இப்போது அங்கு சிவலிங்கமே உள்ளது] இந்தச் சந்நதியில் பொய் சத்தியம் செய்தால் அவர்களைப் பாம்பு தீண்டிவிடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உ. வே. சா அவர்கள் இதை ‘சத்தியாநிர்த விவேசனி’ என்ற பெயருடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈசன் கோயிலில், ராம பிரான், சீதை, ஆஞ்சநேயருடன் காட்சி அளிக்கும் தனிச் சந்நதி உள்ளது. விழுப்புரத்தை அடுத்தமைந்த ஒப்பற்ற முருகன் திருத்தலமாகிய ‘மயிலம்’ நோக்கிச் செல்கிறோம். திண்டிவனம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு எனும் ஊருக்கு அருகேயே மயிலம் தலம் அமைந்துள்ளது. வெகு தொலைவிலிருந்தே குன்றின் மேலுள்ள கோயிலின் ராஜ கோபுரத்தைத் தரிசிக்கலாம்.

போருக்குப் பிறகு தன்னால் இரு கூறாக்கப்பட்ட சூரபத்மனை வராக நதிக்கரையில் மயில் வடிவம் கொண்டு தவம் புரியுமாறு ஆணையிட்டான் முருகப் பெருமான். அவ்வாறு மயில் உருக் கொண்டு மலையாக நின்று தவம் புரிந்து சூரபத்மன் முருகனருள் பெற்ற தவமே மயிலம் எனப்படுகிறது. நூற்றி முப்பது அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது கோயில். கீழிருந்து படிகள் ஏறிச் சென்றும், வாகனத்தில் பயணித்தும் மலை உச்சியை அடையலாம். விநாயகர், விஸ்வநாதர், முருகன் ஆகியோரின் தனிச் சந்நதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

மயிலத்தில் முருகப் பெருமானே மிகச் சிறப்பாக வழிபடப் பெறுகிறார். ஆறுமுகமும் நான்கு திருக்கரங்களோடு தேவியருடன் கல்யாணக் கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளான். நான்கு கால வழிபாடு உண்டு; உற்சவரும் மூலவரைப்போல் மிக அழகுடன் விளங்குகின்றார். லட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். நவகிரக சந்நதியும் உள்ளது. இத்தலத்திற்கான ஒரு திருப்புகழ்ப் பாடல் கிடைத்துள்ளன.

 ‘‘உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.’’
 
பொருள்: நெருப்பிலிட்ட மெழுகுபோல உருகி, காம அலை வீசும் சமுத்திரத்தில் மூழ்கி, உடலானது, கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை முதலான பஞ்சமா பாதகங்களுக்கு இடமாகி, நீங்காத நோயால் அழிந்து போவேனோ? கையில் பிடித்துக் கொண்டிருக்கும் தண்டாயுதம், பாசக் கயிறு இவற்றோடு பெரும் சத்தம் செய்து கொண்டு என்னை நெருங்கும் எம தூதர்கள் என் உயிரைப் பறித்துப் போகும் தினத்தில், உனது சிறப்பு மிக்க திருவடிகளைத் தரவேண்டும்.

அலை வீசும் கடல் கோ... கோ... என்ற ஒலியுடன் வாய்விட்டு ஓலமிட பெரிய மாமரமாய் நின்ற சூரபத்மன் வைத்திருந்த அழகிய வில் துண்டாகித் தூளாக, விளக்கம் தரும் ஜோதியை உடைய நேர்மை நிறைந்த பெரிய பெருமை வாய்ந்த, நெருப்பெனும் படியான திருக்கை வேலைச் செலுத்திய வீராதி வீரனே அருமையான அழகனே! ஒப்பற்ற ஒருவனே! மாறுபட்ட வேட உருவம் பூண்டு வேடர்களின் காட்டிற்குள் நுழைந்து வள்ளி மீது காதல் கொண்டு உலவி அவள் பாதத்தில் விழுந்து வணங்கிய குமரேசனே! அறிவு நிறைந்த ஞான வேலவனே! உனக்கு சிஷ்யனாக மகிழ்ச்சியுடன் நின்று சிவனார் வணங்கும் திருவடிகளை உடையவனே! மயிலம் எனும் சிறந்த, குளிர்ச்சியான மலையில் வாழ்பவனே! தேவர்களின் தலைவனே! அழகிய ராஜகோபுர வாயில் வழியே நுழைந்து பக்தர்கள் உள்ளே செல்வதில்லை. இதற்கான ஆதாரப் பூர்வமான காரணம் என்னவென்று தெரியவில்லை. தெற்குப் பக்கமாக அமைந்திருக்கும் ஒரு வாயில் வழியேதான் உள்ளே செல்கின்றனர்.

மயிலத்திலிருந்து புறப்படும் நாம், ‘அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ என்று அருணகிரியாரால் போற்றப்படும் முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் ‘திருவக்கரை’ நோக்கிச் செல்கிறோம். மயிலத்திலிருந்து சுமார் பத்து கி.மீ தொலைவிலுள்ளது இறைவன் சந்திர மௌலீஸ்வரர்; இறைவி வடிவாம்பிகை. திருவக்கரை காளி கோயில் என்றே பலராலும் அறியப்படுகிறது. உ.வே.சா அவர்கள் கோயிலின் வரலாற்றைப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 ‘‘வக்கிராசுரன் எனும் அசுரனோடு திருமால் போர் புரிகையில் சக்கரத்தை அவன் தன் பல்லில் இடுக்கிக் கொண்டான்; திருமால் கோணங்கிக் கூத்தாடி நைச்சியமாக அதனைத் திரும்பப் பெற்றபின் அசுரனை அழித்தார். பின்னர் இறைவனைப் பூஜித்துப் பேறு பெற்றார்.’’ வக்கிராசுரனைத் திருமால் சம்கரித்தபோது அவனது ரத்தம் பூமியில் சிந்தாதபடி தன் நாவை நீட்டி உறிஞ்சிய காளியின் பெரிய உருவத்தைக் கோயிலினுள் நுழைந்ததுமே பார்க்கலாம். அச்சம் தரும் பெரிய உருவம்; இடது கையில் வில் உள்ளது. தலைமாலை அணிந்துள்ளாள். வலது காதில் பிரேத குண்டலம் உள்ளது.

கோயிலைப் பற்றிய மற்றொரு கதையும் தற்போது நிலவுகிறது. குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனை அழிக்க காளி சந்திரசேகரரைப் பூஜித்து அசுரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றதாகவும், அவனது தங்கை துன்முகி அச்சமயம் கருவுற்றிருந்ததால் அந்தக் குழந்தையை எடுத்துக் காதில் அணிந்து கொண்டு, அவளை அழித்ததாகவும் கூறுகின்றனர். உள்பிராகாரத்தில் குண்டலினி முனிவர் சமாதி மீது லிங்கம் உள்ளது.

கோயிலிலுள்ள எல்லா மூர்த்திகளின் உருவங்களிலும் ஏதேனும் ஒரு வக்ரம் - மாறுபாடு உள்ளது. வக்ரசனி உருவத்தில் காகம் தெற்கு நோக்கி உள்ளது. அர்த்த மண்டபத்தில் கால்மாறி ஆடும் நடராஜரது தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வந்துள்ளது! இதுவும் ஒரு மாறுபட்ட சிற்ப அமைப்பு. கருவறையில் சதுர அடிப்பாகத்தின் மீது வட்டமான ஆவுடையார் உள்ளது. சந்திரன், பிரம்மன், திருமால் ஆகியோர் வணங்கியதால் சிவபெருமான் மும்முகம் கொண்டதாக விளங்குகிறார்.

பெரிய கல்நந்தி உருவம் உள்ளது. விநாயகர், ஷோடஸ லிங்கம், துவார கணபதி, பால முருகன் ஆகியோரை வணங்குகிறோம். அறுமுகனின் தனிச் சந்நதி உள்ளது. பன்னிரு கரங்கள் கொண்டு தேவியருடன் விளங்குகிறார். இங்கு இரண்டு பாக்களால் இறைவனைப் போற்றியுள்ளார், அருணகிரிநாதர்.
 
‘‘கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே’’
 
பொருள்: கலகலென உபயோகமற்ற ஒலியுடன் சில சாத்திரங்களைக் கற்று ஓயாமல் பிதற்றுவது, இனி ஒழிய வேண்டும். உன்னை சிறிதளவாவது துதிக்காமல், மீண்டும் கருக்குழியில் விழுந்து வருந்தும் வழியில் வேகமாக அடியேனைச் செலுத்தும் தீவினையாகிய பள்ளத்தில் புகுந்து கொடிய நரகத்தின் நடுவேபோய் வீழாமலும், உலகில் பல பிறவிகள் எடுத்து உழல்வது விட்டு, இனியேனும் உன் அடிமையாகிய நான் உனது அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர உனது மலர்ப் பாதங்களை அருள்வாயே! பாடலின் பிற்பகுதியில்,
 
‘‘குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.’’

என்று அழகுறப் பாடுகிறார். திரளான ஏழு மலைகளும் தொளைபட்டுப் பொடிபட, அலை வீசும் கடல் வற்ற, அசுரனாம் சூரனை போரில் வென்ற வேலாயுத வீரனே! குணக் குன்றே! ஞான சொரூபனே! என்றும் இளையோனே! தினைப்புனத்தில் வள்ளியை புணரும் அழகிய மார்பனே! அலை வீசும் நீரில் உலவுகின்ற சங்குகள் ஒளியை வீசுகின்ற அழகிய திருவக்கரைத் தலத்தில் விளங்குபவனே! அடியார்கள் விரும்புவனவற்றில் தகுதியுள்ள அனைத்தையும் வரவழைத்து அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் பெருமாளே!

நமது தகுதியுள்ள வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் படி திருவக்கரை முருகனை வேண்டிய வண்ணம் அங்கிருந்து புறப்படும் நாம் அடுத்ததாக வடுகூர் [இன்று திருவாண்டார் கோயில் எனப்படுகிறது] திருத்தலத்தைச் சென்றடைகிறோம். இத்தலம் விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் வளவனூர் தாண்டியதும் வருகிறது .பாண்டிச்சேரியிலிருந்தும் விழுப்புரம் சாலையில் 22 கி.மீ வந்ததும் இத்தலத்தை அடையலாம். திருப்புகழிலும் தேவாரத்திலும் வடுகூர் என்றே கூறப்பட்டுள்ளது. வடுகர் (பைரவர்) பூஜித்த தலமாதலால் இந்தப் பெயர் உண்டாயிற்று.

சாலை ஓரத்திலமைந்துள்ள கோயிலின் வெளியே நந்தி மண்டபம் உள்ளது. முகப்பிலுள்ள விநாயகர், நாகசுப்ரமண்யரை வணங்குகிறோம். பலிபீடத்தை அடுத்து நர்த்தன விநாயகர் உள்ளார். கொடி மரம் இல்லை. நால்வர், சூரிய - சந்திரரை வணங்கி வன்னி மரத்தைத் தரிசிக்கிறோம். வடுவகிர்க் கண்ணி, திரிபுரசுந்தரி எனப்படும் அம்பாளின் சந்நதி வலப்புறம் உள்ளது. நேரே பார்க்கும்பொழுது மூலவர் வடுகநாதர் காட்சி அளிக்கிறார். துவார பாலசுர்களை வணங்கி, மூவரையும் தொழுகிறோம். கருவறை கோட்டத்தில் பைரவர், விநாயகர், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தனிச் சந்நதியில் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு முருகப் பெருமான் தேவியருடன் அழகுற வீற்றிருக்கிறார்.  இங்கு திருப்புகழைச்சமர்ப்பிக்கிறோம்.

 
‘‘அரியய னறியா தவர் எரிபுர மூண்
அது புக நகை ஏவிய நாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி,
சீறழலையு மழு நேர் பிடி நாதர்
வரைமகள் ஒரு கூறுடையவர் மதன்
ஆகமும் விழு விழு ஏவியநாதர்
மனமகிழ் குமரா என உனதிருதாள்
மலரடி தொழுமாறருள் வாயே
அருவரை இரு கூறிய ஒரு மயில்மேல்
அவனியை வலமாய் வருவோனே
அமரர்கள் இகல் நீட்சுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையெடொரு மா தினை தரு வனமே
மருவியொர் குற மாதணை வேடா
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர்
வரு தவ முநிவோர் பெருமாளே’’
 
பொருள்: - திருமால், பிரம்மன் ஆகியோரால் காண முடியாதவர், முப்புரங்களிலும் நெருப்புப் பற்றும்படிச் சிரித்தவர், தீப் போல் பிரகாசிக்கும் ஜடையில் கங்கை எனும் நங்கையை வைத்திருப்பவர், ஆன்மாக்களாக பசுக்களுக்கு தலைவர் [ பசுபதி] எரியும் அக்னியையும் மழுவையும் பிடித்திருப்பவர். மலைமகளைத் தன் இடப்பாகத்தில் வைத்திருப்பவர், மன்மதன் உடல், சாம்பல் ஆகும்படி நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தவர், என்னும் மகிழ்வுடன் விளங்கும் குமரனே ( அல்லது என் மனமகிழ்வுக்குக் காரணமான பாலனே) என்று உன் இருமலர்ப் பாதங்களையும் நான் துதிக்க அருள்வாயாக!

பெரிய கிரவுஞ்ச கிரியை இரு பிளவாகச் செய்து நிகரற்ற மயிலில் ஏறி உலகை வலம் வந்தவனே! தேவர்களுடன் பகைமை கொண்டிருந்த நெடிய அசுரர்களின் தலைகள் மீது வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தியவனே! செழிப்பாக வளர்ந்திருந்த தினைப்புனத்தில் நுழைந்து ஒப்பற்ற குறமகளாம் வள்ளியை அணைந்த வேடுவனே! மலைகளில் மகிழ்ச்சியோடு உறைபவனே! வடுகூர் வரும் தவ சிரேஷடர்களின் பெருமாளே! உன் இரு கமலப் பதங்களைத் துதிக்க அருள்வாயே!

முருகனை வணங்கி, வடுக பைரவர், சனி பகவான் ஆகியோரையும் நவகிரகங்களையும் தரிசிக்கிறோம். கார்த்திகை அஷ்டமியில் வடுக பைரவருக்கு மிகப் பெரிய அளவில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயில் வாயிலில் முற்றுப் பெறாமலிருக்கும் ஒரு தனிச் சந்நதி உள்ளது. பாண்டிச்சேரி தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவினரால் கோயில் மிக சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவதைக் காணலாம். கோயிலுக்கு வெளியே உள்ள பச்சைப்பசேல் என்ற புல் வெளி கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. மிக அருகிலேயே வடுக பால முருகனுக்கென ஒரு தனிக் கோயிலும் அமைந்துள்ளது.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்