SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு நிலை உரைத்தல்

2019-05-07@ 17:49:43

* குறளின்  குரல்

அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார். ஆழமாக ஒரு நம்பிக்கையை மனத்தில் விதைத்துக் கொண்டு, என்ன ஆக வேண்டுமோ அப்படி ஆகிவிட்டதாகக் கனவு கண்டால், எதிர்காலம் அந்தக் கனவை உண்மையாக்கித் தரும் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!’ என மகாகவி பாரதியார் கனவு கண்டார். கனவு காண்பதென்பது உலகெங்கும் உள்ளது. இலக்கியப் பாத்திரங்கள் கண்ட கனவுகள் உலக இலக்கியங்கள் பலவற்றில் பதிவாகியுள்ளன.

திருக்குறள் தலைவியும் கனவு காண்கிறாள். அந்தக் கனவைப் பற்றி அவள் குறட்பாக்களில் விவரிக்கிறாள். 'கனவு நிலை உரைத்தல்’ என்ற ஒரு தனி அதிகாரமே தலைவி கண்ட கனவைப் பற்றிப் பேசுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரம் 122.)

‘காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.’ (குறள் எண் - 1211)

நான் பிரிவால் வருந்தி உறங்கினேன். அப்போது என் காதலர் தூது அனுப்பியதாகக் கனவு கண்டேன். என் மனத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவித்த அந்தக் கனவுக்கு நான் என்ன உபகாரம் செய்ய இயலும்?

‘கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.’ (குறள் எண் - 1212)

கண்கள் நான் வேண்டுவதுபோல் உறங்கினால், அப்போது கனவில் வரும் காதலர்க்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும் என் நிலைமையைச் சொல்வேன்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.’ (குறள் எண் - 1213)

நனவில் வந்து அன்பு செய்யாத என் காதலரை நான் கனவிலேனும் காண்பதால்தான் என் உயிர் இன்னும் என் உடலை விட்டு நீங்காமல் உள்ளது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. (குறள் எண் - 1214)

நேரில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டுவந்து தருகிறது கனவு. அந்தக் கனவினாலேயே எனக்கு இன்பம் கிடைக்கிறது.

‘நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.’ (குறள் எண் - 1215)

முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்த நேரத்தில்தான் இனித்தது. அதுபோலவே இப்போது கனவில் கண்ட இன்பமும் கனவு காணும்போது மட்டுமே இனிக்கிறது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.’ (குறள் எண் - 1216)

 நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாமல் இருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

`நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.’ (குறள் எண் 1217)

நனவில் வந்து என்னை அன்பு செய்யாத கொடுமை உடைய என் காதலர், கனவில் வந்து என்னை வருந்தச் செய்வது எக்காரணம் பற்றியோ?

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.’ (குறள் எண் 1218)

தூங்கும்போது என் கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகி விடுகிறார் என் காதலர்.

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.’ (குறள் எண் 1219)

கனவில் காதலர் வரக் காணாத மகளிர்தான், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை அவர் வராத காரணம் பற்றி நொந்து கொள்வர்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.’ (குறள் எண் 1220)

நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று என் காதலரைப் பழித்துப் பேசுகின்றனரே! இந்த ஊரார் என் கனவில் அவர் வருவதை அறிய மாட்டார்கள்.

இப்படிக் காதல் வயப்பட்ட தலைவி கண்ட கனவைப் பற்றிப் பத்துக் குறள்களில் பேசுகிறது வள்ளுவம்...  நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறையக் கனவுகள் வருகின்றன. ராமாயணம் பரதன் கண்ட கனவைப் பற்றியும் திரிஜடை கண்ட கனவைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. அயோத்யா காண்டத்தில், கேகய நாட்டில் இருக்கும் பரதன் துர்ச்சொப்பனம் கண்டு தன் தந்தை தசரதருக்கு ஏதோ ஆபத்து என அறிந்து பதறுகிறான். தன் தம்பி சத்துருக்கனனிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்லிப் புலம்புகிறான். அந்தக் கனவு முன்கூட்டிய சூசகம் என்பதை அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அவனுக்குப் புலப்படுத்துகின்றன.

அவன் கேகய நாட்டிலிருந்து மீண்டும் அயோத்திக்கு அழைத்துவரப் பட்டபோது தசரதரின் உயிரற்ற உடலைத்தான் காண்கிறான்.... சுந்தர காண்டத்தில் அளவற்ற துயரத்திலிருக்கும் சீதாதேவிக்கு ஆறுதலாக விபீஷணனின் புதல்வி திரிஜடை பேசுகிறாள். அவள், தான் கண்ட கனவில் ராவணன் எண்ணெயில் முழுகுவதையும், கழுதையும் பேயும் இழுக்கும் தேரில் ராவணன் ரத்த ஆடை அணிந்தவனாய் தெற்குத் திசை நோக்கிப் போனதையும் கண்டதாகச் சொல்கிறாள். எனவே ராவணன் அழிவு நிச்சயம் என சீதாதேவியைத் தேற்றுகிறாள்.

`எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண்நெடும் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல்வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம், நவைஇல் கற்பினாய்!’.

இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில், ஒன்பதாம் பகுதி `கனாத்திறம் உரைத்த காதை’ என்றே தலைப்பிடப் பட்டுள்ளது. கண்ணகி கண்ட கனவைப் பற்றிப் பேசும் காதை அது. தன் தோழி தேவந்தியிடம் கண்ணகி தான் கண்டதொரு தீக்கனா பற்றிக் கூறுகிறாள். தானும் கோவலனும் அயலூர் செல்வதாகவும் அங்கு இடுதேள் இட்டதுபோல்’ ஒரு பழிச்சொல் நேர்வதாகவும், பின்னர் ஊருக்கே தீங்கு நேர்வதாகவும் தான் கண்ட கனவைப் பற்றி விவரிக்கிறாள் கண்ணகி.

`கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்!
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்தன்மேல்!
கோவலற்கு உற்றதுஓர் தீங்கு என்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்.’

இலக்கியங்களில் பின்னால் நிகழப் போகும் சம்பவங்கள் பலவற்றைப் பற்றி முன்கூட்டியே குறிப்பாலுணர்த்தும் உத்தியாகக் கனவுகள் கையாளப்பட்டுள்ளன. தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவரும், நந்தனும் ஒருசேரக் கண்ட கனவைப் பற்றியும், சிவபெருமான் அந்தக் கனவில் நந்தனின் பெருமையை விளக்கி, நந்தனை நெருப்பில் மூழ்கித் தன்னிடம் வரச் சொன்னது பற்றியுமெல்லாம் சேக்கிழாரின் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.

இன்னல் தரும் இழிபிறவி இதுதடை என்றே துயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார்
அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாம் தீர்ப்பதற்கு
முன்அணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்!
இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரிநூல் மார்பர் உடன் முன்அணைவாய் என்னமொழிந்து
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்!’....

பெரியாழ்வார் தன் மகளான ஆண்டாள் இறைவனுக்கான மலர் மாலையைத் தான் சூடிக் கொடுத்தது பற்றி மனம் வருந்துகிறார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பக்திவயப்பட்ட அந்தச் செயல் தனக்கு உகப்பானதே எனக் கண்ணன் பெரியாழ்வார் கனவில் வந்து சொல்கிறான். ஆண்டாள் நாச்சியார் எழுதிய நாச்சியார் திருமொழி என்ற பாசுரம், பட்டர்பிரான் கோதையான ஆண்டாள் கண்ட திருமணக் கனவை அழகிய தமிழில் விவரிக்கிறது.

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்...
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்’...

புனிதமே வடிவான தேவி ஆண்டாளின் அழகுத் தமிழ், படிக்கப் படிக்க இதயத்தைத் தித்திக்கச் செய்கிறது. ஆண்டாள் கண்ட கனவு மெய்யாயிற்று. அவள் அரங்கனை மணந்துகொண்டாள். கனவுகள் மெய்யாகும். மெய்யாக வேண்டும். அதனால்தான் மகாகவி பாரதியார்,

மனதில் உறுதி வேண்டும்!
வாக்கினிலே இனிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும்!
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
கைவசமாவது விரைவில் வேண்டும்!
தனமும் இன்பமும் வேண்டும்!
தரணியிலே பெருமை வேண்டும்!’

என்ற பாடலில் கனவு மெய்யாக வேண்டும் என வேண்டுகிறார்.  தமிழில் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன், பொன்னவன் என்பவர் இயற்றிய `கனா நூல்’ ஒன்று இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கனவுகளின் பலன் பற்றிப் பேசுகிறது அந்நூல். தன் சாவைத் தானே காண்பது போன்ற கனவுகள் கண்டால் செல்வம் வந்து சேரும் என்பதுபோல் பலப்பல கனவுப் பலன்கள் அதில் கூறப்பட்டுள்ளன...

கனவு பற்றிய வரலாறு மிகவும் நெடியது. புத்தரின் அன்னை மாயாதேவி ஒரு கனவு காண்கிறாள். மன்னர் சுத்தோதனர் மூன்று நிமித்திகர்களை அழைத்து அந்தக் கனவின் பலன் என்ன என்று வினவுகிறார். அவர்கள் உலகத்தை வழிநடத்தப் போகும் மகான் ஒருவர் உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார் என அந்தக் கனவுக்குப் பலன் கூறுகிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகார்ஜுன மலைச் சிற்பம் ஒன்றில் இந்தக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தானுக்குத் தன் கனவுகளை எழுதி வைக்கும் பழக்கம் இருந்ததை வரலாறு சொல்கிறது. அவன் தன் படுக்கையறையில் எழுதி வைத்திருந்த முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கனவுகள் பின்னர் கண்டுபிடித்துப் படிக்கப் பட்டிருக்கின்றன.  பிரபல உளவியல் நிபுணரான ஃபிராய்ட் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் எழுதியுள்ளார். அமானுஷ்ய சக்திகள் தான் கனவை உருவாக்குகின்றன என்பது போன்ற மரபார்ந்த கருத்துக்களை அவர் ஏற்கவில்லை. கனவுகளுக்குப் பலாபலன்கள் உண்டு என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், ஒருவர் தாம் காணும் கனவை நன்கு ஆராய்ந்தால் அதன்மூலம் தன் ஆழ்மன எண்ணங்களை அறிந்து கொள்ளலாம் என்கிறார்.

தமிழ்த் திரைப்படங்களில் கனவுக் காட்சிகள் நிறைய உண்டு. காதலனும் காதலியும் ஓடியாடி விளையாடும் கனவுக் காட்சிகள் இல்லாத படங்கள் மிகக் குறைவே. `மின்சாரக் கனவு, பார்த்திபன் கனவு, கனவுக் கன்னி’ என்றெல்லாம் கனவைத் தலைப்பிலேயே தாங்கிய திரைப்படங்களும் பல வந்திருக்கின்றன. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’... என்ற திரைப்பாடல் கனவைப் பற்றிப் பேசுகிறது. பாக்கியலட்சுமி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து பி.சுசீலா பாடிய பாடல்.

கூட்டுப் புழுவின் கனவால் உருவானதுதான் வண்ணத்துப் பூச்சி. ஊர்ந்து செல்லும் கூட்டுப் புழு, நடக்க வேண்டும் என்று கனவு கண்டாலே அது பகட்டான கனவுதான். ஆனால் நடக்க வேண்டி அல்ல, பறக்க வேண்டி அது கனவு காண்கிறது. தன்னால் பறக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறது. தன் கனவை யாரும் கலைத்து விடாமல் இருக்க தன்னைச் சுற்றி ஒரு கூட்டையும் கட்டிக் கொள்கிறது.

அந்த எளிய கூட்டுப் புழுவின் தன்னம்பிக்கையோடு கூடிய உயர்ந்த கனவைக் கனிவோடு காலம் நிறைவேற்றித் தருகிறது. என்ன ஆச்சரியம்! மண்ணில் ஊர்ந்து செல்லும் கூட்டுப்புழு இறக்கைகள் பெற்று கூட்டைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறந்துசெல்கிறது! அதுகண்ட கனவின் தீவிரம் அப்படி! திருக்குறள் சொல்லும் அறக் கருத்துக்கள் எல்லாம் நடைமுறையில் செயல்படுத்தப் படவேண்டும் என்று நாமும் தீவிரமாகக் கனவு காணலாமே? நம் கனவையும் காலம் நிறைவேற்றித் தரும் என்று நம்பலாமே? குறைந்த பட்சம் நம் அளவிலாவது திருக்குறள் கருத்துக்களை நாம் பின்பற்ற
வேண்டும் எனக் கனவு காண்போமே!
 
(குறள் உரைக்கும்)


- திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்