SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னோர்கள் ஆசி இருந்தால் முன்னேற்றம் நிச்சயம்..!

2019-05-07@ 17:04:22

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?25 வயதாகும் எனக்கு சில ஆண்டுகளாகவே மனதும் உடலும் சரியில்லை. ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள் என்னை அலைய வைத்து பைத்தியமாக்கி விட்டாள். சிறு வயதில் இருந்தே கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அதுவும் அழிந்து வருகிறது. ஒரு குழப்பம் சார்ந்த நிலையிலேயே இருக்கிறேன். சிந்தனையை நல்வழிப்படுத்த ஒரு பரிகாரம் சொல்லுங்கள்.
- இளவரசன், சென்னை.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்ப்பதும், எவர் ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டும் எளிதில் நம்பி விடுவதும் உங்களது பலவீனமாக உள்ளது. இவ்வுலக வாழ்வியலைப் பற்றி உங்களுடைய புரிதல் வேறு விதமாக உள்ளது. நீங்கள் காதலித்த பெண்ணின் மீது எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. வெளியில் அவர் பேசும் முறையைக் கொண்டு நீங்களாக தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அதே போல் உங்கள் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சுக்கிரன் என்பதால் கலைத்துறையில் ஆர்வம் என்பது உண்டாகி இருக்கிறது. என்றாலும் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதும், அவர் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதும் உங்களை கலைத்துறையில் பெரிதாக சாதிக்க விடாது. கலைத்துறை கனவினை ஓரம் கட்டி வைத்துவிட்டு வேறு தொழிலில் இறங்குங்கள்.  அது சுயதொழிலாக இருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். சிந்தனை ஒருமுகப்படுவதோடு வாழ்க்கையிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.“ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம்அநேக க்ரியா யோக சக்தி ஸ்வரூபம் ஸதாவிஸ்வரூபம் கணேசம் நமாமி.”

?எனது குடும்பத்தில் எனது தாயார், அண்ணன், கணவர், தந்தையார் ஆகியோர் கடந்த 3, 4 வருட இடைவெளிக்குள் இயற்கை எய்திவிட்டனர். எனது தந்தைக்கு 3 தம்பிகள். இது ஏதோ முன்னோர் இட்ட சாபம். அதனால்தான் மூத்தவர் குடும்பம் பாதிக்கிறது என்கின்றனர். தயவு செய்து பரிகாரம் கூறுங்கள்.
- திலகவதி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் பிறந்த நேரம் சரியாக தெரியவில்லை என்று எழுதியுள்ளீர்கள். பிறந்த நேரம் தெரியாவிட்டால் துல்லியமாக ஜாதகத்தை கணிக்க இயலாது. மேலும் 55வது வயதில் இருக்கும் நீங்கள் அதிகக் குழப்பத்தில் உள்ளீர்கள் என்பது உங்கள் கடிதத்தின் வாயிலாகத் தெரிய வருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நால்வரில் உங்கள் கணவர் வேறு பரம்பரையைச் சார்ந்தவர். மற்ற மூவரும் அதாவது உங்கள் தந்தை, தாயார் மற்றும் அண்ணன் எல்லோரும் வயதில் முதியவர்களாக இருப்பவர்களே. இவர்கள் இறந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. முன்னோர்கள் இட்ட சாபத்தினால் மூத்தவரின் குடும்பம் மட்டும்தான் பாதிக்கும் என்று எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. அதுபோன்ற சாபம் இருந்தால் பரம்பரையில் வரும் எல்லோரையும்தான் பாதிக்கும். வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அவரவருக்கான விதி என்பது முடிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபடுங்கள். மனத்தெளிவு காண்பீர்கள்.
“ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாயதே நம:”

?35 வயதாகும் நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அரை கிரவுண்ட் நிலத்தில் சொந்தமாக வீடு கட்டி புதுமனை புகுவிழாவிற்கு நல்ல நாள் குறிக்கும்படி ஜோதிடரிடம் கேட்டேன். அதற்கு அவர் உனக்கு நேரம் சரியில்லை. இன்னும் ஒரு வருடம் கழித்துத்தான் நல்ல நேரம் வருகிறது, இப்பொழுது குடிபோனால் பல பிரச்னைகள் வரும் என்று கூறுகிறார். இதற்கு ஒரு நல்ல முடிவு கூறுங்கள்.
- தரணிகுமார், திருவள்ளூர்.

 நேரம் சரியில்லை என்றால் உங்களால் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டியே இருக்க முடியாது. இந்த காலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் அரை கிரவுண்ட் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உங்களுடைய உழைப்பு, விடாமுயற்சியின் பலனாக வீட்டைக் கட்டியிருக்கிறீர்கள். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 05.01.2020 முதல்தான் கேது புக்தி என்பதே துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக வீடு க்ருஹப்ரவேசம் செய்துவிடுவது உத்தமம். உங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்த வரை நீங்கள் இந்த வைகாசி மாதத்திலேயே புதுமனை புகுவிழாவினை நடத்துவதோடு அந்த வீட்டிற்கு குடித்தனமும் சென்றுவிடலாம். க்ருஹப்ரவேசத்திற்கு நாள் பார்க்கும்போது அதாவது உங்கள் மனைவி அல்லது தாயாரின் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நாளாகப் பார்த்து தேர்ந்தெடுத்து செயல்படுங்கள். புதுமனை புகுவிழாவின்போது நீங்கள் செய்யும் கோபூஜை (கன்றுடன் கூடிய பசுவிற்கு செய்யும் பூஜை) ஒன்றே போதுமானது. வேறு பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?என் மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 80% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல மனமின்றி அரசுத் தேர்வுகளை எழுதி வருகிறான். உயர்அதிகாரி ஆக வேண்டும் என்பதே அவனுடைய லட்சியம். மூன்று முறை தேர்வு எழுதியும் நூலிழையில் வெற்றி வாய்ப்பு போய்விட்டது. வயதாகிக் கொண்டே செல்வதால் சற்று பயமாக உள்ளது. அவனது எதிர்காலம் சிறக்க என்ன செய்ய வேண்டும்?
- டேவிட் கிங்க்ஸ்டன், கோவை.

 அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி துவங்கி உள்ளது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் பாவகம் என்பது மிகவும் சிறப்பாக உள்ளது. பத்தாம் வீட்டிற்கு அதிபதி ஆன சந்திரன் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் மேலும் நான்கு கிரஹங்களுடன் இணைந்திருப்பதுடன், உத்யோக ஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்துவது நல்ல நிலையே. தற்போது நடந்து வரும் நேரம் அத்தனை சிறப்பாக இல்லை என்றாலும் 18.05.2020 முதல் துவங்க உள்ள குரு தசை என்பது அவரது வாழ்வினில் சிறப்பான பாதையை உருவாக்கித் தரும். அவரது முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்து வாருங்கள். 23வது வயது என்பது தற்போதுதான் துவங்கி உள்ளது. இது ஒன்றும் பெரிய வயது அல்ல. அவர் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார். அவரது எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். உங்கள் மகன் தனது வாழ்க்கையின் லட்சியத்தை வெகுவிரைவில் எட்டிப் பிடிப்பார். கவலை வேண்டாம்.

?எனது அண்ணன் மகன் கடந்த 2 வருடங்களாக மனநிலை சரியில்லாதவர் போலவும், மிக அதிக கோபத்துடனும் நடந்து கொள்கிறார். இதன் காரணம் என்ன? இதற்கான பரிகாரம் சொல்லுங்கள். பி.இ. முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. உரிய வழி காட்டுங்கள்.
- ஷண்முகசுந்தரம், சென்னை.

உங்கள் அண்ணன் மகன் அமாவாசை நாளில், நண்பகல் நேரத்தில் பிறந்திருக்கிறார். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்யா லக்னத்தில் (சிம்ம லக்னம் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்) ஜனித்திருக்கும் அவரது ஜாதக கணிப்பின் படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி புதன் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் சூரிய, சந்திரருடன் இணைந்திருப்பது அவருடைய நடவடிக்கையில் மாற்றத்தைத் தந்திருக்கிறது. ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சுக்கிரனின் புக்தி காலத்தில் இந்த மாற்றம் வெளிப்படுகிறது. அவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் குடும்ப புரோகிதரை அணுகி வீட்டில் முன்னோர்கள் விஷயத்தில் உள்ள குறைகளைப் பற்றி தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்ய முயற்சியுங்கள். குறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால் ராமேஸ்வரம் சென்று பித்ரு தோஷ பரிகாரத்தைச் செய்து முடியுங்கள். அவரது ஜாதக பலத்தின்படி 17.12.2020க்குள் வேலை கிடைத்துவிடும். ஆனால் அதற்கு முன்பாக அவரது மனநிலையை கருத்தில் கொண்டு அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் இறங்குங்கள். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வருவதாலும் பித்ரு தோஷம் என்பது நிவர்த்தி ஆகிவிடும்.

?எனக்குத் திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன. இறைவன் அருளால் எவ்வித விரிசலும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். ஏழு வருடங்களுக்கு முன்னால் நான் கர்ப்பம் தரித்து ஏழு மாத பெண் குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. குடும்பத்தினர் எல்லோரும் கவலையில் உள்ளோம். தக்க தீர்வு சொல்லுங்கள்.
- சித்ரா, ராணிப்பேட்டை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் இருவருமே துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் இருவரின் ஜாதகத்திலும் புத்ர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தின் அதிபதி சனி ஆகிறார். உங்கள் கணவரின் ஜாதகத்தில் சனி பகவான் கேதுவின் சாரத்துடன் 11ல் அமைந்துள்ளார். உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் வக்ரம் பெற்ற நிலையில் செவ்வாயின் சாரத்தில் ஜென்ம லக்னத்தில் உச்சம் பெற்றுள்ளார். உங்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி புத்ர பாக்யம் என்பது நிச்சயம் உண்டு என்பது தெளிவாகிறது. இருந்தாலும் சனியால் உண்டாகும் தடையை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு சனிப்ரீதி ஹோமத்தினை வீட்டினில் செய்து முடியுங்கள். சனிக்கிழமை தோறும் அநாதைக் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்யுங்கள். கிருஷ்ண பரமாத்மாவினைப் பிரார்த்தனை செய்து வழிபட்டு வருவது நல்லது. வெள்ளியால் ஆன ஸ்ரீகிருஷ்ண விக்கிரகத்தை வாங்கி வீட்டுப் பூஜையறையில் வைத்து தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். கண்ணனின் அம்சத்தில் மழலைச் செல்வம் விரைவில் கிடைக்கக் காண்பீர்கள்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்

229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004

என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்