SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தன்னை அறிதல் தெளிவின் அம்சம்!

2019-05-07@ 16:49:37

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 14

மரபின் மைந்தன் முத்தையா

இந்த சமூகம் தனிமனிதர்களால் ஆனது. தனிமனிதனும் சமூகத்தால் ஆனவன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சமூகம் இருக்கிறது. அவன் பார்த்த சமூகம் அவனை பாதித்த சம்பவம் அவன் அடைய விரும்பும் சமூகம் அவன் மறக்க விரும்பும் சமூகம் என்று மனிதனுக்குள்ளே தான் எத்தனை சமூகங்கள்!கூட்டுக் கலவையான சிந்தனைகளின் வார்ப்பாக வாழ்வதென்பது  தனிமனிதர்கள் தங்கள் தனித் தன்மையை கண்டறிவதற்கான ஏற்பாடாம். ஒவ்வொரு மனிதனும் தன்மேல் பூசப்படும் சாயங்களிலும் மாயங்களிலும் சுயம் மறந்து போகாமல் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வது அவசியம். எல்லோரையும் போல ஒரு ராஜகுமாரனாக இருந்து ஆட்சியை அடைந்து முதுமையில் யுத்தத்தில் இறந்து போயிருந்தால் சித்தார்த்தனை இந்த உலகம் உணர்ந்து இருக்காது.ஆனால் தன் சுயம் தேடிய பயணத்தில் தானெனும் சமுத்திரத்தில் தானே மூழ்கி முத்தெடுக்கத் துணிந்ததால் தான் புத்தர் நமக்கு கிடைத்தார்.இன்று ஒவ்வொருவரும் புத்தர் ஆகிறார்களோ இல்லையோ சுயம் உணர்வது என்பது மிகவும் முக்கியம் அதற்கான தேடலை தொடங்காதவர்கள் தொடங்குவதும், தொடங்கியவர்கள் தொடர்வதும் அவசியம்.

சுயம் உணர்வது என்பது ஒருவர் தன்னையும் தன் வாழ்வையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும்  மதித்து முழுமையாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. எல்லோருக்கும்  எல்லார் மீதும்  புகார்கள் இருக்கும். அந்த புகார்கள் கடந்து தான் உறவு இருக்கிறது. எல்லோரோடும் 100% ஒத்துப் போகும் வாழ்க்கை ஒருவருக்கும் அமையாது என்பதால்தான் திருவள்ளுவர் அதற்கு ஒரு வழியைச் சொன்னார். ஒருவரை நாம் ஏற்றுக் கொள்கிறபோது அவரை எடைபோடுவது சாமானிய மனிதர்களின் இயல்புதான். ஆனால் அவ்விதமாக எடை போடுவதற்கு என்ன அளவுகோலை மேற்கொள்ள வேண்டும் என்றும் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.‘‘குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’’ஒரு மனிதனின் நல்ல குணங்கள் அவனிடம் உள்ள குற்றங்கள் ஆகியவற்றை எடை போட்டுப்பார்த்து எது மிகுதியாக இருக்கிறதோ அதை வைத்து முடிவெடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் ஆச்சரியம் தருவதாக இருக்க காரணம் அதற்குள் இருக்கும் அதிர்ச்சிக்கான அதீத வாய்ப்புகள்தான்.

வேதங்களின் சாரம் என மதிக்கப்படுபவை உபநிடதங்கள். அவற்றில்  மகிதாச ஐதரேய என்ற முனிவரால் அருளப்பட்டது ஐதரேய உபநிஷதம்.
அவர் எழுதும்போது ‘‘பிரம்மன் உயிரினங்களைப் படைத்ததும் அவை கடலில் விழுந்தன’’ என்று குறிப்பிடுகிறார்.  கடலில் இருந்து தான் பூமி தோன்றியது என்கிற விளக்கத்தையும் தாண்டி இந்த உபநிஷத்துக்கு உரை எழுதும்போது சங்கரர் இங்கே கடல் என்பது வாழ்க்கை கடல் என குறிப்பிடுகிறார். வாழ்க்கை என்னும் கடலை கடக்க நம் தோணியின் துடுப்புகளாக  நேர்மை, தானம், கருணை, புலனடக்கம், பொறுமை போன்ற குணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.அதாவது, வாழ்க்கை  அதன் இயல்பில் அபாயங்கள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் மனிதன் அதனை பாதுகாப்பாக பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது சங்கரரின் கருத்து.சங்கர  இலக்கியம் மட்டுமல்ல சங்க இலக்கியமும் இதைத்தான் சொல்கிறது.இன்னாது அம்ம இவ்வுலகம்இனிய காண்க அதன் இயல்புணர்ந் தோரே இந்த உலகம் கொடியதுதான். ஆனால் உலகத்து இயல்பை உணர்ந்தவர்கள் அதில் இனிமை காண வேண்டும் என்பது இதன் பொருள்.சமூகத்தின் அங்கமாக இருக்கும் மனிதன் சமூகத்தில் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடவும் கூடாது.

அதேநேரம் தன்னுடைய அடையாளத்தை தேடுவதிலும் தாங்கி பிடிப்பதிலும் கவனம் செலுத்தும்போது சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டு விடவும் கூடாது. அதனால் தான் ஆன்மிகம் இந்த அடிப்படை புரிதலை முதலில் போதித்தது. தெய்வத்தின் கருணை என்ன என்ற கேள்விக்கு தாயுமானவர் பதில் சொல்லும்போது எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி இரங்கும் தெய்வ அருட்கருணை என்று விளக்கினார்.வள்ளலார் சொல்லும்போது எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி ஒத்துரிமை கொள்பவர் யார்” என்று தெளிவு செய்தார். நான் என்னும் அடையாளம் மிகப் பெரியதாக மாறும் போது மற்றவர்கள் குறைகளின் வடிவங்களாய் தெரிகிறார்கள். மாறாக நம்முடைய குறைகள் நமக்குத் தென்படுகிறது யாரிடமும் பேதம் கொள்ளாத பேருள்ளம் உருவாகிறது. இதில் மனிதர்களுக்கு மிக நுட்பமான ஒரு சவாலை திருவள்ளுவர் முன்வைக்கிறார். நமக்கு வேண்டியவர்கள் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. நமக்கு வேண்டாதவர்கள் நல்ல நோக்கத்துடன் ஒரு செயல் செய்தாலும் அதை நாம் நல்ல விதமாக பார்ப்பதில்லை.

இந்த இரண்டு பகுதிகளையும் தாண்டி நாம் முன் பின் அறியாத மூன்றாவது மனிதர் ஒரு செயலைச் செய்கிறார் என்றால் அதில் இருக்கக்கூடிய தவறு என்ன என்பதுதான் நம்முடைய கண்களுக்கு முதலில் தெரியும்.என்னிடம் யாரோ ஒருவர் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து தந்தால் யார் மணமகன்? யார் மணமகள்? திருமணம் எங்கே! நடக்கிறது என்பதை எல்லாம் பார்ப்பதைவிட எங்கேனும் எழுத்துப்பிழைகள் தென்படுகின்றனவா! என்றுதான் என் கண்கள் தேடும்.திருவள்ளூர் சொல்லுகிறார், “சரி! முன்பின் தெரியாத ஒரு மனிதனின் தவறு உனக்கு தெரிவது போல உன்னுடைய தவறுகள் உனக்கு தெரியும் என்றால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் எந்த தீமையும் வராது என்கிறார். ‘‘ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கில் பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு’’மன்னும் உயிர் என்றார் நிலையான உயிர் என்று பொருள். பலபேர் உயிர் நிலையற்றது என்று நினைக்கிறார்கள். யாரேனும் இறந்து போனால் உயிர் போய்விட்டது என்கிறார்கள். உண்மையில் உயிர் போகவில்லை. உயிர் இருக்கிறது. அந்த உடலுக்குள் இல்லை அவ்வளவுதான்.

அப்படியானால் உடல் போய்விட்டது என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் சில மணி நேரங்களில் போகப்போவது அதுதான். எனவே பிறர் மேல் குற்றம் கண்டுபிடித்து உயிரில் வெறுப்பின் அழுக்கு படியாமல் கோபத்தில் அழுக்கு படியாமல் அதனை சீர்பெற வைப்பதே  சிறப்பு என்பது இந்த குறள் நமக்குத் தருகிற செய்தி.ஒரு மனிதன் தன்னுடைய சுயத்தை அடைவது  தேவையானால் அந்த தேடலுக்கு கடவுள் உட்பட எல்லாமே கருவிகள் என்பார் சத்குரு. சில நேரங்களில் நாம் நமக்கு விதித்துக் கொள்கிற நியமங்கள் எட்ட வேண்டிய உயரத்தை எட்டுவதற்கு ஏணியாக பயன்படும்.ஏறி முடித்த பிறகும் ஏணியை சுமக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காலகட்டம் வரை நம்மை பக்குவப்படுத்த கூடிய சில நியமங்கள் தாமாகவே  அகன்றாலும் அடுத்த படிநிலையை அடைந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து அதை நோக்கிச் செல்ல வேண்டும்.உண்மையை உணர வேண்டும் என்பதற்காக சித்தார்த்தன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று கடுமையான விரதம். உணவில்லாமல் உடலை வருத்தி ஒரு கட்டத்துக்கு மேல் மயங்கி கிடந்தார்.

ஒரு மூதாட்டி மயக்கம் தெளிவித்து உணவளித்தார். நீ என்ன செய்ய வேண்டும் என்றாலும் மூளை இயங்க வேண்டும். அதற்கு உணவு வேண்டும். உணவை தள்ளிவிட்டால் உன்னுடைய லட்சியத்தை அது எதுவாக இருந்தாலும் நீ அடைய முடியாது என்று அந்த மூதாட்டி சொன்னார்.மகத்தான ஞானத்தைத் தேடும் பாதையில் இருந்த சித்தார்த்தருக்கு இந்த வாழ்வியல் உண்மை ஒரு கண் திறப்பாகவே அமைந்தது. விரதங்களை விட்டு மேலும் ஊக்கமுடன் ஞானப் பாதையில்  நடை போட்டார். அப்படியானால் விரதங்கள் தவறா என்றொரு கேள்வி  எழக்கூடும். இல்லை. நியமங்களை நேசித்து செய்யும்போது அவை தடையாவது இல்லை. ஆனால் நியமங்கள் நிர்ப்பந்தங்கள் ஆக மாறும்போது அது ஒரு துன்பியல் நிகழ்வாகவே அமைந்துவிடுகிறது.சொல்லப்போனால் ஞானம் அடைய வேண்டும் என்னும் வேட்கை கூட தீவிரத்தின் உச்சம் தொட்டு பின்னர் மனம் இலகுவாகி தளர்வு நிலைக்கு வந்து போதி மரத்தின் கீழ் அமைதியாய் உள்நிலையில் வெற்றிடமாய் அமர்ந்த பிறகுதான் புத்தருக்கு ஞானம் பிறந்தது என்பார்கள்.

தனக்குள் அமிழ்ந்து தன்னைத் தேட பொறுமை, மன உறுதி, தீவிரம் எல்லாமே வேண்டும்.தன்னை உணர்தல் என்பது துறவின் அம்சம் அல்ல. தெளிவின் அம்சம். ஒரு மனிதன் தன்னை உணர்ந்தவனாக மாறும்போது தன்னைச் சுற்றி உள்ள பிரபஞ்சம் முழுவதையுமே தனக்குள் உணர்கிறான்.அவன் எல்லோரையும் தன்வசம் ஈர்க்கிறான். எல்லோரையும் தனக்குள்ளே பார்க்கிறான். சமூகத்தின் ஆளுமை தனி மனிதன் மேல் பரவுகிற போது அது சமூகத்தின் பாதிப்பு எனப்படுகிறது. மாறாக தன்னை உணர்ந்த மனிதனின் ஆளுமை சமூகத்தில் பரவுகிற போது அது  தாக்கம் என
உணரப்படுகிறது.கலைக்கோட்டு முனிவன் அயோத்தியின் எல்லைக்குள் நுழைந்ததுமே பசுமை செழித்தது வானம் பொழிந்தது மலர்கள் சிரித்தன என்று காவியம் சொல்கிறது.இதுதான் தன்னை உணர்ந்த ஒரு மனிதன் ஏற்படுத்தக்கூடிய தாக்கம். தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னிகரில்லாத ஆளுமைகளால் தான் ஆக்கத்தை உண்டாக்க முடியும்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்