SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வசந்த நவராத்திரி தேவியர் தரிசனம் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் அறம்வளர்த்த நாயகியை தரிசிக்கலாம். அன்னைக்குப் படைக்கப்பட்டு அளிக்கப்படும் மாம்பழ பிரசாதம் மழலை வரம் அருள்கிறது.

திருநெல்வேலி காந்திமதி அன்னை தினமும் உச்சிக்காலத்தில் நெல்லையப்பருக்கும் பரிவார தேவதைகளுக்கும் தீவட்டி பரிவாரங்கள் மற்றும் அர்ச்சகருடன் சென்று  நைவேத்தியம் செய்த பின்னரே தன் பூஜையையும் நைவேத்தியத்தையும் ஏற்றருள்கிறாள்.

சக்தி பீடங்களில் விமலை பீடம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாபநாசம் உலகம்மை சந்நதி. நமசிவாயர் எனும் கவியின் வயிற்று வலி தீர்த்தருளி  அவரை ஆட்கொண்ட தேவி இவள்.

குற்றாலத்தில் யோகபீடத்தில் பராசக்தி மேரு வடிவில் ஒளிர்கிறாள். பௌர்ணமி, நவராத்திரியின்போது இந்த பீடம் விசேஷமாக வழிபடப்படுகிறது.

சங்கரன்கோவிலில் கோமதியம்மன் சந்நதி முன் வேலப்ப தேசிக மூர்த்திகள் எனும் அடியார் பிரதிஷ்டை செய்த சக்கரம் உள்ளது.

மைதுரைமீனாட்சி தேவியை தொடர்ந்து மூன்று நாட்கள் திருப்பள்ளியெழுச்சியின் போதும் இரவு பள்ளியறை பூஜையின் போதும் வணங்கினால் எல்லா  கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அழகு தமிழில் மலைவளர்காதலி ஆவாள். இத்தேவியின் திருவடியில் தங்க ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை திருமணஞ்சேரிஅருள்வள்ளல்நாதரும் யாழினுமென் மொழியாளும்மணப்பேற்றை அருள்கின்றனர். இங்கு மணம் புரிந்தோர் பந்தம் ஒரு போதும் முறிவதேயில்லை.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, ஆதிசங்கரரால் அணிவிக்கப்பட்ட ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் தாடங்கங்களுடன், மேலிரு கரங்களில்  தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக்கிறாள்.

கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்து மந்திரபீடேஸ்வரி மங்களநாயகி, பக்தர்களின் நோய்களைப் போக்குவதால் ‘பலநோயறுக்கும் பரை’ என்று  அழைக்கப்படுகிறாள்.

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் ஒரு கையில் நீலோத்பல மலரை ஏந்தி மறு கரத்து சுண்டுவிரலால் தோழியின் தோளில் அமர்ந்திருக்கும் முருகனின் சுண்டு விரலைப் பிடித்திருக்கும் எழிலுருவில் நீலோத்பலாம்பாளை தரிசிக்கலாம்.

திருவையாற்றில் அப்பருக்கு திருக்கயிலையைக் காட்டியருளிய ஐயாறப்பனையும் தர்மஸம்வர்த்தினியையும் தரிசிக்கலாம். மகான் தியாகராஜர் உடல்நலிவுற்றபோது இத்தேவி அவருக்கு கஷாயம் வைத்துக் கொடுத்துக் காத்தது வரலாறு.

திருக்கடவூரில் பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய தேவி, அபிராமி! தை அமாவாசை உற்சவத்தின்போது அபிராமி அந்தாதி சம்பவம்  நடத்திக் காட்டப்படும்.

மயிலாடுதுறையில் தேவிக்கு அபயாம்பிகை என்று பெயர். இத்தல ஜுரதேவருக்கு நூறு குடம் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கடுமையான ஜுர மும் நீங்கிவிடுகிறது.

சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மனை வெள்ளிக்கிழமைகளில் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த அம்மனையும்  கொடியிடை  (மேலூர்), திரு  வுடை (திருமுல்லைவாயில்) மூன்று தேவியரையும் பௌர்ணமி தினத்தில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை வண்டாக வந்த பிருங்கி முனிவரை ஆட்கொண்டவள். இன்றும் தேவி சந்நதி யின் பின்புறம்  வண்டின் ரீங்கார ஒலியைக் கேட்கலாம்.

சிருங்கேரியில் சரஸ்வதி தேவி சாரதாம்பாளாகத் திகழ்கிறாள். ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களுள் போக பீடமாக திகழ்கிறது சிருங்கேரி.

காசியில் விசாலாட்சி, அன்னபூரணி என இரு அம்சங்களாக தேவி அருள்கிறாள். இருவர் முன்பும் தனித்தனியே ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.விஜயதசமியன்று தங்க விசாலாட்சியையும் தீபாவளியின் போது தங்க அன்னபூரணியையும் தரிசிக்கலாம்.

குளித்தலை அருகே திருஈங்கோய்மலையில் கொலுவிருக்கும் லலிதா தேவிக்கு பெண் யோகினிகள் பூஜைகள், யாகங்கள் செய்கிறார்கள்.

காஞ்சிபுரம் காமாட்சி தேவி திருவுருமுன் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வசின்யாதி வாக்தேவதைகளுக்கே அனைத்து அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன. இவர்களே திருமயஞ்சூரில்  லலிதா
ஹஸ்ரநாமத்தை இயற்றிய தேவியர் ஆவர்.

-ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்