SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறுமுகத்தின் அருளிருந்தால் ஏறுமுகமே,,!

2019-05-03@ 14:34:20

1. விவாகரத்தான எனக்கு 2வது திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் நிம்மதியான வாழ்வு கிடைத்தது. அதன் பின் நிம்மதி இல்லை. என் மனைவி என் பேச்சைக் கேட்பதில்லை. வேண்டாம் என்று சொன்னாலும் பிடிவாதமாக வேலைக்குச் செல்கிறார். அவரது பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடக்கிறார். ஆசிரமத்தில் வசிக்கும் என் தந்தையின் ஆதரவும் எனக்கு இல்லை. பங்குச் சந்தை மூலம் பல லட்சம் ரூபாய் நஷ்டம். நிம்மதியான வாழ்வு எப்போது, எவ்வாறு அமையும்? குலதெய்வம் எது? சுரேஷ், மும்பை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எட்டாம் பாவத்தில் அமர்ந்துள்ளதால் அவரது தசை முழுவதும் சிரமத்தை அனுபவித்து வருகிறீர்கள். தற்போது ஏழரை சனியும் நடப்பதால் மனதளவில் தளர்ந்து போய் உள்ளீர்கள். சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் ராகு உச்சம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பதால் 26.06.2021 முதல் துவங்க உள்ள ராகு தசை உங்கள் வாழ்வினில் நல்லதொரு மாற்றத்தினை உண்டாக்கும்.

அது வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். உங்கள் மனைவியின் ஜாதகக் குறிப்பினை நீங்கள் அனுப்பவில்லை. உங்கள் ஜாதக பலத்தின்படி மனைவியால் வருங்காலத்தில் பிரச்னை ஏதும் நேராது. ஒன்பதாம் பாவத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் செவ்வாய் சுப்ரமணிய ஸ்வாமியே உங்களின் குலதெய்வம் என்பதைச் சொல்கிறது. உங்கள் தந்தையிடம் பூர்வீகம் எது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த ஊரின் சுற்றுப்புறத்தில் சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் திருத்தலம் இருப்பின் அதனையே குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வாருங்கள். ஆறுமுகத்தை வழிபட்டால் வாழ்வில் ஏறுமுகமே!
 
2. என் மகன் வயிற்றுப் பேத்தி நல்ல உத்யோகத்தில் உள்ளார். அவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது. நாங்கள் பல பரிகாரங்கள் செய்துள்ளோம். மாப்பிள்ளை அமையவில்லை. எப்போது அவரது திருமணம் அமையும்? பிரேமா, சென்னை.

விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்பது இல்லை. நீங்களாக செவ்வாய் தோஷம் உள்ளது என்று எண்ணிக்கொண்டு திருமணத் தடையை உண்டாக்கி வருகிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல, தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இதே தவறை செய்து வருகிறார்கள். செவ்வாய் தோஷம் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இருக்கும். உங்கள் பேத்தியின் ஜாதகம் அதுபோன்ற ஜாதகம் அல்ல. 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளது என்று சொல்வது முற்றிலும் தவறு. இதில் ஒரு சிலர் பரிகாரச் செவ்வாய் உள்ளது என்றும், மேலும் சிலர் இத்தனை சதவீதம் தோஷம் உள்ளது என்று சொல்வதும் முற்றிலும் தவறாகும்.

தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெளிவாகப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பேத்தியின் ஜாதகத்தைப் பொறுத்த வரை செவ்வாயோடு ராகு இணைந்து கும்ப ராசியில் அமர்ந்திருப்பதால் செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் பெண்ணின் தாயாரை துர்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். செவ்வாயும் அஷ்டமியும் இணைகின்ற நாளில் மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு போஜனமிட்டு புடவையுடன் கூடிய தாம்பூலம் அளித்து பேத்தியை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். 23.4.2020ற்குள் அவரது திருமணம் நடந்து விடும்.
 
3. கடந்த சில நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமலும் மன அமைதி இல்லாமலும் குழப்பத்தில் இருந்து வருகிறேன். இது தொடர்பாக விசாரித்தபோது என் மகனின் ஜாதகத்தை ஒருமுறை பாருங்கள் என்று கூறினார்கள். என் மகனின் ஜாதகத்தைப் பார்த்து எனக்கு உள்ள மனக்குழப்பமும் பிரச்னையும் தீர பரிகாரத்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சாலமன், தஞ்சாவூர்.

பிள்ளையின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் பிரச்னைகள் தீர பரிகாரம் சொல்வது என்பது இயலாது. முதலில் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகனின் ஜாதகம் உங்களுடைய வாழ்வினில் எந்தவிதமான மாற்றத்தையும் உருவாக்காது. அவரவர் ஜாதக பலமே அவரவருடைய வாழ்வினைத் தீர்மானிக்கும். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் நீங்கள் தான் மருந்து சாப்பிட வேண்டுமே தவிர உங்கள் மகன் அந்த மருந்தினை சாப்பிடுவதால் எந்தவிதமான பலனும் உண்டாகாது. அதே போலத்தான் யாருக்கு பிரச்னை இருக்கிறதோ, அவருடைய ஜாதகத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர பிள்ளையின் ஜாதகத்தைப் பார்ப்பதால் எந்தவிதமான மாற்றமும் நிகழாது.

எழுபத்திநான்கு வயது முடிந்து எழுபத்தைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு இந்த வயதில் முதுமையின் காரணமாக உண்டாகும் பிரச்னைகளே அதிகமாக உள்ளது. உங்கள் வயதினை ஒத்த நண்பருடன் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ரிஷப ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது அஷ்டமத்துச் சனியின் காலம் தொடர்கிறது. மேலும் சனியுடன் கேது இணைந்திருப்பதால் தேவையற்ற மனக்குழப்பத்திற்கு ஆளாகி உள்ளீர்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற துப்புரவுப் பணியினைச் செய்வதோடு ஆலயத்திற்கு வருபவர்களுக்கு நீர்மோர் அளித்து வாருங்கள். கர்த்தரின் ஆசியால் மனநிம்மதியோடு வாழ்வினைக் கழிப்பீர்கள்.
 
4. 37 வயதாகும் எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவசரப்பட்டு திருமணம் செய்துவிட்டார்கள். மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். வீட்டிலேயே கம்ப்யூட்டர் ஒர்க் செய்து வருகிறேன். நகர்ப்புறப் பகுதிக்குச் சென்று சொந்தமாக கடை வைத்து பணி செய்தால் வருமானம் கூடும் என்று சொல்கிறார்கள். நான் சுயமாக தொழில் செய்யலாமா? வாழ்வினில் முன்னேற்றம் காண வழி சொல்லுங்கள்.லதா, மதுரை மாவட்டம்.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் என்பது நன்றாகவே உள்ளது. பத்தாம் வீட்டிற்கு அதிபதி குரு திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி புதன் நான்கில் உச்சம் பெற்றிருப்பதும் சுயதொழில் செய்யத் துணை நிற்கும். அதிலும் கம்ப்யூட்டர் ஜாப் டைப்பிங்கில் உங்களால் நன்றாக சம்பாதிக்க இயலும். உங்களுடைய நண்பர்களின் ஆலோசனையின்படி நீங்கள் பெருநகர் பகுதிக்கு உங்களுடைய தொழிலை மாற்றிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் சற்று சிரமமாகத் தோன்றினாலும் சமாளித்துக் கொள்வீர்கள். தாமதிக்காமல் உடனடியாக அதற்கான முயற்சியில் இறங்குங்கள். துவக்கத்தில் அத்தனை எளிதாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் கடை அமையாமல் போகலாம். விடாமுயற்சியுடன் பலமுறை அலைந்து ஒரு கடையினைப் பிடித்துவிடுவீர்கள். 07.02.2020 வரை சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். அதன்பிறகு வருமானம் என்பது சிறப்பாக அமையும். உங்கள் பிள்ளைகளையும் உயர்ந்த நிலைமைக்கு உயர்த்துவீர்கள். புதன்கிழமை நாளில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதி சொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வளமுடன் வாழ்வீர்கள்.
 
5. என் மகன்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவ்வாறு இருந்தால் துன்பம் அதிகம் என்கிறார்கள். என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கும் இதே போன்ற அமைப்பு இருந்தது. அண்ணன் இறந்துவிட்டார். என் கணவருக்கும், அவரது அண்ணனுக்கும் ஒரே நட்சத்திரம்தான். அவரது அண்ணன் ஒரு குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டார். இது ஏதாவது சாபமா? பாகம்பிரியாள்தேவி, திருக்கடையூர்.

சகோதரர்கள் ஒரே நட்சத்திரத்தில் பிறப்பதால் இதுபோன்ற தோஷங்கள் நிச்சயமாக உண்டாகாது. பரம்பரையில் உண்டான சாபம் ஆக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அதனைக் கண்டறிய பரம்பரையில் மூன்று தலைமுறையாக உள்ளவர்களின் ஜாதகங்கள் தேவை. உங்கள் பிள்ளைகளைப் பொறுத்த வரை இருவரும் மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்திருக்கிறார்கள். இருவரின் ஜாதகங்களில் உயிராகிய ஜென்ம லக்னத்தில் ஆயுள்காரகன் சனி அமர்ந்திருக்கிறார். சனி பகவானின் துணையிருப்பதால் நீங்கள் அவர்களது ஆயுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

என்றாலும் உங்கள் வம்சத்தில் ஏதேனும் குறை உண்டாகி இருக்கிறதா என்பதனை குடும்பத்தில் மூத்தவர்கள் மூலமாகவோ அல்லது ஊரில் வசிக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களின் துணையுடனோ அறிந்து கொள்ளுங்கள். மூன்று தலைமுறையாக உள்ள ஆண்பிள்ளைகளின் ஜாதகங்களை ஜோதிடருடன் ஆராய்ந்து தீர்வுகாண முயலுங்கள். உங்களுடைய மிகப்பெரிய பலம் நீங்கள் வசிக்கின்ற பகுதியே. தீர்க்காயுளைத் தரும் அமிர்தகடேஸ்வரர் குடிகொண்டிருக்கும் திருக்கடையூரில் வசிக்கும் நீங்கள் பிள்ளைகளின் ஆயுளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சனிக்கிழமை தோறும் திருக்கடையூர் ஆலயத்தில் பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் பயம் காணாமல் போகும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்