SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதவுதலே உயிருக்கு தரும் ஊதியம்!

2019-04-29@ 16:49:45

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 13

மறைந்த குன்றக்குடி அடிகளார் ஒரு முறை தன்னுடைய நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். ஒரு குறளை வாசிக்கும் போது அதன் பொருளை மட்டும் பார்க்காமல் அது எந்த அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்தால் அதன் அடர்த்தி அதிகமாகிறது என்பார். அதற்கு அவர் காட்டிய மேற்கோள் குறள் இது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.“இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் வருகிறது. எனவே ஒருவர் பகிர்ந்து உண்ணவில்லை என்றால் அது கொலை செய்ததற்கு சமம்” என்பார்  அடிகளார். ஒருவர் தனக்கான குறுகிய எல்லைகளை பல்வேறு முறைகளில் கடக்க முற்படுகிறார். உடல் ஓர் எல்லை வகுக்கிறது. அந்த எல்லைக்குள்ளேயே நின்றால் அது சோர்வையும் நோயையும் கொடுக்கிறது. எனவே உடல் வகுக்கும் எல்லைகளை ஒருவர் எப்போதும் கடக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.

உடற்பயிற்சி யோகா போன்றவையெல்லாம் அதற்கான முயற்சிகள் ஆகும். அதேபோல அறிவு சில எல்லைகளை வகுக்க முற்படுகிறது. அந்த எல்லைகள் விரிவடைய வேண்டும் என்றால் ஒருவர் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார். நிறைய தெரிந்துகொள்ள முற்படுகிறார். அறிவின் துணை கொண்டு அறிவின் எல்லைகளை கடக்கிறார். அதேபோல மனம் சில எல்லைகளை வகிக்கிறது. இதுதான் உன் குடும்பம். இவர்கள்தான் உன் உறவினர்கள். இவர்களெல்லாம் உன் நண்பர்கள். இவர்களோடு உன் வசதிகளையும், செல்வங்களையும் பகிர்ந்து கொண்டாலே போதும் என அது சொல்கிறது. ஆனால் மனம் விரிவடைய  விரும்புகிறது. குறுகிய எல்லைகளைக் கடந்து பிற உயிர்களையும் நேசிக்கும் இயல்பு இந்துக்கு உரியது. சுயநல சுவர்களை தகர்த்து யாரெல்லாம் துன்பப்படுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் உதவ முற்படும்போது குடும்பமே உலகம் என்ற நிலையைத் தாண்டி உலகமே நம் குடும்பம் என்னும் எண்ணத்திற்கு வருகிறோம்.

இதைத்தான் வசுதேவ குடும்பகம் என்று சொல்கிறார்கள். ஒருவருக்கு மனம் விரிவடையத் தொடங்கும் போது பிறருக்கு உதவ முற்படுகிறார். அப்படி உதவும்போது அதற்கான வசதிகளும்  பெருகுகின்றன. உள்ளத்தனையது உயர்வு என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்வில் அவர் உயர்கிறார். சமீபத்தில் கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சி. நெருப்புக் காயம் பட்டு அங்கங்கள்  பெரும் அளவு சேதம் ஏற்பட்டவர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும் மிக சிக்கலான அறுவை சிகிச்சை கூட இலவசமாக செய்யப்படுகிறது. மருத்துவமனை தன் சிகிச்சையையும் நிமிடத்தையும் இலவசமாக வழங்க சிகிச்சைக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும் மருந்துகளையும் கோவை மெட்ரோ பாலிஸ்சுழல் சங்கம் ஏற்றுக்கொள்கிறது. கடந்து ஏழு ஆண்டுகளில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

நம்முடைய சமய மரபில் தொண்டு என்பது தனியாக செய்ய வேண்டிய ஒன்று அல்ல. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ அதிலேயே ஒரு பகுதியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தால் அது தொண்டாக மாறுகிறது. ஒருவர் ஆடைகள் நெய்யும் தொழில் செய்கிறார். தினமும் சிவனடியார் ஒருவருக்கு இலவசமாக ஆடையைக் கொடுத்து விட்டு வேலையைத் தொடங்குவார். இன்னொருவர் மண்பானை வனைகிறார். தினமும் சிவனடியார் ஒருவருக்கு ஒரு திருவோடு கொடுத்துவிட்டு தன் தொழிலை தொடங்குவார். இவர்களெல்லாம் திருத்தொண்டர்கள் என அழைக்கப்பட்டார்.  ஏனென்றால் தாங்கள் செய்கிற தொழிலிலேயே ஒரு பகுதியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிக்கு என்று அர்ப்பணிக்கும் போது தொழிலே தொண்டாக மாறுகிறது.

நம்முடைய சமய மரபு ஈகையை பெரும் குணமாகவும், முக்கியமான கடமையாகவும் வலியுறுத்துகிறது. பாத்திரமறிந்து பிச்சை எடு என்று ஒரு பழமொழி இருந்தாலும் கூட  உதவும் போது ஒருவரையும் எடைபோட அவசியமில்லை என்கிற பார்வையும் நம்மிடமே இருந்திருக்கிறது. அப்படி  எடை போடாமல் கொடுப்பதை கொடைமடம் என்று நாம் கொண்டாடி இருக்கிறோம். ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களிடம் ஓர் அன்பர் இது பற்றிக்  கேட்டார். சில பேர் பணம் இல்லாதவர்கள் போல் நடித்து பிச்சை எடுக்கிறார்கள் இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது சத்குரு சொன்னார் “அவர் நடிக்கிறாரோ என்னவோ நடிப்புக்கு கூட தான் பிச்சை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் நிலைக்கு வந்து விட்டார் இல்லையா? அதனால் அவருக்கு உதவுங்கள்’’ என்றார்.

“ஆர்க்கும் இடும் அவர் இவர் என்னன்மின்” என்கிறார் திருமூலர். எனவே நம்முடைய சமய மரபில் ஈகை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. தருகிறோம் என்கிற தலைக்கனம் இல்லாமல் தர வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இது என்னுடையது என்னும் எண்ணத்தோடு ஒருவர் ஏதும் தந்தால் எதுவும் உன்னுடையது இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள். அருணகிரிநாதர் அழகானதொரு காட்சியை நமக்கு காட்டுகிறார். உச்சி வெயில் வேளையில் முருகனை தரிசிக்க ஒருவர் மலையின் மேல் ஏறிப் போய்க்கொண்டு இருக்கிறார். வெயில் வருகிறது. ஏதேனும் ஒரு மண்டபத்தில் நிழலுக்கு ஒதுங்கலாம் என்று நினைக்கிறார். சொல்லி வைத்தாற் போல் ஒரு மண்டபம் தென்படுகிறது.

நெருங்கிப் பார்த்தால் அவருடைய பரம விரோதி ஒருவரின் உபயத்தில் கட்டப்பட்ட மண்டபம் என்று தெரிகிறது. உடனே அங்கிருந்து விலகி மேலும் நடக்கிறார்.கொஞ்சம் தள்ளி இன்னொரு மண்டபம். அதைக் கட்டியவர் இன்னொரு விரோதி. அதாவது நல்ல காரியம் செய்பவர்களை எல்லாம் இவர் விரோதித்துக் கொண்டு இருக்கிறார் என்று நமக்கு விளங்குகிறது. தற்செயலாக குனிந்து பார்க்கிறார். அவருடைய நிழலே நீளமாக விழுந்திருக்கிறது. இப்போது இவருக்கு ஒரு எண்ணம் ஏற்படுகிறது.” நம்முடைய நிழலே இவ்வளவு நன்றாக இருக்கிற போது அடுத்தவர்களின்  நிழலில் நான் ஏன் ஒதுங்க வேண்டும்” என்று நினைக்கிறார்.தன்னுடைய நிழலை நெருங்கி நெருங்கி போகிறார். நிழல் விலகி விலகிப் போகிறது. அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அருணகிரிநாதர் இந்த காட்சியை காட்டுகிறார்.

“எப்படி உங்கள் நிழலே உங்களுக்கு வெயில் காலத்தில் உதவுவது இல்லையோ. அதுபோல் உங்கள் கையில் உள்ள செல்வம் கடைசி காலத்தில் மோட்சத்திற்குப் போக உதவப் போவதில்லை. எனவே உங்கள் கையில் என்ன இருந்தாலும் பகிர்ந்து கொடுங்கள். ஒரு பிடி  நொய்யரிசி தான் இருக்கிறதா அதையும் பகிர்ந்து கொடுங்கள். கொடுக்கிறபோது நான் கொடுத்தேன் என்று கூறாமல் முருகன் கொடுத்தான் என்று சொல்லிக் கொடுங்கள் “என்கிறார்.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் உங்கட்கு இங்ஙன்  
வெய்யிலுக்கொதுங்க உதவா உடம்பின்  வெறும் நிழல் போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே
 
என்கிறார். இந்தப் பாடலில்தான் எத்தனை வழிகாட்டுதல்கள். கொடுங்கள். கையில் எது இருந்தாலும் கொடுங்கள். கொடுக்கிறபோது நான் கொடுத்தேன் என்ற அகங்காரத்திற்கு இடம் தராமல் இறைவன் கொடுத்தான் என்று கொடுங்கள். இவ்வளவும்  நம்மை நெறிப்படுத்துகிற நோக்கத்தோடு ஞானிகள் தந்த நிகரில்லாத வழிகாட்டுதல்கள் ஆகும். நீங்கள் ஒரு பயணத்திற்காக ரயில் நிலையம் செல்கிறீர்கள். அங்கே உங்கள் பெட்டிகளை ஒருவர் சுமந்து வந்து நீங்கள் அமரும் இருக்கைக்கு கீழே வைக்கிறார். கூலி கொடுக்கும் நேரம் வருகிறது. நீங்கள் ஒரு தொகை சொல்ல அவர் ஒரு தொகை சொல்ல கடைசியில் இருவரில் யாரோ ஒருவர் இறங்கி வந்து பேரம் முடிகிறது. உங்கள் பெட்டியை ஏழு எட்டு நிமிடங்கள் சுமந்து வந்ததற்காகவே ஒருவர் கூலி கேட்கிறார் ஆனால் உங்கள் உடலை கருவிலிருந்தே சுமந்து ஆயுள் முழுக்க தூக்கி நடக்க ஒருவர் இருக்கிறார். அவருக்கு நீங்கள் என்ன ஊதியம் தரப் போகிறீர்கள்?.

உங்கள் உடல் என்னும் சுமையை சுமக்கும் அந்த ஊழியர் தான் உங்கள் உயிர், அவருக்கு என்ன ஊதியம் தரலாம்?வாழும் காலத்திலும் மறைந்த பின்னாலும் மற்றவர்களுக்கு உதவி கொடை கொடுத்து அதன் மூலம் ‘‘இவர் மிகவும் நல்ல மனிதர்’’ என்ற புகழோடு வாழ்ந்தால் அதுதான் இந்த உயிருக்குத் தரக்கூடிய ஊதியம் ஆகும். இதை நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் சொல்கிறார்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

கடவுள் எங்கு இருக்கிறான் அவனலெங்கு காணலாம் என்று தேடுபவர்களுக்கு நம்முடைய தத்துவங்களின் சாரத்தைப் பிழிந்து ஒரு திரைப்
படப் பாடலில் கவிஞர் வாலி பதில் சொல்கிறார்.
பல நூல் படித்து நீ அறியும் கல்வி  பிறர்
நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்  அவர்
உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்  இவை
அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில்
கொள்கிறான்.
இல்லாதவர்களுக்கு உதவுவதும்  ஏங்கித் தவிப்பவர்களுக்கு கை கொடுப்பதும் அவர்கள் துன்பத்தை துடைக்க மட்டுமல்ல நம்முடைய எல்லைகளை நாமே கடக்கவும் கூட.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்