SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறவிப்பயனை அடைவீர்கள்!

2019-04-23@ 17:39:00

89 வயதாகும் நான் யாருமற்ற அனாதையாக இருக்கிறேன். மனைவி மற்றும் மகன்கள் இறந்து விட்டனர். என் மருமகளின் தயவில் வாழ்ந்து வருகிறேன். சில காலமாக முட்டி வலியால் அவதிப்படுகிறேன். கால்கள் அவ்வப்போது இழுத்துக் கொள்கிறது. கால்கள் செயலிழந்து விட்டால் பார்ப்பதற்கு யாருமில்லை. வாழ்வின் இறுதி வரை ஆரோக்யத்துடன் வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மாணிக்கம், சென்னை.

இந்த உலகில் அனாதை என்று யாருமே இல்லை. இறைவனின் துணை எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கு சேவையாற்றிட மருமகள் என்பவர் இருக்கிறார். வயதான காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் வருகின்ற அதே கவலை உங்களுக்கும் வந்திருக்கிறது. யாருக்கும் நாம் சுமையாக ஆகிவிடக் கூடாது என்று எண்ணுகிறீர்கள். இந்த பயமே உங்களின் முதல் எதிரி. வயது முதிர்ந்த காலத்தில் பொதுவாக எல்லோருடைய உடலுமே தளர்ச்சி அடையத்தான் செய்யும். மூட்டுவலி முதலான பிரச்னைகள் வந்து சேரும். நீங்கள் பயப்படுவது போல் உங்களுடைய கால்கள் இழுத்துக் கொள்ளாது.

அது நரம்புத்தளர்ச்சியின் வெளிப்பாடே அன்றி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜாதக ரீதியாக எந்தவிதமான பிரச்னையும் இல்லை. மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் தினமும் காலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள திருவீதியம்மன் கோயிலுக்குச் சென்று ஆலயத்தை ஒரு முறை வலம் வந்து வணங்கி வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் உங்கள் ஆரோக்யம் என்பது நன்றாகவே இருக்கும்.

நாங்கள் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் ஒரே மகன் பி.ஈ., மெக்கானிகல் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று 5 வருடங்கள் ஆகிறது. இதுவரை அவன் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலைக்கெல்லாம் சென்று வருகிறான். குடும்பமே நிம்மதியின்றி தவிக்கிறோம். என் மகனுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் ஏதும் உண்டா? ஒரு வாசகி, திருச்சி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் (விருச்சிக லக்னம் என்ற தவறாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறார். பத்தாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ராகுவின் சாரம் பெற்றிருக்கிறார். உத்யோகத்தைப் பொறுத்த வரை ராகு  கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இவருடைய வேலை என்பது உள்நாட்டில் இல்லை. வெளிநாட்டு உத்யோகத்திற்கு முயற்சித்தால் நிச்சயமாகக் கிடைத்துவிடும். அந்நிய தேசத்தில் பணியாற்றும் ஒரு நண்பரின் மூலமாகவோ அல்லது தூரத்து உறவினர் மூலமாகவோ இவர் தனக்கான உத்யோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்வார்.

ஒன்பதாம் இடத்து குருவும் இவருக்கு வெளிநாட்டு சம்பாத்யத்தையே உறுதி செய்கிறது. பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்று சென்டிமென்ட் பாராமல் வெளிநாட்டு வேலைக்கு உங்கள் பிள்ளையை முயற்சி செய்யச் சொல்லுங்கள். சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. 32வது வயதில் திருமணம் நடந்துவிடும். ஞாயிறு தோறும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் மகனின் கரங்களால் இயன்ற அளவில் நீர்மோர் கொடுத்து வரச் சொல்லுங்கள். கர்த்தரின் அருளால் உங்கள் மகனுக்கு 28.02.2020ற்குள் உத்யோகம் நிலைப்படுவதோடு எதிர்கால வாழ்வும் சிறப்பாக அமையும்.

எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலது காலில் நரம்பு பிரச்னையால் அறுவை சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனையில் பரிசோதனைக்குச் செல்கிறேன். ஆனால் ஒவ்வொரு வருடமும் அதே காலில் ஏதோ ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. கடந்த மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை நடந்தது. இனிமேல் அந்தக்காலில் பிரச்னை வராதிருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தெய்வசிகாமணி, கடலூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் நரம்பு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் புதன் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். அதோடு சூரியன் சுக்கிரன் சனியின் இணைவும் கால் பகுதியில் பிரச்னையைத் தந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி அறுவை சிகிச்சையின் மூலம் நீங்கள் நிரந்தர தீர்வினைக் காண இயலாது. உடம்பினை லேசான உஷ்ணத்திலேயே வைத்திருந்தால் உங்கள் ஆரோக்யம் நன்றாக இருக்கும். கொள்ளு தானியத்தில் ரசம் வைத்து வாரம் இரு முறை சாப்பிட்டு வாருங்கள். துளசி தைலத்தை நெற்றியில் தடவிக் கொள்வதோடு ஒரு சொட்டு தைலத்தை ஒரு துணியில் விட்டு நன்றாக முகருங்கள். நரம்புகள் பலம் பெறும்.

இது போன்ற சிறு சிறு வைத்தியங்களின் மூலமாகவும், லேசான உடற்பயிற்சியின் மூலமாகவும் உங்கள் ஆரோக்யத்தைப் பேணி வருவதே சிறந்த முறையாகும். உங்கள் ஜாதக பலத்தின்படி 15.12.2019ற்குப் பிறகு தசை மாறுவதால் நல்ல நேரம் என்பது துவங்கிவிடும். அதுவரை மீண்டும் அறுவை சிகிச்சைக்குப் போகாமல், வீரியம் மிக்க மருந்துகளை நாடாமல் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக உங்கள் உடல்நிலையை பராமரித்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் உடனடித் தீர்வு என்பதைக் காண இயலாது. பிரதி ஞாயிறு தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஆரோக்யம் சிறக்கும்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் என் மகன் தன்னுடன் வேலை செய்த ஒரு மலையாளப் பெண்ணை அடுத்த வருடத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. என் மகனின் திருமண வாழ்வு எப்படி அமையும்? அந்தப் பெண்ணை திருமணம் செய்யலாமா? இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? ஜெயஸ்ரீ, சென்னை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் எட்டில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்திருக்கிறார். இது அத்தனை சிலாக்கியமான கிரஹ அமைப்பு அல்ல. அவரது விருப்பப்படி நடக்கும் திருமணம் நல்வாழ்வினை அமைத்துத் தராது. தற்போதைய நேரமும் மணவாழ்விற்குத் துணை புரியவில்லை. உங்களுடைய ஜோதிடர் கூறியது போல அவருடைய திருமண வாழ்வு நல்லபடியாக அமைய இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருப்பதே நல்லது.

தற்போது நடந்து வரும் நேரத்தினையும், அவருடைய ஜாதகத்தில் உள்ள பலவீனமான அம்சத்தினையும் எடுத்துச் சொல்லி திருமணத்திற்கு தற்போது அவசரப்பட வேண்டாம் என்று புத்திமதி சொல்லி வாருங்கள். மாற்று மொழி பேசும் பெண்ணால் இவருடைய மணவாழ்வு நல்லபடியாக அமையாது என்பதை இவருடைய ஜாதக பலம் உணர்த்துகிறது. தினமும் காலையில் துளசிச் செடிக்கு நீருற்றி 11 முறை வலம் வந்து வணங்குங்கள். சென்னை, கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணனின் ஆலயத்திற்குச் சென்று உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உரிய நேரத்தில் மகனின் மணவாழ்வு மங்களகரமாக அமையும்.

என் மகனுக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. பிரசவத்திற்கு தாய்வீடு சென்ற மருமகளுடன் பிரச்னை ஏற்பட்டு நிரந்தரமாக பிரியும் நிலை உருவாகியுள்ளது. மருமகளும் பேத்தியும் எங்களுடன் வந்து இணைவார்களா? எங்கள் பிரச்னை தீர உரிய வழி சொல்லுங்கள். பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின் படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்கள் மகனின் ஜாதகத்தை விட மருமகளின் ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் உங்கள் மகனின் ஜாதகத்தில் இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தில் நீச பலம் பெற்றிருக்கும் ராகுவும், எட்டில் இணைந்திருக்கும் செவ்வாயும்கேதுவும் குடும்ப வாழ்வினில் சிரமத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

தவறு என்பது உங்கள் மகன் மீது இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு உங்கள் மகனை நிதானித்து நடந்து கொள்ளச் சொல்லுங்கள். தற்போதைய சூழலில் பிரச்னையை பெரிதாக்காமல் தனது உத்யோகத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். 28.03.2020ற்குள் அவருக்கு நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும். மருமகளின் ஜாதகம் வலிமையாக இருப்பதால் அவரை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றத்தையே காண்பார். புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று இரண்டு நெய்விளக்குகளை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். வாழ்வினில் வசந்தத்தைக் காண இயலும்.

பெரிய சிவாலயம் கட்டி என் பேரன் பேத்திகளோடு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதும் நந்தியம் பிரான் திருவடியில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்பதும் எனது ஆசைகள். ஏற்கெனவே சிவ தீட்சையும், வாலை தீட்சையும் பெற்றிருக்கிறேன். இரு குருமார்களும் இயற்கை எய்திவிட்டனர். குரு இல்லாத சீடனாக தவிக்கிறேன். என் எண்ணம் ஈடேறுமா? எந்த தெய்வத்தை உபாசனை செய்ய வேண்டும்? சிற்றரசு, காரைக்குடி.

உங்கள் கடிதத்தில் ஆங்காங்கே நான், எனது போன்ற வார்த்தைகள் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. எழுத்தினில் மட்டுமல்ல, எண்ணத்திலும் நான், எனது போன்ற வார்த்தைகள் மறைந்தால் மட்டுமே ஆன்மிகத்தில் சாதிக்க இயலும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்ர தசையில் குரு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அடுத்து வர உள்ள சனி புக்தி என்பது பொதுச் சேவைக்குத் துணைபுரியும். புதிதாக சிவாலயம் கட்டுவதை விட ஏற்கெனவே கட்டப்பட்டு பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருக்கும் சிவாலயத்தினை சீரமைக்க முயற்சி செய்யுங்கள். குறைந்த பட்சமாக அந்த ஆலயத்தில் முறையான பூஜை நடப்பதற்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்யுங்கள்.

என் பேரன்பேத்திகளோடு என்ற வார்த்தையைத் துறந்து ஊரில் உள்ள எல்லோரையும் ஒன்று திரட்டி சிவத்தொண்டு செய்ய முயற்சியுங்கள். ஆசையைத் துறந்து எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே சிவ தீட்சையைப் பெற்றிருக்கும் உங்களுக்கு தனியாக வேறொரு தெய்வத்தின் உபாசனை அவசியமில்லை. குருமார்கள் இயற்கை எய்தியிருந்தாலும் அவர்களின் உடல்தான் மறைந்திருக்கிறதே தவிர உங்களைப் போன்ற சீடர்களின் மூலமாக அவர்களது எண்ணங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். மனதை அலைபாய விடாமல் சிவத்தொண்டினில் உங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்துங்கள். இந்தப் பிறவியின் பயனை அடைவீர்கள்.

ஒருநாள் காலையில் எனது வீட்டின் முன்பு ஆமை படுத்துக் கிடந்தது. வீட்டின் அருகில் எந்தவிதமான நீர்நிலையோ சாக்கடையோ எதுவும் கிடையாது. ரோட்டின் மேல் வீடு உள்ளது. யாரோ வேண்டாதவர்கள் கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் குடும்பத்தில் அமைதி இல்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலை உள்ளது. நல்ல பரிகாரம் சொல்லுங்கள். பாலசுப்ரமணியன், திருச்சி.

வீட்டு வாயில் கதவிற்கு முன்பு ஆமை படுத்துக் கிடந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆமை வீட்டிற்குள் புகுந்தால்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அது வாயிற்படியினைத் தொடுவதற்கு முன்னால் அதனை அகற்றிவிட்டதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இதுபோன்ற பிரச்னைகள் தொடராமல் இருக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யுங்கள். வரவிருக்கும் தேய்பிறை அஷ்டமி நாள் அன்று காலையில் வெள்ளைப் பூசணிக்காயை குறுக்குவாட்டில் இரண்டாக அரிந்து அவற்றின் மத்தியில் கையளவிற்கு பள்ளம் செய்து அதில் இலுப்பை எண்ணெய் நிரப்புவதோடு ஒரு எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து சாற்றினை இலுப்பை எண்ணெயோடு கலந்துவிடுங்கள்.

சிறிதளவு வெண்கடுகை அதற்குள் தூவிவிடுங்கள். பாவுநூல் கொண்டு பருமனான திரியை அதற்குள் வைத்து ஏற்றி வாயிற்படியின் இருபுறமும் விளக்காக வைத்துவிடுங்கள். அந்த நாள் முழுவதும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு வரை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் வகையில் அவ்வப்போது இலுப்பை எண்ணெயை விட்டு வாருங்கள். உடன் எலுமிச்சம்பழச் சாறையும் பிழிந்து கலப்பது நல்லது. இறையருளால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும். கவலை வேண்டாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்