SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன?

2019-04-23@ 17:12:10

மந்திர சக்தியை உடைய புஷ்பம் என்று சொல்வதை விட, மந்திர உச்சாடனத்தின் மூலம் சக்தி பெற்ற பூக்களைக் கொண்டு வணங்குவது என்று புரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உபச்சார தீபாராதனை, சதுர்வேத பாராயணம் என்று அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு, ‘யோபாம் புஷ்பம் வேத..’ என்று ஆலயத்தில் அர்ச்சகரின் குரல் கணீரென்று ஒலிக்கும்போது மெய் சிலிர்க்கும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் மகாதீபாராதனைக்கு முன்னதாக ஆலயங்களில் ஓதப்படும் இந்த மந்த்ரபுஷ்பம் என்கிற வேத மந்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து உருகி நிற்பர்.

நம் இல்லங்களில் நடைபெறும் பூஜையின்போதும் ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய ஸ்வரத்தில் சாஸ்திரிகள் இந்த மந்திரபுஷ்பத்தை உச்சாடனம் செய்யும்போது நாமும் அவரோடு இணைந்து சொல்வது போன்ற ஒரு உள்ளுணர்வு நமக்குள் உண்டாவதை உணர முடியும். எல்லாவிதமான பூஜைகளின் போதும், அதன் உச்சக்கட்டத்தில் முத்தாய்ப்பாக இந்த மந்திரபுஷ்பத்தைச் சொல்கிறார்களே., அப்படி என்னதான் சிறப்பு இதற்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த நீர்தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. இறைவனின் படைப்பில் உருவான இந்த இயற்கைச் சக்திகளைக் கொண்டு வழிபடுவதுதான் இந்த மந்த்ர புஷ்பத்தின் தனிச்சிறப்பு. ஆப: என்றால் தண்ணீர் என்று பொருள். யோ + ஆப: + புஷ்பம் = யோபாம் புஷ்பம் என்று அந்த மந்திரம் துவங்குகிறது.

திருப்பாற்கடலைக் கடையும்போது அந்த ஜலத்தில் இருந்து புஷ்பமாக எழுந்தவன் சந்திரன். அந்த சந்திரனைக் கொண்டு உம்மை வழிபடுகிறேன். இறைவன் இந்த உலகத்தை படைக்கும் காலத்தில் இந்த ஜலத்தில் இருந்து உருவானதே அக்னி. ஆயதனம் என்றால் அடிப்படை ஆதாரம் என்று பொருள். அக்னிக்கு ஆயதனம் ஆப: என்று அழைக்கப்படுகின்ற நீர். அந்த நீருக்கு ஆயதனம் அதாவது அடிப்படை அக்னி. இவ்வாறு நீரும், நெருப்பும் ஒன்றுக்கொன்று ஆதார சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவியலை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது இந்த வேத மந்திரம். ஜலத்தில் இருந்தே வாயு தோன்றுகிறது.

இந்த வாயு எடுத்துச் செல்லும் நீர்த்திவலைகளே மேகங்கள். அப்படியென்றால் வாயுவிற்கு அடிப்படையாக ஜலமும், ஜலத்திற்கு ஆதாரமாக வாயுவும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுகிறது. சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி உருவாவது மேகங்கள். இந்த மேகம் பொழிவிப்பதே மழை. ஆக இந்த மழை நீருக்கு அடிப்படை சூரியன், சூரியனுக்கு ஆதாரம் நீர் என்று சந்திரன், நக்ஷத்திரங்கள், ஸம்வத்ஸரம் என்று அழைக்கப்படக்கூடிய காலத்தின் அளவுகள் அத்தனையும் நீர் என்ற ஆதார சக்தியுடனும், நீர் என்பது இத்தனை இயற்கை சிருஷ்டிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.

இறைவா, நீ சிருஷ்டித்த இந்த இயற்கையின் பிணைப்புகள் சரியான முறையில் இயங்கி இந்த மண்ணில் நீர்வளம் பெருக வேண்டும், அதனால் இப்பூவுலகில் ஜீவராசிகள் அனைத்தும் எவ்விதக் குறையுமின்றி ராஜாதி ராஜன் ஆகிய குபேரனின் அனுக்ரஹத்தோடு அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழவேண்டும் என்பதே இந்த மந்த்ர புஷ்பம் என்ற வேதமந்திரத் தொகுப்பின் பொருள். ஒவ்வொரு கால பூஜையின்போது ஆலயங்களிலும், நமது இல்லத்தில் நடைபெறுகின்ற யாகாதி கிரியைகள், பூஜைகளின்போதும் இந்த மந்திரத்தொகுப்பினை முழுமையாகச் சொல்லி ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடும்போது வான்முகில் வளாது பெய்து, மண்வளம் சுரந்து, விளைபொருட்களும் செல்வங்களும் பெருகி, மக்கள் வளமுடன் வாழ்ந்து மன்னர்தம்கோன் ஓங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

தமிழ் வருடப் பிறப்பு என்றால் என்ன? தெலுங்கு வருடப் பிறப்பு என்றால் என்ன? யுகாதிப் பண்டிகை என்றும் சொல்கிறார்கள், இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? - கலைச்செல்வி, அண்ணாநகர்.

நம் நாட்டில் மாதங்களைக் கணக்கிடுவதற்கு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையைப் பிடிப்பது இரண்டு முறைகள். ஒன்று சாந்திரமானம், மற்றொன்று சௌரமானம். இதில் சாந்திரமானம் என்பது சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிடும் முறை. சௌரமானம் என்பது சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மாதங்களின் பிறப்பை அறிவது. தமிழ் வருடப் பிறப்பு என்பது சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு வருவது.

இந்த சௌரமானக் கணக்கில்தான் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்று நாம் பின்பற்றி வரும் 12 மாதங்களும் இடம் பிடிக்கின்றன. இந்த 12 மாதங்களும் முறையே மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுடன் தொடர்பு கொண்டவை. அதாவது சூரியன் மேஷ ராசியில் அடியெடுத்து வைக்கும் நாளே சித்திரை மாதத்தின் தொடக்க நாள் ஆக, அதாவது தமிழ் வருடத்தின் பிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத கால அளவில் சஞ்சரிப்பார்.

சித்திரை மாதத்தில் மேஷ ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப ராசியிலும், ஆனியில் மிதுனம், ஆடியில் கடகம், ஆவணியில் சிம்மம், புரட்டாசியில் கன்னி, ஐப்பசியில் துலாம், கார்த்திகையில் விருச்சிகம், மார்கழியில் தனுசு, தை மாதத்தில் மகரம், மாசியில் கும்பம், பங்குனியில் மீன ராசியில் என்று சூரியனின் சஞ்சாரம் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் முறைப்படுத்தப்பட்டிருக்கும்.

இதை அடிப்படையாக வைத்து அந்தந்த ராசியின் பெயரைக் கொண்டு அந்தந்த மாதத்தைக் குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு துலா ஸ்நானம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது ஐப்பசி மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதை துலா ஸ்நானம் என்று சொல்வார்கள். மகர சங்கராந்தி என்று பொங்கல் திருநாளைக் குறிப்பிடுவார்கள். அதாவது மகர ராசியில் சூரியன் வந்து இணைகின்ற தை மாதம் முதல் நாள் அவ்வாறு அழைக்கப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதி தரிசனம் என்று பக்தர்கள் பரவசத்துடன் கொண்டாடுவதும் இந்த அடிப்படையில்தான்.

தனுர் மாத பூஜை என்று மார்கழி மாதத்தில் செய்யும் பூஜையினைக் குறிப்பிடுவார்கள். இவ்வாறு சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிடுவது சௌரமானம். இந்த சௌரமானமே தமிழ் வருடப் பிறப்பின் அடிப்படை. ஆக, சூரியன் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் உள்நுழையும் நாளை சித்திரைத் திங்களின் முதல் நாள், அதுவே அந்த வருடத்தின் பிறப்பு நாள் என்று தமிழ் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு வருடப் பிறப்பு என்பது சாந்திரமான அடிப்படையில் வரும் மாதங்களைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சாந்திரமானம் என்பது சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணிதம் செய்யப்படுவதாகும். வளர்பிறை 15 நாட்கள், தேய்பிறை 15 நாட்கள் ஆக மொத்தம் 30 நாட்கள் என்று ஒரு மாதத்தினைக் கணக்கிடுவார்கள். அமாவாசைக்கு அடுத்த நாள் ஆகிய வளர்பிறை பிரதமை என்பது மாதத்தின் முதல் நாள் ஆகும். தமிழ் மாதத்திற்கு தேதி இருப்பதைப் போல தெலுங்கு மாதத்திற்கு தனியாக தேதி என்பது கிடையாது.

பிரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை ஆகிய திதிகளே சாந்திரமான மாதத்தின் தேதிகள் ஆகும். இதில் சுக்ல பக்ஷம் என்று அழைக்கப்படும் வளர்பிறை திதிகள் முதல் 15 நாட்களையும், க்ருஷ்ண பக்ஷம் என்று அழைக்கப்படுகின்ற தேய்பிறை திதிகள் கடைசி 15 நாட்களையும் குறிக்கும். திதி என்ற வார்த்தையில் இருந்துதான் தேதி என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது என்ற உண்மை தற்போது புரிந்திருக்கும். இந்த திதிகளின் பெயர்களை உச்சரிக்கும்பொழுதே அதில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என எண்ணிக்கையின் பெயர்களையும் நம்மால் உணர முடியும்.

உதாரணத்திற்கு நவமி திதி என்றால் ஒன்பதாவது நாள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். (நவகிரஹங்கள் - ஒன்பது கோள்கள்). சித்திரை, வைகாசியைப் போலவே தெலுங்கு வருடத்தினுடைய மாதங்களுக்கும் பெயர்கள் உண்டு. சைத்ரம், வைசாகம், ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீஜம், கார்த்தீகம், மார்க்கசிரம், புஷ்யம், மாகம், பால்குனம் ஆகியவையே சாந்திரமான மாதங்கள். இந்த மாதங்களின் பெயர்களுக்கும், நம் தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும் உச்சரிப்பில் ஒற்றுமை இருப்பதைக் காண முடியும். ஒவ்வொரு மாதத்தின் பெயரும் நக்ஷத்ரங்களோடு தொடர்பு கொண்டவை.

ஒரு மாதத்தில் பெரும்பாலும் சந்திரன் முழுநிலவு ஆக அதாவது பௌர்ணமி என்பது நிகழுகின்ற நாளில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே அந்த மாதத்திற்குச் சூட்டியிருப்பார்கள். ஒரு நாளில் இந்த நக்ஷத்ரம் இருக்கிறது என்று சொன்னால் சந்திரன் அந்த நக்ஷத்ரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள். ஆக எந்த நக்ஷத்ரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது பௌர்ணமி உண்டாகிறதோ, அந்த நக்ஷத்ரத்தின் பெயரையே அந்த மாதத்தின் பெயராக சூட்டியிருக்கிறார்கள். இது சாந்திரமானம் மற்றும் சௌரமானம் ஆகிய இரண்டு வகையான மாதங்களுக்கும் பொருந்தும்.

எனவேதான் தமிழில் மாதம் என்பதை திங்கள் என்றும் அழைத்தார்கள். தைத்திங்கள், சித்திரைத் திங்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா, திங்கள் என்ற வார்த்தைக்கு நிலவு என்று பொருள் என்பது நாம் அறிந்ததே. நிலவு என்ற பெயரையே நாம் மாதம் என்ற கால அளவிற்கும் பயன்படுத்தி வருகிறோம். இங்கே நாம் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழ் மாதங்களின் பெயர்களோடு திங்கள் என்ற வார்த்தையை இணைத்துப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் ஆங்கில மாதத்தின் பெயர்களோடு அதாவது ஜனவரித் திங்கள், டிசம்பர் திங்கள் என்று உபயோகிப்பது தவறு.

அவ்வாறு ஆங்கில மாதத்தை திங்கள் என்ற வார்த்தையோடு இணைத்து உபயோகிக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி சம்பவிக்கும் நாள் இடம்பிடிக்கும் மாதத்தை சைத்ரம் என்றும், விசாக நட்சத்திர நாளில் சம்பவிக்கும் மாதத்தை வைசாகம் என்றும் இப்படியாக 12 மாதங்களின் பெயர்களும் உருவானதை அறிந்துகொள்ள முடியும்.  அமாவாசை திதிக்கு மறுநாள் ஆகிய வளர்பிறை பிரதமை திதியே மாதத்தின் முதல்நாள் என்று கணக்கிடும்போது தமிழ் மாதமாகிய பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் ஆகிய பங்குனி மாத வளர்பிறை ப்ரதமை நாள் அன்று சாந்திரமான வருடப்பிறப்பு என்பது உண்டாகிறது.

பங்குனி மாத அமாவாசைக்கு சாந்திரமான கணக்கில் பால்குன மாத அமாவாசை என்று பெயர். இந்த பால்குன மாத அமாவாசைக்கு மறுநாள் சைத்ர சுத்த ப்ரதமை திதி என்ற சைத்ர மாதத்தின் முதல்நாள் துவங்கும். சைத்ரம் என்பதே சாந்திரமான வருடத்தின் முதல் மாதம் என்பதால், அந்த மாதத்தின் முதல் நாளினை சாந்திரமான வருடப் பிறப்பு அதாவது தெலுங்கு வருடப் பிறப்பு நாள் ஆகக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் ஆகிய ப்ரதமை நாளில் அடுத்த மாதம் என்பது துவங்குகிறது. நம்நாட்டில் பெரும்பாலான பண்டிகைகள் சாந்திரமான மாதங்களின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஆவணி அவிட்டம் என்ற ஒரு பண்டிகையை மட்டும் காண்போம்.

இந்த ஆவணி அவிட்டம் என்பது சாந்திரமான மாதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவது. சிராவண சுத்த பௌர்ணமி நாளை ஆவணி அவிட்டம் என்று அழைப்பார்கள். அதாவது தமிழ் மாதக் கணக்கில் ஆடி மாத அமாவாசைக்குப் பின் அடுத்த 15வது நாளில் வருகின்ற பௌர்ணமி நாளே ஆவணி அவிட்ட நாள் ஆகும். ஆடி மாதத்தின் முதல் இரண்டு வாரத்திற்குள் அமாவாசை வந்துவிட்டால் அடுத்த 15வது நாளில் வரும் பௌர்ணமி நாளன்று அதாவது, ஆடி மாதத்திற்குள்ளேயே ஆவணி அவிட்டம் என்பதும் வந்துவிடும். இன்னும் ஆவணி மாதமே பிறக்கவில்லையே, அதற்குள்ளாக ஆவணி அவிட்டம் கொண்டாடுகிறார்களே என்ற குழப்பம் நமக்கு உண்டாகலாம். இது சிராவணம் என்று அழைக்கப்படக்கூடிய சாந்திரமான மாத பௌர்ணமி நாள் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் தீர்ந்துவிடும்.

இவ்வாறே வருடப்பிறப்பு என்பதும் சாந்திரமானம், சௌரமானம் என்று இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு என்பது சாந்திரமானத்தின் அடிப்படையிலும், தமிழ் வருடப்பிறப்பு என்பது சௌரமானத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. இவ்விரண்டு முறைக்கும் அதிசயத்தக்க ஒற்றுமை என்னவென்றால் இந்த இரண்டு முறைகளில் வரும் வருடங்களின் பெயர்கள் ஒன்றுதான். உதாரணத்திற்கு தற்போது விகாரி என்ற தமிழ் வருடம் பிறக்கிறது என்றால் தற்போது பிறக்க உள்ள தெலுங்கு வருடத்தின் பெயரும் அதே விகாரிதான்.

 மாதங்களின் பெயர்களிலும் இந்த ஒற்றுமை மறைந்திருப்பதைக் காண இயலும். சித்திரை - சைத்ரம், வைகாசி - வைசாகம், கார்த்திகை - கார்த்தீகம், மார்கழி - மார்க்கசிரம், பங்குனி - பால்குனம் என்று மாதங்களின் பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். தெலுங்கு வருடப்பிறப்பு நாளையே யுகாதிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். யுகம் + ஆதி = யுகாதி. யுகம் துவங்கிய நாள். ஆதியில் வருடத்தின் பிறப்பு நாள் யுகம் துவங்கிய நாள் என்பதால் யுகாதி என்ற பெயரிலும் வருடப் பிறப்பு நாளை அழைக்கிறார்கள். இதுவே தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு ஆகிய நாட்களுக்கு இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்